தேசிய மலர்களை கண்டுணர்வோம்.
Part - 1.
ஒரு நாட்டிலுள்ள மக்கள் அனைவருமே ஒரே மாதிரியான கலாச்சாரங்களையோ அல்லது பழக்கவழக்கங்களையோ கொண்டிருக்க வாய்ப்பில்லை.
மதங்களாலும், கலாச்சார வேறுபாடுகளாலும் பிரிந்து கிடக்கும் மக்களை "தேசியம்" என்னும் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கவும், சட்டென்று அவர்கள் மனதிலுள்ள அனைத்து பாகுபாடுகளையும் கடந்து தேசீய சிந்தனைகளை விதைக்கவும் பெரும்பான்மையான நாடுகள் ஒரு உத்தியை கையாளுகின்றன. அவைகளே தேசீய சின்னங்கள் மற்றும் தேசிய கீதங்கள்.
தேசிய கீதங்களை இசைக்கும்போதோ அல்லது ஒரு நாட்டின் தேசீய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பொருட்களை கண்ணுறும் போதோ நம்மையறியாமலேயே ஒரு தேசிய உணர்வு நம் மனதிற்குள் ஊற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறான பொது அடையாளங்கள் மற்றும் சின்னங்களையே ஒரு நாட்டின் "தேசீய சின்னங்கள்" என அழைக்கிறோம்.
அப்படியான சின்னங்களை நிறுவுவதற்காக அனைத்து நாடுகளும் தேசிய கொடியை மட்டுமல்லாது இயற்கையின் மாறாத அடையாளங்களான மரங்கள், மலர்கள், கனிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளை பயன்படுத்திக்கொள்கின்றன.
அதாவது, இறையாண்மை பெற்ற நாடுகள் ஒவ்வொன்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய கொடி, ஒரு தேசிய கீதம், ஒரு மரம், ஒரு மலர், ஒரு கனி, ஒரு விலங்கு, ஒரு பறவை போன்றவைகளை தன் தேசத்தின் அடையாள சின்னங்களாக முன்னிறுத்துகின்றன.
அவைகளில் முதன்மையாக நிற்பது வாசனை அரும்புகளை தட்டியெழுப்பும் மலர்கள் எனலாம்.
ஆம், வாசனை அரும்புகளை மட்டுமல்லாது மக்களின் மத்தியில் தேசீய உணர்வுகளையும் தட்டி எழுப்புவதற்காக எந்தெந்த நாடுகள் எந்தெந்த மலர்களை தன்னுடைய தேசீய சின்னங்களாக பயன்படுத்துகின்றன என்பதை பற்றியும், அவ்வாறு அவைகள் பயன்படுத்துவதற்கு தேர்வான மலர்களில் அப்படி என்னதான் சிறப்புகள் உள்ளன என்பது பற்றியும் இப்பதிவில் காணலாம் வாருங்கள்.
தேசியமும் - தேசியமலர்களும்.
ஆப்கானிஸ்தான் - Afghanistan.
நாடு :- ஆப்கானிஸ்தான்.
தேசிய மலர் :- துலிப்.
தாவரவியல் பெயர் :- துலிபா கெஸ்னேரியானா.
Flower Name :- Tulip.
Scientific Name:- Tulipa gesneriana.
ஆப்கானிஸ்தானின் தேசிய மலராக தேர்வு பெற்றுள்ள "துலிப்" (Tulip) என்னும் அழகிய மலரை மலரச்செய்யும் தாவரமானது "லில்லியேசியே" (Liliaceae) என்னும் அல்லி குடும்பத்தை சார்ந்தது.
இது உள்ளி போன்ற பல்லடுக்கு தோல்களைக்கொண்ட குமிழ் கிழங்குகளை கொண்டுள்ளன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா, வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் கண்களை கவரும் அழகான பூக்களை மலரச்செய்யும் இது 150 க்கும் மேற்பட்ட இனங்களை உள்ளடக்கியது. இதன் மலர்கள் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் தன்மை கொண்டது.
இதன் தாயகம் வட ஆப்பிரிக்கா தொடங்கி கிரேக்கம், பால்கன், துருக்கி, ஈரான், வடக்கு உக்ரேன், தென் சைபீரியா, மங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாக கொண்டு இயற்கையாகவே வளர்கிறது என்றாலும் தற்போது இது எல்லா நாடுகளிலும் அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுற்றுலாத்தலங்கள் மற்றும் மலர் கண்காட்சிகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
மலர் கண்காட்சிகளில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தானின் அரசவையிலும் இடம்பிடித்ததற்கு காரணம் இதனுடைய பேரழகு மட்டுமே என்றால் அது மிகையில்லை.
🌺🌺🌺🌺🌺🌺
அல்பேனியா - Albania.
