நாடுகளின் சுதந்திர தினங்கள்.
Suthanthira Thinangal.
[Part - 5].
ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடுகளிடையே உருவான காலனி ஆதிக்கத்தின் காரணமாக மக்கள் பட்ட அவலங்களானது அவர்களை சுதந்திரத்தை நோக்கி சிந்திக்க தூண்டியது.
இந்த ஆதிக்க கொடுமைகளிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே புரட்சியை வெடிக்கச் செய்து காலனி ஆட்சிக்கு சாவுமணி அடித்து சுதந்திரம் பெற காரணமாக அமைந்தது.
அவ்வாறு மக்களால் உருவாக்கப்பட்ட புரட்சியின்மூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் சுதந்திர தினங்களை நாம் இந்த தொடர் பதிவின் மூலமாக தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தொடர் பதிவில் இது ஐந்தாவது பகுதி [Part 5].
இதன் முதல் பகுதியை [Part 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்...
♋ National Independence Days - Angola - Part 1 ♋
♋♋♋♋♋♋♋♋
நாடுகளின் அடிமை வாழ்வும்
சுதந்திர தருணங்களும்.
பகுதி - 5.
இந்தியா.
INDIA.
நாட்டின் பெயர் - இந்தியா - India.
தலைநகரம் - புது தில்லி - New Delhi.
ஆட்சிமொழி - இந்தி, ஆங்கிலம்.
அமைவிடம் - தெற்கே இந்திய பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா முதலிய கடல் பகுதிகளையும், வடக்கே நிலப்பரப்பையும் எல்லைகளாகக் கொண்டுள்ள ஒரு தீபகற்ப பகுதியாகும்.
இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான். வடக்கே பூட்டான், சீனா, நேபாளம். கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன.
பரப்பளவு - பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 3,287,263 சதுர கிலோமீட்டர்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - இந்திய வரலாறானது மிக பழமையானவை. வரலாறு பதிவுசெய்யப்பட்ட காலத்திற்கும் முந்தியவை. கி.மு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிந்து, கங்கை சமவெளி நாகரிகத்திலிருந்து இந்திய வரலாற்றை ஓரளவு கணிக்க முடிகிறது. இந்த கால கட்டத்தில்தான் மகாஜன பாதங்கள் என்னும் பல அரசாட்சி முறைகள் தோன்றின.
கி.மு. 4 ம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 3 ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி மவுரியப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அடுத்த 1,500 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகள் பல அரசர்களால் ஆளப்பட்டுவந்தாலும் குப்தர் ஆண்ட காலம் தனி சிறப்பு பெற்றதாக அமைந்தது.
தென்னிந்தியாவானது சாளுக்கியர், சோழர், பல்லவர், சேரர் மற்றும் பாண்டியர் போன்ற அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தன. இந்நிலையில்தான் கி.பி. 7 ம் நூற்றாண்டில் முகமதிய மதம் தோன்றியதோடு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது. இதன் தாக்கம் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப்பகுதியில் உணரப்பட்டன.
ஆம், கி.பி. 712 ல் அரபு நாட்டை சேர்ந்த படைத்தலைவர் "முகமது பின் காசிம்" படையெடுப்பால் இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு வித்திடப்பட்டது.
முகமது பின் காசிமால் தூவப்பட்ட விதை படிப்படியாக வளர்ந்து கஜினி முகமது, கோரி முகமது, முகலாயப் பேரரசு, தில்லி சுல்தான்கள் என வளர்ந்து மரமாகி நின்றது.
இவைகளுடன் விஜய நகர பேரரசு, மராட்டிய பேரரசு, இராஜபுத்திர இராச்சியங்கள் போன்ற இந்து இராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் தழைத்தெழுந்தன. விளைவு போர்களுக்கும் பஞ்சமில்லை.
அவுரங்கசீப்பிற்கு பின் 18 ம் நூற்றாண்டில் முகலாய பேரரசுகள் படிப்படியாக வலுவை இழந்தது.
18 ம் நூற்றாண்டு தொடங்கி 19 ம் நூற்றாண்டு வரை வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி படிப்படியாக இந்தியாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இவர்களின் ஆட்சியால் மக்கள் அதிருப்தி அடைந்ததால் 1857 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறைக்கு எதிராக போராட ஆரம்பித்தனர்.
இதுவே முதல் இந்திய சுதந்திர போராட்டமாகும்.
இத்தனை காலமாக வீட்டிற்குள் முடங்கி கிடந்தவர்கள் விடுதலை வேண்டி வீதிக்கு வந்ததால் ஆங்கிலேயர்கள் அதிர்ந்தனர். இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து தட்டிப்பறித்தது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் சமுதாய மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் கண்டாலும் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்தனர். இதனால் மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும் போராட ஆரம்பித்தனர்.
விளைவு,...
