நாடுகளின் சுதந்திர தினங்கள்.
Suthanthira Thinangal.
[Part - 3].
புதிய நாடுகளைக் கண்டறியும் ஆர்வமும், கண்டறியப்பட்ட நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் ஆசையும் இன்று நேற்றல்ல மனித இனம் தோன்றிய காலம் தொட்டே இருந்துவருகிறது.
ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடுகளிடையே உருவான காலனி ஆதிக்கத்தின் காரணமாக மக்கள் சந்தித்த துயரம் சொல்லொண்ணாதது.
துயரத்தின் உயரம் தாங்காது மக்களால் உருவாக்கப்பட்ட புரட்சியின்மூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் சுதந்திர தினங்களை நாம் இந்த தொடர் பதிவின் மூலமாக தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தொடர் பதிவில் இது மூன்றாவது பகுதி [Part 3].
இதன் முதல் பகுதியை [Part 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்...
National Independence Days - Angola - Part 1.
☕☕☕☕☕☕
நாடுகளின் அடிமை வாழ்வும்
சுதந்திர தருணங்களும்.
பகுதி - 3.
அஸர்பைஜான்.
Azerbaijan.
நாட்டின் பெயர் - அஸர்பைஜான் (Azerbaijan).
தலைநகரம் - பக்கூ (Baku).
ஆட்சிமொழி - அசர்பைஜான் (Azerbaijani).
அமைவிடம் - ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவிற்கும் இடையேயுள்ள ரஷ்யாவின் காகசஸ் (Caucasus) மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும்.
இதன் வடக்கு எல்லையாக ரஷ்யாவின் தாகெஸ்தான் (Dagestan) பகுதியையும், வடமேற்கு எல்லையாக ஜார்ஜியாவையும் (Georgia), மேற்கு எல்லையாக ஆர்மீனியாவையும் (Armenia), கிழக்கு எல்லையாக காஸ்பியன் கடல் (Caspian Sea) என அழைக்கப்படும் பரந்த ஏரியையும், தெற்கே ஈரானையும் (Iran) எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பரப்பளவு - 33,400 சதுர மைல்.(86,600 சதுர கிலோமீட்டர்).
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - 19 ம் நூற்றாண்டுக்கு முன்னால் அஸர்பைஜான் ஈரானிய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
19 ம் நூற்றாண்டில் அரஸ் நதியின் (Aras river) வடக்கே உள்ள பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததால் அது ரஷ்யாவின் எல்லைக்குள் வந்தது. தொடர்ந்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டிலேயே இது இருந்து வந்தது.
ரஷ்யாவிடமிருந்து அசர்பைஜான் சுதந்திரம் பெற விரும்பியதால் "அசர்பைஜான் ஜனநாயக குடியரசு" (Azerbaijan Democratic Republic) என்னும் அரசியல் சாசனம் 1918 ல் உருவாக்கப்பட்டது. ஆனால் சோவியத் படைகளால் 1920 ல் "அசர்பைஜான் ஜனநாயக குடியரசு" முடக்கப்பட்டது. இதனால் 1991 வரையில் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ்தான் அடிமைப்பட்டு கிடந்தது.
1990-91 ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை சந்தித்ததால் "அசர்பைஜான் ஜனநாயக குடியரசு" மீண்டும் உருவாக்கப்பட்டு ரஷ்யாவிற்கு எதிராக மாபெரும் போராட்டங்களையும் உயிர் தியாகங்களையும் நிகழ்த்தியது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - அசர்பைஜானின் மாபெரும் போராட்டத்தை அடுத்து 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி சோவியத் ஒன்றியம் அஸர்பைஜானின் சுதந்திர கோரிக்கைக்கு செவிசாய்த்தது.
அதன்பின் 1991 ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி அஸர்பைஜான் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை அங்கீகரித்து சோவியத் ஒன்றியம் (Soviet Union) முழுமையான சுதந்திரத்தை கொடுத்தது.
தற்போதைய ஆட்சிமுறை - குடியரசு.
⌚⌚⌚⌚⌚⌚⌚⌚
அன்டிகுவா பர்புடா.
Antigua and Barbuda.
நாட்டின் பெயர் - அன்டிகுவா மற்றும் பர்புடா (Antigua and Barbuda).
தலைநகரம் - செயிண்ட். ஜோன்ஸ் (St. John's)
ஆட்சிமொழி - ஆங்கிலம் (English).
