"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பண்படுத்தும் பழமொழிகள் - Proverbs that Cultivate the Mind.

பண்படுத்தும் பழமொழிகள் - Proverbs that Cultivate the Mind.

Proverbs that Cultivate the Mind.

நாம் தொடர்ந்து சில பதிவுகளாக பழமொழிகள் பலவற்றையும் பார்த்துவருகிறோம். இப்பதிவிலும் அதையே பார்க்க இருக்கிறோம்.

நம் முன்னோர்களான சான்றோர்கள் அவர்கள் வாழ்வில் அனுபவ ரீதியாக பெற்ற அறிவைக்கொண்டு நயம்பட உருவாக்கிய சொற்றொடர்களே பழமொழிகள்.

எத்தனையோ இலக்கியங்கள் ஏடுகளில் எழுதப்பட்டு இருந்தாலும்கூட வெறும் வாய் வார்த்தைகள் மூலமாகவே இன்றுவரை நம்மை தொடர்ந்து வழிநடத்தி வருபவை பழமொழிகள்.

எனவேதான் இரண்டே இரண்டு வாக்கியங்களில் ஜனித்து நின்றாலும்கூட "எழுதா இலக்கியம்" என்னும் சிறப்பு பெயருடன் இன்றும் நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கின்றன.

வாருங்கள் எழுதா இலக்கியத்திலிருந்து சில வைர வாக்கியங்களை வெளிக்கொணர்வோம்.

மனதை பண்படுத்தும் பழமொழிகள்.

