நாடுகளின் சுதந்திர தினங்கள்.
Suthanthira Thinangal.
[Part - 2].
புதிய நாடுகளைக் கண்டறியும் ஆர்வமும், கண்டறியப்பட்ட நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் ஆசையும் மனித இனம் தோன்றிய காலம் தொட்டே மனித மனங்களில் புரையோடிப்போன ஒன்று.
இந்த நாடுபிடிக்கும் ஆசையால் மனித இனம் அடைந்த வேதனைகள் ஏராளம் ஏராளம். உயிரிழப்புகளுக்கோ பஞ்சமில்லை.
ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாடுகளிடையே உருவான காலனி ஆதிக்கத்தின் காரணமாக மக்கள் பட்ட அவலங்கள் அச்சில் ஏற்ற முடியாதவை.
இந்த ஆதிக்க கொடுமைகளிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும் என்ற எண்ணமே மக்களைப் போராட செய்து காலனி ஆட்சிக்கு சாவுமணி அடித்து சுதந்திரம் பெற காரணமாக அமைந்தது.
அவ்வாறு மக்களால் உருவாக்கப்பட்ட புரட்சியின்மூலம் சுதந்திரம் பெற்ற நாடுகளின் சுதந்திர தினங்களை நாம் இந்த தொடர் பதிவின் மூலமாக தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தொடர் பதிவில் இது இரண்டாவது பகுதி [Part 2].
இதன் முதல் பகுதியை [Part 1] படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்கள்...
👉National Independence Days - Angola - Part 1👈
💚💛💜💚💛💜💚
நாடுகளின் அடிமை வாழ்வும்
சுதந்திர தருணங்களும்.
பகுதி - 2.
அர்ஜென்டினா.
Argentina.
நாட்டின் பெயர் - அர்ஜென்டினா (Argentina).
தலைநகரம் - புவெனஸ் ஐரிஸ் (Buenos Aires).
ஆட்சிமொழி - ஸ்பானிஷ் மொழி (Spanish). ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் இதுவே பரப்பளவில் பெரிய நாடாகும்.
அமைவிடம் - தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன் இயற்கை அரணாக மேற்கு எல்லையில் ஆண்டிஸ் (Andes) மலைத்தொடரும், கிழக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் தென் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன.
சக நாடுகளின் எல்லைகள் என்று பார்த்தோமானால் மேற்கு மற்றும் தெற்கு எல்லையாக சிலி நாடும், வடக்கு எல்லையில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளையும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே ஆகிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.
பரப்பளவு - 2,780,400 சதுர கிலோ மீட்டர்கள்.
பரப்பளவுகளின் அடிப்படையில் பார்த்தோமானால் தென் அமெரிக்க கண்டத்தில் இரண்டாவது பெரிய நாடும், உலகின் எட்டாவது பெரிய நாடும் இதுவேயாகும்.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - அர்ஜென்டினாவின் பூர்வகுடி மக்களாக அறியப்படுபவர்களின் முக்கிய தொழில் வேட்டையாடுதல் மற்றும் விவசாயம்.
அமைதியாக ஓடிக்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில்1502 ம் ஆண்டில்தான் அழையா விருந்தாளியாக ஒருவர் வந்தார். அர்ஜென்டினாவில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் இவரே.
அவர் வேறு யாருமல்ல... இத்தாலியை சேர்ந்த கடலோடியும் ஆய்வாளருமான அமெரிகோ வெஸ்பூசி (Amerigo Vespucci). கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்க கண்டத்திற்கு பயணப்பட்டவர்.
இந்த இத்தாலி ஆய்வாளர் வெளிட்ட ஆய்வறிக்கையை மோப்பம் பிடித்தபடி 1536 ல் ஸ்பானியர்கள் (ஸ்பெயின் தேசத்தவர்கள்) பெரு மற்றும் பொலிவியா வழியாக பயணித்து சாக்கோவின் தாழ்நில சமவெளிகளை அடைந்தனர்.
அதன்பின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோவில் (Santiago del Estero) தங்களின் முதல் நிரந்தர குடியேற்ற காலனியை நிறுவினர்.
