பன்னாட்டு பொன் மொழிகள்.
நம் முன்னோர்களாகிய சான்றோர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை "அம்போ" என்று விட்டுவிடாமல் தங்களுக்கு பின்னால் பயணிக்கும் சந்ததிகளும் பயனடையும் விதமாக "பொன்மொழி"களாக செதுக்கி நமக்காக விட்டுச்சென்றுள்ளனர்.
புண்பட்ட மனதிற்கு நல்மருந்திட்டு பஞ்சினால் ஒத்தடம் கொடுப்பது போன்று அமைந்துள்ள இந்த அனுபவ நன்மொழிகளானது நம்முடைய இந்திய தேசத்தில் மட்டுமல்ல உலக தேசங்களிலெல்லாம்கூட ஏராளமாக இறைந்து கிடக்கின்றன.
அவ்வாறு பல தேசங்களிலும் இறைந்து கிடக்கும் நன்முத்துக்களில் சிலவற்றை திறன்பட சேகரித்து இதோ இந்த பதிவின்மூலம் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக்குகின்றோம். பயனடையுங்கள்...
International Pon moligal.
- அன்பு குடிகொண்டிருக்கும் வீடு அரண்மனையைவிட விசாலமானது.
- திருமணமான மகன் அண்டைவீட்டுக்காரன் போல.
- நீ ஆடாக மாறினால்தான் ஓநாயை சந்திக்க முடியும்.
- அழுதுகொண்டே விடைபெறுபவன் சிரித்துக்கொண்டே வரவேற்பான்.
- மனம் போன போக்கில் போகும் மனிதனும், காற்றடிக்கும் திசையிலேயே போகும் கப்பலும் என்றும் கரை சேர்வதேயில்லை.
- பட்டங்களைவிட பண்புதான் போற்றத்தக்கது.
- கடலில் மூழ்கிக்கொண்டிருப்பவன் கொட்டும் மழையைக்கண்டு அஞ்சமாட்டான்.
- பிறரை மன்னிக்கும் குணம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தன்னை மன்னிக்கும் குணம் மட்டும் அனைவருக்குமே உள்ளது.
- உன் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா? கடந்தகாலத்தை கொஞ்சம் திரும்பிப்பார்.
- எல்லாவற்றிலும் சமத்துவத்தை எதிர்பார்ப்பவன் மயானத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அங்கும் அரசியல்வாதி நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- "நரகம்" காலியாகிவிடக்கூடாதே என்பதற்காகவே இறைவன் அரசியல்வாதிகளையும் சில ஆன்மீகவாதிகளையும் தொடர்ந்து படைத்துக்கொண்டே இருக்கின்றான்.
- புகழ்ச்சி - ஒரு இனிப்பான விஷம்.
- சில சமயம் உதவி கிடைக்காததே பேருதவியாக அமைந்துவிடுகிறது.
- ஊர் அறிந்ததை உடனிருக்கும் கணவன் அறியமாட்டான்.
- செல்வத்தை மறைக்கலாம் வறுமையை மறைக்க முடியாது.
- எலும்பில்லாத நாக்கு எலும்பையே முறிக்கும்.
- தன்னுடைய நிழலில் தன்னால் இளைப்பாற முடியாது என்பதனை தெரிந்துவைத்திருப்பவனே புத்திசாலி.
- ஒருவன் விழுந்துவிட்டால் மொத்த உலகமும் அவன்மீது சவாரி செய்யும்.
- சர்வ ஜாக்கிரதையாக இருப்பவனும் சறுக்கி விழுவான்.
- முதல் திருமணம் கடமை, இரண்டாவது திருமணம் மடமை, மூன்றாவது திருமணம் பைத்தியக்காரத்தனம்.
- அரிப்பு எடுத்தவன்தான் சொறிந்துகொள்ள வேண்டும்.
- உன் குழந்தைகளுக்கு மதிநுட்பம் இல்லையென்றால் உன் சொத்தை அவர்களுக்கு கொடுக்காதே, மதிநுட்பம் உள்ள குழந்தையெனில் உன் சொத்து அவர்களுக்கு தேவைப்படாது.
- உனக்கு விரோதி என்று உலகில் யாருமே இல்லையெனில், உன் தாயே ஒருவனைப் பெற்றெடுப்பாள்.
- சுறுசுறுப்பான தாய் தன் மகளை சோம்பேறியாக மாற்றுகிறாள்.
- இழப்பதற்கென்று எதுவும் இல்லாதவனிடம் எச்சரிக்கையாக இரு.
