பாரத ரத்னா.
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய சிவிலியன் விருது "பாரத ரத்னா".
இந்த பதிவில் நாம் பாரத ரத்னாவைப் பற்றிதான் பார்க்க இருக்கின்றோம்... வாருங்கள் பார்க்கலாம்...
பாரத ரத்னா விருது.
சிவிலியன் விருது என்பது மிகச்சிறந்த சாதனைபுரியும் அல்லது சேவையாற்றும் குடிமக்களுக்கான விருது என்பதனைக் குறிக்கும்.
ஆனால்,... குடிமக்களை விட அரசியல் பலம்பொருந்திய அரசியல் வியாதிகளுக்கே இது அதிகம் கொடுக்கப்படுவது விருதின் பெருமையை குறைக்கும் செயல் என்பதால் நமக்கும் கொஞ்சம் நெருடலாகவே உள்ளது.
சிறந்த குடிமக்களுக்கான சிவிலியன் விருதுகள் பல இருந்தாலும் அதில் முதன்மையானதாக இருப்பது இந்த "பாரத ரத்னா" எனலாம்.
பாரத ரத்னாவுக்கு அடுத்த நிலையிலுள்ள சிவிலியன் விருதுகளாக "பத்ம" விருதுகளைக் குறிப்பிடலாம். அவை பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகியன.
Bharat Ratna.
மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டும் விதமாக வழங்கப்படும் பாரதரத்னா விருதுவானது 1954 ம் ஆண்டு ஜனவரி 2 ல் தோற்றுவிக்கப்பட்டது. 1954 தொடங்கி 2019 வரை மொத்தம் 48 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா வழங்கப்படும் துறைகள்.
ஆரம்பத்தில் கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டு வந்தது.
பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெறும்வகையில் 2011 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அதன் அடிப்படையில் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படவேண்டும் என்னும் நோக்கில் விளையாட்டு துறையும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்தே விளையாட்டுத் துறையை சார்ந்த "சன்சின் டெண்டுல்கர்" அவர்களுக்கு முதல்முறையாக பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டு 2014 ல் கொடுக்கப்பட்டது.
பாரத ரத்னாவை பெற்றவர்களில் மிக இளையவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் தான். விருது பெறும்போது இவருடைய வயது வெறும் நாற்பதுதான்.
அதேபோல, பாரதரத்னா விருது பெறும்போது மிக அதிக வயதுடையவராக இருந்தது யார் தெரியுமா?
"தோண்டா கேசவ் கார்வே". பரிசு பெறும்போது இவருக்கு வயது 100.
மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டும் விதமாகவே இப்பரிசு கொடுக்கப்படுகிறது என்றால் பாரதி, கக்கன், தலாய்லாமா இன்னும் இதுபோன்ற பொதுநலவாதிகள் எத்தனையோ பேர் இவ்வையகத்தில் இருக்க அவர்களுக்கெல்லாம் ஏன் கொடுக்கப்படவில்லை? அவர்களெல்லாம் சிறந்த குடிமக்கள் இல்லையா? என்ற கேள்வியை தயவுசெய்து எழுப்பிவிடாதீர்கள்... மீறி எழுப்பினீர்கள் என்றால் அது தெய்வ குத்தமாகிவிடும். சரியா...
பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து விருதுகளுமே தகுதியின் அடிப்படையில் கொடுப்பதைவிட சிபாரிசுகளின் அடிப்படையிலேயே அதிகம் கொடுக்கப்படுவதால் தகுதியுள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும், தகுதி இல்லாதவர்கள் ஆராதிக்கப்படுவதும் இயல்பான விஷயமே!!
எனவே, ஒருவர் பெற்ற விருதினை அடிப்படையாகக்கொண்டு அவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்பது இங்கு கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம்.
சரி, இனி பாரத ரத்னாவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இவ்விருது தொடங்கப்பட்டபோது ஏற்படுத்திய விதிமுறைகளின்படி "அமரர்"களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை என வரையறுக்கப்பட்டன.
