"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பழமொழி பலவிதம் - Proverbial Diversity.

பழமொழி பலவிதம் - Proverbial Diversity.

Proverbial Diversity.

     வாழ்வில் கற்றுக்கொள்வதற்கு கடினமான விஷயங்களாக இருந்தாலும்கூட அவைகளை எளிதாக பெற்றுகொள்ள உதவுபவை பழமொழிகள்.

ஒரு விஷயத்தை அல்லது வாழ்வியல் நெறிமுறைகளை பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இனிய சொற்றொடர்களையே நாம் பழமொழிகள் என்கிறோம்.

முன்னோர்களின் அனுபவங்களில் விளைந்த உயரிய சிந்தனைகளான இப்பழமொழிகளானது... காலம் பல கடந்த பின்பும்கூட இலக்கண வரைவுகள் எதுவுமின்றியே இக்கணமும் தன்வீச்சுக் குறையாமல் நம்மிடையே கோலோச்சிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமே.!!

நாம் நம்முடைய பதிவுகளின் வாயிலாக ஆரம்பம் தொட்டே பலவிதமான பழமொழிகளை பார்த்துவந்துள்ளோம். அந்த வரிசையில் இப்பதிவிலும் பாரிஜாத மலர்களாக பூத்து மணம்பரப்பும் பலவித பழமொழிகளை கண்டு களிப்போம் வாருங்கள்.

பழமொழி பலவிதம்.

அதில் இது புதுவிதம்.

  • குணம் பெரிதேயன்றி குலம் பெரிதல்ல.
  • குணத்தை சொல். குலத்தை சொல்லாதே.
  • குணத்தை மாற்ற குரு இல்லை.
  • கொண்டும் கொடுத்தும் உண்டு வாழ்.
  • குணம் பாதி, கொண்ட நோவு பாதி.
  • குட்டிக்கரணம் போட்டாலும் மட்டி புத்தி போகாது.
  • குட்டிக்கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான்.
  • கெடுவது செய்தால் படுவது கருமம்.
  • கெடுவார்க்கு கெடுமதி பிடரியில்.
  • கேட்பார் சொல்லைக் கேட்டு கெட்டு போகாதே.
  • கையழுத்தமுள்ளவன் (பணத்தை செலவிட தயங்குபவன்) கரையேற மாட்டான்.
  • கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
  • குடி மதம் அடிபடத் தீரும்.
  • குடியனும் வெறியனும் அடிபடாமல் குணப்பட மாட்டார்கள்.
  • கை பிடித்து இழுத்தும் அறியாதவன் கை சைகையை அறிவானா?
  • கொட்டிக்கிழங்கும் ஒரு முட்டுக்கு உதவும்.
  • கொட்டும் பறை தட்டம் அறியாது.
  • கொட்டோடு குழலோடு வந்தவன் எட்டோடு இழவோடு போனான்.
  • கொடிக்கம்பத்தை பயற்றங்காய் போல் தின்றவருக்கு கோபுரம் கொழுக்கட்டை போல்தான் தோன்றும்.
  • குடிக்க கஞ்சி இல்லை கொப்புரானுக்கு கொப்பளிக்க பன்னீர் கேட்குதாம்.
  • கொண்ட இடத்தில் கொடுத்தாலும் கண்ட இடத்தில் கொடுக்காதே.
  • கொண்ட கொண்ட கோலம் எல்லாம் குந்தி பெற்ற மக்களுக்கே.
  • குடிகாரன் வீட்டில் விடிய விடிய சண்டை.. விடிந்து பார்த்தால் உடைந்து கிடக்குமாம் மண்டை.
  • கொண்டவள் அடிக்கக் கொழுந்தன்மேல் விழுந்தாளாம்.
  • கொண்டவனுக்கு இல்லாத வெட்கம் கண்டவனுக்கு உண்டா?
  • கொண்டவனும் கொடுத்தவனும் ஒன்றாய் போய்விடுவார்கள், கொட்டு மேளக்ககாரனுக்குதான் கோணக் கோண இழுக்கும்.
  • கொண்டவனை விட்டுக் கண்டவனிடம் போனால் கண்டவன் பெண்டாட்டிக்கு கால்பிடிக்க வேண்டும்.