- திருமண வீடு என்பதற்காக அங்கு அழுகையும், சாவு வீடு என்பதற்காக அங்கு சிரிப்பும் இல்லாமல் போகாது.
- எந்த பாதிரியாரும் தன் உறவுகளிடம் அற்புதங்களை செய்து காட்டுவதில்லை.
- காயப்படுத்தும் உண்மையைவிட குணப்படுத்தும் பொய் எவ்வளவோ சிறந்தது.
- நீண்ட நாள் வாழ ஆசைப்படுபவர்கள் முதுமையை வெறுக்கலாமோ?
- "காதல்" உன்னை திருமணத்திற்கு கொண்டு செல்லலாம், ஆனால் "கள்ளக்காதலோ" உன்னை கருமாதிக்கே அழைத்து செல்லும்.
- வாயில் விஷம் உள்ளவன் அமிர்தத்தை கக்க வாய்ப்பில்லை.
- அளவுக்கதிகமான மரியாதையை அவமரியாதையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதிக வசதி சில சமயம் அசௌகரியமாகத் தோன்றலாம்.
- கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உறங்கப்போகிறான்.
- உன்னிடம் இருக்கும் ஆயிரம் கவலைகளால் ஒரு சல்லி கடனைக்கூட அடைக்க முடியாது.
- சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சில நேரங்களில் நாணயமுள்ளவனையும் திருடனாக்கிவிடும்.
- எல்லாவற்றையும் பரிசீலிக்கப்போவதாக கூறுபவன் எந்த முடிவுக்கும் வரமாட்டான்.
- பிறரின் புகழுரையில் மயங்கிவிடாதே ஏனெனில் போற்றுதலே தூற்றுதலுக்கு ஆரம்பமாக அமையலாம்.
- பயத்தைவிட அவமானம்தான் ஒருவனை கொன்றுவிடும்.
- இருவருக்குள் நடக்கும் சண்டையை சமாதானம் செய்யப்போனால் அதற்கு வெகுமதியாக உனக்கும் இரண்டு அடியாவது விழும்.
- ஒரு பொய்யை வைத்துக்கொண்டு ஒருவன் வெகுதூரம் பயணிக்கலாம்... ஆனால் திரும்பி வருவது கடினம்.
- எப்போதும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்வது எப்போது? உழைப்புக்கும் உறக்கத்திற்கும் நேரம் ஒதுக்குவதுபோல வாழ்வதற்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொள்.
- ஒரு கண் உள்ளவன் இறைவனுக்கு நன்றி சொல்லமாட்டான்... இரண்டு கண்களும் இல்லாதவனை சந்திக்கும்வரை.
- திருடுவதற்கு கற்றுக்கொள்பவன் ஓடுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும்.
- தேவைக்கு அதிகமாக இருப்பது தேவைக்கு அதிகமாகவே விரயமாகும்.
- வறுமையில் வாழ்ந்தாலும் கடனில்லாமல் வாழ்ந்தால் அவன் செல்வந்தனுக்கு சமமானவன்.
- உன்னுடைய கௌரவம் உன் நாக்கின் நுனியில் இருக்கிறது.
- சலுகைகளைப் பெறுகிறவன் தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறான்.
- பொறுமையில்லாதவன் தன் பற்களைக்கூட சரியாக தேய்க்க மாட்டான்.
- ஒரு சாமியாருக்குத்தான் இன்னொரு சாமியாரைப்பற்றி முழுமையாகத் தெரியும்.
- தொள்ளாயிரம் எலிகளை சாப்பிட்டபின், பூனை புனித யாத்திரைக்கு சென்றதாம்.
- அடிமைபோல வேலைசெய்தால் அரசன்போல சாப்பிடலாம்.
- ஆபத்துக்கு உதவ ஒரு ஆள் இல்லை, ஆனால் ஆறுதல் சொல்லமட்டும் ஆயிரம் பேர்.
- தலைவலி மாத்திரைக்கே தலைவலியைக் கொடுப்பவன் எவனோ அவனே அரசியலில் தலைவனாகும் தகுதியைப் பெறுகிறான்.
- இன்றைக்கு அரிப்பு எடுத்தால் நாளைக்கு சொறிந்துகொள்ளலாம் என்றிருப்பவனே சோம்பேறிகளில் சிறந்த சோம்பேறியாக மதிக்கப்பட வேண்டியவன்.
- விரக்தியில் உட்காருவதை விட புலம்பிக்கொண்டே வாழ பழகிக்கொண்டால் நீண்ட நாள் உயிரோடு வாழ்ந்துவிட முடியும்.
- கையால் கொடுத்த கடனை கால்களால் நடந்து சென்றுதான் வசூலிக்க வேண்டும்.