  • போன கண்ணையும் கொடுக்குமாம் பொன்னாங்கண்ணி.
  • பொன்னை விற்றுத் தின்னு, மண்ணை வைத்துத் தின்னு.
  • போக்கு அற்றான் நீக்கு அற்றான், பொழுது விடிந்தால் கந்தையும் அற்றான்.
  • போகப் போகத் தெரியும் புதுக்கணக்கன் வாழ்வு.
  • அங்கே பார்த்தால் ஆடம்பரம், இங்கே பார்த்தால் கஞ்சிக்கு சாவு.
  • அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்.
  • போர் இட்ட வீடு பொடி பட்டு வேகும்.
  • அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயசில் பங்காளி சண்டை.
  • அட்டமத்து சனி பிடிக்க பிட்டத்து துணியும் பறிபோனது.
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
  • மக்கத்துக்குப் போயும் நொண்டிப் பக்கிரி காலில் விழுந்தது போல.
  • தன் மக்களுடைய பொன்னாகவே இருந்தாலும் மாப்பொன் குறையாமல் இருக்குமா?
  • மக்கள் வயிறும் வாடக்கூடாது, பானை அரிசியும் குறையக்கூடாது.
  • மக்காவுக்கு போயா கொக்கு பிடிக்க வேண்டும்?
  • மகத்தில் பிள்ளை ஜகத்தில் இல்லை.
  • மகாராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு கடைசியில் மஞ்சளுக்கும் தரித்திரமா?
  • பார்த்தால் மகா பெரியவர் பழகி பார்த்தால் மண்டையிலே புழுத்தவர்.
  • மகாராஜன் கல்யாணத்தில் நீராகாரம் நெய்பட்ட பாடு.
  • மூடருக்கு உறைத்தாலும் தோன்றாது நுண்ணறிவு.
  • மூடர்களுடைய உறவிலும் விவேகியுடனான பகை நலம்.
  • மட்டி எருக்கிலை மடல் மடலாய் பூத்தாலும் மருக்கொழுந்தின் வாசனை வகையாக வீசுமா?
  • மட்டைக் கரியையும் மடப்பள்ளியாரையும் நம்பவே கூடாது.
  • மட பெருமைக்கு குறைவில்லை, ஆனால் நீராகாரத்துக்குதான் வழியில்லை.
  • மூங்கில் பாயும், முரட்டு பெண்டாட்டியும் போல.
  • மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே.
  • மண் இட மண் இட வீட்டுக்கு அழகு. பொன் இட பொன் இட பெண்ணுக்கு அழகு.
  • மண்ணுக்கு புளி. மனைக்கு வேம்பு.
  • அகப்பை அறியுமா அறுசுவையின் மேன்மையை?
  • அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி, அள்ளிபோட்டு குழம்பு ஊற்றியதோ பூசாரி.
  • மண் பானை பொங்கல் மணக்குதாம், மாணிக்கத் தொந்திக்கு பசிக்குதாம்.
  • மதகு அடி சாவியானாலும் மலை அடி சாவி ஆகாது.
  • மதகு அடி நன்செயும், மலை அடி புன்செயும்.
  • மதம் விரதம் கேட்குது, ஆனால் மத்தியானமோ பழையது கேட்குது.
  • முட்டாளோடு ஆடுகின்ற நட்பு கருங்காலி கட்டையோடு ஊடாடும் கால் போன்றது.
  • முக்காடு போட்டு மூலையில் வைத்த பின்பும் மெச்சி கொள்வதற்கு எச்சில் இலை எடுத்தாளாம்.
  • மதியாதான் வாசலிலே வல்லிருளே ஆனாலும் மிதியாமல் இருப்பதே கோடி பெறும்.
  • மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் போய் மீசை துடித்ததாம்.
  • முட்டு பட்டு முன்னுக்கு வந்தால் குட்டுபடுவதால் குறைவதென்ன?
  • மந்திரம் தெரியாத குருக்களுக்கு மணியே துணை.
  • மான மழை நின்றாலும் ஈன மழை நிற்காது.
  • மப்புக்காரன் தப்புக் கொட்டுவானா?
  • மயிர் உள்ள சீமாட்டி இடக்கையாலும் முடிவாள் வலக்கையாலும் முடிவாள்.
  • மயிர் ஊடாடாத நட்பும் பொருள் ஊடாடக் கெடும்.
  • மானார் கலவியில் மயங்கி இருந்தாலும் தானே தருவான் சிவன் தன் பாதம்.
  • முன்னவனே முன் நின்றால் முடியாத காரியமும் உண்டோ?
  • முன்னே போகிறவன் இடறி விழுந்தால் அது விபத்து அல்ல, பின்னே போகிறவனுக்கான எச்சரிக்கை.
  • மலிந்தது கொள்ளா வணிகரும் பதரே.
  • மலை இலக்கானால் குருடனும்கூட குறிதவறாமல் அம்பு எய்வான்.
  • முடங்கப் பாய் இல்லாமல் போனாலும் சடங்குக்கு குறைச்சல் இல்லை.
  • மலை கறுத்தால் மழை.
  • மலை குலைந்தாலும் நிலை குலைதல் கூடாது.
  • மலை பெரிதானாலும் சிற்றுளியால் தகர்ந்து போகும்.
  • மலை மல்லிகைக்கு எதிர் பூத்ததாம் மருள் ஊமத்தை.
  • முடப்புல்லும் முக்கல நீரைத் தடுக்கும்.
  • மலையாளம் பெய்து விளையும், தஞ்சாவூர் பாய்ந்து விளையும்.
  • மலையும் மலையும் இடித்துக்கொண்டால் மண்ணாங்கட்டி எந்த மூலை?
  • மழை வரண்டால் மணக்கத்தை விதை.
  • மறைந்த புதன் நிறைந்த தனம்.
  • மன்னர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் மகிமை.
  • மனசு மதிலை தாண்டுகிறது, கால் வாசல்படியை தாண்டவில்லை.
  • மனசுக்கு பிடிக்காமல் தினுசுக்கு ஒரு புடவையா?
  • மினுக்கு எண்ணெய் தலைக்கு கேடு.
  • மீசையை முறுக்கி வளர், ஆசையை நறுக்கி வளர்.
  • மூத்தவள் முகத்தில் மூதேவி வாசம்.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • எதையும் முடிக்காதவன் படிக்காதவனே!
  • மாங்காய்க்குத் தேங்காய் மருந்து.
  • மாசி ஈனா மரமும் இல்லை, தை ஈனாப் புல்லும் இல்லை.
  • மாசி சரடு பாசிபோல் வளரும்.
  • மாசி மகத்தழகு மகாமகக் குளத்தழகு.
  • முடிச்சு அவிழ்த்து கொடுத்ததும் அல்லாமல் "முடிச்சவிழ்த்த முடிச்சறுக்கி" என்னும் பட்டமும் கிடைத்தது.
