Airship – Airlander.

Titanic- friendship with airship

மேலே ஒலிப்பது நம் ஒவ்வொருவரின் இளமைக்கால நினைவுகளையும் மீட்டெடுக்கும் “காதல் தேசம்” படப்பாடல்.

மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட “டைட்டானிக் ஷிப்பே” (Titanic ship) கடலில் மூழ்கிபோனாலும்கூட… உண்மையான “ஃபிரண்ட் ஷிப்” மட்டும் எந்த சூழ்நிலையிலும் மூழ்கவே மூழ்காது என்பதனை நமக்கு உணர்த்தும் பாடல்.

ஃபிரண்ட் ஷிப்பைப்போலவே எந்த சூழ்நிலையிலும் கடலில் மூழ்காத இன்னொரு ஷிப்பும் உள்ளது. அந்த அசாதாரண ஷிப் – ஐ பற்றி பார்ப்பதற்கு முன்னால் சாதாரண “ஷிப்” ஐ பற்றியும் சிறிது பார்த்துவிடலாம் வாருங்கள்.

கடல்களில் கப்பல்கள் மிதந்து செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? உங்களில் பலபேர் அதில் பயணித்திருக்கலாம். இந்த கப்பல்கள் சிறியது பெரியது என பல்வேறு அளவு மற்றும் வடிவமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன.

கப்பல்களில் அதன் பயன்பாடுகளை பொருத்து பலவகை கப்பல்கள்  வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் பிரதான வகைகளாக 8 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அவைகள்…

பயணிகள் கப்பல்.

சரக்கு கப்பல்.

மீன்பிடி கப்பல்.

டேங்கர் கப்பல்.

கண்டெய்னர் கப்பல்.

பல்க் கேரியர்.

போர்க்கப்பல்.

நீர்மூழ்கி கப்பல்.

மேற்கண்ட 8 பிரிவுகளை தவிர ஒன்பதாவதாக மேலும் ஒரு கப்பலும் உள்ளதென்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அதனுடைய பயணம் நீரில் அல்ல ஆகாயத்தில்… ஆம் அதுதான் ஆகாயக்கப்பல் (Air ship)…

akaya kappal - airship

Air ship.

நீங்கள் ஆகாயத்தை கிழித்துக்கொண்டு செல்லும் விமானத்தை பார்த்திருப்பீர்கள்… ஹெலிகாப்டர் பார்த்திருப்பீர்கள்… ஏன் ராக்கெட் கூட பார்த்திருப்பீர்கள். ஆனால் ஆகாயக்கப்பல் பார்த்திருக்கிறீர்களா!!.

பார்த்திருக்க வாய்ப்பில்லை…

ஏனென்றால் தற்போது இவைகள் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இவைகள் மிகவும் பிரபலம்.

குறிப்பாக 1928 முதல் 1937 வரையில் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் வான்வெளியை கடப்பதற்கு இவைகள்தான் முக்கிய போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டுவந்தன.

தற்போதும் சிலநாடுகள் தொடர்ந்து இத்தொழில்நுட்பத்தை பல்வேறு வழிகளில் மேம்படுத்தப்படுவதற்கான ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்தாலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதே உண்மை.

பறவைகளைப்போல ஆகாயத்தில் பறக்கவேண்டும் என ஆசைப்பட்ட மனிதனின் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அவனுடைய முயற்சிக்கு முதலில் கைகொடுத்து வெற்றிப்பாதையை அமைத்துத்தந்தது இந்த பறக்கும் பலூன்கள்தான்.

1782 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “ஜோசப் மைக்கேல்” (Joseph Michel) “ஜாக்யூஸ் மான்ட்கோல்பியர்” (Jacques Montgolfier) ஆகிய இருவரும் ஒரு பெரிய பலூன் போன்ற கூண்டை உருவாக்கி அதற்குள் வெப்பக்காற்றை நிரப்பி அதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான ஒரு சிறிய கூண்டையும் அமைத்து அதன்மூலம் பறந்தனர். இதற்கு “ஹாட் ஏர் பலூன்” (Hot Air balloon) என பெயரிட்டனர்.