  • குட்டிச் சுவரில் முட்டிக்கொள்ள வெள்ளெழுத்தா? தலைஎழுத்தா?
  • குட்டி வேதாந்தி குடியை கெடுப்பான்.
  • குடல் ஏற்றத்துக்கு கோடி வைத்தியம். ஆனால் ஏறின குடல் இறங்கத்தான் வழியில்லை.
  • குடி இருந்து அறி. வழி நடந்து அறி.
  • குடி இருந்து பார். கூட்டுப் பயிர் இட்டுப்பார்.
  • கொண்டவன் உறவு நல்லுறவானால் மண்டலம் எல்லாம் மகிழ்வுடன் ஆளலாம்.
  • கொண்டவன் உறுதியாக இருந்தால் கோபுரம் ஏறியும் சண்டை போடலாம்.
  • கொண்டு வந்த அகமுடையான் குளித்து வருவதற்குள்ளே நடுக்கிழித்து மூட்டினாளாம் முழுச்சமர்த்தி.
  • குடி இருப்பது குச்சு வீடு, கனவில் வருவதெல்லாம் மச்சு மாளிகை.
  • குடி (குடித்தனம்) உடையானே முடி உடையான்.

kallacharayam kudithal 10 lakhs

  • குடித்த மருந்து குடித்தாற்போல எடுத்தால் வைத்தியன் வாயிலே மண்ணுதான் மிஞ்சும்.
  • குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கும்.
  • கொடுப்பவனை தடுப்பவன் உடுப்பதையும் இழப்பான்.
  • கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.
  • கூண்டிலே குறுணி நெல் இருந்தால் போதும் மூலையிலே முக்குருணி தெய்வம் வந்து கூத்தாடி நிற்கும்.
  • கூத்தாடிக்கு கீழே கண், கூலிக்காரனுக்கு மேலே கண்.
  • கூத்தாடிக்கு முறையும் இல்லை. கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை.
  • கொம்பால் உழுது கொண்டியால் பரம்படி.
  • கொம்பில் ஒரு நெல் விளைந்தாலும் சம்பாவுக்கு இணை ஆகாது.
  • கெடுக்க நினைக்கின் அடுக்கக் கேடுறும்.
  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
  • கூத்தாடி சினேகம் குடியை கெடுக்கும்.
  • கூத்துக்கு ஏற்ற கோமாளி போல.
  • கூந்தலும் குடலும் கொண்டது கொள்கை.
  • கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?
  • கூப்பிடப்போன தாதி மாப்பிளையை கைக்கொண்டாளாம்.
  • கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை, மட்டித்தனத்துக்கு நயம் இல்லை.
  •  கெட்டு ஓடினாலும் உலகில் உன் பெயரை நட்டு ஓடு.
  • கையது சிந்தினால் அள்ளலாம், வாயது சிந்தினால் அள்ள முடியாது.
  • கூரை இட்ட நாள்முதல் தாரையிட்டு தானே அழுகிறான்.
  • கூலிக்கு அறுத்தாலும் குறுணிக்கு அறுக்கலாம். வீணனுக்கு அறுத்து வீணாகி நிற்கின்றேன்.
  • கூலிக்கு நெல் குத்தலாம். அதற்காக கூலிக்கு பல்லும் குத்தவா முடியும்?
  • கூழ் குடிக்காத மொட்ட.. கேழ்வரகு எதற்கு நட்ட?
  • கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெறவேண்டும்.
  • புதை குழியில் விழுந்தவனும் கெட்ட மார்க்கத்தில் இருப்பவனும் பிறரையும் தன்னிடமே இழுப்பான்.
  • கெட்டவன் வாழ்ந்தால் கிளை கிளையாய் தளிர்ப்பான். வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.
  • கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
  • கெட்டுப்போகிற காலம் வந்தால் சொட்டு புத்தி தேடுவானாம்.
  • குடியும் கெட்டு குடிக்கிற ஓடும் கெட்டது.
  • குடு குடு என்று ஓடி முடிவில் குடுமியைத்தான் சிரைத்தானாம்.
  • குடுமிக்கு ஏற்ற கொண்டை.

