தன்னம்பிக்கை தரும் வைர வரிகள்.
உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால் எல்லாம் என் தலை எழுத்து என்று தளர்ந்து விடாதீர்கள். தலை எழுத்தை தகர்த்தெறியும் திறன் தமிழ் எழுத்துக்கு உண்டு என்று நம்பிக்கை வையுங்கள்.
தன்னம்பிக்கை வரிகள் என்னும் இன்றைய பதிவில் இதயத்தை இரும்பாக்கி பிரச்சனைகளை துரும்பாக்கி வாழ்க்கையை கரும்பாக்கும் இருவரி தத்துவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி இன்றைய பயணத்தை தொடங்குவோம்.
விடியல் தந்த விடியல்கள்.
- அவமானங்களை சேகரித்து வை. வெற்றி உன்னை தேடிவரும்.
- வாழ்க்கை என்பது உங்களை கண்டறிவது அல்ல. உங்களை உருவாக்கிக்கொள்வது.
- படிக்காத பாடத்திலிருந்து கடினமான கேள்விகளை கேட்டுவிட்டு அதற்கு விரிவாக விடையளிக்க சொல்வதுதான் வாழ்க்கை.
- வாழ்க்கை மிக எளியது. நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்கிறோம்.
- உண்மையான அறிவு என்பது நாம் தெரிந்து வைத்திருப்பது மிக சொற்பம் என்பதனை தெரிந்து கொள்வதில்தான் உள்ளது.
- உங்களால் கனவு காண முடியும் என்றால். கண்ட கனவை நனவாக்கவும் முடியும்.
- உன்னை நோக்கி சிரிப்பு வந்தால் சுதாகரி. எதிர்ப்பு வந்தால் நிராகரி.
- முடியும்வரை முயற்சி செய். முடியாவிட்டால் பயிற்சி செய்.
- இரண்டு தலைவர்கள் மோதினால் பல தொண்டர்களுக்கும் அது ஈமச்சடங்காக முடிந்துவிடும்.
- நீங்கள் இன்று செய்யும் செயல்களே உங்களின் நாளைய நாட்களை மேம்படுத்தும்.
- முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை, முடியுமா? என்று கேட்பது அவ நம்பிக்கை, முடியும் என்று முடிவெடுப்பதே தன்னம்பிக்கை.
- கல்லொன்று சிதைந்தால்தான் சிலையொன்று உருவாகும்.
- இறைவன் சிலவற்றை தாமதமாகக் கொடுத்தாலும் தரமானதாகக் கொடுப்பான்.
- மறுபடியும் காயப்பட்டு விடுவோமோ என்ற பயத்தினாலேயே புதிதாக வரும் நல்ல உறவுகளைக்கூட ஏற்க மறுக்கிறது மனம்.
- இன்றைக்கு கிடைக்கலாம் உனக்கு அவமானம். பொறுமை காத்தால் நாளைக்கு கிடைக்கும் உனக்கு வெகுமானம்.
- நெய் நல்லதுதான். ஆனால், ஒரு நாயால் நெய்யை ஜீரணிக்க முடியாது. அது போல நீ சொல்லும் கருத்து உயர்ந்ததே ஆனாலும் அதை சிலரால் ஜீரணிக்க முடிவதில்லை.
- நீ செய்யும் அறத்திற்கான வெகுமதியும், மறத்திற்கான தண்டனையும் அதனதனிடத்தில்தான் உள்ளன.
- சிரித்து வாழ்வதைவிட சிந்தித்து வாழ்வதே சிறப்பு.
- நல்ல சேவை செய்வதற்கான ஆற்றலை கெட்ட மனிதர்களிடம்போய் கேட்டு நிற்காதே.
- முயற்சி செய்து முடியாமல் போனால் அது முடிவல்ல. ஆனால் முயற்சி செய்யவே முடியாமல் போனால் உனக்கு என்றும் விடிவல்ல.
- நெருப்பு வழி செல்பவன் புகைக்கு அஞ்சமாட்டான். வெறுப்பு வழி செல்பவன் பகைக்கு அஞ்சமாட்டான்.
- அதிகம் படிப்பவன் அகந்தை அடையான்.
