புத்தம்புது பொன்மொழிகள்.
வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் சஞ்சலப்பட்டு சருகுகளாய் சலனமற்று நிற்கும் மனதை இரண்டே இரண்டு வாக்கியங்களில் மகிழம்பூவாய் மலரச் செய்யும் திறன் படைத்தவைகள்தான் "பொன்மொழிகள்" என்னும் நன்மொழிகள்.
புண்பட்ட காயத்திற்கு நல்மருந்திட்டு பஞ்சினால் ஒத்தடம் கொடுப்பது போன்று பண்பட்ட மனம்கூட ஆற்றாமையால் அரற்றும்போது ஆறுதல்கூறி வார்த்தைகளால் வருடுவதுதான் "நன்மொழிகள்" என்னும் பொன்மொழிகள்.
அவ்வாறான பொன்மொழிகளில் புத்தம் புது பொன்மொழிகள் சிலவற்றை திறன்பட சேகரித்து இதோ இந்த பதிவின்மூலம் முத்தோடு முத்தாக பத்தோடு பத்தாக இதோ உங்கள் சிந்தனைக்குள் சிறைவைக்கின்றோம். பயனடையுங்கள்...
சாத்திரம் பார்த்து "மூத்திரம்" குடிப்போம்...
- ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என முயற்சி செய்.
- நேற்றுவரை அசாத்தியமாக இருந்தது இன்று சாத்தியமாகலாம்.
- ஆதாமுக்கும், ஏவாளுக்கும் கிடைக்காதவரம் உனக்கு கிடைத்துள்ளது. அதுதான் அம்மா!!.
- விட்டுக்கொடுங்கள் விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக்கொடுங்கள் தவறுகள் தகர்ந்துபோகும்.
- உன் தவறை மறைக்க பிறரை தீயவராக சித்தரிக்காதே, பிறருடைய தவறுகள் திருத்தப்ப்படும்போது நீ தவிர்க்கப்படுவாய்.
- துயரத்திற்கு ஒரே மருந்து உயரத்தை தொடுவதே!
- சிக்கனமே சீரிய வருமானம்.
- அகந்தை வரும் முன்னே அவமானம் வரும் பின்னே.
- கையில போன் வச்சிருக்கிறவனும், தலையில பேன் வச்சிருக்கிறவனும் நிம்மதியா தூங்குனதா சரித்திரமே இல்ல...
- மாட்டின் மாமிசம் சாப்பிடுகிறவன் கடை ஜாதியாம்.... மாட்டின் பால் சாப்பிடுகிறவன் இடை ஜாதியாம்... மாட்டின் மூத்திரம் சாப்பிடுகிறவன் உயர் ஜாதியாம்.... இதுவே எங்களின் சமூக நீதியாம்.
- சாத்திரம் பார்த்து "மூத்திரம்" குடிப்போம், மூத்திரம் குடிக்காதவனை "சூத்திரன்" என்போம்.
- பல "பெருங்காயங்கள்" சம"ரசத்தில்" கரைந்துவிடுகின்றன.
- குறைசொல்ல தெரிந்த யாரும் உன் வாழ்வுக்கு வழிசொல்ல போவதில்லை.
- மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
- உன்னை நியாயப்படுத்த பிறரை காயப்படுத்தாதே.
- உனக்கு கிடைக்கும் வெற்றியைவிட உனக்கு கிடைக்கும் தோல்வியே உன்னை முன்னோக்கி நகர்த்தும்.
- ஏக்கம் தேக்கம் தரும். உயர் நோக்கமே ஏற்றம் தரும்.
- அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல... தீட்டினால் பேராயுதம், தீட்டாவிடிலோ வெறும் தோராயிரம்.
- அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்கு. அதுவே உன் வாழ்வுக்கு இழுக்கு.
- இதயங்கள் சேர்ந்திருக்கட்டும்... ஆனால் கூடாரங்களை மட்டும் தனித்தனியாக இருக்கட்டும்.
- அடக்கம் உன்னை அமரனாக்கும், அடங்காமை உன்னை அடக்கம் செய்துவிடும்.
- நீரைக்கூட சல்லடையில் அள்ளலாம். அது பனிக்கட்டியாக மாறும் வரை காத்திருக்கும் பொறுமை உனக்கிருந்தால்.
- அவசரம் ஆளை மட்டுமல்ல அலுவலையும் கெடுக்கும்.
- இடர்களை கண்டு அஞ்சாதவனே தொடர் வெற்றிகளை காண்கின்றான்.
- உன்னுடைய மூக்கை உடைப்பது உன்னுடைய நாக்குதான்.
- அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.
