இராஜாஜி சிந்தனைகள்.
Rajaji Inspirational Quotes In Tamil
வால்மீகி வடித்துக்கொடுத்த வீரகாவியமாம் இராம காவியத்தை கம்பன் தன் கவி நயத்தால் கண்ணியமாக கவிபுனைந்து தர... கனிவுடனே அதை வாங்கி பாலர்களும் படிக்கும் வண்ணம் "சக்கரவர்த்தி திருமகன்" என்னும் காவியமாக தந்தவர்தான் "சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி" என்னும் மூதறிஞர் இராஜாஜி.
இவர் 1878ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று தமிழகத்தில் பிறந்தார். 1947 முதல் 1948 வரை மேற்குவங்க ஆளுனராகவும், 1948 முதல் 1950 வரை விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், 1952 முதல் 1953 வரை தமிழக முதலமைச்சராகவும் பதவி வகித்த இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச்சிறந்த வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளரும்கூட.
இந்தியாவின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதுக்கு சொந்தக்காரரான இவர் 1972 ம் ஆண்டு டிசம்பர் 25 ல் இயற்கை எய்தினார்.
இந்த பதிவில் அவருடைய பெருமைமிகு வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பார்க்கப்போவதில்லை. அதற்கு பதிலாக அவர் நாவில் உதித்த தத்துவார்த்தம் நிறைந்த பொன்மொழிகள் சிலவற்றை பற்றியே பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி பொன்மொழிகள்.
- நல்லதை கொண்டு மனதை பூரணமாக நிரப்பினால் அல்லது அற்றுப்போகும்.
- புலன்கள் சக்தி குன்றி முடிந்து போனாலும் ஆசைக்கு மட்டும் இறப்பே இல்லை. அது உன் இறுதிகாலம் வரை உனக்கு வேதனையை தந்துகொண்டே இருக்கும்.
- தருமத்துக்கு முரண்படாத நல்ல விருப்பங்கள் அனைத்துமே ஈசனுடைய அம்சமே.
- துறவு என்பது வெளிவேஷங்களில் இருப்பதல்ல.. மாறாக உள் மன துவேஷங்களைத் துறப்பதே துறவு.
- ஆசை அறுந்த மனநிலையே ஞானம் நிறைந்த தவநிலை.
- அழுக்கு கீழ்படிந்தால் நீர் தெளிவடைவது போல ஆசைகள் ஒழிந்தால் மட்டுமே அறிவு தெளிவடையும்.
- உன்னை அறிந்துகொள்ள உன் நெஞ்சையே நீ கேள். நீ நடந்துகொண்ட விதத்தை அது உனக்கு சொல்லும்.
- குற்றம் அறியாது குழந்தையின் உள்ளம்.... உலகை மதியாது பித்தனின் உள்ளம்... இவை இரண்டும் கலந்தாற்போல் இருப்பதே யோகியின் உள்ளம்.
- முந்தி செய்ய வேண்டியதை செய்தால் பிந்தி வருவது தானாக வரும்.
- உருவத்தை உருவகித்து உருகுவதே உமையாள் மகனை உணரும் வழியாம்.
- எனது நம்பிக்கை வீண்போகாது என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.
- உன் செருப்பு இருக்க பிறருடைய செருப்புகளை நீ அணிந்துகொண்டால் பார்ப்பதற்கு அது ஆபாசமாகவே தெரியும். அதுபோலவே தன் மொழியாம் தாய்மொழியை மறந்து அயல் மொழி பேசித் திரிவதும் ஆபாசமே...
- பக்குவமடையாதவனின் துறவு பரிகாசத்துக்கு இடம் கொடுக்கும்.
- மலையிலிருந்து செதுக்கி எடுத்த துண்டுகளுக்கும்கூட மாமலையின் குணம் உண்டு.
- சிறுதுளிகள் ஒன்று சேர்ந்து மழையாக பெய்து பயிர்கள் செழிப்பதுபோல, நீங்கள் செய்யும் சிறு தருமம் கூட பன்மடங்கு பெருகி உங்கள் சமூகத்தை செழிக்கச் செய்யும்.
- தேசத்திற்கு நன்மையான காரியங்கள் செய்வதினால் கெட்ட பெயர் வருவதானாலும் அதனை பொருட்படுத்த வேண்டியதில்லை.
- திருடன் தலைவாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தால் திருடனை விரட்டியடிக்க வீட்டுக்காரன் புறக்கடை வழியாக புகுவதில் தவறில்லை.