சிறிது காலத்திற்கு பிறகு வியாபரத்தை பெருக்கி வழக்கம்போல் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். வர்த்தகம் செழிக்க வேண்டுமென்றால் பெரிய நகரங்களும் அவசியமல்லவா?...
எனவே, வடமேற்கில் சான் மிகுவல் டி டுகுமான் (San Miguel de Tucuman) என்ற நகரை 1565 லும், சான் லூயிஸ் (San Luis) என்னும் நகரை 1594 லும் உருவாக்கி அதனை தன் கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
ஸ்பானியர்களாகிய ஸ்பெயின் தேசத்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான இத்தாலியர்களும் இங்கு வந்து குடியேறினர்.
விளைவு வந்தேறிகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியர்கள் இராஜபோக வாழ்க்கையில் மிதக்க.... பூர்வகுடி மக்களான அர்ஜென்டினா பழங்குடிமக்கள் வறுமையில் சிக்க...
ஆம், ஸ்பானியர்களுக்கு சேவகம் செய்ய அங்கு இங்கு அலையாமலேயே அங்கேயே நல்ல அடிமைகள் சிக்கிக்கொண்டனர்.
மூன்று நூற்றாண்டுகளாக ஸ்பானிஷ் காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் அர்ஜென்டினா மக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தனர்.
இந்த காலகட்டத்தில் ஸ்பானியர்களால் பூர்வகுடி மக்கள் தொடர்ந்து அடிமையாகவே நடத்தப்பட்டு வந்ததாலும், விவசாயிகள் பலர் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டதாலும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கிளர்சியில் இறங்கினர்.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - அர்ஜென்டினாவின் முதல் சுதந்திரப் போராட்டம் 1806 ல் தொடங்கியது.
கடும் போராட்டத்திற்கு பின்பு 1816 ம் ஆண்டு ஜூலை 9 ம் தேதி ஸ்பெயின் (Spanish Empire) இடமிருந்து சுதந்திரத்தை பெற்றது.
ஸ்பெயின் இடமிருந்து சுதந்திரம் பெற்றாலும் தற்போது இங்கு ஸ்பெயின் வம்சாவழியினரே அதிகமாக உள்ளனர்.
அர்ஜென்டினாவின் மக்கள் தொகையில் 97% பேர் ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்பெயின் மற்றும் இத்தாலிய வம்சாவழியினர் ஆவர்.
தற்போதைய ஆட்சிமுறை - அர்ஜென்டினாவில் இரண்டு சட்டமன்ற அமைப்புகளை கொண்ட கூட்டாட்சி நடைபெற்று வருகிறது.
💞💞💞💞💞💞💞💞
அல்பேனியா.
Albania.
நாட்டின் பெயர் - அல்பேனியா (Albania).
தலைநகரம் - டிரானா (Tirana).
ஆட்சிமொழி - அல்பேனியன் மொழி (Albanian) ஆட்சி மொழியாக உள்ளன. டஸ்கன் மற்றும் கெக்ஸ் பேச்சுவழக்கு மொழிகளாக உள்ளன.
அமைவிடம் - மேற்கில் அட்ரியாடிக் (Adriatic) அயோனியன் (Ionian sea) கடல்கள் அமைந்துள்ளன. வடக்கில் மாண்டினீக்ரோ (Montenegro) மற்றும் கொசோவா (Kosovo) நாடுகள் அமைந்துள்ளன. கிழக்கே மாசிடோனியாவும் (Macedonia) தெற்கே கிரீஸ் (Greece) நாடும் அமைந்துள்ளன.
பரப்பளவு - 28,748 சதுர கி.மீ.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - அல்பேனியர்கள் இந்தோ-ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்த இலிரியன் (illyrians) அல்லது திரேசிய பழங்குடியினர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 95% இவர்களே உள்ளனர்.
அமைதியாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின்பு புயல்வீச தொடங்கியது.