ஆனால் வட்டார மொழியாக "அன்டிகுவா" (Antiguan) மற்றும் "பார்புடா கிரியோல்" (Barbudan Creole) ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அமைவிடம் - இரண்டு பிரதான தீவுகளை கொண்டுள்ள ஒரு தீவு நாடுதான் இந்த அன்டிகுவா பர்புடா. அதாவது அந்த இரண்டு பிரதான தீவுகளில் ஒரு தீவின் பெயர் அன்டிகுவா (Antigua). மற்றொரு தீவின் பெயர் பர்புடா (Barbuda).
இந்த இரு தீவுகளும் கிழக்கு கரிபிய கடலில் அட்லாண்டிக் கடலின் எல்லையில் அமைந்துள்ளது.
இதனை சுற்றி சிறியதும் பெரியதுமாக இன்னும் பல தீவு நாடுகள் உள்ளன.
அவையாவன,... குவாதலூப் (Guadeloupe) டொமினிக்கா (Dominica), செயிண்ட் லூசியா (SaintLucia), மர்தினிக்கு (Martinique), செயிண்ட் விண்சண்ட் கிரனடீன்சு (Saint vincent and the Grenadines), திரினிடாட் டொபாகோ (Trinidad and Tobago) முதலியன.
சரி, அதெல்லாம் இருக்கட்டும்... இந்த தீவுகளுக்கு "அன்டிகுவா" மற்றும் "பர்புடா" என பெயர் வைத்தவர் யார் என்று கேட்கிறீர்களா?....
வேறு யாராக இருக்கமுடியும். நம்ம "கிறிஸ்டோபர் கொலம்பஸ்"தான்...
1493 ல் தன்னுடைய இரண்டாவது பயணத்தின் போது இந்த தீவிற்கு வருகை தந்த கொலம்பஸ்தான் இதற்கு "அன்டிகுவா" என பெயர் சூட்டினார்.
ஆம்,... அமெரிக்க பழங்குடி மக்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அவர்கள் யார் எவர் என முறையாக விசாரிக்காமலேயே ஸ்பெயின் மொழியில் "இன்டியோசு" (செவ்விந்தியர்கள்) என பெயர் வைத்தாரில்லையா?. (நல்லவேளை "முட்டைக்கோசு" என்று பெயர் வைக்காமல் விட்டாரே...) அதே கொலம்பஸ்தான் "அன்டிகுவா" என இந்த தீவிற்கும் பெயர் சூட்டிவிட்டார்.
"அன்டிகுவா" என்ற பெயரை அவர் எப்படி செலக்ட் செய்தார் என கேட்கிறீர்களா?...
உண்மையை சொல்லப்போனால் அது ஒரு தேவாலயத்தின் பெயர்.
ஆம்,... ஸ்பெயினின் செவில்லி (Seville) நகரில் அமைந்துள்ள சாண்டா மரியா டி லா அன்டிகுவா (Santa Maria de la Antigua) என்னும் தேவாலயத்தின் நினைவாக இத்தீவிற்கு "அன்டிகுவா" என பெயர் வைத்துவிட்டார்.
அண்மையில் தமிழினக் காவலரான கட்டுமரத்தின் பெயர் ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்டு சந்தி சிரித்ததல்லவா அதுபோல!...
பரப்பளவு - 440 சதுர கிலோமீட்டர்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைபடுத்தப்பட்ட தருணம் - அன்டிகுவா மற்றும் பர்புடா தீவுகளில் முதன்முதலாக குடியேறியவர்களாக அறியப்படுபவர்கள் சிபோனி (Siboney) இனத்தவர்கள். இவர்கள் கி.மு 2400 க்கு முன்னதாகவே குடியேறியவர்களாக அறியப்படுகிறார்கள்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) வாயிலாக வெளியுலகுக்கு தெரியவந்த அன்டிகுவாவை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர அன்னியர்கள் அதன்மீது படையெடுத்தனர்.
1520 ல் ஸ்பானியர்களாலும், 1629 ல் பிரெஞ்சுக்காரர்களாலும், 1632 ல் ஆங்கிலேயர்களாலும் கையகப்படுத்தப்பட்ட அன்டிகுவா இறுதியாக 1667 ம் ஆண்டு ப்ரெடா (Treaty of Breda) ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரிட்டிஷ் காலனியாக மாறியது.