எனினும், 1966 ஆம் ஆண்டு இவ்விதிமுறையில் சிலமாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அமரர்களுக்கும் இவ்விருது வழங்கும்படி வழிவகை செய்யப்பட்டது.
அதன்பிறகே முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உள்பட 12 பேருக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா விருதுகளின் எண்ணிக்கை ஒரு குறிபிட்ட ஆண்டில் அதிகப்பட்சமாக 3 பேருக்கு வழங்கப்படலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது என்றாலும்... தேவைப்பட்டால் அதற்கு அதிகமான எண்ணிக்கையிலும் கொடுக்கப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக 1999 ல் 4 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
பொதுவாக உலகில் வழங்கப்படும் பலவிருதுகளுக்கு சான்றிதழ், பதக்கமுடன் ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்படும். ஆனால் பாரத ரத்னா விருதுடன் ரொக்கப்பரிசு எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக குடியரசு தலைவரால் கையெழுத்திடப்பட்ட சான்றிதழுடன் பதக்கம் மட்டுமே வழங்கப்படுகின்றன.
சரி, இந்த விருதுக்கு தகுதியான நபர்களை எவ்வாறு தேர்வு செய்கின்றனர் என கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்... இந்த விருதுக்கான நபர்களை தேர்வு செய்வது யாரெனில் சாட்ஷாத் நம்முடைய பாரதப் பிரதமர்தான்!
இந்த விருதினை பெறுவதற்கான தகுதி யாருக்கு இருப்பதாக அப்போது பிரதமர் பதவியில் இருப்பவர் கருதுகிறாரோ அவர்களின் பெயர்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைப்பார். பின்பு தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஜனாதிபதியால் இவ்விருது உரியவர்களுக்கு வழங்கப்படும். அவ்வளவுதான்...
சான்றிதழ்களின் தன்மை.
இவ்விருதுடன் வழங்கப்படும் சான்றிதழில் (Bharat ratna certificate) பாரத ரத்னா வழங்கியதற்கான அத்தாட்சி குறிப்புகளுடன் ஜனாதிபதியின் கையொப்பமும் இடப்பட்டிருக்கும்.
பதக்கத்தின் அமைப்பு.
பாரத ரத்னா விருதிற்காக வழங்கப்படும் பதக்கமானது வெண்கலத்தால் ஆனது. இந்த பதக்கம் கொல்கத்தாவிலுள்ள இந்திய அரசு நாணய கழகத்தால் தயாரிக்கப்படுகிறது.
இந்த பதக்கமானது அரச இலை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இலை வடிவமானது 5.8 சென்டிமீட்டர் (59 mm) நீளம், 4.7 சென்டி மீட்டர் (48 mm) அகலம் மற்றும் 3.2 மில்லி மீட்டர் தடிமனை கொண்டிருக்கும். அதன் முகப்பு பக்கத்தில் சூரியனின் உருவம் 1.6 சென்டி மீட்டர் பரப்பளவில் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் தேவநாகரி எழுத்தில் "பாரத ரத்னா" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
பாரத ரத்னா பெறுபவர்களுக்கான விதிமுறைகள்.
பாரத ரத்னாவிற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளில், விதிமுறை 18 (1)-ன்படி விருது பெற்றோர் டாக்டர் பட்டத்தைபோல தங்களின் பெயரின் முன்போ, பின்போ "பாரத ரத்னா" என்னும் அடைமொழியை பயன்படுத்துதல் கூடாது.
அதாவது, கௌரவ டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் Dr. M.G.R என தாங்கள் வாங்கிய டாக்டர் பட்டத்தை தன் பெயர்களின் முன்னால் போட்டுக்கொள்வதைப்போல "பாரத ரத்னா. M.G.R" என போட்டுக்கொள்ளக் கூடாது.
