"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 1.

இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 1.

Presidents of India.

India kudiyarasu thalaivarkal.

Part 1.

          இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இதுவரையில் பத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்தியாவின் குடியரசு தலைவர்களாக பொறுப்பேற்று இந்திய அரசியலின் மாண்பு மற்றும் இறையாண்மையை சிறப்பாக கட்டிக்காத்ததோடு இந்திய தேசத்தையும் சிறப்பாக வழிநடத்தி சென்றுள்ளனர்.

president of india.

          இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசியலமைப்பு சபையானது நாட்டிற்கு தேவையான அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலும் புதியதாக உருவாக்கும் பணியை அம்பேத்கரின் தலைமையில் மேற்கொண்டது.

1949 ம் ஆண்டு நவம்பர் 26 ல் இறுதி வடிவம் பெற்ற இது 1950 ஜனவரி 26 ல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியா முழுமையான குடியரசு நாடாக மலர்ந்ததுவும் அன்றுதான்.

அன்றுதான் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக "டாக்டர். இராஜேந்திர பிரசாத்" (Dr. Rajendra Prasad) பதவி ஏற்றார்.

இந்திய குடியரசு தலைவர் என்பவர் மக்களின் நேரடியான வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு தலைவராகிய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவின் முதல் குடிமகனாக மதிக்கப்படும் இவரே இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாகவும் ஆராதிக்கப்படுகிறார்.

ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக "துணை ஜனாதிபதி"யாக (Vice President) மற்றொருவரும் பணியில் அமர்த்தப்படுகிறார்.

குடியரசு தலைவராக இருப்பவர் மரணமடைந்தாலோ அல்லது அவராகவே பதவியை ராஜினாமா செய்தாலோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேறு எதாவது சூழ்நிலையின் காரணமாகவோ ஜனாதிபதி பதவியில் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறான சூழ்நிலையில் உடனடியாக வேறு ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது சாத்தியம் இல்லை அல்லவா...

புதிதாக வாக்கெடுப்பு நடத்தி முறையாக தேர்ந்தெடுக்க சுமார் ஓரிரு மாதங்கள்வரை ஆகலாம் அல்லவா? அந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க "துணை குடியரசு தலைவர்" (Vice President) ஆக இருப்பவர் "தற்காலிக குடியரசு தலைவர்" ஆக (Acting President) பொறுப்பேற்பார்.

இவ்வாறான சூழ்நிலை இந்திய வரலாற்றில் இரண்டு முறை நிகழ்ந்துள்ளது. 1969 ம் ஆண்டு மே 3 முதல் 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி வரையில் "வி.வி. கிரியும்" (Varahagiri Venkata Giri), 1977 ம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 1977 ம் ஆண்டு ஜூலை 25 ம் தேதி வரை "பசப்பா தனப்பா ஜாட்டியும்" (Basappa Danappa jatti) தற்காலிக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ளனர்.

அதுசரி, ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்க துணை ஜனாதிபதி பதவியிலும் யாரும் இல்லை என்று வைத்துகொள்வோம். அப்போது என்ன செய்ய?... இருக்கவே இருக்கிறார் நம்முடைய நீதியரசர்!.

ஆம், அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் இந்திய தலைமை நீதிபதியே தற்காலிக (இடைக்கால) குடியரசு தலைவராக செயல்படுவார்.

இவ்வாறான சூழ்நிலை இந்திய வரலாற்றில் ஒரேஒரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது.

ஆம், 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி முதல் 1969 ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ம் தேதி வரை உச்ச நீதிமன்ற நீதிபதியான "முகமது இதயத்துல்லா" (Mohammad Hidayatullah) தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சரி, நாம் இந்த பதிவில் 1950 லிருந்து இன்று வரையிலும் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த தலைவர்களைப் பற்றி சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.

வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய குடியரசு தலைவர்கள்.

பகுதி - 1.


டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்.

பெயர் :- டாக்டர். இராஜேந்திர பிரசாத் - Dr. Rajendra Prasad.