1674 ம் ஆண்டு காலனித்துவ நிர்வாகியாக ஆங்கிலேயர்களால் பணியமர்த்தப்பட்ட கிறிஸ்டோபர் கோட்ரிங்டன் (Christopher Codrington) என்பவர் ஆண்டிகுவா தீவில் பெரிய சர்க்கரை தோட்டத்தையும், சர்க்கரை ஆலையையும் உருவாக்கினார்.
தோட்டம் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய அங்குள்ள மக்களை அடிமைகளாக பயன்படுத்த தொடங்கினார்.
ஆனால் தோட்டத்தில் பணிபுரிய இன்னும் நிறைய தொழிலாளர்கள் தேவைப்பட்டதால் பக்கத்திலுள்ள அழகிய தீவுகளில் ஒன்றான "பார்புடா" வையும் குத்தகைக்கு எடுத்து அங்குள்ள மக்களையும் அடிமைகளாகப் பயன்படுத்தலானார். இதனால் மக்கள் கொந்தளித்தனர். சுதந்திரம் வேண்டி போராட ஆரம்பித்தனர்.
1834 ம் ஆண்டு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. அதன்பின் அன்டிகுவா மற்றும் பார்புடா என தனித்தனியாக இயங்கிக்கொண்டிருந்த இரு தீவுகளும் 1860 ல் ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஒன்றிணைந்த இரு தீவுகளில் உள்ள மக்களும் ஒற்றுமையுடன் சுதந்திரம் கேட்டு தொடர்ந்து போராடி வந்தனர்.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - வெவ்வேறு குழுக்களாக போராடிவந்த மக்களை "வெரே கார்ன்வால் பேர்ட்" (Vere Cornwall Bird) என்பவர் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டமாக மாற்றினார்.
இந்த தொடர் போராட்டம் காரணமாக 1981 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) இடமிருந்து அன்டிகுவா மற்றும் பர்புடா சுதந்திரத்தை மீட்டெடுத்து.
தற்போதைய ஆட்சிமுறை - பாராளுமன்ற அரசியலமைப்பு கொண்ட முடியாட்சி நடைபெற்று வருகிறது.
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
ஆப்கானிஸ்தான்.
Afghanistan.
நாட்டின் பெயர் - ஆப்கானிஸ்தான் (Afghanistan).
தலைநகரம் - காபுல் (Kabul).
ஆட்சிமொழி - பஷ்தூ (Pashto) மற்றும் பாரசீகம் (Persian language).
அமைவிடம் - மேற்கில் ஈரானை (Iran) எல்லையாகவும், கிழக்கில் சீனாவையும் (China), தெற்கிலும், கிழக்கிலும் பாகிஸ்தானை (Pakistan) எல்லையாகவும், வடக்கில் துருக்மெனிஸ்தான் (Turkmenistan), உஸ்பெகிஸ்தான் (Uzbekistan), தாஜிக்ஸ்தான் (Tajikistan) ஆகிய நாடுகளை எல்லையாகவும் கொண்டுள்ளன.
பரப்பளவு - 6,52,090 சதுர கி.மீ.
சாம்ராஜ்யங்களின் சமாதி - ஆப்கானிஸ்தானின் வரலாறு சிக்கலானது. பல ரணங்களை உள்ளடக்கியது.
எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளின் நடுநாயகமாக அமைந்திருப்பதுதான் இந்த ஆப்கானிஸ்தான்.
எனவே இந்த பிரதேசமானது புவியியல் அமைப்பில் முக்கியத்துவம் பெற்ற நாடாக திகழ்வதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்களுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர உலக வல்லரசுகள் அனைத்துமே போராடின.
அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்த அனைத்து நாடுகளிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதுதான் மிச்சமே ஒழிய நெடுநாட்களுக்கு அப்பிரதேசத்தினை தங்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்துகொள்ள முடியவில்ல.
பெரிய பெரிய சாம்ராஜ்யங்களே இதனுடன் தொடர்ந்து மல்லுக்கட்டி நிற்க முடியாமல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்ததால்... ஆப்கானிஸ்தான் "சாம்ராஜ்யங்களின் சமாதி" (GRAVEYARD OF EMPIRES) என இன்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டு வருகிறது.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைபடுத்தப்பட்ட தருணம் - ஆப்கானிஸ்தான் ஆதிகாலம் தொட்டே ஆரியர்கள் (Arya), பாரசீகர்கள் (Persian), கிரேக்கர்கள் (Greece), மௌரியர்கள் (Mauryans), குசானர்கள் (Kushans), எப்தலைட்டுகள் (Hepthalites) என காலங்காலமாக ஆக்கிரமிப்புகளுக்கு உட்பட்டே வருகின்றன.
