What is Science?

அறிவியல் என்றால் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அறிவு + இயல் = அறிவியல்.

”அறிவு – Knowledge” என்பது அறியப்படுவது அல்லது அறிந்து கொள்வது என்று பொருள்படும்.  ”இயல்” என்றால் இயல்பானது என்று பொருள்படும்.

அதாவது இயற்கையானது எதுவோ அது இயல்பானது. இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்ள முற்படும் முயற்சியே அறிவியல் எனலாம்.

ஆங்கிலத்தில் ”Science” என்று சொல்லப்படும் இந்த சொல்லாடல் இலத்தீன் வார்த்தையின் திரிபு ஆகும்.

“Science” என்னும் வார்த்தை இலத்தீன் மொழியிலுள்ள “scientia” என்னும் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். scientia என்றால் “அறிந்து கொள்ளுதல்” என்று பொருள்.

இயற்கை சார்ந்த பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உலகிற்கு உணர்த்துவதே அறிவியல் ஆகும். அறிவியலின் அடிப்படையே ஒருபொருளின் உண்மைத் தன்மையை அறிவதே.

அறிவியல் பொதுவாக இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry), உயிரியல் (Biology), சமூக இயல் (Sociology), பயன்பாட்டு அறிவியல் (Applied Science), தத்துவ இயல் (Philosophy), கணிதவியல் (Mathematics) என பல்வேறு கோணங்களில் பகுத்தாயப்படுகிறது.

அறிவியல் எந்த சூழ்நிலையிலும் .. ”வரும்…. ஆனா …. வர ரா ரா து…..”’ என்று ஜோசியம் சொல்லாது. சனீஸ்வரருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து எள்ளும், காணமும் தானம் செய்தால் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தப்பிவிடலாம் என்று பரிகாரம் எல்லாம் சொல்லாது.

வெறும் கற்பனைக்கு இங்கு இடமில்லை. கற்பனை என்பது புராண இதிகாசங்களுக்கும் கடவுள் கொள்கைகளுக்கும்தான் சரியாக வரும். அறிவியலுக்கு ஒத்துவராது.

அறிவியல் என்பது மாற்ற முடியாத இயற்கை நிகழ்வுகளையும், இயற்கைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் செயற்கைத் தொழில் நுட்பங்களையும் உருவாக்கி மானுட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும் ஒரு அறிவார்ந்த கலை எனலாம்.

சரியான தெளிவும் , நிரூபணமும், அதற்கான சரியான வரையறையும் இல்லாத முடிவுகளை அறிவியல் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதில்லை, அறிவியல் என்பது முரண்பாடுகளுக்கிடையில் ஒரு ஒழுங்கை தேடுவது. எதையும் சந்தேகக் கண்கொண்டு ஆராய்ந்தறிந்து தெளிவுறும் ஒரு கலை.

மனிதனால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத நம்மை சுற்றியிருக்கும் விஷயங்களை நுட்பமான, சிக்கலான இயற்கையின் மர்மங்களை ஏன்? எதற்கு? எப்படி? என்று நுணுகி ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து நமக்கு புரிதலை ஏற்படுத்துவதே அறிவியலின் நோக்கம்.

அறிவியல் வளர்ச்சியினால் இவ்வுலகிற்கு கிடைத்துள்ள நன்மைகள் ஏராளம் எனலாம். அறிவியல் வளர்ச்சியினால் மனிதனுடைய வாழ்க்கை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு எளிமையும், உயர்வும், செழுமையும் அடைந்துள்ளன.

மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் மனிதனின் ஆயுள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

இனிவரும் பதிவுகளில் அறிவியலின் அற்புதங்களையும், அதன் செயல்பாடுகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சி மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!