Dr. Rajendra Prasad

பிறப்பு :- 1884 ம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி பீகாரிலுள்ள "சிவான்" (Siwan) என்னுமிடத்தில் பிறந்தார்.

பதவியின் பெயர் :- குடியரசுதலைவர் (Presidents).

முன்பு பணிபுரிந்த துறை :- புகழ்பெற்ற வழக்கறிஞராக பணியாற்றிவந்த இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு வழக்கறிஞர் பணியை கைவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்துடன் இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைமை தலைவராகவும், அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

பதவிக்காலம் :- இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக 1950 ம் ஆண்டு ஜனவரி 26 முதல் 1962 ம் ஆண்டு மே 13 ம் தேதி வரையில் பதவி வகித்தார்.

சாதனை :- இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் என்னும் பெருமையை பெறும் அதே வேளையில் தொடர்ந்து இருமுறை அவை உறுப்பினர்கள் மூலம் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் பெருமையையும் ஒருசேர பெறுகிறார்.

"பாரதரத்னா" (Bharat Ratna) விருதுக்கு சொந்தக்காரர். ஆம், 1962 ல் இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டார்.

மறைவு :- 1963 ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி தன்னுடைய 78 வது வயதில் மரணமடைந்தார்.


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

பெயர் :- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - Dr. Sarvepalli Radhakrishnan.

Dr. Sarvepalli Radhakrishnan.

பிறப்பு :- 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள  திருத்தணியில் (Thiruthani) பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

பதவியின் பெயர் :- குடியரசு தலைவர் (Presidents).

முன்பு பணிபுரிந்த துறை :- கல்வியாளராக திகழ்ந்தார். சிறந்த தத்துவ ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். கல்விப் பணியிலேயே  தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவராதலால் சுதந்திர போராட்டத்தில் பெருமளவில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை மனதார ஆதரித்தவர்.

பதவிக்காலம் :- இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக 1962 ம் ஆண்டு மே 13 முதல் 1967 ம் வருடம் மே 13 வரையில் பதவி வகித்தார். 

சாதனை :- இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 இந்தியாவின் ஆசிரியர் தினமாக (Teachers' Day) கொண்டாடப்படுகிறது.

பாரதரத்னா விருதுக்கு சொந்தக்காரர். 1954 ல் இவருக்கு "பாரதரத்னா" (Bharat Ratna) விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டது. 15 ற்கும் மேற்பட்ட சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு :- 1975 ம் ஆண்டு ஏப்ரல் 17 ல் தன்னுடைய 86 வது வயதில் சென்னையில் காலமானார்.

ஜாகீர் உசேன்.

பெயர் :- ஜாகீர் உசேன் - Dr. Zakir Hussain.


பிறப்பு :- தெலுங்கானா (Telangana) மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் (Hyderabad) 1897 ம் ஆண்டு பிப்ரவரி 8 ம் நாள் பிறந்தார்.

பதவியின் பெயர் :- குடியரசு தலைவர் (Presidents).

முன்பு பணிபுரிந்த துறை :- கல்வி துறையில் சிறந்த அறிஞராக விளங்கியவர்.

பதவிக்காலம் :- இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக 1967 ம் ஆண்டு மே 13 முதல் 1969 ம் ஆண்டு மே 3 வரை பதவியில் இருந்தார். பதவியில் நீடிக்கும்போதே உயிரிழந்தார். அப்போது துணை குடியரசு தலைவராக இருந்தவர் வி.வி. கிரி (Varahagiri Venkata Giri).

சாதனை :- இந்தியாவின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி என்னும் பெருமையை பெறுகிறார். பீகார் (Bihar)ஆளுனராகவும் இருந்துள்ளார்.

கல்வியில் இவர் ஆற்றிய அரும்பணிக்காக "பத்ம விபூஷன்" (Padma Vibhushan) விருதினை பெற்றுள்ளார். "பாரதரத்னா" (Bharat Ratna) விருதும் பெற்றுள்ளார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு "இலக்கிய மேதை" பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது இங்கு குறிபிடத்தக்கது.

