George Bernard Shaw.
பெர்னாட்ஷாவின் தத்துவ முத்துக்கள்.
பெயர் :- ஜார்ஜ் பெர்னாட்ஷா (George Bernard Shaw).
பிறப்பு :- 1856 ம் ஆண்டு, ஜூலை 26. அயர்லாந்தில் பிறந்தார்.
இறப்பு :- 1950 ம் ஆண்டு, நவம்பர் 2. இங்கிலாந்தில் இறந்தார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியரான பெர்னாட்ஷா 1856 ம் ஆண்டு ஜூலை 26 ல் பிறந்தார். நாடக ஆசிரியரான இவர் 60 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.
பெரும்பாலும் இவருடைய அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் புரையோடிப்போன சமூக முரண்பாடுகளைச் சாடுவதாகவே இருக்கும்.
இவர் நாடக ஆசிரியராக மட்டுமல்லாது தொடர்ந்து சமுதாய அவலங்களையும் எதிர்த்து குரல்கொடுத்து வந்ததால் சிறந்த பேச்சாளராகவும் உருவெடுத்தார்.
இவர் இலக்கியம் மற்றும் பேச்சாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த தத்துவ ஞானியாகவும் வலம் வந்தவர். தத்துவ ஞானியாகவே வாழ்ந்தவரும்கூட...
எவ்வாறெனில்....
அவர் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டு செல்வதில்லையாம். மாறாக, வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து போட்டுவிட்டுதான் செல்வாராம்.
ஆனால், வீட்டிலிருக்கும்போது ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு உள்ளே இருப்பாராம். யாராவது தட்டினால் மட்டுமே கதவு திறக்கப்படும்.
இவருடைய இந்த விசித்திரமான செயல்பாடு குறித்து அவருடைய நண்பரொருவர் அவரிடம் கேள்வி எழுப்ப....
அதற்கு, பெர்னாட்ஷா அந்த நபரிடமே நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது ஏன் கதவுகளை மூடிவிட்டு செல்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்க....
அதற்கு அந்த நண்பரோ வீட்டிலுள்ள விலைமதிப்பற்ற பொருட்களை யாராவது திருடி சென்று விடக்கூடாதே என்பதற்காகத்தான் பாதுகாப்பாக கதவை மூடிவிட்டு செல்வதாகக் கூற...
அதற்கு பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே என்னுடைய வீட்டில் என்னைவிட மதிப்புமிக்கபொருள் வேறு இருப்பதாக நான் நினைக்கவில்லை எனவேதான் நானே வீட்டைவிட்டு வெளியில் சென்ற பிறகு எதற்கு பூட்டிச்செல்ல வேண்டும் என்று கருதி வீட்டை பூட்டுவதில்லை என்று சொல்ல அந்த நண்பரோ திகைத்துபோய் நின்றாராம்.
உண்மைதான்... பெர்னாட்ஷாவின் வீட்டிலுள்ள தட்டுமுட்டு சாமானங்களெல்லாம் இன்று தடம்தெரியாமல் போய்விட.... பெர்னாட்ஷா மட்டும் இன்றளவும் நம்மிடையே தடம்பதித்து நிற்கிறாரே!!!...
இப்போழுது சொல்லுங்கள்... பெர்னாட்ஷாவின் கூற்றுபடியே விலைமதிப்பற்ற பொருள் "பெர்னாட்ஷா"தானே....
நாம் இந்த பதிவில் மகத்துவம் வாய்ந்த அவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கப்போவதில்லை.. மாறாக அவர் நாவிலிருந்து உதிர்ந்த சில உள்ளார்ந்த தந்துவங்களைத்தான் பார்க்க இருக்கின்றோம்...
வாருங்கள் பார்க்கலாம்....
பெர்னாட்ஷா தத்துவம்.
Bernard Shaw Philosophy.
- தன் தாய் மொழியைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரியாதவனுக்கு பிற மொழிகளைப் பிறருக்கு பயன்படும்படி பயன்படுத்துவதும் கடினமே.
- செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவனோ போதிக்க மட்டுமே செய்கிறான்.
- வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி அமைதியாய் இருப்பதே.
- எல்லா துன்பங்களைக் காட்டிலும் வறுமையே கொடுமையானது. அதனை போக்குவதையே நாம் முதற்கடமையாக கொள்ளவேண்டும்.
- சிலர் மட்டும் அளவற்ற செல்வத்தில் திளைக்கவும், பலர் வறுமை சேற்றில் சிக்கி உழலும்படியான நிலையில் உள்ள நாடு கெடுப்பாரின்றியே கெடும்.