- சிந்திக்காமலேயே படித்துக் கொண்டிருப்பது வீண். ஆனால் எதுவும் படிக்காமலேயே வெறும் சிந்தனை மட்டும் செய்து கொண்டிருந்தால் அது உன்னை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.
- ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
- தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான்.
- ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதால் அதற்கு இழப்பொன்றும் இல்லை.
- பணமும், மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
- மனிதன் படைத்த கடவுள் இன்றும் கடவுளாகத்தான் இருக்கின்றான். ஆனால் கடவுள் படைத்த மனிதன் ஏன் இன்று மனிதனாக இல்லை?.
- பேசும் முன் கேளுங்கள். எழுதும் முன் நிறைய யோசியுங்கள். செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
- என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டுமே முடியும் என்பது அகங்காரம்.
- எவனையும் வெற்று காகிதம் என நினைக்காதே. ஒரு நாள் அந்த வெற்று காகிதம் பட்டமாகப் பறக்கலாம். அப்போது நீ அவனை அண்ணாந்துதான் பார்க்க வேண்டி இருக்கும்.
- அரிசி என்றாலும் அரசியல் என்றாலும் களையெடுப்பது மிக மிக அவசியம்.
- புதைந்த பிறகே விதையும், சிதைந்த பிறகே மனமும் விஸ்வரூபம் எடுக்கிறது.
- ஒருவன் ஏழையாக பிறப்பது அவன் குற்றமில்லை. ஆனால் அவன் ஏழையாகவே இறந்தால் அது அவன் குற்றம்.
- சிறிய தறுகளை நீ திருத்திக் கொள்ளாவிட்டால், பெரிய தவறுகள் உன்னை வருத்திக் கொல்லும்.
- கூட்டிக் கழித்து பார்த்தால் மனுஷனுக்கு வாழ்க்கைல இரண்டே பிரச்சனைதான் உள்ளது. இருப்பவனுக்கு சொத்து பிரச்சனை. இல்லாதவனுக்கு சோத்து பிரச்சனை.
- வார்த்தைகளால் பேசுபவனை விட தன் செயல்களால் பேசுபவனே வெற்றியை நோக்கி நகர்கிறான்.
- லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருப்பதில்லை.
- உங்கள் கவலைகளை விளம்பரப்படுத்தி பயனில்லை. ஏனெனில், அவைகளை யாரும் வாங்கமாட்டார்கள்.
- ஒரே ஒரு பணத்தேவை சில தன்மானங்களையும் பல அவமானங்களையும் விலைக்கு வாங்கிவிடுகிறது.
- உண்மை பேசி யாருடைய மனதையும் புன்படுத்துவதைவிட மௌனமாக இருந்து நகர்ந்து செல்வதே மேல்.
- மகான் போல வாழவேண்டிய அவசியமில்லை. மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது.
- கோபமும் புயலும் ஒரே மாதிரிதான், அடங்கிய பிறகுதான் தெரியும் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று...
- சிகரெட் பத்த வைக்கிறவனைக்கூட பக்கத்தில் வைக்கலாம். ஆனால் சீக்ரெட் பத்த வைக்கிறவனை பக்கத்தில் வைக்கவே கூடாது.
- நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. ஆனால் நினைக்காமல் எதுவுமே நடப்பதுமில்லை.
- சோகத்தின் பக்கத்திலேயே சுவர்க்கமும், சுகத்தின் பக்கத்திலேயே துக்கமும் இருப்பதை அறிந்து கொள்பவனே ஞானி.
- நேசிக்க யாருமே இல்லாதபோதுதான் யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.
- முற்கள் தந்த வலி ஒரு நிமிடம்தான், ஆனால் சொற்கள் தரும் வலிகளோ பல வருடங்கள். எனவே உன் பற்கள் தடம்மாறாமல் பார்த்துக்கொள்.
- என்னவெல்லாமோ ஆகணும் என்று ஆசைப்பட்டு கடைசியில் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என்று ஏங்க வைப்பதே வாழ்க்கை.
- இரக்க மனமும் இறுக்கமாகப் போகிறது சிலருடைய செயலை பார்க்கும்போது.
- பணமும் பிணமும் அமைதியாகத்தான் இருக்கிறது, ஆனால் அதை சுமந்து கொண்டிருபவனைத்தான் குத்தாட்டம் போடவைக்கிறது.
- உடலில் காயம் என்றால் மருந்திடுங்கள், மனதில் காயம் என்றால் மறந்திடுங்கள்.
- யாரும் வெறுக்காத அளவிற்கு உன் வாழ்க்கை இருந்தால் யாரும் மறக்காத அளவிற்கு உன் மரணம் இருக்கும்.