இடைக்காலங்களில் அரேபியர் (Arab), மங்கோலியர்கள் (Mongolian), துருக்கி (Turkey), பிரித்தானியா (United Kingdom), சோவியத் ஒன்றியம் (Soviet Union) போன்றவைகளாலும் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலும் சிக்கி மீண்டதை நாம் அறிவோம்.
7 ம் நூற்றாண்டில் அரபு இராச்சியம் ஆப்கானிஸ்தானின் சிலபகுதிகளை கைப்பற்ற தொடங்கி படிப்படியாக முழு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன.
1299 ம் ஆண்டில் செங்கிஸ்கான் (Genghis Khan) என்பவனின் கொடுங்கோல் ஆட்சிக்குள் வந்தது.
1504 ம் ஆண்டில் முகலாயப் பேரரசு ஆப்கானிஸ்தானை அடிமை கொண்டது.
அதன்பின் 17 ம் நூற்றாண்டில் பாரசீகர்கள் கட்டுப்பட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டுவரப்பட்டது.
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று தன்னை மார்தட்டிக் கொண்ட பிரிட்டன் 19 ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பரப்பை கையகப்படுத்தி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
பிரிட்டனுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் பெரும் போராக வெடித்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தமாக மூன்று முறை மக்களுக்கு எதிராக போர் தொடுத்தும் பிரிட்டன் தோல்வியையே சந்தித்தது.
மூன்று போர்களிலும் பிரிட்டன் ராணுவத்தை சேர்ந்த பல அப்பாவி போர்வீரர்கள் பலியானதே மிச்சம். அதில் உயிர் பிழைத்தவர்களோ சொச்சம்.
இதையடுத்து கருப்பட்டி பானைக்குள் கையைவிட்டு பார்க்க சோவியத் யூனியனுக்கும் ஆசைவர 1979 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி சோவியத் யூனியனின் செம்படையானது (Red Army) "ஆக்சஸ்" ஆற்றைக் கடந்து ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது.
பானைக்குள் கை விட்டு பார்த்த பின்பே இது கருப்பட்டி பானை அல்ல கொட்டும் தேன்கூடு என தெரியவர...
பயந்து பின்வாங்கினால் எங்கே தன்னுடைய இமேஜ் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் அங்கேயே துளாவிக்கொண்டு நிற்க...
சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முஜாகிதீன் அமைப்பு அமெரிக்க நிதியுதவியுடன் ஆக்ரோஷத்துடன் களம் இறங்க சோவியத் யூனியனுக்கு எதிரான போர் 10 ஆண்டுகள்வரை நீடித்தது.
பத்து ஆண்டுகளில் சோவியத் யூனியன் பதினான்கு ஆயிரம் இராணுவ வீரர்களை பறிகொடுத்து நின்றது அந்தோ பரிதாபம்.
1989 ம் ஆண்டு பிப்பிரவரி 15 ம் தேதி அன்று 10 ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்கு பின் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற சோவியத் யூனியன் முன்வந்தது.
1992 - 96 ல் முஜாகிதீனின் 7 பிரிவுகளுக்கு இடையே அதிகாரத்தை பகிர ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1996 முதல் 2001 வரையான முல்லா ஓமர் (Mullah Omar) தலைமையிலான தாலிபான்கள் ஆட்சி பழமைவாதத்துடன் மிகக் கடுமையானதாக இருந்ததுடன் பெண்களுக்கான உரிமை, கல்வி மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் 2001 ல் ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கும் சர்வதேச தீவிரவாதியான "பின்லேடனை" தங்களிடம் ஒப்படைக்குமாறு தாலிபான்களுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
ஆனால் அமெரிக்காவின் கோரிக்கைக்கு தாலிபான் அரசு செவிமடுக்காததால் 2001 அக்டோபர் 7 ல் அமெரிக்க கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தான்மீது படையெடுத்தன.
இதனால் தாலிபான் ஆட்சி சீர்குலையத் தொடங்கியது. அமெரிக்காவின் ஆதரவுடன் புதிய அரசு கட்டமைக்கப்பட்டது.
2015 ம் ஆண்டு தொடக்கத்தில் தாலிபான்கள் மீண்டும் தங்களை வலிமையாக்கிக்கொண்டு அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட புதிய ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை நடத்தியது.