  • மாதம் ஒரு மாரி இருபோகம், மும்மாரி முப்போகம்.
  • மாந்திரிகன் வீட்டு பேயும் போகாது, வைத்தியன் வீட்டு நோயும் போகாது.
  • மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கோணல் வாயாம், அதிலும் கொட்டாவி வேறு விட்டுக் காட்டினானாம்.
  • புதுப்பெண் சிங்காரிப்பதற்குள் மாப்பிள்ளை வண்டி ஏறிவிடுவான் போல.
  • மாப்பிள்ளை சொந்தம், துப்பட்டி இரவல்.
  • முடிச்சவிழ்க்க மூன்றுபேர் போனது போல.
  • மாவு புளிக்கிறதெல்லாம் பணியாரத்துக்கு நல்லதே.
  • மாவு மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?
  • மச்சான் கிச்சு கிச்சான், ஒரு பக்கத்துக் கச்சையைப் பிச்சுக்கிச்சான்.
  • மாமியார் செத்து மருமகள் அழுத கதை.
  • மாமியார் மதிலை தாண்டினால் மருமகளோ குதிரைத் தாண்டுவாள்.
  • மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை, மருமகள் மெச்சிய மாமியாரும் இல்லை.
  • மாயப்பெண்ணே சுந்தரி மாவைப் போட்டு கிண்டடி.
  • மாயூரம் மொட்டை, சிதம்பரம் கொட்டை.
  • மாரடித்த கூலி மடிமேலே. நாறடித்த கூலி நடுவீதியில்.
  • மார்கழித் திங்கள் மடிநிறைய பொங்கல்.
  • மார்கழி மத்தியில் மாரி பொழிந்தால் சீர் மிகு பயிர்களுக்கு சேமம் உண்டாம்.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • கீழோர் எனினும் தாழ உரை.
  • சேமம் புகினும் யாமத்து உறங்கு.
  • தீரா கோபம் போராய் முடியும்.
  • தொழுதூண் சுவையினும் உழுதூண் சிறப்பு.
  • நாடெங்கும் வாழ கேடொன்றும் இல்லை.
  • நீரகம் பொருந்திய ஊர் அகத்தில் இரு.
  • வானம் சுருங்கின் தானமும் சுருங்கும்.
  • மார்கழி மழை பெய்தால் மலை மீதும் நெல் விளையும்.
  • மாரி பெய்ய வில் போட்டால் (வானவில்) ஏரி பிய்ய மழை பெய்யும்.
  • மாரியாத்தாளையே பிரண்ட் பிடிக்கிறவனுக்கு பூசாரி பெண்சாதி எம்மாத்திரம்?
  • மாவு இருக்கிற மணம் போலேதான் கூழில் இருக்குமாம் குணம்.
  • மாவின் குணமே கூழின் குணமாம்.
  • மாவு இடித்தால் ஓடிக்கொள்கிறது, கூழ் கொதித்தால் கூடிக்கொள்கிறது.
  • மானமே பெரிதென மதிப்பார்க்கு பிராணனும் சிறு துரும்பாம்.
  • மானியம் வாங்கி பிழைப்பதைக் காட்டிலும் வாணிபம் செய்து பிழைப்பது மேல்.
  • மிஞ்சி இல்லா விரலும் பாழ். மஞ்சள் இல்லா முகமும் பாழ்.
  • மிஞ்சின கருமம் அஞ்சிட செய்யும்.
  • மிதிபாகல் விதையோடே.
  • முடி பொறுத்த தலைக்கு சுழி சுத்தம் பார்ப்பதா?
  • முணுமுணுத்த சாப்பாட்டை காட்டிலும் முர முரத்த பட்டினி மேல்.
  • முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை. முழுதும் கெட்டவனுக்கு துக்கம் இல்லை.
  • அக்கரையில் இருக்கிற தாசப்பனை கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தை பார் என்றானாம்.
  • அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடாவது கொடுப்பாள்.
  • உறவு பற்று இல்லாதவனுக்கு துக்கம் என்ன வந்தது?
  • முத்துக்கும் சொத்தை உண்டு, பவளத்திலும் பழுது உண்டு.
  • பிச்சைக்கு போனாலும் மூன்று பேரோடு போகாதே.
  • முட்டுக்கு முட்டு அல்ல, மூடக் கதவும் அல்ல.
  • மதி இருக்க விதி இழுக்கும்.
  • மதி இல்லாமல் வீண் ஆனேன், மருந்து இல்லாத புண் ஆனேன்.
  • மதி கெட்ட வேளாளன் சோற்றையும் இழந்தான்.
  • முத்தை தெளித்தாலும் கல்யாணம்தான், மோரை தெளித்தாலும் கல்யாணம்தான்.
  • முதல் இல்லாதவன் உயிர் இல்லாதவன்.
  • முதுமைக்கு சோறும், முறத்துக்கு சாணமும் வலு சேர்க்கும்.
  • முந்தினவன் கை மந்திர வாள்.
  • முப்பது பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.
  • முருங்கைக்காய் என்றதும் முறிந்துபோனதாம் பதிவிரதை பத்தியம்.
  • முருங்கைக் கீரை முட்ட வாயு, அகத்திக்கீரை அண்ட வாயு.
  • முருங்கைக்கு முப்பது நாளில் முன்னூறு தத்து.
  • முள்ளினால் முள்ளைக் களை.

💦💦💦💦💦💦

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

7 கருத்துகள்

  1. எங்கிருந்து தொகுக்கிறீர்களோ... அத்தனையும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி நானும் கேட்க நினைத்து விட்டுப் போச்சு

      எங்க நாரோயில் லைப்ரரிலறுந்து இருக்கும்!!!

      நீக்கு
    2. ஹ..ஹாஹா... எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது... "நாரோயில்" லைப்ரரியா?... அது எங்கே இருக்கு?... நார்வே நாட்டிலா? ஹ... ஹாஹா...

      நீக்கு
  2. ஒரு சிலது தவிர மத்தவை அனைத்தும் புதுசு. கேட்டதே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... மகிழ்ச்சி!!! "புதுசு" பழமொழிகள் இன்னும் தொடர் பதிவுகளாக ஒருவாரம் தொடர்ந்து வர இருகின்றன!!.

      நீக்கு
  3. அனைத்தும் அருமை. நல்ல தொகுப்பு. உங்கள் உழைப்பும் தெரிகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.