மறைவு :- 1969 ம் வருடம் மே 3 ம் தேதி புது தில்லியில் (New Delhi) வைத்து மரணமடைந்தார்.


வி.வி. கிரி.

பெயர் :- வரககிரி வெங்கட கிரி - Varahagiri Venkata Giri.

Varahagiri Venkata Giri.

பிறப்பு :- ஒரிஸா (Odisha) மாநிலத்திலுள்ள கஞ்சாம் மாவட்டத்திலுள்ள (Ganjam district) பெர்காம்பூரில் (Brahmapur) 1894 ம் ஆண்டு ஆகஸ்ட் 10 ம் நாள் பிறந்தார்.

பதவியின் பெயர் :- "இடைக்கால குடியரசு தலைவர்" (Acting President) மற்றும் "குடியரசு தலைவர்" (Presidents).

முன்பு பணிபுரிந்த துறை :- சிறந்த அரசியல்வாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது திறன் வாய்ந்த எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் வலம் வந்தார்.

பதவிக்காலம் :- இவர் இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதியாவார்.

ஆனால், நான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்பதற்கும் முன்னால் இரண்டு மாதகாலம் பொறுப்பு அதாவது "இடைக்கால ஜனாதிபதி"யாகவே (Acting President) பொறுப்பெற்றுக்கொண்டார்.

அதற்கு காரணம் யாதெனில்....

அப்போது ஜனாதிபதியாக இருந்த "ஜாகீர் உசேன்" (Dr. Zakir Hussain) திடீரென மரணத்தை தழுவியதால் அச்சமயத்தில் "துணை ஜனாதிபதி"யாக (Vice President) இருந்த இவர் 1969 ம் ஆண்டு மே 3 முதல் 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி வரையில் பொறுப்பு (தற்காலிக) ஜனாதிபதியாக (Acting President) பொறுப்பேற்றார்.

அதன்பிறகு அவரே குடியரசு தலைவருக்கு போட்டியிட நிறுத்தப்பட்டதால் அரசியல் விதிமுறைக்கு கட்டுப்பட்டு துணை மற்றும் தற்காலிக ஜனாதிபதி பதவிகளை துறந்தார்.

அந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது 1969 ம் ஆண்டு ஜூலை 20 ம் தேதி முதல் 1969 ம் ஆண்டு ஆகஸ்ட் 24 ம் தேதி வரை அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த "முகமது இதயத்துல்லா" (Mohammad Hidayatullah) என்பவர்  அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தற்காலிக ஜனாதிபதியாக (Acting President) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் வாக்கெடுப்புமூலம் வெற்றி பெற்ற வி.வி. கிரி ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார். 1969 ம் வருடம் ஆகஸ்ட் 24 ம் தேதி முதல் 1974 ம் வருடம் ஆகஸ்ட் 24 வரையில் ஜனாதிபதியாக இருந்தார்.

சாதனை :- "பாரத ரத்னா" விருதுக்கு சொந்தக்காரர். இவருக்கு 1975 ல் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டது.

மறைவு :- 1980 ம் ஆண்டு ஜூன் 24 ம் நாள் உயிர் துறந்தார்.

💚💛💜💛💚💜

          சரி, இந்த பதிவில் 1950 லிருந்து 1974 ம் வருடம் வரையில் ஜனாதிபதியாக பதவி வகித்த நயமான நான்கு தலைவர்களைப் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்து 1974 ம் ஆண்டிற்கு பின்பு குடியரசு தலைவராக பொறுப்பேற்று ஜனாதிபதி மாளிகையை அலங்கரித்த தலைவர்களைப் பற்றி தொடர்ந்து வரும் இரண்டாவது பகுதியில் (Part 2) பார்க்க இருக்கின்றோம்...

இதன் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதியை படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

👉இந்திய குடியரசு தலைவர்கள் - Presidents of India - Part 2.👈

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.