ஆங்கிலேயர்கள் அடக்கு முறையை கையிலெடுத்தனர். இதன் காரணமாக சாதாரண போராட்டம் மாபெரும் சுதந்திர போராட்டமாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
20 - ம் நூற்றாண்டின் முதல் பாதியில் நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸ் மூலம் வழிநடத்தப்பட்ட சுதந்திர போராட்டமானது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்டுத்தீ போல பரவியது. மக்கள் மனதில் சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்தது.
போராட்டத்தை ஒடுக்க ஆங்கிலேயர்கள் கையாண்ட கொடூரமான அடக்கு முறைகளால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாயின.
ஆனாலும்,... அஞ்சவில்லை பாரதத்தின் புதல்வர்கள். பாரத தாயின் மானம் காக்க, உரிமை மீட்க அடங்கா வெறியுடன் ஆர்ப்பரித்தனர். உடமை இழந்து உறவுகளை இழந்து உயிரை இழந்தாலும் உரிமைகளை மட்டும் இழப்பதில்லை என உறுதி ஏற்றனர்.
அவர்களின் நீண்ட நெடிய போராட்டம் வீண்போகவில்லை.
வைகறை தென்றலானது ஒருநாளில் வெற்றிக்கனியை பறித்துக்கொண்டு வந்து அவர்களின் கரங்களில் சேர்த்தது.
ஒவ்வொரு இந்தியனின் தலைகளிலும் வீரமகுடம் சூட்டப்பட்ட நாள் அது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - பல உயிரிழப்புகள் வேதனைகளை அனுபவித்த பின்பும் கூட மனம் தளராமல் சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்று அயராது போராடிய இந்திய மக்களின் தளராத போராட்டத்தின் காரணமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.
தற்போதைய ஆட்சிமுறை - மக்களாட்சி.
❤♡❤♡❤♡❤♡❤
இந்தோனேசியா.
Indonesia.
நாட்டின் பெயர் - இந்தோனேசியா (Indonesia).
தலைநகரம் - ஜகர்த்தா (Jakarta).
இந்தோனேசியாவானது விரைவில் ஜகர்த்தாவிலிருக்கும் தன்னுடைய தலைநகரை "போர்னியோ" தீவுக்கு மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
புதிய தலைநகருக்கு "நுசாந்தரா" என பெயரையும் செலக்ட் செய்துவிட்டது.
தலைநகர் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு 2 காரணங்களை முன் வைக்கிறது இந்தோனேசியா.
முதல் காரணம் தற்போதுள்ள தலைநகரமான ஜகர்த்தாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கம். இதனால் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி, வாகனப் பெருக்கம் மற்றும் காற்று மாசுபாடு.
இரண்டாவது காரணம் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடர்.
ஆட்சிமொழி - இந்தோனேசிய மொழி (Indonesian).
அமைவிடம் - தென்கிழக்காசியாவில் ஓசியானியா (Oceania) பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 17,508 தீவுகளை உள்ளடக்கியது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். 33 மாநிலங்களைக் கொண்டுள்ள நாடு. இதன் எல்லைகளில் பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள நாடுகளாக உள்ளன.
பரப்பளவு - 1,904,569 சதுர கிலோமீட்டர்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - ஆரம்ப காலங்களில் இந்தோனேசிய தீவு கூட்டங்களில் இந்து மற்றும் பௌத்த இராஜியங்கள் கோலோச்சியுள்ளன.
ஆனால்,... மத்திய காலத்தில் இஸ்லாமிய ஆதிக்கத்திற்குள் வந்தது. இதோடு நின்றுவிடவில்லை இதன் இயற்கை வளங்களால் கவரப்பட்ட ஐரோப்பியர்கள் 1512 ம் ஆண்டு "பிரான்சிசுக்கோ செராவோ" (Francisco Serrao) என்பவரின் தலைமையில் வியாபார நோக்கங்களுக்காக இந்தோனேசிய மண்ணில் கால் பதித்தனர்.
போர்த்துக்கீசியர்களை தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் ஆங்கிலேயர்களும் இந்தோனேசியாவிற்கு படையெடுத்தன.
ஆம், 1602 ம் ஆன்டு முதற்கொண்டு சுமார் மூன்றரை நூற்றாண்டுகளாக இந்தோனேசிய பிரதேசமானது "டச்சு கிழக்கிந்திய கம்பெனி"யின் கீழ் (Dutch East India Company) இருந்துவந்தது.
கிழக்கிந்திய கம்பெனி என்னும் பெயரை கேட்டாலே நமக்கெல்லாம் நுனிநாக்கு முதற்கொண்டு அடிநாக்கு வரையிலும் வரளுகிறதல்லவா... இந்தோனேசியா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன...
கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறைக்கு குறைவே இல்லை... அதன் காரணமாக மக்கள் பட்ட துயரங்களுக்கும் அளவே இல்லை.