Hot Air balloon

இதில் மனிதர்கள் பயணிக்க முடியும் என்றாலும் இது பயணிக்கும் வேகம் மிக குறைவாகவே இருந்தது. காற்றின் ஒட்டத்தை கருத்தில்கொண்டு சுக்கான்களை பயன்படுத்தி இது பறக்கும் உயரத்தையோ வேகத்தையோ ஓரளவு கட்டுப்படுத்தமுடியும்.

ஆனாலும், இது காற்றின் திசையிலேயே பயணித்தது. இது இதிலுள்ள ஒரு பெரிய குறைபாடாகவே இருந்துவந்தது. நாம் விரும்பிய திசையில் இதனை செலுத்தமுடியவில்லை.

எனவே இதன் வேகத்தினை விரைவுபடுத்தும் பொருட்டும், விரும்பிய திசையில் இதனை செலுத்தும்பொருட்டும் 1852 ம் ஆண்டு “ஹென்றி கிப்பார்டு” (Henri Giffard) என்பவர் உருளை பலூனுக்கு பதிலாக வெப்ப காற்று நிரப்பப்பட்ட  நீள் வடிவம் கொண்ட பலூனை உருவாக்கி அதனுடன் பயணிகள் அமர்ந்துசெல்ல ஒரு கூண்டையும் இணைத்ததோடு கூண்டின் கீழ் நீராவி இன்ஜினையும் இணைத்தார்.

dirigible balloon

இதனால் நீராவி விசையை பயன்படுத்தி விரும்பிய திசையில் பயணிக்கமுடிந்தது. இது மணிக்கு 6 மைல் வேகத்தில் பறந்தது. முந்தைய ஹாட் ஏர் பலூனின் வேகத்தைவிட இது பன்மடங்கு அதிகம்தான்.

ஆகாயத்தில் ஹாயாக பயணித்தால் போதுமா? கலனுக்கு பொருத்தமான பெயரை வைக்கவேண்டாமா?.. எனவே இதற்கு “டிரிஜிபிள் பலூன்” (dirigible balloon) என பெயரும் சூட்டி மகிழ்ந்தனர். “டிரிஜிபிள்”(dirigible) என்றால் “வழிநடத்தி செல்லக்கூடிய” என்று பொருளாம். பொருத்தமான பெயர்தான்.

அதன்பின் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட (நீராவி இஞ்சின்கள்தான்) பலூன்கள் உருவாக்கப்பட்டன.

இவ்வாறு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்ட அனைத்து பலூன்களும் “டிரிஜிபிள் – Dirigible” என்னும் பெயரிலேயே அழைக்கப்பட்டன.

ஆனால் இதில் நிறைய பேர் பயணிக்கமுடியவில்லை. எனவே இந்த குறைபாட்டை களைய அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு நீரில் மிதக்கும் கப்பலை போன்றே ஆகாயத்தில் மிதக்கும் ஆகாயக்கப்பலை உருவாக்கும் எண்ணத்துடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் களத்தில் இறங்கினர்.

அவர்களின் எண்ணம்போலவே அதன் வடிவமைப்பும் அமைந்தது. ஆம்,.. ஆகாய கப்பலும் தண்ணீரில் மிதக்கும் கப்பலைப்போன்ற வடிவமைப்பிலேயே உருவானது.

வெப்ப காற்று நிரப்பப்பட்ட “ஹாட் ஏர்” (Hot Air balloon) பலூனைப்பற்றி முன்பு பார்த்தோமல்லவா.. அந்த அமைப்பின் கீழ்பகுதியில் மனிதர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்காக ஒரு கூடை போன்ற கலன் அமைக்கப்பட்டிருக்குமல்லவா? அந்த கலன் இந்த ஆகாயகப்பலில் அச்சு அசலாக தண்ணீரில் மிதக்கும் கப்பலின் வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டதால் இதற்கு ஆகாயக்கப்பல் (ஏர் ஷிப்) என்றே பெயர் வைக்கப்பட்டது.

airship-graf-zeppelin

அதாவது அலுமினியத்தாலான ஒரு பெரிய கலத்துக்குள் “ஹைட்ரஜன்” நிரப்பப்பட்ட ஒரு பெரிய பலூன் வைக்கப்பட்டிருக்கும். இந்த உலோக கலத்தின் அடிப்பகுதியில் பயணிகள் அமர்ந்து பயணிக்கும் கப்பல் போன்ற அமைப்பு  இணைக்கப்பட்டிருக்கும்.