ரொம்ப அவசியம் என்று கருதினால் மட்டும் விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் ஆகியவற்றில் பெயருக்குப்பின்னால் அடைப்புக்குறிக்குள் "பாரத ரத்னா விருதை பெற்றவர்" என அச்சிட்டுக்கொள்வதற்கு மட்டும் அனுமதி உண்டு.
ஆனால், தற்போது விதிமுறைகளெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன. பெயரின் முன்னால், பின்னால் என எங்கெல்லாம் பாரத ரத்னாவை சொருக முடியுமோ அங்கெல்லாம் சொருகும் வேலை வெகுஜோராக நடந்துகொண்டுதான் உள்ளது.
(அதான் நாங்களும் சொருகிட்டோமில்ல... இந்த புலிக்கேசிக்கு இதெல்லாம் சாதாரணமப்பா...)
பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்.
முதல் பாரத ரத்னா விருது.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திற்கான பாரத ரத்னா விருது ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சி.வி. ராமன் ஆகிய மூன்று பேர்களுக்கு வழக்கப்பட்டது. இதே போல ஒவ்வொரு வருடமும் மூன்று மூன்று பேர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதா? என்றால்... அதுதான் இல்லை..
ஒருவருக்குகூட இவ்விருது வழங்கப்படாமலேயே பல வருடங்கள் விடுபட்ட நிலையில் காணப்படுகின்றன!.
அதற்கான காரணம் வெரி சிம்பிள்.
என்னதான் பாரத பிரதமர்கள் தங்கள் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கொட்ட கொட்ட விழிப்புடன் திறமையானவர்களை தேடியலைந்தாலும் பலநேரங்களில் அவர்களின் கண்களுக்கு திறமையானவர்கள் தென்படுவதே இல்லையாம்.
(அய்யோ பாவம்... இந்தியாவிலுள்ள 140 கோடியில் ஒருவருக்கு கூடவா "பாரதரத்னா" வாங்குவதற்கு திறமை பத்தல...)
அயல் நாட்டவர்களுக்கும் பாரத ரத்னா.
பெரும்பாலும் பாரத ரத்னா விருது இந்தியர்களுக்குத்தான் அதிக அளவில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியர் அல்லாதவர்களுக்கும் வழங்கப்படுவதுண்டு.
அதன் அடிப்படையில் "அன்னை தெரசா" (மாசிடோனியாவை தாயகமாக கொண்ட இவர் பின்னாளில் இந்திய குடியுரிமையை பெற்றார்), "அப்துல் கபார் கான்" (பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்), "நெல்சன் மண்டேலா" (தென்னாப்பிரிக்காவை தாயகமாக கொண்டவர்) போன்ற இந்தியர் அல்லாதவர்களையும் இவ்விருது கவுரவித்துள்ளது.
வாபஸ் பெறப்பட்ட பாரத ரத்னா அறிவிப்பு.
1992 ல் சுபாஷ் சந்திர போஸ் மறைவுக்குப்பின் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இவ்விருது சட்டச்சிக்கல் காரணமாக திரும்பப்பெறப்பட்டது.
அமரர் நேதாஜிக்கு "பாரதரத்னா" வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்தவுடன் நேதாஜி இறந்ததற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில் அவரை எப்படி அமரத்துவம் அடைந்ததாக அறிவிக்கலாம் என மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அவருடைய மரணத்தில் இன்றுவரையில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக நேதாஜிக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது முதல்முறையாக வாபஸ் பெறப்பட்டது.
பாரத ரத்னா வரலாற்றில் நிகழ்ந்த களைந்தெறிய முடியாத களங்கம்.
கோவிலில் பூஜிக்கப்படும் யானையே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் நிகழ்வை பார்த்திருப்பீர்கள் அல்லவா?... அதேபோன்ற நிகழ்வு பல நேரங்களில் மனிதர்களிடையேயும் நடப்பதுண்டு.
