நாடுகளின் சுதந்திர தினங்கள்.
Suthanthira Thinangal.
[Part - 6].
ஆறாவது பதிவாகிய இந்த பதிவில் "இஸ்ரேல்" மற்றும் "ஈராக்" நாடுகளின் அடிமைப்பட்ட காலநிலை மற்றும் சுதந்திரம் பெற்ற தருனங்களை பார்க்க இருக்கின்றோம்.
இதன் முதல் பகுதியை [Part 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்...
☆☆National Independence Days - Angola - Part 1☆☆
♣♣♣♣♣♣
நாடுகளின் அடிமை வாழ்வும்
சுதந்திர தருணங்களும்.
பகுதி - 6.
இஸ்ரேல்.
Israel.
நாட்டின் பெயர் - இஸ்ரேல் (Israel).
தலைநகரம் - எருசலேம்.
ஆட்சிமொழி - எபிரேயமொழி மற்றும் அரேபிய மொழி.
அமைவிடம் - மேற்கு ஆசியாவில் மத்திய தரைகடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு.
இது வடக்கில் லெபனானையும், வடகிழக்கில் சிரியாவையும், கிழக்கில் ஜோர்டானையும், தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரையையும், மேற்கில் மத்திய தரைகடலையும், தெற்கில் அஃகபா வளைகுடாவையும் கொண்டுள்ளது.
பரப்பளவு - 28,023 சதுர கிலோமீட்டர்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - பண்டைய எகிப்து அரசரான மோவாப் பிரதேசத்தின் மன்னர் "மோசே" கி.மு 9 ம் நூற்றாண்டில் வெற்றியின் சின்னமாக ஒரு கல்வெட்டினை அமைத்துள்ளார்.
கி.மு 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு இயற்கை பேரழிவுகளால் மண்ணில் புதையுண்டு போனாலும் 1868 ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் வாயிலாக மீண்டும் கிடைக்கப்பெற்றது. இதில் மொத்தம் 34 வரிகள் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டில் கி.மு 1206 முதல் 1203 வரையில் "பெலிஸ்தியா" அல்லது "கானான்" தேசத்திற்கு எதிராக தான் பெற்ற வெற்றிகளை வரிசைப்படுத்தியுள்ளார்.
அதில் "இஸ்ரயேல்" என்ற நாட்டை தான் வெற்றிகொண்டது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இக்கல்வெட்டிலுள்ள சான்றின்படி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் "இசுரேல்" என்னும் நிலத்தை தங்களின் தாயகமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
கி.மு 11 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இஸ்ரேலிய யூத மன்னர்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர்.
ஆனால், காலவோட்டத்தில் இரண்டாம் பாபிலோனிய பேரரசால் கி.மு. 586 ல் யூத அரசு தோற்கடிக்கப்பட்டது.
அதன் பின்பு வந்த பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய பேரரசுகளின் ஆக்கிரமிப்பாலும், அடக்குமுறைகளாலும் யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேலை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய ஆரம்பித்தது. மிச்சம் மீதி இருந்த சொற்ப யூதர்களும் இஸ்லாமியர்களாக மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
இஸ்ரேல் தேசத்திலிருந்து வெளியேறிய யூதர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழ்ந்துவந்தனர். பிற நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்தவர்கள் இன வேற்றுமையால் பல துன்பங்களுக்கு ஆளாகினர்.
நாடற்றவர்களாக நாடோடிகளாக இருப்பதாலேயே நம்முடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. அப்படி குரல்கொடுத்தாலும் அதனை எந்த நாடுகளும் செவிசாய்த்து கேட்பதில்லை என்பதனை உணர்ந்த யூதர்கள் தங்கள் பலநூறு வருடங்களுக்கு முன்னால் இழந்த தங்களின் தாயகமான இஸ்ரேல் நிலப்பரப்பை திரும்ப பெறுவது என்கின்ற முடிவுக்கு வந்தனர்.
