வரம் தர வேண்டும் அம்மா!
என் ஆத்தாவுக்கு மாத்தா
வேற என்னதான் இங்கிருக்கு
உசுருடன் உன்னை பாக்க
மனசுதான் ஏங்கி இருக்குதிங்கு
மனசெல்லாம் நீதானே நிறைஞ்சிருக்க
மத்தவங்க எல்லாம் அருகிருக்க
இங்கு உன்னை மட்டும் காணலையே
எனக்கு வாழ்வதற்கும் தோணலையே
தொட்டில் கட்டி தூங்க வச்ச
வட்டில் தட்டில் திங்க வச்ச
கட்டில் கட்டி தங்க வச்ச
இப்போ எட்டி நின்னு ஏங்க வச்ச…
உடல் தந்தாய் உயிர் தந்தாய்
உணர்வும் தந்தாய் – உலகினிலே
வாழ்வதற்கு ஓர் இடமும் தந்தாய்
உக்காந்து அழுவதற்கா பிரிவும் தந்தாய்.
அரை வயிறு கஞ்சிதானே
எப்போதும் நீ குடிப்ப
அதுகூட இல்லாம
ஆறு மாசம் ஏன் படுத்த…
என் பசியை தீக்கத்தானே
பத்த வைப்ப விறகடுப்ப – இப்போ
இராப்பகலா பட்டினியாய் நானிருக்க
கல்லறைக்குள் சென்று நீ ஏன் படுத்த…
இங்கு பித்தளையாய் நானிருக்க
அதை பெத்தவளாய் நீயிருக்க
பெருமை கொள்ளும் வேளையிலே
ஏனோ செத்தவளாய் ஆனாயே.
பேசியும் புரியா உறவுகளுக்கு மத்தியிலே
பேசி ஆவதென்ன என வாய் மூடி நின்றாயோ
கூவி அழைக்க உறவு ஆயிரமே இருந்தாலும்
“சிவனேசா” என்றழைத்தே அமைதி ஆனாயோ!
தருவாயா தாயே நீ எனக்கு ஒரு வரமே – நின்
மணிவயிற்றில் பிறக்க வேண்டும் மீண்டும் ஒரு தரமே.
“மகனே” என அணைக்க வேண்டுமம்மா உன் கரமே!…
பார் புகழ வாழ்த்த வேண்டுமம்மா நின் மனமே!…