தன்னை பெரிய மனிதர்களாக காட்டிக்கொள்ளும் சிலரோ... தான் செய்யும் சில தவறான செயல்கள் வரலாற்றில் அழிக்க முடியாத களங்கத்தை தனக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிடும் என்பதனைக்கூட உணராமலேயே சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. அப்படியானவர்களிடமிருந்து "பாரத ரத்னா" விருதுகூட தப்பவில்லை என்பதுதான் சோகம்.
வரலாற்றில் அழியாத அவமானத்தை பெற்றுத்தந்த அப்படியான இரு நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்.
"பாரத ரத்னா" விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசு தலைவருக்கு பிரதமரே பரிந்துரைசெய்வார் என்பதனை முன்பே பார்த்தோமல்லவா?
ஆனால் பிரதமராக இருப்பவர் பெருந்தன்மையுடன் பிறரை பரிந்துரை செய்யும் மாண்பை விட்டுவிட்டு தன்னையே சிறுபிள்ளைத்தனமாக பரிந்துரை செய்தால் இந்த நிகழ்வை என்னவென்று சொல்வீர்கள்??!!...
தன்னையே அவார்டுக்கு பரிந்துரை செய்தால் அதன் பெயர் என்ன தெரியுமா?.... எச்...
இதுபோன்ற அவமானகரமான நிகழ்வு பாரதரத்னா வரலாற்றில் இருமுறை நடந்தேறியது !!...
Maridhas Answers... |
1955 ல் ஜவகர்லால் நேருவிற்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட போது பிரதமாக இருந்த புண்ணியவான் யாரு தெரியுமா?
சாட்சாத் ஜவகர்லால் நேருவேதான்.
இந்த புண்ணியவானுக்கு பாரதரத்னா கொடுக்க ஜனாதிபதியிடம் சிபாரிசு கடிதம் கொடுத்த புண்ணியவான் யாரு தெரியுமோ? அதுவும் இந்த நேருவேதான்...
இதே போன்றதொரு நிகழ்வு இரண்டாவது முறையாக எப்போது நடந்தேறியது தெரியுமா?
1971 ல்...
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்குமில்லையோ?
1971 ல் இந்திரகாந்தி அம்மையாருக்கு ஜனாதிபதியின் கைகளால் பாரத ரத்னா விருது கொடுக்கப்படும்போது பிரதமராக இருந்தது யாரு தெரியுமோ?
வேறு யாரு... அதே இந்திராகாந்தி அம்மையார்தான்...
இந்திராகாந்தி அம்மையாருக்கு பாரதரத்னா கொடுக்க ஜனாதிபதியிடம் சிபாரிசு கடிதம் நீட்டிய புண்ணியவதி யாரு தெரியுமோ? வேறு யாரு சாட்ஷாத் இந்திராகாந்தி அம்மையாரேதான்...
அதெல்லாம் இருக்கட்டும்... இவர்களின் வரிசையில் அடுத்து வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருப்பது யாருன்னு கேக்குறீங்களா?
வேறு யாரு நம்ம "இளவரசர்"தான்...
இன்னாது... இளவரசரா???...
சரி,... அதெல்லாம் இருக்கட்டும்.. நாம இப்போ இதுவரையில் இப்பரிசு யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை பட்டியலிட்டு பார்ப்போமா?
விருது பெற்றோர் பட்டியல்.