நாடு :- அல்பேனியா.
தேசிய மலர் :- சிவப்பு பாப்பி.
தாவரவியல் பெயர் :- பாப்பாவர் ரியாஸ்.
Flower Name :- Red Poppy.
Scientific Name:- Papaver Rhoeas.
"பாப்பி" என்பது வேறொன்றுமில்லை. நாம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம் அல்லவா "கசகசா"... அதனை உற்பத்தி செய்யும் தாவரம்தான் பாப்பி.
இந்த தாவரத்தின் பந்து போன்ற அமைப்பைக்கொண்ட காய்களிலிருந்து கிடைக்கும் சிறிய விதைகள்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கசகசா.
கசகசா மட்டுமல்லாது இதன் காய்களில் மற்றொரு பொருளும் கிடைக்கிறது. அதுதான் "ஓபியம்". அதாவது "அபின்".
காய்களின் மேல் தோலை கீறி அதிலிருந்து வடித்தெடுக்கப்படும் பாலை சேகரித்து உறைய வைத்தால் கிடைப்பதே "ஓபியம்" என்னும் "அபின்".
ஓபியம் என்பது ஒரு போதைப்பொருள். ஆனால் இதன் மலர்கள் போதைப்பொருள் இல்லை என்றாலும் பூத்துகுலுங்கும் இதன் அழகில் நீங்கள் மயங்கி மாட்டையாவது தவிர்க்க முடியாதது... அவ்வளவு அழகு.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே மலர்ந்து இருக்கும் இது அந்த குறுகிய நாட்களுக்குள்ளாகவே உங்களை தீராத காதல் மயக்கத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஆம், இந்த பாப்பி செடியானது நான்கு இதழ்களுடன் சிவப்பு, இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு என பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் 70 க்கும் மேற்பட்ட இனங்களை கொண்டுள்ளன.
பல நிறங்களைக் கொண்ட பாப்பி செடிகள் இருந்தாலும் அவைகளில் வெள்ளை பூ பூக்கும் பாப்பியிலிருந்தே "கசகசா" மற்றும் போதை பொருளான "ஓபியம்" அதிகமாகப் பெறப்படுகிறது. அதனாலேயே இந்த வெள்ளை நிறத்தில் பூக்கும் பாப்பி செடிகளை "ஓபியம் பாப்பி" என அழைக்கின்றனர்.
இதில் சிவப்பு நிறத்தில் பூக்கும் பாப்பி செடியானது பார்ப்பதற்கு சம்பளம் கொடுக்காமலேயே கம்பளம் விரித்தாற்போல மலர்களை மலரச்செய்வதால் இயற்கை ஆர்வலர்களால் காதலுடன் பார்க்கப்படுகிறது. அதனாலேயே இதனை சில நாடுகளில் போதைக்காக பயிரிடப்படாமல் காதலுக்காக பயிரிடப்படுகிறது.
அந்நிய தேசங்களில் மை விழியாளை மயக்க இந்த மலர்விழியாளை தூது அனுப்பி அதன் மூலமாக காதலில் வெற்றிகண்ட காளையர்களோ ஏராளம்... ஏராளம்...
இப்போது சொல்லுங்கள்... சிவப்பு பாப்பியை அல்பேனிய மக்கள் தேசியமலராக ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியமில்லைதானே!
🌹🌹🌹🌹🌹🌹
அல்ஜீரியா - Algeria.
நாடு :- அல்ஜீரியா.
தேசிய மலர் :- ஐரிஸ்.
தாவரவியல் பெயர் :- ஐரிஸ் டெக்டோரம்.
Flower Name :- Iris.
Scientific Name:- Iris Tectorum.
அல்ஜீரிய தேசத்தின் தேசிய மலரான இதன் தாயகம் ஐரோப்பிய கண்டம்.
பண்டைய கிரேக்க மொழியில் "ஐரிஸ்" என்பது வானவில்லைக் குறிக்கின்றது.
கண்களை கவரும் மலர்களை காட்சிப்படுத்தும் இந்த ஐரிஸ் தாவரமானது "லில்லி" இனத்தை சேர்ந்த தாவரம் என கண்டறியப்பட்டுள்ளது.
உள்பக்கமாக 3 இதழ்களையும் அதனை சுற்றி வெளிப்பக்கமாக மூன்று இதழ்களையும் கொண்டு நம்மை பார்த்து கண்சிமிட்டுவது இம்மலரின் தனிச்சிறப்பு.
சிவப்பு, வெள்ளை, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் ஊதா என பல்வேறு வண்ணங்களில் பூக்களை பூக்கச் செய்யும் 200 க்கும் மேற்பட்ட இனங்கள் இதில் இருந்தாலும் அல்ஜீரிய மக்களின் தேர்வு ஊதா நிற ஐரிஸ் மலர்கள்தான்.