- மக்களை வறுமையாகவும், சோம்பேறிகளாகவும் வைத்திருப்பதே தீமைகளில் பெரிய தீமையும், குற்றங்களில் பெரிய குற்றமும் ஆகும்.
- வறுமையை ஒரு குற்றமாகக் கருதவேண்டும். வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விட்டுவிட்டு இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் அரசு அல்லது நாடு விரைவிலேயே அழிந்தொழிந்து போகும் என்பதில் ஐயமில்லை.
- செல்வத்தை இதுவரையில் சம்பாதிக்க முற்படாதவனுக்கு எந்த ஒரு செல்வத்தை அனுபவிக்கவும் உரிமை கிடையாது. அதுபோலவே இனபத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மக்களுக்குப் படிப்பினையை உண்டுபண்ணாத இலக்கியம் எதுவும் உயர்ந்த இலக்கியமாக இருக்க முடியாது.
- கல்வி என்பது ஒருவருடைய இளமையோடு மட்டும் தொடர்புடையது அன்று. வாழ்க்கை முழுவதுக்கும் உரியது.
- தன்னைப் பற்றியும், தன் காலத்தைப் பற்றியும் எழுதும் விதமாக வாழ்க்கையை வழி நடத்துகிறவன் எவனோ அவனே சிறப்பான எழுத்தாளனாக இருக்கமுடியும்.
- நெற்றியை காயப்படுத்திக்கொள்வதை விட முதுகை வளைத்துக்கொண்டு முன்னே செல்வதே சிறப்பு.
- எதிரெதிர் கட்சிகளில் வாதாடும் வக்கீல்கள் கத்திரிக்கோலின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்களின் இடையே மாட்டிக்கொண்ட கட்சிக்காரர்கள்... ???? ... ஸோ... செத்தார்கள்.
- வாக்காளர்கள் முட்டாளாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதியும் நிச்சயமாக முட்டாளாகத்தான் இருக்கமுடியும்.
- தனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்தவன்போல் நடிப்பவன்தான் அரசியல்வாதி.
- அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்.
- வருடா வருடம் குழந்தை பெற்றுக் கொண்டேயிருந்தால் நீயும் ஒரு சமூக குற்றவாளியே.
- எப்போதும் நல்லதையே செய்துகொண்டிரு. உன் செயல் சிலரைத் திருப்திப்படுத்த வேண்டும். பலரை திகைப்பில் ஆழ்த்த வேண்டும்.
- அனைத்தையும் இழந்துவிட்ட பின்பும் உன்னிடம் ஒன்று எஞ்சி நிற்கிறது என்றால் அது உன்னுடைய "அனுபவம்" மட்டுமே.
- பழைய சீர்கேடுகளை நீக்கினாலன்றி புதிய பார்கோடுகளை உன்னால் பெற முடியாது.
- நீங்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காதீர்கள். வாய்ப்பை இன்றே நீங்களே உருவாக்குங்கள்.
- தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.
- உங்கள் சோகமான தருணங்களை மணலில் எழுதுங்கள். மகிழ்ச்சியான தருணங்களை கல்வெட்டில் எழுதுங்கள்.
- உங்களுடைய வலிமையை நிலைநாட்ட ஒரு பன்றியுடன் ஒருபோதும் மல்யுத்தம் செய்யாதீர்கள். ஏனெனில் போட்டியில் நீங்கள் ஜெயிக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் மிகவும் அழுக்காகிவிடுவீர்கள்.
- ஒரு மருத்துவரிடம் தடுப்பூசி பற்றி விவாதிப்பது சைவ உணவைப்பற்றி ஒரு கசாப்புக்கடைக்காரரிடம் விவாதிப்பது போன்றது.
- ஒரு நாள் உங்கள் எதிரியாக மாறக்கூடிய ஒரு நபரைப்போல் உங்கள் நண்பரை நடத்துங்கள். ஒரு நாள் உங்கள் நண்பராக மாறக்கூடிய நபரைப்போல் உங்கள் எதிரியை நடத்துங்கள்.
- முட்டாள்கள் மட்டுமே ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
- சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
- வாழ்க்கை என்பது நீங்கள் நினைப்பதுபோல சின்னஞ்சிறு தீபமன்று. அது ஒரு தீப்பந்தம். வருங்கால சந்ததிகளிடம் அதை கொடுப்பதற்கு முன்னால் முடிந்தவரை அதை பிரகாசமாக எரியச் செய்யவே விரும்புகிறேன்.
- ஒருவருக்கு விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி செரிக்காத உணவு போன்றது.