2015 தொடங்கி 2020 வரை இந்த தாக்குதல்கள் தொடர்ந்தன.
விளைவு,....
4 ஆயிரம் நேட்டோ வீரர்களுக்கு இரங்கற்பா பாடவேண்டியதாகிவிட்டது.
தொடர்ந்து இழப்புகளை சந்திக்க விரும்பாத அமெரிக்க அரசு தாலிபான்களுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பியது. தன்னுடைய துருப்புகளை ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து திரும்ப பெற்றுக் கொண்டது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1919 ம் ஆண்டின் ஆங்கிலோ - ஆப்கன் உடன்படிக்கையை நினைவுகூரும் விதமாகவும், பிரிட்டிஷ் (United Kingdom) காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதை நினைவுகூரும் விதமாகவும் 1919 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதியை சுதந்திரம் பெற்ற தினமாக இன்றளவும் கொண்டாடி வருகிறது.
தற்போதைய ஆட்சிமுறை - ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு.
✉✉✉✉✉✉
"நாடுகளின் சுதந்திர தினங்கள்" (Part 3) என்னும் மூன்றாவது பகுதியான இப்பதிவில் அஸர்பைஜான் (Azerbaijan), அன்டிகுவா மற்றும் பர்புடா (Antigua and Barbuda), ஆப்கானிஸ்தான் (Afghanistan) ஆகிய நாடுகளின் அடிமைப்பட்ட தருணங்களையும், அதன்பின் அடிமை வாழ்விலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளையும் மிக சுருக்கமாக பார்வையிட்டோம்....
தொடர்ந்து வரும் பதிவுகளில் ஆர்மீனியா மற்றும் இத்தாலியின் சுதந்திர நிகழ்வுகளை பார்வையிட இருக்கின்றோம். நான்காவது பகுதியை பார்வையிட அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை தட்டுங்க.
★ National Independence Days - Armenia- Part 4 ★
6 கருத்துகள்
தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது
பதிலளிநீக்குவருக நண்பரே... நன்றி
நீக்குவிளக்கமான தகவல்கள்...
பதிலளிநீக்குஅருமை...
கருத்துகளுக்கு நன்றி! நண்பரே!
நீக்குஅண்டிகுவா, இண்டியேசு என்ற (முட்டைக்கோஸ் ஹாஹாஹாஹா) பெயர் வைப்புப் படலங்கள்னால இடையிடையே பெயர் வைப்பு மீம்ஸா!!!! மீம்ஸ் எல்லாமே செம...சிரித்துவிட்டேன்.
பதிலளிநீக்குஅஃப்கானிஸ்தான் எல்லாம் ஒரு நாடா!!! சுதந்திரமா? சுதந்திர தினமா 1919!!!! ஹூம்! இப்பதான் மக்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லைன்னு தோணுது. அது அடிமையா இருந்துகஷ்டப்பட்டுச்சா....தகவலுக்கு வேணா ஓகே இதெல்லாம் ஆனால் நடைமுறையில் அப்படித் தெரியவில்லையே சிவா....பாவம் அப்பாவி மக்கள் எல்லாரும் பேசாம அகதிகளாகப் பல நாடுகளுக்கும் செல்லலாம். பாகிஸ்தான் மக்களும் தான்.
நம்ம நாட்டுல எல்லாரும் புலம்பறாங்களே இந்த நாடுகளை எல்லாம் பார்க்கனும் இவங்க...
நல்ல தகவல்கள்.
கீதா
எல்லா நாடுகளிலும் நல்லதும் இருக்கின்றன... கெட்டதும் இருக்கின்றன.... அண்மையில் நம் நாட்டின் மணிப்பூர் கலவரம் அதனால் தேசத்திற்கு ஏற்பட்ட களங்கம், அவமானத்தைதான் பார்த்தோமே...
நீக்குஇன ஜாதிவெறி பிடித்த பேய்களுக்கு மத்தியில் அந்த சகோதரிகள் அனுபவித்த வேதனையை கற்பனை செய்து பார்த்தேன்.... ஏன் இந்த உலகில் மனிதப்பிறவி எடுத்தோம் என்று ஆகிவிட்டது...
இதற்குமேலும் பிற நாடுகளை குறைசொல்லும் தகுதி இந்தியாவிற்கு முதலில் உள்ளதா என்பதனை பரிசீலிக்க வேண்டிஉள்ளது....
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.