செயற்கைக் கண்.
Ocular Prosthesis.
உடல் உறுப்புகள் செயலிழந்தால் அல்லது விபத்துகளின்மூலம் அவைகள் அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்றாக செயற்கை கால், செயற்கை கை உள்ளதுபோல விபத்துகளாலோ அல்லது வேறு எதாவது கடுமையான நோய்தொற்றுதல், கண்ணீர் அழுத்தம், புற்றுநோய் காரணமாகவோ இரு கண்களில் ஒரு கண்ணை முற்றிலுமாக அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் அல்லவா?!.
இந்த சூழ்நிலையில் கண்கள் இருந்த பகுதியில் மிக பெரிய குழி நீங்காத வடுவாக அமைந்து மன சங்கடத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தலாம் அல்லவா?.
இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய நோயாளிகளின் இரு கண்களில் ஒரு கண் அகற்றப்பட்டபின் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கழித்து மற்றொரு கண்ணைப்போன்ற தோற்றமுடைய “செயற்கை கண்” (Ocular Prosthesis) பொருத்தப்படுகின்றன.
ஆம், கண்களிலும் செயற்கை கண்கள் உள்ளன. பார்ப்பதற்கு அச்சுஅசலாக இயற்கை கண்களைப்போலவே காட்சி தருகிறது இது.
Artificial EYE.
இந்த செயற்கை கண்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று பார்ப்பதற்கு இயற்கை கண்கள்போலவே காட்சிதரும் ஆனால் இதனால் இழந்த பார்வையை மீட்டுத்தர முடியாது. மற்றொன்று இயற்கை கண்கள் போலவே செயல்படுவதோடு கூடவே பார்வையையும் மீட்டு தருகிறது.
இந்த பதிவில் இந்த இருவகை செயற்கை கண்களை பற்றியும் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்கள்.
இந்த பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்களால் இழந்த பார்வையை திரும்ப பெறமுடியாது.
பார்வையை பெறமுடியாது என்றால் இந்த செயற்கை கண்களால் என்ன பயன் என கேட்கிறீர்களா?
பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன.
விபத்தினாலோ அல்லது புற்றுநோய் பாதிப்பினாலோ இரு கண்களில் ஒரு கண்ணை மட்டும் முழுமையாக அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என வைத்துகொள்ளுங்கள். அவ்வாறு அகற்றியபின் அகற்றப்பட்ட இடம் சுருங்கி சிறியதாகவோ அல்லது அந்த இடத்தில் மிகப்பெரிய குழிபோன்ற அமைப்போ காணப்படும். இது முகத்திற்கு மிக பெரிய அளவில் அவலட்சணத்தை எற்படுத்தும்.
இது பாதிக்கப்பட்டவருக்கு மன கஷ்டத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் ஏற்படுத்தலாம். இப்படியானவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைவதுதான் பார்வையை மீட்டுத்தராத இந்த “செயற்கை கண்” (Artificial eye).
பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயற்கை கண்ணை பொருத்திக்கொள்ளும் பட்சத்தில் இதனால் பார்வை கிடைப்பதில்லை என்றாலும் நிஜ கண்களை போன்றதொரு தோற்றப்பொலிவை தருவதால் பொருத்திக்கொண்டவருக்கு உளவியல் சார்ந்த குறையை நீக்கி புதிய தன்னம்பிக்கையை கொடுக்கின்றன.
இந்த செயற்கை கண்கள் பொதுவாக “Stone eyes” அல்லது “Glass eyes” என அழைக்கப்படுகின்றன.
இந்த பார்வையை மீட்டுத்தராத செயற்கை கண்களில் இருவகைகள் உள்ளன.
அவற்றில் ஒன்று ரெடிமேடாக கண்மருத்துவமனைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது. இந்த ரெடிமேட் கண்கள் (Ready made eye) விலைமலிவானது. அனைத்து ரெடிமேட் கண்களும் பொதுவானதொரு அளவுகளில் தயாரிக்கப்படுவதால் அனைவருக்கும் இது பொருத்தமானதாக அமைவதில்லை.
ஏனெனில், ஒவ்வொருவருடைய கண்குழிகளும் அவரவர் முக அமைப்பிற்கு தகுந்தபடி சிறிது மாறுபட்ட அளவுகளில் இருக்குமாதலால் அனைவருக்கும் இது கனகச்சிதமாக பொருந்துவதில்லை.
இந்த ரெடிமேட் கண்களை தவிர இதில் மற்றொரு வகையும் உள்ளது. அது நமக்கு ஏற்ற வகைகளில் கண்குழிகளை அளவெடுத்து நம் முகத்திற்கு கனகச்சிதமாக பொருந்தும்படி பொருத்தமானதாக செய்துகொள்ளும் வகையை சேர்ந்தது.
