"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" அறியாத பழமொழிகளையும் அறிந்துகொள்வோம் - We also learn unknown Proverbs.

அறியாத பழமொழிகளையும் அறிந்துகொள்வோம் - We also learn unknown Proverbs.

We also learn unknown Proverbs.

ஏட்டுக்கல்வியைவிட அனுபவக்கல்வியே வாழ்வுக்கு அதிகம் பயனையும், படிப்பினையையும் தரக்கூடியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நாம் முந்தைய பதிவில் [அறிந்தும் அறியாத பழமொழிகள் - Known and Unknown Proverbs.] அறிந்த பழமொழிகளோடு அறியாத பல பழமொழிகளையும் பார்வையிட்டோம். அதன் தொடர்ச்சியாக வரும் இப்பதிவில் மேலும் பல அறியாத பழமொழிகளைப்பற்றி அறிந்துகொள்வோம்.. வாருங்கள்...

அறியாத பழமொழிகளை
அறிந்து கொள்வோம் வாருங்கள்.

  • கள்ளம் போனால் உள்ளது காணும்.
  • கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்.
  • கருப்பன் கொல்லையிலே நெருப்புப்பொறி விழுந்தாற்போல.
  • கரும்பு கசந்தது காலத்தோடே... வேம்பு இனித்தது வேளையோடே...
  • கருவில் உரு அறியான். கண்டபின்பு பேரறியான்.
  • பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் புளியமரத்தில் ஏறத்தயங்கினால் முடியுமா?
  • கல் உள்ளதே கிணறு, கரை உள்ளதே தோட்டம்.
  • கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லா கடன்.
  • கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவன் இழவு வீட்டில் விட்டுக்கொடுப்பானா?
  • கல்லா ஒருவன் குலநலம் பேசுவது நெல்லுடன் பிறந்த பதர்போலே போகும்.
  • கல்லிலும் வன்மை கனமூடர் நெஞ்சு.
  • புழக்கடை பச்சிலையை மருந்துக்கு ஏற்பதில்லை.
  • கல்லைப் பிளக்கக் காணத்தை விதை.
  • கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே.
  • கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம். கறுப்புத் துணியில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம்.
  • கலத்தில் சாதம் போட்டால் காசிக்கு போனவனும் திரும்ப வருவான்.
  • கலகத்திலே புளுகாதவன் நரகத்திற்கு போகான்.
  • கலகம் பிறந்தால் உலகம் கலங்கும்.
  • இடுப்பில் இரண்டு துட்டு ஏறிவிட்டால் எடுப்பில் இரண்டு வார்த்தைகள் ஏறி வெடிக்கும்.
  • கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.
  • கலம் கிடக்குது கழுவாமல், கல நெல் கிடக்குது குத்தாமல்.
  • கலம் குத்துகிறவள் காமாட்சி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி.
  • கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
  • கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்கு போகாதே.
  • கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டானாம்.
  • கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா.
  • கவிந்த பால் கலம் ஏறாது.
  • கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா?
  • கவையை ஓங்கினால் அடி இரண்டு.
  •  கழு ஏறத் துணிந்த நீலி கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்.