- நல்லதைக் கற்பது கடினமாக இருக்கலாம். ஆனால் கற்றதை மறப்பது அதைவிட கடினமானதாக இருக்க வேண்டும்.
- கடினமான பாதைகள்தான் உன்னை அழகான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன.
- வண்டுக்கு பசியாற ஒரு மலர் போதும். ஆனால் வண்ணத்துப் பூச்சிக்கோ ஒரு வனமே தேவைப்படும்.
- கற்றவற்றையும், கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியாளன்.
- படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் பரிதாபத்துக்குரியவனே.
- நூல் இல்லாத வீடு பால் இல்லாத மாட்டிற்கு சமம்.
- மனிதாபிமானம் உள்ளவனிடம் கடன் வாங்கு, மானரோஷம் உள்ளவனுக்கு கடன் கொடு.
- கால்கள் தடுக்கி விழுந்தாலும்கூட ஊன்றி எழ உன்னிடம் இரு கைகள் இருக்கின்றன என்பதனை நினைவில் வை. ஒரு வேளை கைகள் கைவிட்டாலும்கூட நம்பிக்கை கை கொடுக்கும் என்பதனை மறவாதே.
- பசியைக் கொடுத்து பசியினைப் போக்க இரையும் கொடுப்பவனே இறைவன்.
- கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் கவலைகள் தீர்வதில்லை. காரணங்களை அறிந்து களைந்தால் மட்டுமே கவலைகள் தீரும்.
- துக்கம் வந்தால் தூக்கம் போய்விடும். தூக்கம் வந்தால் துக்கம் போய்விடும்.
- அசையும் சொத்தானாலும் அசையா சொத்தானாலும் உன் உடம்பு அசையும் வரைதான் உனக்கு பயன்படும்.
- இன்றைய ஊதாரி நாளைய குற்றவாளி. நாளைய குற்றவாளியோ வருங்கால அரசியல்வாதி.
- லட்சியம் உன்னை மேடைக்கு கொண்டு செல்லும். ஆனால் அந்த "பத்து லட்சமோ" உன்னை பாடைக்கே கொண்டு செல்லும்.
- பட்ட பின்பே பாதை தெரியும். கெட்ட பின்பே போதை தெளியும்.
- எளிய எதிரியே ஆனாலும் ஏளனமாய் எண்ணாதே.
- சந்தோஷத்தை சாகடிக்கும் சாதனமே சந்தேகம்.
- கோடீஸ்வரன் வீட்டில் பிள்ளை பிறந்தாலும் அழுதுகொண்டேதான் பிறக்கும்.
- அழகை நினைத்து கர்வம் கொள்ளாதே. ஏனென்றால், இன்றைய அழகி நாளைய கிழவி.
- சந்தேகப்பட்டு பார்த்தால் சந்தனம் கூட சகதியாகத்தான் தெரியும்.
- ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகினாலும் அடுத்தவர் பார்வைக்குத் தப்பாகத்தான் தெரியும்.
- பட்டாடை கட்டி பகட்டாக வாழ்வதை காட்டிலும் சிற்றாடை கட்டி சிறப்பாக வாழ்வதே மேல்.
- பொருத்தம் பார்த்து மணம் முடித்தாலும் வருத்தமே இல்லா வாழ்க்கை அமையாது.
- சில நேரங்களில் நீ எடுக்கும் பிழையான முடிவுகள் கூட எதிர் காலத்தில் உன்னை சரியான பாதையில் பயணிக்கக் கற்றுக்கொடுக்கின்றன.
- துணியாத வரை வாழ்க்கை பயம் காட்டும். துணிந்து பார் அதுவே உனக்கு வழிகாட்டும்.
- வாழ்க்கையில் இழந்த அத்தனையையுமே மீட்டுவிட முடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் இழக்காமல் நீ இருந்தால்.
- நீ எடுத்து வைக்கும் முதல் அடி உன் வெற்றிக்கான முதல் படியாக இருக்கட்டும்.
- சோதனைகளை சாதனையாக்க வேதனைகளை பாதைகளாக்கு.
2 கருத்துகள்
மகிழ்ச்சியான வரிகள்...
பதிலளிநீக்குதன்னம்பிக்கை தரும் வரிகள்...
நன்றி நண்பரே!!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.