Zeppelin - Ship-like structure.
Zeppelin – Ship-like structure.

ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கலன் மிதந்து செல்லும் தருணத்தில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விசையை உற்பத்தி செய்யும் இன்ஜின் இயக்கப்பட பலூனின் கீழ்ப்பகுதியில் பயணிகள் அமர்வதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டுள்ள கப்பல்போன்ற அந்த கலனும் ஒட்டிக்கொண்டு பறப்பதைப்பார்க்கும்போது பிரமிப்பாகவும் அதேவேளையில் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும்.

மேற்கண்ட கலன்களில் “ஹைட்ரஜன்” வாயு பயன்டுத்துவதற்கு காரணம் அது லேசான வாயு என்பதால் கனமான வாயுக்களை கீழே தள்ளி இது எளிதாக மேலெழும்பும் திறனை கொண்டிருப்பதால் ஹைட்ரஜன் வாயுவை பலூன்களில் நிரப்பி எளிதாக இதனை ஆகாயத்தில் மிதக்க வைக்க முடியும்.

ஆனால், இந்த ஹைட்ரஜன் வாயுவிற்கு எளிதாக தீப்பற்றும் திறன் இருப்பதாலும், இதனால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதாலும் தற்போது ஆகாய கப்பல்களில் எளிதில் தீபற்றாத எடைகுறைந்த வாயுவான “ஹீலியம்” வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

படிப்படியாக இந்த ஆகாயகப்பல் தொழில்நுட்பமானது வளர்ச்சியடைய 1875 ம் ஆண்டில் மிக உயரத்தில் பறக்கும் ஆகாய கப்பலை “டபிட்ரி மெண்டலயெல்” என்னும் ரஷ்ய அறிஞர் உருவாக்கினார். இக்கப்பலானது சுமார் 11 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சாதனை படைத்தது.

இம்மாதிரியாக கப்பலை உருவாக்க பல நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு முனைப்பு காட்டினாலும் 1928 – ம் ஆண்டில் ஜெர்மனியில்தான் முதன்முதலாக மிகப்பெரிய ஆகாயக்கப்பல் உருவாக்கப்பட்டது.

 ஜெர்மனியை சேர்ந்த பெர்டினான்டு ஜெப்பலின் (Ferdinand Von Zeppelin) என்ற தொழில்நுட்ப கலைஞர்தான் 772 அடி நீளத்தையும், 100 அடி அகலத்தையும்கொண்ட பிரமாண்ட ஆகாய கப்பலை முதன்முதலில் 1900 ஆம் ஆண்டு உருவாக்கிக்காட்டினார்.

Graf-Zeppelin

“கிராப் ஜெப்லின்” (Graf Zeppelin) என்று பெயரிடப்பட்ட அதில் 2650 குதிரைசக்தி கொண்ட இஞ்சின் இணைக்கப்பட்டிருந்தது. இது பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையே பலமுறை தன் பயணங்களை தொடர்ந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது நூற்றுக்கணக்கான பயணிகளையும் ஒருசில டன் எடைகளைக்கொண்ட சரக்குகளையும் சுமந்துகொண்டு சுமார் 80 மைல் வேகத்தில் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

கிராப் ஜெப்லின் (Graf Zeppelin) என்று இதற்கு பெயரிடப்பட்டிருந்தாலும் பயணிகள் அமரும் பகுதியானது அச்சு அசலாக கடலில் மிதக்கும் கப்பலைப்போலவே வடிவமைக்கப்பட்டிருந்ததால் மக்களால் இது “ஆகாயக்கப்பல்” (Airship) என்றே அழைக்கப்பட்டுவந்தது.