  • கள்ளன் உறவு உறவுமல்ல, காயாத விறகு விறகுமல்ல.
  • கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் ஜெபமாலை.
  • கள்ளன் போன மூன்றாம் நாள்தான் கதவையே இழுத்து சாத்தினானாம்.
  • கள்ளனின் மனையாளிடம் களவுபோன பொருளைப்பற்றி குறி கேட்கலாமா?
  • கள்ளனும் காப்பானும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
  • கொள்ளிக்கு வாய் முந்தும். கள்ளிக்கு கண்ணீர் முந்தும்.
  • கள்ளிக்கும், கற்றாழைக்கும் களை வெட்டுவதா?
  • கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்கு கோடாலி ஏன்?
  • கள்ளிக்கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினானாம்.
  • கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவர் காசு பணத்தாலே.
  • கள்ளி வேலியே வேலி, கரிசல் நிலமே நிலம்.
  • கள்ளு குடித்தவன் கொள்ளு பொறுக்கான்.
  • கள்ளு கொள்ளா வயிறும் இல்லை, முள்ளு கொள்ளா வேலியும் இல்லை.
  • கள்ளை குடித்தவன் உண்மையை கக்குவான், கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள்.
  •  களம் காக்கிறவனை மிரட்டுவானாம், களை பிடுங்குகிறவன்.
  • களவாண்டு பிழைப்பதை காட்டிலும் கறிச்சட்டி கழுவி பிழைக்கலாம்.
  • களி கிளறி கல்யாணம் செய்தாலும் காளியண்ணப் புலவனுக்குப் பத்துப் பணம்.
  • களை எடுக்காதவன் விளைவும் எடுக்கான்.
  • கொழுத்தவன் கொள்ளை தின்னு. இளைத்தவன் எள்ளை தின்னு. களைத்தவன் கம்பை தின்னு.
  • கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல; விற்றது எல்லாம் பொருளும் அல்ல; நட்டது எல்லாம் பயிரும் அல்ல.
  • கற்றவனுக்கு வித்தை கால் நாழிகை.
  • கற்றாழை நாற்றமும், பித்தளை வீச்சும் போகவே போகா.
  • கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போக வேண்டும்.
  • வண்ணான் நடமாடக் குயவன் குடிபோவான்.
  • கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • காசியில் இருக்கிறவனின் கண்ணைக்குத்த காஞ்சிப்புரத்திலிருந்தே கையை நீட்டிக்கொண்டு போனானாம்.

  • காசியில் இறந்தால் முக்தி, கமலையில் பிறந்தால் முக்தி.
  • காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு.
  • காட்டில் புதைத்த கனதனமும், பாட்டில் புதைத்த பழம் பொருளும், வீட்டில் மனையாள் அடிமனமும் நாட்டில் அறிவது மிக அரிதே.
  • காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி.
  • காட்டை வெட்டி சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்க பயமா?
  • காட்டை வைத்துக்கொண்டல்லவோ வேட்டையாட வேண்டும்?
  • காடிக்கஞ்சியானாலும் மூடிக் குடி.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் பெறுவான்.
  • காடும் செடியும் இல்லாத ஊரில் கழுதைமுள்ளி கற்பக விருட்சம்.
  • காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
  • காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு.
  • காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே.
  • காணாத மூளி கஞ்சியை கண்டால் ஓயாமல் ஓயாமல் ஊதிக் குடிப்பாளாம்.
  • காணாததையெல்லாம் காண்பவனுக்கு காண்பதெல்லாம் கைலாசம்.
  • காணாது கண்ட கம்பங்கூழை சிந்தாது குடியடா சில்லி மூக்கா.
  • காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை.
  • காணி காணியாய் சம்பாதித்து கோணி கோணியாய் செலவளித்தது போல.
  • காணி தேடினும் கரிசல் தேடு.
  • காணியாளன் வீடு வேகும்போது காலைப்பிடித்து இழுத்த கதை.
  • காணியை நட்டபின் களத்தில் நில்.
  • காணி லாபம், கோடி நஷ்டம்.
  • காணாமல் கண்டேனே கம்பங்கதிரை.
  • காத வழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்.
  • காது அறுத்த கூலி கைமேலே.
  • காந்தலே ருசி கறுப்பே அழகு.
  • காந்தாரி கண்பட்டால் கல்லும் கரிந்து போகும்.
  • காப்பு இட அத்தை இல்லை, கலகமிட அத்தை உண்டு.
  • காமாட்டி பையனுக்கு ஒரு சீமாட்டி கிடைத்தது போல.
  • கை மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
  • காய்ச்சிக் காய்ச்சித்தானே நீட்ட வேண்டும்.