- வாய்ப்பை தவறவிட்டவன் தன் வயோதிகப்பருவம் வரை வருந்தவேண்டி வரும்.
- சாவின் விளிம்பில் இருப்பவனுக்குத்தான் வாழ்வின் அருமை புரியும்.
- வாங்குவதற்கு மனமில்லாதவன்தான் விடிய விடிய பேரம் பேசுவான்.
- உன் இதயத்தில் உண்டாகும் நெருப்பு உன் தலையில் புகைமூட்டத்தை உண்டாக்கும்.
- காலியாக இருக்கும் கோணிப்பை நேராக நிற்காது.
- பரிசுப்பொருளுடன் வருபவன் அதிக நேரம் காத்திருக்க வேண்டி வராது.
- வருத்தத்துடன் ஒன்றை வைத்திருப்பதைவிட விருப்பத்துடன் அதை விற்றுவிடுவது மேல்.
- நமக்காக பொய் சொல்பவன் மற்றொரு சூழலில் நமக்கு எதிராக பொய் சொல்லவும் தயங்கமாட்டான்.
- உன்னிடம் மற்றவர்களைப்பற்றி வம்பு பேசுபவன் உன்னைப்பற்றியும் பிறரிடம் வம்பு பேசுவான்.
- மானங்கெட்டவனுக்கு தலையில மயிர் முளைச்சா என்ன? மரம் முளைச்சாதான் என்னா? எதைப்பற்றியும் கவலை கொள்ளவே மாட்டான்.
💚💚💚💚💚💚💚
8 கருத்துகள்
இடையிடையே உள்ளவைகளும் அருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குபதிவு அருமை. என்னை நிறைய யோசிக்க வைத்தது நண்பரே
பதிலளிநீக்குவாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களை சந்தித்தவர் என்பதால் இந்த பதிவில் உள்ள சில கருத்துக்கள் உங்களை யோசிக்க வைத்ததில் ஆச்சரியமில்லை. நம் வாழ்வில் நிகழ்ந்த பல கசப்பான அனுபவங்களை புறம்தள்ளி பாரதியார் சொல்வதுபோல "இன்று நாம் புதிதாய் பிறந்தோம்" என்னும் மனநிலையில் வாழ பழகிக்கொண்டால் கடந்துசென்ற வாழ்க்கை நம்மை கலக்கமடைய செய்வதில்லை. எதிர்கொள்ளும் ஒவ்வொருநாளும் மகிழ்ச்சியே!!!
நீக்குஎன்ன சகோ சிவா, உங்கள நித்தி சுத்தி சுத்தி வராரு!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குமுதல் மொழி செம....
ஆ!! ரெண்டாவது நம்ம ஊர் மக்கள் புலம்புவது போல இருக்கே!!! அனுபவ மருந்து!!! ஹாஹாஹா
மூன்றாவது உண்மை நல்ல மொழி!!
நரகம் - காலியாகிவிடக் கூடாது - ஹாஹாஹாஹா நம்ம ஊரு ஆள்தான் சொல்லிருக்கணும் ...உங்க மொழியோ!! ஹிஹிஹி
ஊர் அறிந்ததை....ஹையோ சிரித்துவிட்டேன்...
முதி இதி, மூ தி....ஹையோ அதுக்கு போட்டிருக்கீங்க பாருங்க ஒரு படம்!! சிரிச்சு முடிலைங்க
நிஜமாகவே அனுபவ மொழிகளேதான்...
எல்லாமே ரொம்ப ரசித்து வாசித்தேன். இடையில் உள்ள பொருத்தமான படங்கள் நகை அணிய வைத்துவிட்டன!! ஹையோ நான் பொன் நகை அணிய மாட்டேனாக்கும்....நகைச்சுவைய சொன்னேன்!!
கீதா
நித்தியை மறக்கமுடியவில்லை... என்ன இருந்தாலும் கைலாச நாட்டின் அதிபர் ஆச்சே!...
நீக்கு"மு.தி, இ.தி, மூ.தி" போட்ட படத்தைப் பார்த்து எனக்கே சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஹ..ஹஹா...
தங்களின் கருத்துக்கு நன்றி சகோதரி!
கடைசி மூன்று அடிக்கடி சொல்வது....சூப்பர்...
பதிலளிநீக்குசுறுசுறுப்பான தாய்...தன் மகளை சோம்பேறியாக்குகிறாள்...எல்லாரையும் சொல்ல முடியாது என்றாலும் இது கொஞ்சம் உண்மைதான்...
கீதா
கருத்துகளுக்கு நன்றி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.