பல நூறு வருடங்களுக்கு முன்னால் இழந்ததை இனி போராடி பெறுவது கடினமானது என்பதால் வேறு சுலபமான வழியை யோசிக்க ஆரம்பித்தனர்.
அதன்படி ஒருகாலத்தில் இஸ்ரேலாக இருந்து இன்று பாலஸ்தீனமாக பெயர்தாங்கி நிற்கும் பிரதேசத்தில் மீண்டும் சிறு சிறு குழுக்களாக குடியேறி அங்குள்ள நிலங்களை விலைக்குவாங்கி தன்னுடைமையாக்கி அதன்மூலம் இழந்த இஸ்ரேயல் தேசத்தை மீண்டும் தன்னுடையதாக்கி கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன்படி ஓட்டோமான் மற்றும் அரேபியர்களிடமிருந்து நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் "தியோடோர் ஹெர்ட்சு" (1860 - 1904) என்னும் ஆஸ்திரிய யூதர் "சியோனிய இயக்கம்" என்ற ஒன்றை தொடங்கினார். இந்த இயக்கத்தின் வாயிலாக 1904 தொடங்கி 1914 ம் வருடங்களுக்கு உள்ளாக சுமார் 40,000 யூதர்கள்வரை பாலஸ்தீனத்தில் குடியேறியிருந்தனர்.
1917 ல் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளரான "ஆர்தர் பால்ஃவோர்" என்பவர் யூதர்களுக்கென்று தனியாக ஒரு பாலஸ்தீனம் அமைக்கவேண்டும் என்னும் கருத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் 1920 ம் ஆண்டில் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் வந்தது. எனவே எந்த தடையும் இல்லாமல் 1920 முதல் 1933 ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் அலையலையாக நிறைய யூதர்கள் பாலஸ்தீன நிலப்பரப்புகளில் குடியேற ஆரம்பித்தனர்.
அதன் பின் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலையில் எராளமான யூதர்கள் கொல்லப்பட்டதால் பாலஸ்தீனத்திற்கு ஏராளமான யூதர்கள் இடம்பெயர்ந்தனர்.
இதனால் இரண்டாம் உலகப்போரின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் பாலஸ்தீனத்தில் சுமார் 6,00,000 யூதர்கள் இருந்தனர். இதனால் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் வலுத்தன.
அரேபியர்களின் தாக்குதல்களிலிருந்து தங்களை காக்க அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரிட்டனும் தவறியதால் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள யூதர்கள் முடிவெடுத்தனர்.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1947 ல் யூதர்களுக்கும், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கும் இடையேயான வன்முறை அதிகரிக்க அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில் இருந்த பிரிட்டன் அரசானது நமக்கேன் வம்பு என பாலஸ்தீன பிரதேச ஆட்சி உரிமையிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது.
ஒரு நாட்டிலிருந்து விலகுவதற்கு முன்னால் அந்த நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரு கூறுகளாக வெட்டிவிட்டு செல்வதே பிரிட்டிஷ்காரர்களின் வாடிக்கை என்பதால் அதையே இஸ்ரேல் பாலஸ்தீன விஷயத்திலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.
ஆம்,... போறதுதான் போறோம் வழக்கம்போல நாட்டை இராண்டாகப் பிரிச்சிக் கொடுத்துட்டுப் போகிடுவோம் அப்போதுதான் இப்போ மாதிரி எப்போதும் வெட்டிகிட்டும் குத்திக்கிட்டும் கிடப்பானுக என்ற முடிவுக்கு வந்தனர்.
1947 நவம்பர் 29ம் தேதி உலகநாடுகளின் பேரவை (UN General Assembly) பாலஸ்தீனத்தை இருநாடுகளாக பிரிக்க பிரிட்டனுக்கு ஒப்புதலை அளித்தது.