  • காய்ச்சின கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சைக்கட்டி நிற்க ஆள் உள்ளது.
  • காய்ந்த வானம் பெய்தால் விடாது.
  • காய்ந்த வித்து பழுது படாது.
  • காய்ந்தால் காயும் கார்த்திகை.
  • காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.
  • கார்த்திகைக்குப்பின் மழையும் இல்லை. கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.
  • கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிர்விடும் கார்த்திகை மாதத்திலே.
  • கார்த்திகை மாசம் கையிலே.. மார்கழி மாசம் மடியிலே.
  • காரண குருவே காரிய குரு.
  • காரிகை கற்றுக் கவி பாடுவதைக் காட்டிலும் பேரிகை அடித்து பிழைப்பது நன்றே.
  • காரியத்திற்கு சோம்பினவர்களுக்கு கைக்குழந்தை ஒரு சாக்கு.
  • காரியம் ஆகிறவரைக்கும் காலைப்பிடி, காரியம் அனபின்பு கழுத்தைப்பிடி.
  • காரியம் இல்லாத மாமியாருக்கு நெல்லும் கல்லும் கலந்து வைத்தாள்.
  • காரியம் முடிந்தவுடன் கழுநீர் பானையில் கையை விட்டாளாம்.
  • காரியம் முடிந்துவிட்டால் கம்மாளன் புறத்தே.
  • காருக்குப் பின் பட்டம் இல்லை. கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை.
  • காருக்கு வயலும் மோருக்கு சாதமும் அதிகமாகா.
  • காரைக் கிள்ளி நடு, சம்பாவை அள்ளி நடு.
  • கால் ஆட்டக் கால் ஆட்டத் தூணாட்டம் வீங்கினதுதான் மிச்சம்.
  • கால் அணா கொடுக்கிறேன் என்றால் காத வழி நடக்கிறான்.
  • காலா காலத்தில் ஓட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பல்கூட மூழ்கிப்போகும்.
  • காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறி "கதிர்காமா" "கதிர்காமா" என்றால் கைகொடுக்குமா?
  • காலமறிந்து பெய்யாத மழையும், நேரமறிந்து உண்ணாத உணவும் வீண்.
  • காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுகிட்டதுபோல.
  • கால அபிஷேகத்துக்கு கூலிக்கு குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம்.

  • காலை உப்பலும், கடும்பகல் வெயிலும், மாலை மேகமும் மழைதனில் உண்டு.
  • காலையில் கூழை தள்ளாதே. கம்மாளன் வரவை கொள்ளாதே.
  • காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும்.
  • காலை விருந்தை தட்டாதே, கசடருடன் கூடித் திரியாதே.
  • காவடி பாராம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • காவேரி ஆறு கரைபுரண்டு ஓடினாலும் வீராணத்தேரி விதை முதலுக்குக் கட்டாது.
  • காளி தோட்டத்து கற்பக விருட்சம் ஆருக்கும் உதவாது.
  • காளி பட்டம் போனாலும் "மூளி" பட்டம் போகாது.
  • கிரக சாந்திக்கு சவரம் செய்து கொண்டதுபோல.
  • கிராக்கி மொச்சை கொட்டை, வராகனுக்கு பத்து கொட்டை.
  • கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக்கூடாது.
  • கீரை இல்லா சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ்.
  • கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும்.
  • குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம். குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
  • குச்சத்திரம் குடியை கெடுக்கும்.
  • குச்சு வீடு கட்டி அல்லவா மச்சு வீடு கட்ட வேண்டும்?
  • குறத்தி நாக்கை அறுத்தாலும் குண்டு மூன்று காசு என்பாள்.
  • குசு கும்பிடப்போனால் தெய்வமும் தெறித்துதான் ஓடும்.
  • குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான்.
  • அவனோட நல்லி எலும்பை முறிக்கலாமுன்னு கூப்பிட்டா அவன் நம்மள சல்லி சல்லியாக நொறுக்கிட்டானே பாவி... 

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. சகோ உங்களுக்கு ரொம்பப் பொறுமைதான்! இத்தனையும் தட்டச்சிருக்கீங்களே!! அதுக்கு ஒரு பாராட்டு!

    பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின்.....
    கலத்தில சாப்பாடு காசிக்குப் போனவனும்.....இது எங்கள் வீட்டில் அடிக்கடி சொல்லுவது...யாருக்கேனும் காத்திருந்து அந்த நபர் வர கொஞ்சம் தாமதமானால் வீட்டில் பெரியவங்க சொல்வது...தட்டைப் போடு வந்திடுவான் என்று...

    கலகம் ......உலகம் கலங்கும்

    நான் அடிக்க்டை சொல்வது கள்ளு குடிச்சிட்டா உண்மை வந்திரும்னு...ஆனால் ஓவரா கள்ளை ஊத்திக் கொடுத்து உண்மைய வரவழைக்க நினைச்சா ஆளு ஃப்ளாட் ஆகிடுவான்..ஹாஹாஹா

    இதை தவிர மத்தது எல்லாம் புதுசு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி சகோதரி!... தெரிந்தது போக தெரியாத பல பழமொழிகளையும் நீங்கள் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி!!!...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.