NO | விருது பெற்றவர் பெயர்கள் | விருது வழங்கப்பட்ட வருடம் | நாடு - மாநிலம் |
---|---|---|---|
1 | C. ராஜகோபாலச்சாரி | 1954 | தமிழ்நாடு |
2 | S. ராதாகிருஷ்ணன் | 1954 | ஆந்திர பிரதேசம் |
3 | C.V. ராமன் | 1954 | தமிழ்நாடு |
4 | பகவன் தாஸ் | 1955 | உத்திரபிரதேசம் |
5 | M. விசுவேசுவரய்யா | 1955 | கர்நாடகம் |
6 | ஜவகர்லால் நேரு | 1955 | உத்திர பிரதேசம் |
7 | கோவிந்த் வல்லப பந்த் | 1957 | உத்தராகண்ட் |
8 | தோண்டோ கேசவ் கார்வே | 1958 | மகாராஷ்டிரா |
9 | பிதான் சந்திர ராய் | 1961 | மேற்கு வங்காளம் |
10 | புருஷோத்தம் தாஸ் தாண்டன் | 1961 | உத்திரப்பிரதேசம் |
11 | ராஜேந்திர பிரசாத் | 1962 | பீகார் |
12 | ஜாகிர் ஹீசைன் | 1963 | ஆந்திர பிரதேசம் |
13 | பாண்டுரங்க் வாமன் கானே | 1963 | மகாராஷ்டிரா |
14 | லால் பகதூர் சாஸ்திரி | 1966 | உத்திரப்பிரதேசம் |
15 | இந்திராகாந்தி | 1971 | உத்திரப்பிரதேசம் |
16 | V.V.கிரி | 1975 | ஒடிசா |
17 | கே.காமராஜர் | 1976 | தமிழ்நாடு |
18 | அன்னைதெரேசா | 1980 | அல்பேனியா |
19 | வினோபா பாவே | 1983 | மகாராஷ்டிரா |
20 | கான் அப்துல் கபார் கான் | 1987 | பாகிஸ்தான் |
21 | எம்.ஜி. இராமச்சந்திரன் | 1988 | தமிழ்நாடு |
22 | B.R. அம்பேத்கர் | 1990 | மகாராஷ்டிரா |
23 | நெல்சன் மண்டேலா | 1990 | தென்னாப்பிரிக்கா |
24 | ராஜீவ்காந்தி | 1991 | உத்திரப்பிரதேசம் |
25 | வல்லபாய் படேல் | 1991 | குஜராத் |
26 | மொரார்ஜி தேசாய் | 1991 | குஜராத் |
27 | அபுல் கலாம் ஆஸாத் | 1992 | மேற்கு வங்காளம் |
28 | J.R.D. டாடா | 1992 | மகாராஷ்டிரா |
29 | சத்யஜித் ரே | 1992 | மேற்கு வங்காளம் |
30 | குல்சாரிலால் நந்தா | 1997 | பஞ்சாப் |
31 | அருணா ஆசஃப் அலி | 1997 | மேற்கு வங்காளம் |
32 | A.P.J. அப்துல்கலாம் | 1997 | தமிழ்நாடு |
33 | எம்.எஸ். சுப்புலட்சுமி | 1998 | தமிழ்நாடு |
34 | சிதம்பரம் சுப்ரமணியம் | 1998 | தமிழ்நாடு |
35 | ஜெயபிரகாஷ் நாராயண் | 1999 | பீகார் |
36 | ரவிசங்கர் | 1999 | மேற்கு வங்காளம் |
37 | அமர்த்தியா சென் | 1999 | மேற்கு வங்காளம் |
38 | கோபிநாத் போர்டோலாய் | 1999 | அசாம் |
39 | லதா மங்கேஷ்கர் | 2001 | மத்தியபிரதேசம் |
40 | பிஸ்மில்லா கான் | 2001 | பீகார் |
41 | பீம்சென் ஜோஷி | 2009 | கர்நாடகா |
42 | C.N.R. ராவ் | 2014 | கர்நாடகா |
43 | சச்சின் டெண்டுல்கர் | 2014 | மகாராஷ்டிரம் |
44 | மதன் மோகன் மாளவியா | 2015 | உத்திரப்பிரதேசம் |
45 | அடல் பிஹாரி வாஜ்பாய் | 2015 | மத்தியப்பிரதேசம் |
46 | பிரணாப்முகர்ஜி | 2019 | மேற்கு வங்காளம் |
47 | பூபேன் ஹசாரிகா | 2019 | அசாம் |
48 | நானாஜி தேஷ்முக் | 2019 | மகாராஷ்டிரம் |
மாநில தரவரிசை பட்டியல்.