இந்த மிகப்பெரிய ஏர்ஷிப்பானது 1928 ம் ஆண்டுதான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருந்தது என்றாலும் அதற்கும் 20 வருடங்களுக்கு முன்னதாகவே தற்போது இயக்கத்திலிருக்கும் நவீன விமானத்தின் முன்னோடியான முதல்  விமானத்தை (Aircraft) 1903 ஆண்டு வாக்கிலேயே அமெரிக்க நாட்டை சேர்ந்த “ஆர்வில் ரைட்” (Orville Wright) மற்றும் அவருடைய சகோதரரான “வில்பர் ரைட்” (Wilbur Wright) இருவரும் இணைந்து உருவாக்கியதுடன் அதனை வெற்றிகரமாக இயக்கியும் காண்பித்திருந்தனர்.

1904_Flyer_Flight_Aircraft
1904_Flyer_Flight_Aircraft

ரைட் சகோதரர்கள் உருவாக்கிய Aircraft தொழில்நுட்பமானது எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், அதிக வேகத்தில் பயணம் செய்வதற்கு ஏற்றதாகவும் அமைந்ததால் “ஆகாயவிமானம்” என்னும் Aircraft தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ச்சியடைய “ஆகாயகப்பல்” என்னும் Airship தொழில்நுட்பம் தன்னுடைய இயக்கத்தை படிப்படியாக நிறுத்திக்கொண்டது.

என்றாலும், தற்போது இந்த “Airship” தொழில் நுட்பத்தை மேப்படுத்துவதற்கான முயற்சிகள் பல்வேறு நாடுகளிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில்கூட நம் அண்டை நாடான சீனா 28 பேர் பயணிக்கக்கூடிய 66 மீட்டர் நீளமுள்ள ஆகாயக்கப்பலை உருவாக்கியுள்ளது. லித்தியத்தால் ஆன சக்திவாய்ந்த பேட்டரியுடன் கூடிய மின்மோட்டார் மற்றும் காற்றாடி விசைகொண்டு இயங்கும் இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம்வரை பறக்கும் திறனை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் பயணிகளை சுமந்துகொண்டும் பயணிக்க இருக்கிறதாம்.

ஆனால், இது சீன தயாரிப்பு என்பதால் இதில் பயணிப்பவர்களின் நிலை “நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்பதற்கு பதிலாக “நித்திய ஆயுசு பரிபூரண கண்டம்” என்ற ரீதியில் அமைந்துவிடுமோ என்று அச்சப்படவும் வேண்டியுள்ளது.

அதேபோல இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு நிறுவனம் அண்மையில் 85 அடி உயரமும், 302 அடி நீளமும், 143 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட வான்கப்பலை “AIRLANDER 10” என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இதனை அதிகப்படியாக மணிக்கு 148 கி.மீ வேகத்தில் இயக்க முடியுமாம். ஹாயாக 48 பேர்வரை பயணிக்கலாமாம்.

Airlander-10
Airlander-10

325 குதிரைசக்தி திறன்கொண்ட நான்கு V8 டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இது அதிகப்படியாக 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன்வாய்ந்ததாம்.

ஹைபிரிட் எனப்படும் இரட்டை எரிபொருள் தொழிநுட்பத்தை கொண்ட இது டீசல் மற்றும் ஹீலியம் வாயு மூலமாகவும் இயக்கமுடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

நவீன விமானத்துடன் ஒப்பிடும்போது இதற்கு 20% குறைவான எரிபொருளே தேவைப்படுகிறதாம். 500 அடி உயரத்தில் மணிக்கு 64 கி.மீ வேகத்தில் இயக்கி முதல் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவுசெய்த இது அண்மையில் நடத்திய இரண்டாம்கட்ட சோதனையில் மூக்கு உடைபட்டு தோல்வியை சந்தித்தது.

Worlds-largest-airship-Airlander

எது எப்படியோ ஏர் ஷிப் (Airship) என்று சொல்லப்படும் இந்த ஆகாய கப்பலானது Aircraft என்று சொல்லப்படும் நவீன விமானங்களில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பெற்றிருக்கவில்லை என்பதால் நவீன விமானங்களைப்போல இவைகளும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வெற்றிவாகை சூடுமா? என்கின்ற கேள்விகளை எழுப்பினோமென்றால்… அதற்கான பதிலும் அதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது!!! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!