அளவெடுத்து தயாரிக்கப்படும் இம்மாதிரியான செயற்கை கண்களை மிக கச்சிதமாக பொருந்துவதோடு பார்ப்பதற்கும் இயற்கை கண்களைபோலவே காட்சியளிக்கும்!.. உழைப்பும் நீடித்து அமையும்!.. இவ்வாறு அளவெடுத்து தயாரிக்கப்படும் கண்ணை “கஸ்டமைஸ்டு ஃபிட் செயற்கைக்கண்” (Customized eye) என்று குறிப்பிடுகிறோம்.
சரி, இந்த செயற்கை கண்களை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று பார்ப்போமா!.
முதலில் கண்குழிகளை அளவெடுத்து மெழுகினை கொண்டு மாதிரி கண்களை உருவாக்குகிறார்கள். பின் இதனை அடிப்படையாகக்கொண்டு PMMA எனப்படும் குறைந்த ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய மருத்துவத்தரம் வாய்ந்த அடர்த்தியான உயர்தர “Acrylic” எனப்படும் “பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்” என்னும் பாலிமர் பொருட்களால் செயற்கைக்கண்களை உருவாக்குகிறார்கள்.
இயற்கை கண்கள்போலவே காட்சியளிப்பதற்காக வெண்விழி மற்றும் கருவிழி என அனைத்தும் தத்துரூபமாக வரையப்படுகின்றன. இது பார்ப்பதற்கு இயற்கை கண்களைபோலவே காட்சியளிப்பதுடன் நீண்டநாட்கள் உழைப்பதால் மன சங்கடத்திற்கு மிகச்சிறந்த தீர்வாகவும் அமைகிறது.
இது பார்ப்பதற்கு ஒர்ஜினல் கண்களைபோலவே தோன்றினாலும் இதனைக்கொண்டு காட்சிகளை பார்க்க முடியாது என்பதே இதிலுள்ள மிகப்பெரிய குறைப்பாடு ஆகும்.
செயற்கை கண்களின் சிறப்புகள்.
- இதனை பொருத்திக்கொள்ள வயதுவரம்பு கிடையாது. எந்த வயதினரும் பொருத்திக்கொள்ளலாம்.
- செயற்கை கண்கள் பொருத்திகொண்ட கண்களின் இமைகள் சாதாரண கண்களின் இமைகளைபோல மூடித்திறக்கும் தன்மையை பெற்றுள்ளன.
- தூங்கும் போதோ அல்லது குளிக்கும்போதோ செயற்கைக்கண்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை.
- ரெடிமேடு செயற்கை கண்ணை வருடத்திற்கு ஒருமுறை புதிதாக மாற்றவேண்டும். ஆனால் அளவெடுத்து தயாரிக்கப்படும் செயற்கை கண்களை 10 வருடங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும்!.
செயற்கை கண்களிலுள்ள குறைபாடுகள்.
இதனை பொருத்திக்கொள்வதால் பார்வையை திரும்ப பெற முடியாது. கண்கள் இருப்பதுபோன்றதொரு தோற்றப்பொலிவை கொடுக்கும் அவ்வளவே…
இயற்கை கண்களைப்போல செயற்கை கண்களின் கருவிழிகள் மேலும் கீழும் இயல்பாக அசைவதில்லை. மிக சிறிய அளவே அசையும் தன்மையை பெற்றிருக்கும்.
விலை மலிவுடன் ரெடிமேடாக கிடைக்கும் கண்களைவிட நம் கண்களுக்கு பொருத்தமாக அளவெடுத்து கச்சிதமாக தயாரிக்கப்படும் கண்களானது அசையும் தன்மையை கொஞ்சம் அதிகமாக பெற்றிருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் 50% அளவு அசையும் தன்மையை கொண்டுள்ளன.
செயற்கை கண்களை பராமரிக்கும் முறைகள்.
- செயற்கை கண்களை விசேஷ கவனமெடுத்து கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
- ரெடிமேடாக கிடைக்கும் செயற்கை கண்களை வாரம் ஒருமுறையும், அளவெடுத்து தயாரிக்கப்பட்ட செயற்கை கண்களை மாதம் ஒருமுறையும் சுத்தமான நீரினைக்கொண்டு அலம்ப வேண்டியது அவசியம்.
- கண்கள் வறண்டுவிடாமல் தடுக்க மருத்துவரின் ஆலோசனைப்படி காலை, மாலை என இரு வேளைகளிலும் சொட்டுமருந்து விட்டுவருதல் அவசியம்.
- செயற்கை கண்களை மறுபரிசோதனை செய்துகொள்வதற்கும், சிராய்ப்புகள் எதாவது ஏற்பட்டிருந்தால் அதனை பாலீஷ் செய்து புதுப்பிப்பதற்கும் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனைபெற வேண்டியது மிக மிக அவசியம்.