No | மாநிலம் | விருதுகளின் எண்ணிக்கை | நாடு |
---|---|---|---|
1 | உத்திரபிரதேசம் | 7 | இந்தியா |
2 | மகாராஷ்டிரா | 7 | இந்தியா |
3 | மேற்கு வங்காளம் | 7 | இந்தியா |
4 | தமிழ்நாடு | 7 | இந்தியா |
5 | கர்நாடகா | 3 | இந்தியா |
6 | அசாம் | 2 | இந்தியா |
7 | பீகார் | 3 | இந்தியா |
8 | குஜராத் | 2 | இந்தியா |
9 | ஒடிசா | 1 | இந்தியா |
10 | பஞ்சாப் | 1 | இந்தியா |
11 | மத்தியப்பிரதேசம் | 2 | இந்தியா |
12 | ஆந்திர பிரதேசம் | 2 | இந்தியா |
13 | உத்தராகண்ட் | 1 | இந்தியா |
14 | அல்பேனியா | 1 | அல்பேனியா |
15 | கைபர் பக்துன்வா மாகாணம் | 1 | பாகிஸ்தான் |
16 | தென்னாப்பிரிக்கா | 1 | தென்னாப்பிரிக்கா |
சரி,... இதுவரை பாரத ரத்னாவைப் பற்றியும், பாரத ரத்னா யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் மட்டுமே பார்த்தோம். தொடர்ந்து வரும் அடுத்த பதிவில் (Part - 2) மேலே குறிப்பிட்டு உள்ளவர்களுக்கு எதற்காக?.. எந்த சூழ்நிலையில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது என்பது பற்றி தனித்தனியான சிறிய விளக்கங்களுடன் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாமா?...
இக்கட்டுரையின் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதியை (Part 2) ஐ படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்யவும்.
👉👉 பாரத ரத்னா - Let's know about the Bharat Ratna Awardees 👈👈
8 கருத்துகள்
உழைக்கும் எந்த மக்களும் கிடைக்காது... ம்...
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே... உழைக்கும் மக்களுக்கு ரேசனில் இலவச அரிசியும், நம்பர் கடைகளில் காசு கொடுத்தால் "குவாட்டரும்" (நெப்போலியன் விருது) கொடுக்கிறார்கள்... மற்றபடி பட்டயம், விருதுகளெல்லாம் முதலாளி வர்க்கத்திற்கு மட்டும்தான்....
நீக்குவலைப்பதிவு எழுதுபவர்களுக்கு கிடைக்க சாத்தியம் உண்டா ?
பதிலளிநீக்குநீங்கள் இப்படி கேட்பது ஆச்சரியமாக உள்ளது. உங்கள் தளத்தில் நீங்கள் வாசக அன்பர்களிடமிருந்து விருதுகள் வாங்கியதற்கான அத்தாட்சி இரண்டு உள்ளதே!.. "The Versatile Award" மற்றும் "பல்திறப் புலமை விருது"... இதைவிட பெரிய விருது வேறு என்ன இருக்கப்போகிறது?
நீக்குஅட போங்கப்பா..ஏனோ தெரியவில்லை இது போன்ற விருதுகள் மனதை ஈர்ப்பதில்லை. மக்களின் மனதில் நல்ல இடம் பெற்றாலே போதாதோ...நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகளை டிட்டோ செய்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
ஆம், மக்கள் மனமே மகேசன் இல்லம்... அங்கு இடம் பெற்றாலே போதும்... அகிலமும் வசமானது போலதான்... நன்றி!
நீக்குஎந்த விருதுமே உண்மையாக இல்லை எல்லாமோ போங்குதான்...பெருமைப்படவோ மகிழவோ எதுவுமே இல்லை...ரெண்டு சொல்லிருக்கீங்க பாருங்க....
பதிலளிநீக்குகீதா
விருப்பப்பட்டால் தருவார்கள் என்பதாலேயே அதற்கு விருது என்று பெயர் வைத்தார்களோ என்னமோ?...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.