ஆம்,.... 15 ம் நூற்றாண்டில் ஒட்டோமான் துருக்கியர்கள் (Ottoman Turks) படையெடுத்து அல்பேனியாவை தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இந்த துருக்கிய ஆட்சி 19 ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அல்பேனியா மக்கள்மீது அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் அல்பேனிய மக்களிடம் தேசியவாத உணர்வு தீவிரமடைந்து அவ்வப்போது கிளர்சிகளும் வெடித்தன.
நவம்பர் 1912 ல் முதல் பால்கன் (Balkan War) போரின்போது அல்பேனியா தங்களை அடிமைகளாக நடத்திவந்த ஓட்டோமான்களிடம் இருந்து விடுதலை பெற்றது. இஸ்மாயில் கெமாலி (Ismail Kemali) ன் தலைமையில் தேசிய சட்டமன்றம் கூடி அல்பேனியாவின் சுதந்திரத்தை அறிவித்தது.
இந்த சுதந்திர பிரகடனத்தை ஆஸ்திரியா-ஹங்கேரி ஆதரித்தன. ஆனால் செர்பியா, ரஷ்யா, துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் எதிர்த்தன.
முதல் உலகப்போருக்கு முன்பே அல்பேனியா ஒரு சுதந்திர நாடக மாறிவிட்டது என்றாலும் முதலாம் உலகப்போரின்போது அல்பேனியா ஒரு முக்கிய ஆதார போர்க்களமாக மாறியது.
போரினால் அல்பேனியா சிதைக்கப்பட்டு அதன் பல பகுதிகள் பிரெஞ்சு, இத்தாலி மற்றும் யூகோஸ்லேவியா நாடுகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன.
1920 ல் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்கள் பின்வாங்கியதால் தற்காலிக அரசாங்கம் நிறுவப்பட்டு மீண்டும் அதன் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1912 ம் ஆண்டு நவம்பர் 28 ம் தேதி உதுமானியப் பேரரசு (Ottoman Empire) இடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அல்பேனியா அறிவித்தது. நவம்பர் 29 ம் தேதி விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தற்போதைய ஆட்சிமுறை - தற்போது ஒற்றை நாடாளுமன்ற குடியரசு ஆட்சி நடந்துவருகிறது.
💖💗 💖💗 💖💗
அல்ஜீரியா.
Algeria.
நாட்டின் பெயர் - அல்ஜீரியா (Algeria).
தலைநகரம் - அல்ஜீர்ஸ் (Algiers).
ஆட்சிமொழி - அலுவல் மொழியாக அரபிக் மற்றும் பெர்பெர் உள்ளன.
அமைவிடம் - இயற்கை எல்லைகளாக வடக்கில் மத்திய தரைகடலும், தென் மேற்கில் சஹாராவுடனான எல்லைகளையும் கொண்டுள்ளது.
அண்டை நாடுகளின் எல்லைகள் என்று பார்த்தோமானால் வட கிழக்கு எல்லையில் துனீசியாவும் (Tunisia), தென்கிழக்கில் நைஜரும் (Niger), கிழக்கில் லிபியாவும் (Libya), மேற்கில் மொரோக்கோவும் (Morocco), தென் மேற்கில் மாலி (Mali) மற்றும் மௌரித்தானியாவும் (Mauritania) அமைந்துள்ளன.
பரப்பளவு - 2,381,741 சதுர கிலோமீட்டர். பரப்பளவில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் 10 வது மிகப்பெரிய நாடாகவும் அல்ஜீரியா உள்ளது.
தேசிய கொடி.
தேசிய சின்னம்.
அடிமைப்படுத்தப்பட்ட தருணம் - ஆரம்ப கட்டத்தில் இங்கு மண்ணின் மைந்தர்களாக ஆதி பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். கி.பி. 7 ம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெருவாரியாக நடந்தேறியது.
13 ம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் கூட்டமான ஸ்பானியர்கள் அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர். அல்ஜீரியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
16 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அல்ஜீரியாவை ஸ்பெயின் கட்டுப்பாட்டிலிருந்து துருக்கியை சேர்ந்த ஒட்டோமான் வம்சத்தினர் கைப்பற்றினர். இதனால் அல்ஜீரியா ஒட்டோமான் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.