- தோல்களில் உருவாகும் உப்பு நீர்கள் செயற்கை கண்களில் தேங்கிநின்று அல்லது அதில் படலமாக படிந்து கண்களில் உறுத்துதலை ஏற்படுத்தலாம். இதனை தவிர்க்க சிலமாத இடைவெளிகளில் மருத்துவமனை சென்று செயற்கை கண்களை முறையாக பரிசோதித்து சுத்தம் செய்தல் அவசியம்.
இதுவரை செயற்கை கண்கள் பார்வையை மீட்டுக்கொடுப்பதில்லை என்றும், முகத்தில் கண்கள் இருப்பது போன்றதொரு தோற்றத்தையே கொடுக்கிறது என்றும் பார்த்தோம். இனி பார்வையை மீட்டுத்தரக்கூடிய செயற்கை கண்களைப்பற்றி பார்க்கயிருக்கிறோம்.
பார்வையை மீட்டுத்தரும் செயற்கை கண்கள்.
செயற்கை கண்கள் என்ற ஒன்றை வெறும் அழகுக்காக மட்டுமே உருவாக்குவதால் அதன் முழு பலன்களும் நமக்கு கிடைத்துவிடப்போவதில்லை. இயற்கை கண்கள் எப்படி இவ்வுலகை பார்க்க உதவுகிறதோ அதேபோன்று இவ்வுலகை பார்க்க உதவினால்தானே அது பயனுடையதாக இருக்கும்.
எனவே, விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக பார்வையை மீட்டுத்தரக்கூடிய செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சியில் போராடி வந்தனர். அவர்களின் முயற்சிகள் வீணாகவில்லை. அவர்களின் தொடர் முயற்சியின் பயனாக சில வருடங்களுக்கு முன்புவரை பிரகாசமான வெளிச்சத்தையும் மங்கலான ஒளி கீற்றுகளையும் பார்க்கும்படியான வெற்றியையே பெற்றிருந்தனர்.
ஆனால் தற்போது செயற்கை கண்களில் நவீன சிறியரக கேமிராவை பொருத்தி காட்சிகளை படம்பிடித்து அவைகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பார்வை நரம்புகளுடன் இணைத்து காட்சிகளை தெளிவாக காண்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.
இதில் தற்போது முதற்கட்ட வெற்றியை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
Bionic Eye.
அமெரிக்காவிலுள்ள “கார்னெல்” பல்கலைகழகத்தை சேர்ந்த “வெய்ஸ்” மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் அறிஞர்கள் செயற்கை கண் கருவியை உருவாக்கியுள்னர்.
இக்கருவியானது ஒளிக்கதிர்களை உட்கிரகிக்கும் “என்கோடர்” மற்றும் என்கோடரில் பெறப்பட்ட தகவல்களை மூளைக்கு எடுத்து செல்லும் “டிரான்ஸ்டி சர்” ஆகிய இருபகுதிகளை உள்ளடக்கியது.
இக்கருவியை கொண்டு முதற்கட்டமாக எலிகளை பயன்படுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதனையின் முடிவு ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது.
ஆம், செயற்கை கண் பொருத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்கமுடிந்ததை கண்ட விஞ்ஞானிகளால் எலிகளின் கண்களை மட்டுமல்ல தன் கண்களைக்கூட நம்பமுடியாமல் திக்குமுக்காடியுள்ளனர்.
இதனை மேலும் மேம்படுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் (USYD) மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக (UNSW) அறிஞர்கள் கூட்டாக இணைந்து எலக்ட்ரானிக் சிப்கள் பொருத்தப்பட்ட “பயோனிக் ஐ” (Bionic Eye) என்னும் பார்வையை மீட்டுத்தரும் நவீன கண்களை உருவாக்கி வெற்றிகண்டுள்ளனர். இதற்கு “Phoenix 99” என பெயர் சூட்டியுள்ளனர்.
இவர்கள் கண்டுபிடித்துள்ள “Phoenix 99” என்னும் இந்த நவீன செயற்கைக்கண் தற்போதுவரை பரிசோதனை கூடத்திலேயே உள்ளதால் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சிலகாலம் ஆகலாம்.
வருங்காலங்களில் இந்த “பயோனிக் ஐ” (Bionic Eye) என்னும் பார்வையை மீட்டுத்தரும் செயற்கைக்கண்ணானது மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக புகழ்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இதனை உருவாக்கிய ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பயோ மெடிக்கல் இஞ்சினியரின் பேராசிரியருள் ஒருவரான “கிரெக் சுவானிங்”.
எது எப்படியோ.. இனி வருங்காலங்களில் விபத்தினாலோ, அல்லது வியாதிகளாலோ கண்களில் பார்வையை இழந்தவர்கள் மட்டுமல்லாது பிறக்கும்போதே பார்வை இல்லாமல் இருப்பவர்களால்கூட செயற்கை கண்களின் உதவியுடன் இனி இந்த உலகை ரசிக்கலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்பதே உண்மை!