ஆனால், இந்த துயரங்கள் அதிக நாள் நீடிக்கவில்லை. அதன்பின் ஏற்பட்ட பல அரசியல் குழப்பங்களால் 1800 ல் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனி ஆக்கிரமித்து வைத்திருந்த இந்தோனேசியப் பகுதிகள் அனைத்தும் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டதால் இந்தோனேசியாவானது நெதர்லாந்து நாட்டின் காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடாக மாறியது.
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தது தப்பித்தது கொஞ்சம் ஆறுதல் தந்தாலும் நெதர்லாந்தின் அடக்கு முறைக்கும் குறைவில்லை.
இத்தோடு பிரச்சனை முடிந்தபாடில்லை. இந்தோனேசிய மக்களின் தலைவிதியானது இரண்டாம் உலகப்போரில் மீண்டும் சிக்கலானது.
ஆம்,... நெதர்லாந்திடம் சுதந்திரத்தை இழந்து நிற்பது போதாதென்று இரண்டாம் உலகப்போரின்போது சிறிதுகாலம் ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குள்ளும் இந்தோனேசியாவின் பெரும்பான்மையான நிலப்பகுதிகள் வந்தன. இந்த சோகத்தை விதி என்பதா அல்லது இறைவன் விதித்த சதி என்பதா?
ம்..ம்ம்... இந்தோனேசிய மக்களின் பிழைப்பு மானம்கெட்ட பொழைப்புதான் போங்க...
ஜப்பானிடம் அடிமைப்பட்ட இந்தோனேசியாவின் சோகத்தைஉங்களுக்கு எளிதாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்...
குதிகால் பிடரியல் படும் அளவிற்கு விடாமல் துரத்திய டச்சு டாபர் நாயிடம் இருந்து உயிர் பிழைக்க...
கட்டியிருந்த வேட்டியை பறிகொடுத்துவிட்டு...
மானம் காக்க கோவணமாவது மிஞ்சியதே என்று மனதை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு நிம்மதியாக அண்ணாந்து பார்த்து கொட்டாவி விடும் வேளை பார்த்து... கட்டியிருந்த கோவணத்தையும் கோழி கொத்திக்கொண்டு போனது போலத்தான் இங்கு இந்தோனேசியாவின் நிலைமையும்... (இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்குமென நினைக்கிறேன்...☺☺☺)
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1945 ம் வருடம் ஆகஸ்ட் 17 ம் தேதி நெதர்லாந்து (Netherlands) மற்றும் ஜப்பான் (Japan) இடமிருந்து சுதந்திரம் பெறுவதாக நெதர்லாந்து அறிவித்தது. என்றாலும் பல உள்நாட்டு குழப்பங்கள் தீர்க்கப்பட்டு ஒன்றுபட்ட சுதந்திர இந்திதோனேசியா 1949 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1953 ம் ஆண்டு அங்கீகரித்தது.
தற்போதைய ஆட்சிமுறை - குடியரசு.
★☆★☆★☆★
"நாடுகளின் சுதந்திர தினங்கள்" (Part 5) என்னும் ஐந்தாவது பகுதியான இப்பதிவில் இந்தியா (India) மற்றும் இந்தோனேசியா (Indonesia) ஆகிய நாடுகளின் அடிமைப்பட்ட தருணங்களையும், அதன்பின் அடிமை வாழ்விலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளையும் மிக சுருக்கமாகப் பார்வையிட்டோம்...
இதன் தொடர் பதிவாகிய ஆறாவது (Part 6) பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை தட்டுங்க.
❤ National Independence Days - Israel - Part 6 ❤
⧪⧪⧪⧪⧪⧪⧪
4 கருத்துகள்
குப்தர் காலம் - பொற்காலம் என சொல்லப்படுவதுண்டு... ஆனால் அதற்காக காரணம் வேறு...
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி நண்பரே!
நீக்குதகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிலளிநீக்குஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.
யாருக்கு பயன் ?
அரசியல் வியாதிகளும், திரைப்பட கூத்தாடன், கூத்தாடிகள் சொகுசாய் வாழ்ந்திடத்தான்...
சொகுசு வாழ்க்கையை பற்றி சிந்திப்பதைவிட... இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததால்தான் இன்று நண்பர் கில்லர்ஜி அவர்களின் கருத்துக்களையும், எழுத்துக்களையும் சுதந்திரமாக அனைவராலும் படிக்க முடிகிறது என்று எடுத்துக்கொள்ளலாமே?.... எழுதுவதில் கிடைக்கும் நிம்மதியைவிட, எழுதியதை படிப்பதில் கிடைக்கும் இன்பத்தைவிட பணத்தை சம்பாதிப்பதிலும், அதை கட்டிக் காப்பதிலும் அதிக சொகுசு இருப்பதாக நான் நினைக்கவில்லை...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.