அதன்பின் 1830 வது ஆண்டு ஒட்டோமான்களை ஓடஓட விரட்டிவிட்டு பிரான்ஸ் அல்ஜீரியாவை கைப்பற்றியது. இதன் விளைவாக அல்ஜீரியா ஒரு பிரெஞ்சு காலனியாக மாறியது.
பிரெஞ்சு காலனியாக மாறியது மட்டுமல்லாமல் தங்களுடைய அடக்குமுறைய அல்ஜீரிய மக்கள்மீது ஏவியது. அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்தி புதிதாக குடியேறும் பிரெஞ்சு மக்களுக்கு கொடுத்தது. வேலை வாய்ப்பிலும் பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை. இதனால் மக்கள் கொதிப்படைந்தனர்.
ஒரு நூறாண்டு கழிந்த நிலையில் பிரான்ஸின் அடக்குமுறை வரம்புமீறி இலட்சுமணன் கிழித்த கோட்டையும் தாண்டியதால் 1954 வது ஆண்டில் உருவாக்கப்பட்ட "தேசிய விடுதலை முன்னணி" (Front de Liberation Nationale - FLN) சுதந்திரம் வேண்டி போரிட்டது. கொரில்லா தாக்குதல் நடத்தி பிரெஞ்சு படைகளை அடித்து நொறுக்கியது.
சுதந்திரத்தை மீட்டெடுத்த வருடம் - 1962 ம் ஆண்டு ஜூலை 3 அன்று அல்ஜீரியா சுதந்திரம் பெற்றதை பிரான்சு (France) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
ஆனால் இன்றுவரையிலும் ஜூலை 5 ம் தேதியே சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மிகச்சரியாக பிரெஞ்சு நாட்டினர் அல்ஜீரியாவுக்குள் நுழைந்து 132 வது ஆண்டை ஜூலை 5 ம் தேதி நிறைவு செய்வதால் ஜூலை 5 ம் தேதி சுதந்திர தினமாக அல்ஜீரியாவால் முறையாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போதைய ஆட்சிமுறை - ஜனநாயக ஆட்சி நடந்துவருகிறது.
💫💫💫💫💫💫💫💫
இன்றைய பதிவில் அர்ஜென்டினா (Argentina), அல்பேனியா (Albania), அல்ஜீரியா (Algeria) ஆகிய நாடுகளின் அடிமைப்பட்ட தருணங்களையும், அதன்பின் அடிமை வாழ்விலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்ற நிகழ்வுகளையும் பார்வையிட்டோம்....
தொடர்ந்து வரும் பதிவுகளில் இன்னும் பல நாடுகளின் சுதந்திர நிகழ்வுகளை தொடர்ந்து பார்வையிட இருக்கின்றோம்...
இப்பதிவின் மூன்றாவது பகுதியை [Part 3] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை (லிங்க்) தட்டுங்க....
National Independence Days - Azerbaijan- Part 3.
💫💫💫💫💫💫💫💫
6 கருத்துகள்
நம் நாட்டில் ஜனநாயகம்...?
பதிலளிநீக்குநம் நாட்டில் உள்ள ஜனநாயகம் பற்றி தங்களுக்கு தெரியாததா நண்பரே? அது காசு வாங்கிகிக்கொண்டு ஓட்டு போடும் அளவில் உள்ளது நண்பரே!!!... எக்ஸ்ட்ரா இணைப்பாக பிரியாணியும் உண்டு... ஒரு குவாட்டரும் ப்ரீ.... அவன்கிட்ட வாங்குன காசுக்கு தென்னமரத்துல ஒரு குத்து... இவன்கிட்ட வாங்குன காசுக்கு பனை மரத்துல ஒரு குத்து.... ஆக மொத்தத்துல ரெண்டு குத்து...
நீக்குமாணாக்கர்களுக்கு பயனுள்ள பதிவு
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன் நண்பரே...
வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குதங்களின் பதிவுகளின் வாயிலாக நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி நண்பரே!
பதிலளிநீக்குமனமகிழ் நன்றி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.