- பணத்தை சேர்த்துக்கொண்டே இருப்பவன் பணக்காரனாகிறான், பாசத்தை சேர்த்துக்கொண்டே இருப்பவன் பயித்தியக்காரனாகிறான்.
- பணிவான சொல் நாம் செல்லும் பாதையை எளிமையாக்கும்.
- பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை, எனவே விழி சொல்லும் பாதையில் வழி தேடி போ.
- வார்த்தைகளால் வாதம் செய்பவனோடு விவாதிக்கலாம், ஆனால் வார்த்தைகளால் வதம் செய்பவனிடம் விவாதிக்காதே.
- செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக சென்றாலும் வெல்லும் காலம் அருகில்தான்.
- சில இழப்புகள் வலியை தரும், சில இழப்புகள் வலிமையை தரும்.
- உசுப்பேத்துகிறவன் கிட்ட "உம்"முன்னும், கடுப்பேத்துகிறவன்கிட்ட "கம்"முன்னும் இருந்தா நம்ம வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.
- உப்பு இருந்தால்தான் உணவு சுவைக்கும், நட்பு இருந்தால்தான் நினைவு சுவைக்கும்.
- வாழ்க்கை அலுத்து போகலாம் வாழ்வதற்கு அலுத்துபோகக் கூடாது.
- வாழ்க்கை கல்லை போன்றது, அதை படியாக்குவதும், படிப்பினை ஆக்குவதும் உன் கையில்தான் உள்ளது.
- நடக்கும் முன் நல்லதே நடக்கும் என்றும், நடந்தபின் நடந்தவை அனைத்தும் நல்லதுக்கே என்றும் நினைத்துக் கொள்.
- நூறு பேரின் வாயை மூட முயற்சிபதைவிட உன் காதுகளை மூடிக்கொள்வது உனக்கு எளிதானது.
- வீசப்படும் கற்களைவிட உன்னால் பேசப்படும் சொற்கள் அதிக காயத்தை ஏற்படுத்துபவை.
- தோல்வி உன்னை துரத்தினால் திரும்பிப் பார்க்காமல் வெற்றியை நோக்கி ஓடு.
- உன் வாழ்க்கையை எண்ணிக்கை முடிவு செய்வதில்லை, மாறாக எண்ணங்களே முடிவு செய்கிறது.
- தனித்து நின்றாலும் தனித்துவமாக நில்.
- எவரிடம் இருந்தாலும் அழகாக இருப்பது "புன்னகை" ஒன்றுதான்.
- வீட்டுக்கு வீடு ஓட்டுக்கேட்க போனாலும் ஒட்டு கேட்க போகாதே.
- நம் மீது விருப்பம் இல்லாதவர்களை விரட்டிப் போவதைவிட, விலகிப்போவது நல்லது.
- வாசிக்கும் பழக்கம் உனக்கு இல்லை எனில் யோசிக்கும் பழக்கம் இருக்கப்போவதில்லை.
- புரியாதவர்களுக்கு கூட புரியவைத்துவிடலாம். ஆனால், புறங்கணிப்பவர்களுக்கு ஒருபோதும் புரியவைக்க முடியாது.
- வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்... ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்று நமக்கே தெரியாது.
- வியர்வை துளிகளும், கண்ணீர் துளிகளும் பார்ப்பதற்கு உவர்ப்பாக இருக்கலாம். ஆனால், அவைகள்தான் உன் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.
- தட்டிப் பறிப்பவர்களையும், தட்டிக் கொடுப்பவர்களையும் அடையாளம் காணும் அளவுக்கு அறிவு இருந்தால் போதும் வாழ்க்கையில் வென்றுவிடலாம்.
- ஜலதோஷம் கூட உன்னுடன் ஒரு வாரம் தங்கும், ஆனால் இந்த சந்தோஷமோ இருக்கிறதே சில மணி நேரங்களில் கரைந்துபோகும்.
- யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை என்றால் யாரிடமும் நீ நடிக்கவில்லை என்று அர்த்தம்.
- ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் தாண்டி வருவது காதல் மட்டுமல்ல, காய்ச்சலும்தான்.
- சிலருக்கு மனைவி "தேவயானி" போலவும், சிலருக்கு இதெல்லாம் இவனுக்கு "தேவையா"? என்பதுபோலவும் அமைவதுதான் வாழ்க்கை.
- யாராவது அட்வைஸ் பண்ணுனா உட்கார்ந்து கேள். இல்லேனா அதுக்கும் சேர்த்து அட்வைஸ் பண்ணுவானுங்க...