- எனக்கு மிகவும் பிடித்தவர் என்னுடைய தையல்காரர் மட்டுமே. ஏனெனில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் புதிதாகவே அளவெடுக்கிறார். ஆனால் பிறரோ என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அறியாமலேயே பழைய அளவீடுகளைக்கொண்டே என்னை இன்றும் மதிப்பிடுகின்றனர்.
- உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும், கோபத்திலுள்ள காதலையும், மௌனத்திலுள்ள காரணத்தையும் யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களே உங்கள் அன்புக்கு உரிமையுடையவர்.
- அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார். அது சோதனையை தந்த பிறகுதான் பாடத்தைப் போதிக்கிறது.
- அறிவு என்பது நதியை போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
- ஆண்டவனை ஆகாயத்திலேயே வைத்திருப்பவன் மாண்டவனுக்கு சமம். அவனை கொண்டுவந்து மனதிலே குடிவைப்பவனே மீண்டவனுக்கு சமம்.
- மேதைக்கு எல்லாம் தெரியும்... அவனுடைய வாழ்க்கையை நடத்துவதை தவிர...
- சிறிய செலவுகளைப்பற்றி கவனமாக இருங்கள்.. ஏனெனில் சிறிய ஓட்டைதான் பெரிய கப்பலையே கவிழ்கின்றன.
- நல்லவராய் இருப்பது நல்லதுதான். ஆனால் நல்லது எது கெட்டது எது என தெரியாத அளவிற்கு ரொம்ப நல்லவராய் இருப்பது மிகவும் ஆபத்தானது.
- அதிகாரம் மனிதர்களை மாசுபடுத்துவதில்லை. ஆனால் முட்டாள்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் அவர்கள் அதிகாரத்தை மாசுபடுத்துகிறார்கள்.
- மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. இதில் மன மாற்றமும் அடங்கும். மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது.
- நீ இறக்கும்போது கடவுளே உனக்கு கடன் பட்டவனாக ஆகவேண்டும். அப்படியான ஒரு வாழ்க்கையை நீ வாழவேண்டும்.
- "நகைச்சுவை" என்ற உணர்ச்சி உனக்கு இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
- பிறரை சீர்திருத்தும் கடமையைவிட தன்னை சீர்திருத்துவதையே முதல் கடமையாக கொள்ள வேண்டும்.
- சந்தேகத்தை வெற்றி கொண்டால் தோல்வியை தூக்கி எறியலாம்.
- நாம் ஒவ்வொருவரும் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
- சுய ஒழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன்மதிப்பாகும்.
- பணம் பசியைத்தான் போக்கும், துயரை போக்காது.
- உங்கள் நம்பிக்கையை பணத்தின்மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
- மாற்றம் இல்லாமல் ஏற்றம் சாத்தியமற்றது. தன்னுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்களால் இவ்வுலகில் எதையுமே மாற்ற முடியாது.
- தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி.
💫💫💫💫💫💫💫
10 கருத்துகள்
மிகவும் ரசித்து படித்தேன் நண்பரே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குஒவ்வொன்றுக்கும் குறள் ஞாபகம் வருகிறது...
நன்றி நண்பரே!
நீக்குஉங்கள் பதிவுகளை மிஸ் செய்திருக்கிறேன், சிவா., இடையில் பயணத்தில் இருந்ததால்..
பதிலளிநீக்குபெர்னாட்ஷா எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது எழுத்துகளில் நிறைய நையாண்டி இருக்கும்...ஆனால் சிறப்பான கருத்தாக இருக்கும். இவர் வித்தியாசமானவர் ஆமாம் பின்ன உலகத்தின் கருத்துகளில் இருந்து மாறுபட்டவராக இருந்தால்!!! நீங்க சொல்லியிருப்பதே அப்படித்தானே.. என்ன அழகான விளக்கம்! அவர் தன்னைத்தானே மதித்துக் கொண்டது!
தாய்மொழி பத்தி சொன்னது செம....
கீதா
உண்மைதான் சகோதரி... தன்னை மதிக்கத் தெரிந்தவன்தான் பிறரையும் மதிப்பான்... அதற்கு பெர்னாட்ஷாவே சிறந்த எடுத்துக்காட்டு... தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!
நீக்குஅது போல..பேசறவன் செய்ய மாட்டான் பேச்சைவிட செயல்தான் முக்கியம்னு சொன்னது எல்லாமே எவ்வளவு முத்தான கருத்து. அனைத்தும் ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
அனைத்தையும் ரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி!
நீக்குமற்ற விட்ட பதிவுகளையும் வாசிக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
நன்றி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.