அதற்கு காரணம் அதன் நிறம் மட்டுமல்ல அதிலிருந்து தவழ்ந்துவந்து உங்களை வருடிச்செல்லும் அந்த இனிய நறுமணமும்தான்.
🌻🌻🌻🌻🌻🌻
அந்தோரா - Andorra.
நாடு :- அந்தோரா.
தேசிய மலர் :- நர்சிஸஸ்.
தாவரவியல் பெயர் :- நார்சிஸஸ் பொடிகஸ்.
Flower Name :- Narcissus.
Scientific Name :- Narcissus Poeticus.
அந்தோரா நாட்டின் தேசிய மலரான நர்சிஸஸ் என்பது "அமரிலிடேசே" குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும்.
"லில்லி" வகையை சார்ந்த இது ஐரோப்பிய பகுதிகளில் இயற்கையாகவே வளர்ந்து நிற்பதைக் காணலாம். ஸ்பெயினிலும் இவைகள் தன்னிச்சையாக வளர்ந்து நிற்பதை காணலாம்.
இத்தாவரமானது வெங்காயத்திற்கு இருப்பதுபோன்று குமிழ் கிழங்குகளைக் கொண்டுள்ளன.
இதன் மலர்கள் பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் 6 இதழ்களை கொண்டுள்ளன. இதழ்களின் நடுப்பகுதி மெல்லிய இதழினால் ஆன ஒரு கிண்ணம் போன்ற அமைப்பை கொண்டுள்ளன.
தற்காலங்களில் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பான பூக்களை பூக்கும் கலப்பின வகைகளும் வீட்டு தோட்டங்களில் வைத்து வளர்க்கப்படுகின்றன.
ஏறத்தாழ 50 வகையான இனங்களை கொண்டுள்ள இதன் பூக்கள் ரம்மியமான நறுமணம் நிறைந்தவை. இதன் நறுமணத்துடன் வெண்பஞ்சு போன்ற அதன் அழகும் இணைந்துகொள்ள... இப்பண்பே இதனை அந்தோரா நாட்டின் அரியணைக்கு செல்லும் பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது எனலாம்.
🌼🌼🌼🌼🌼🌼
மேலும் சில தேசிய மலர்களுடன் மீண்டும் சிந்திப்போம்...
4 கருத்துகள்
நல்ல தகவல்கள், சிவா சகோ.
பதிலளிநீக்குபாப்பிஸ் - இது மட்டும் நம்ம கசகசா / ஓப்பியம் என்பது தெரியும். அதனால்தான் சிங்கப்பூர் அமெரிக்கா நாடுகளுக்குப் போறப்ப இதை பெட்டில நம்ம மசாலா எடுத்துட்டுப் போறது போல எடுத்துட்டுப் போக முடியாது.
ஐரிஸ் இங்க ஏதோ ஒரு மலர்க்கண்காட்சில அயல்நாட்டு மலர்கள் பிரிவுல பார்த்திருக்கிறேன். டுலிப் அது பரவலாக உள்ள மலர்.
அது சரி ஆஃப்கானிஸ்தான்- இறையாண்மை இருக்கற நாடு? ம்ம்ம்ம் சொல்லலாம் அதிகாரத்தை யாரும் ஒண்ணும் பண்ண முடியாதே!!!!! தன்னாட்சி அதிகாரமாச்சே!!! ஹிஹிஹி
கீதா
//அது சரி ஆஃப்கானிஸ்தான்- இறையாண்மை இருக்கற நாடு? ம்ம்ம்ம் சொல்லலாம் அதிகாரத்தை யாரும் ஒண்ணும் பண்ண முடியாதே!!!!! தன்னாட்சி அதிகாரமாச்சே!!! ஹிஹிஹி//
நீக்குஅய்யய்யோ... இறையாண்மை?..... நானும் இப்போதான் கவனிச்சேன்... ஏதோ ஒரு ப்ளோவுல வந்துடுச்சு... மன்னிக்கவேணும் சகோதரி!!!.... அதெல்லாம் சரி "இறையாண்மை" என்றால் என்ன???...
இப்பதிவுக்கு நான் போட்ட கருத்துரை எங்கே ?
பதிலளிநீக்குநானும்கூட முழுமூச்சுடன் நீங்கள் போட்ட அந்த கருத்துரையை தேடிக்கொண்டேதான் இருக்கிறேன்... ஆனால் இன்னமும் இங்கு வந்து சேர்ந்தபாடுதான் இல்லை!!... வாருங்கள்... இரண்டுபேரும் சேர்ந்தே தேடுவோம்!!!.....
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.