- ஒருவரின் அன்பு உன்னை பெருமைபடுத்தினால் அவர் கரம் பற்றி முன்னேறு. சிறுமை படுத்தினால் கைகழுவிவிட்டு முன்னேறு.
- மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்குற ஆர்வத்தை குறைத்துக்கொண்டாலே போதும். இருக்கிற மீதி வாழ்க்கையை நிம்மதியாய் வாழலாம்.
- கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்... ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும்... இப்படி சொல்லுகிறவனை தூக்கிபோட்டு மிதிச்சா எல்லாமே சரியாகிடும்.
- எந்த ஒரு அவமானத்தையும் வலியாய் எடுத்துக்கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்.
- காயங்கள் இல்லாமல் கனவு காணலாம். ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது.
- எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதைவிட, எதுவுமே தெரியாது என்ற தெளிவோடு இரு.
- உன்னை எவரும் எதிர்க்கவில்லை எனில் உன் பலம் என்னவென்று உனக்கே தெரியாமல் இருந்துவிடும். எனவே எதிரியை எதிரில் வை... துரோகியை தூரத்தில் வை.
- சாதி, மதம் இவ்விரண்டுமே ஏதோ ஒரு தலைமுறையில் மிதித்த சாணம். ஆனால் அதை இந்த தலைமுறை வரை கழுவாமலே இருக்கின்றோம் என்பதே அவமானம்.
- எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் இன்னும் செருப்படி வாங்காமல் இருக்கும் ஒரே ஜீவன் நம்ம "குக்கர்"தாங்க
- நீ யாருக்காக வாழ்கிறாயோ அவருக்காக சிலவற்றை விட்டுக்கொடு. உனக்கென யார் வாழ்கிறார்களோ அவர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே.
- பஸ்ஸில் "போ..போ.. முன்னே போ.. நடுவுல நிக்காத..." என்று சொல்லும் கண்டக்டரின் அந்த வார்த்தைகள்தான் உன் முன்னேற்றத்திற்கான தன்னம்பிக்கை வரிகள்.
- காலால் மிதித்தவனை கைகளால் எடுக்க வைப்பதே முள்ளின் திறமை.
- சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் அல்ல. கவலைகளை மறைக்க கற்றுக்கொண்டவர்கள்.
- ஒருவரின் இரகசியங்களை அவருக்கு எதிரான ஆயுதமாக உபயோகிப்பதின் பெயர் வீரம் அல்ல. மிகப்பெரிய கோழைத்தனம்.
- நேர் வழியில் அடைய முடியாததை ஒரு போதும் குறுக்கு வழியில் அடைய முடியாது.
- பணம் இருந்தால்தான் நாலு பேரு உன்னை மதிப்பார்கள் என்றால் அந்த மானங்கெட்ட மரியாதை உனக்கு தேவையில்லை.
- நிம்மதிக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று விட்டுக்கொடுப்பது, மற்றொன்று விட்டுவிடுவது.
- பிரிந்துவிட்டோமே என அழுகிறவன் கண்ணீரில் உறவு தெரிகிறது. பிறந்து விட்டோமே என அழுகிறவன் கண்ணீரில் துறவு தெரிகிறது.
- தகுதியில்லாத புகழ்ச்சி மறைமுகமான இகழ்ச்சி.
- வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே, வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே.
- மனக்கசப்பால் பிரிந்தவர்களைவிட பணக்கசப்பால் பிரிந்தவர்களே இங்கு அதிகம்.
- காயப்படுத்தியவர்களை கடந்து போகும் சூழல் வந்தால் புன்னகைத்துவிட்டு செல்லுங்கள், அது எதிராளிக்கு கன்னத்தில் அறைவதைவிட அதிக வலியை ஏற்படுத்தும்.
- சந்தோஷம் வந்தா அதை சீக்கிரம் அனுபவி. கஷ்டம் வந்தா அதை சீக்கிரம் அனுப்பி வை.
- பிரிந்து செல்லும் நட்பைவிட தவறாக புரிந்துகொள்ளும் நட்பே அதிக வேதனையை தருகிறது.
- திறந்த கதவு, துறவியுடைய ஆவலையும் தூண்டுகிறது.
💢💢💢💖💖💖💢💢💢
6 கருத்துகள்
சநாதான சாக்கடை:-
பதிலளிநீக்குசாட்டை அடி வரிகள் சிறப்பு...
நன்றி நண்பரே!...
நீக்குதொகுப்பு ரொம்ப நல்லாருக்கு, யதார்த்த மொழிகள்! நாஞ்சில் சிவா...
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி!!..
நீக்குஎல்லாமே சிறப்பான பொன்மொழிகள் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.