- உன்னைத்தவிர யாரும் உன்னை கெடுக்க முடியாது. எனவே பிறர் மீது குற்றம் சுமத்துதல் அறம் ஆகாது.
- எதை சிறந்ததாக அறிந்துகொண்டாயோ அதையே உறுதியாக கடைப்பிடி. அதற்கு மாறான விஷயங்களில் கவனத்தை செலுத்தாதே.
- நீதி, சத்தியம், தெளிவான புத்தி, தைரியம் இவைகளே மனிதனுக்கு நிரந்தரமான சுகத்தை தரும் அம்சங்கள்.
- அவனவன் உள்ளத்தை அவனவன் சுத்தமாக வைத்துக்கொண்டு அறிவுள்ளவனாக நடந்து கொள்வது ஒவ்வொருவனுக்கும் உள்ள சுதந்திரம்.
- உனது உயர்வே உனக்கு என்றும் ஆனந்தத்தை தரக்கூடியதாகும். எனவே உன் தகுதியை உயர்த்திக்கொள்வதில் சமரசம் செய்து கொள்ளாதே.
- உன்னை பற்றி ஒன்றும் அறியாத ஒருவனின் போற்றுதலைக் கண்டு மகிழ்வது அல்லது தூற்றுதலைக் கண்டு துயரப்படுவதைவிட மடத்தனம் வேறு உண்டா?
- எவன் பிறரிடம் நெறி தவறி நடக்கிறானோ அவன் தனக்கே கேடு விளைவித்து கொள்கிறான்.
- தாயின் இதயத்தில்தான் குழந்தையின் பள்ளிக்கூடம் இருக்கின்றது.
- வாழ்க்கையில் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதைவிட மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?
- ஆண்மை ஒரு நாழிகையை மட்டுமே ஆளும். ஆனால் நல்ல எண்ணங்களோ ஒரு யுகத்தையே ஆளும்.
- வாயில் இனிப்பவை வயிற்றில் புளிக்கும்.
- புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
- தன் தாய்நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் அன்பு காட்டாதவன் வேறு எதனிடமும் உண்மையான அன்பு காட்டப் போவதில்லை.
- ஒருவன் செய்யத்தகாதவைகளை செய்வது எவ்வளவு அநீதியோ அதுபோல செய்ய வேண்டியவைகளை செய்யாதிருப்பதும் அநீதியே.
- அயலாரைப் பற்றி சிந்தனை செய்து கொண்டு காலத்தை வீணாக்க வேண்டாம்.
- அறிவு என்னும் கண்ணை எவன் மூடிக்கொள்கிறானோ அவனே உண்மையில் குருடனாவான்.
- இன்பத்தையும் துன்பத்தையும் எவன் ஒன்றாக கருதுகிறானோ அவனே அழிவில்லா அமரத்துவத்துக்கு தகுந்தவன்.
- அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே, நீ சாகும்வரை உன் அறிவுக் கதவு திறந்தே இருக்கட்டும்.
- எந்த மனிதனுக்கு துன்பம் ஏற்பட்டாலும் அதனை தனக்கு வந்த துன்பமாக கருதுபவன் பூரண ஞானம் பெற்றவன் ஆவான்.
- விறகை நெருப்பு எரித்து சாம்பலாக்குவதுபோல தீவினைகள் அத்தனையையும் "ஞானம்" என்னும் நெருப்பு சாம்பலாக்கிவிடும்.
- கோபத்தினால் நீ செய்யும் அக்கிரமங்களைவிட ஆசையினால் செய்யப்படும் அக்கிரமங்களில் பாவம் அதிகம்.
- நாம் பலவீனமாக இருக்கும் போதுதான் பலாத்காரத்தைக் குறித்து சிந்திக்கிறோம்.
- நீ வாழும் விதத்தைப் பொறுத்தே உனக்கு நன்மையும், தீமையும் விளைகின்றன.
- நீ விரும்பும் பொருளைவிட நீ பிறருக்கு ஆற்றும் கடமையை பெரியதாக நினை.
4 கருத்துகள்
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவருக!!... வருகைக்கும்... கருத்து பகிர்வுக்கும் நன்றி நண்பரே!...
நீக்குஇராஜாஜி பற்றி ஓரளவு தெரியும் ஆனால் அவரது வாசகங்கள் இதுவரை அறிந்ததில்லை. அனைத்தும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.