யூதர்களுக்கு 55 % மும், அராபியர்களுக்கு 45% மும் பிரித்துக் கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
"எருசலேம்" நகரமானது உலக நாடுகள் நிர்வகிக்கும் நிலப்பரப்பாக பொதுவில் இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில் எருசலேமை இரு இன மக்களும் உரிமைகோரி சண்டையிடுவார்கள் அதனால் அதனை தவிர்ப்பதற்கே இவ்வாறு முடிவுவெடுத்ததாக அறிவித்தனர். (என்னே புத்திசாலித்தனம்).
இந்த முடிவை யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) ஏற்றுக்கொண்டர். ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) இந்த முடிவுக்கு உடன்பட மறுத்தது. இதைத் தொடர்ந்து 1948 ல் யூதர்கள் மீது அரேபியர்களும், அரேபியர்கள் மீது யூதர்களும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலே இஸ்ரேலுக்கான முதல் விடுதலை போராட்டமாக அமைந்தது எனலாம்.
இரு தரப்பினரின் பிரச்சனைகளுக்கு தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அப்பகுதியை விட்டு 1948 ம் ஆண்டு மே 15 ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு வெளியேறினர்.
ஆனால், அவர்கள் வெளியேறும் முன்னதாகவே அதாவது 1948 மே 14 ம் தேதியே "இஸ்ரேல்" என்னும் புதிய சுதந்திர நாடானது உருவாகிவிட்டதாக யூத தலைவர்கள் அறிவித்தனர்.
இதன் காரணமாக இஸ்ரேல் 1948 ம் வருடம் மே 15 ம் தேதி ஐக்கிய இராச்சியம் (United Kingdom) இடமிருந்து சுதந்திரம் பெற்றது என எடுத்துக்கொண்டாலும் இன்று வரையில் இருதரப்பிலும் சமாதானம் ஏற்படாதது மட்டுமல்ல தொடர்ந்து போர்களும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கும் குறைவில்லை என்பது வேதனையே.
தற்போதைய ஆட்சிமுறை - நாடாளுமன்ற மக்களாட்சி.
☀☀☀☀☀☀
ஈராக்.
Iraq.
நாட்டின் பெயர் - ஈராக் (Iraq).
தலைநகரம் - பாக்தாத்.
ஆட்சிமொழி - அரபு, குர்தி.
அமைவிடம் - தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும்.
வடக்கில் துருக்கியும், கிழக்கில் ஈரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவூதி அரேபியாவையும், தென்மேற்கில் ஜோர்தானையும், மேற்கில் சிரியாவையும் இதன் எல்லைகளாகக் கொண்டுள்ளன.
அதுமட்டுமல்லாது வடக்கு பகுதி எல்லையில் 58 கி.மீ நீளமுள்ள கடற்கரையையும் பாரசீக வளைகுடாவில் கொண்டுள்ளது.
பரப்பளவு - 438,317 சதுர கிலோமீட்டர்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைபடுத்தப்பட்ட தருணம் - ஈராக்கானது பல்வேறு கட்டங்களில் பல பேரரசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக அக்காடிய பேரரசு, சுமேரிய பேரரசு, அசிரிய பேரரசு, பாபிலோனியப் பேரரசு மட்டுமல்லாது மீடியன் பேரரசு, அகாமெனீது பேரரசு, பார்த்தியப் பேரரசு, செலுக்கட் பேரரசு, சாசனீது பேரரசு, உரோமைப் பேரரசு, மங்கோலியப் பேரரசு, சஃபாவிது பேரரசு, அஃப்சரீது பேரரசு, ராசிதீன் கலிபாக்கள், உமையா கலீபகம், அப்பாசியக் கலீபகம் மற்றும் துருக்கியர்களால் ஆளப்பட்ட உதுமானிய பேரரசு முதலிய பேரரசுகள் ஈராக்கில் தங்கள் ஆளுமையை வெளிப்படுத்தி வந்துள்ளன.
உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டபோது ஈராக்கின் தற்கால எல்லைகளை 1920 ம் ஆண்டு இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடி அமைப்பான "உலக நாடுகள் சங்கம்" (League of Nations) வரையறை செய்தது.
அவர்களின் வரையறையின்படி ஈராக் நிலப்பரப்பானது பிரிட்டன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அப்புறமென்ன அப்பாவி ஈராக் மக்களின் பாடு திண்டாட்டம்தான். மக்களின் சுதந்திரம் பறிபோனது. அடிமைவாழ்வு ஆட்கொண்டது.
பிரிட்டீஷாரின் கொடுங்கோலாட்சிக்கு முடிவுகட்ட நினைத்த ஈராக்கானது 1921 ல் முடியாட்சியை நிறுவி விடுதலைக்கான போராட்டங்களை நிகழ்த்தியது.
அதன் காரணமாக 1932 ல் ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) இடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றி முறையான முடியாட்சி அமைக்கப்பட்டு ஈராக் ராஜ்ஜியம் விடுதலை பெற்றது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1932 ம் வருடம் அக்டோபர் 3 ம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) இடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றபின் முடியாட்சி அமைக்கப்பட்டது. அதன்பின் 1958 ம் ஆண்டில் முடியாட்சி கவிழ்க்கப்பட்டு "ஈராக் குடியரசு" நிறுவப்பட்டது.
தற்போதைய ஆட்சிமுறை - நாடாளுமன்றக் குடியரசு.
♤♤♤♤♤♤
"நாடுகளின் சுதந்திர தினங்கள்" (Part 6) என்னும் ஆறாவது பகுதியான இப்பதிவில் இஸ்ரேல் (Israel) மற்றும் ஈராக் (Iraq) ஆகிய நாடுகளின் அடிமைப்பட்ட தருணங்களையும், அதன்பின் அடிமை வாழ்விலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளையும் மிக சுருக்கமாகப் பார்வையிட்டோம்...
இதன் தொடர் பதிவாகிய ஏழாவது (Part - 7) பகுதி மிக விரைவில் ....
[தொடர் தொடரும்]...
12 கருத்துகள்
தகவல்கள் வழக்கம் போல சிறப்பு நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குதகவல்கள் அருமை...
பதிலளிநீக்குதங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
நீக்குஇஸ்ரேல் பற்றிய பதிவு அ௫மை... காணொளி செம பொ௫த்தம்... சூப்பர்...
பதிலளிநீக்குநன்றி!...நன்றி!...
நீக்குகாணொளி... மீம்ஸ்... 😀😆😂🤣
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஇஸ்ரேல் பத்தி விரிவாக அறிய முடிந்தது. ஆனா பாருங்க இப்பா பாலஸ்தீனம் இஸ்ரேல் அதான் யூதர் அரேபிய சண்டை இப்பவும் தொடர்கிறதே.
பதிலளிநீக்குபிரிட்டிஷ் புகுந்தாலே கலகம்தான்....... அங்கும் துண்டு போட்டிருக்காய்ங்க பாருங்க...அவங்க வேலையே பிரித்தாள்வதுதானே... பிரிச்சுவிட்டு வேடிக்கை பார்ப்பது. அவங்க குளிர்காயலாமே...
இப்ப பாருங்க மீண்டும் இஸ்ரேல் பாலஸ்தீனிய சண்டை.
கீதா
ஆம்,... சகோதரி பிரிப்பதால்தான் ''பிரி''ட்டிஷ் என பெயர்வைத்துக் கொண்டார்களோ என்னவோ?!!!
நீக்குஈராக் - நாடாளுமன்றக் குடியரசா?!!!! ஆச்சரியமாக இருக்கிறதே. சுதந்திரம் இருக்கிறதா அங்கு?
பதிலளிநீக்குகீதா
நம் நாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு கொஞ்சம் பரவாயில்லை என்றே தோன்றுகிறது...
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.