  • குடுமித் தலையின் வீறாப்பை கொண்டைத் தலையா பார்த்தாயா.!
  • குண்டர்கள் கூடினால் சண்டை.
  • கொண்டை கட்டி மச்சானுக்கு கொண்டுவாடி பூமாலை.
  • குட்டிக்கரணம் போட்டாலும் கட்டுசோற்றுக்கு வழியில்லை.
  • குண்டி எத்தனை கோணல் கோணினாலும் தலைச்சுமை வீட்டில் போய்ச் சேர்ந்தால் சரி.
  • குண்டித் துணியும் குடிக்க கூழும் இன்றி கண்டிக்கு சென்று கவலை கொண்டானாம்.
  • குடிப்பெண் வயிறு எரிய, கொடிச் சீலையோ நின்றெரிய.
  • கொண்டைக்கு பூச்சூடி சண்டைக்கு நிற்கிறாளே வித்தார பாதகத்தி.
  • குடியும் சூதும் குடியைக் கெடுக்கும்.
vidiyal dmk

  • குணச்சிறப்பைக் குலத்தில் பார்.
  • குணத்திற்கு அழுவதா? இல்லை பிணத்திற்கு அழுவதா?
  • குணம் கெட்ட இடத்திலே குந்திக்கொண்டும் இராதே.
  • குணம் கெட்ட மாப்பிள்ளைக்கு மணம் கெட்ட பணியாரம்.
  • கொடிக்காலில் மின்னினால் விடிகாலை மழை.
  • குத்தி கெட்டது பல். குடைந்து கெட்டது காது.
  • குத்தி வடித்தாலும் சம்பா சம்பாதான். குப்பையிலே போட்டாலும் தங்கம் தங்கம்தான்.
  • குத்தின அரிசி கொழியலோடு இருக்க, இந்தாடா மாமா என் தாலி என்றாளாம்.
  • குத்துக்கு முன்னே குடுமியை பிடி.
  • குத்து பட்டவனும் தூங்க மாட்டான். குறை வயிற்றுக்காரனும் தூங்க மாட்டான்.
  • வீணருக்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
  • குப்புற விழுந்து கூப்பாடு போட்டாலும் குருக்களுக்கு மோட்சம் கிடைப்பது அரிதே.
  • குப்பையில்லா வேளாண்மை சப்பை.
  • குறிஞ்சி அழிந்து நெருஞ்சி ஆயிற்று.
  • குறிப்பு அறிந்து கொடுக்கும் கொடையே கொடை.
  • குன்று ஏறி குமரனைப் பார்க்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பார்த்தானாம்.
  • குமரி தனியாக போனாலும் கொட்டாவி தனியாக போகாது.
  • குரல் இல்லாதவனுக்கு விரல் பேசும்.
  • கூர்மையானவனே நேர்மையானவன்.
  • கூரிய சொல்லான் ஆரினும் வல்லான்.
  • கூரியன் ஆயினும் வீரியம் பேசேல்.
  • குருட்டு கண்ணுக்கு குறுணி மை எதற்கு?
  • குருடனுக்கு தொட்டால் கோபம், முடவனுக்கு விட்டால் கோபம்.
  • குரு வாய் மொழியே திருவாய் மொழி.
  • குருவுக்கு துரோகம் செய்தாலும் குடலுக்கு துரோகம் செய்யக் கூடாது.
  • குல்லாய்கார நவாபு, செல்லாது உன் ஜவாபு.
  • கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை. கூத்தாடிக்கு குறையும் இல்லை.
  • குழந்தையின் முகமும் வாடக் கூடாது. குலுக்கையின் நெல்லும் குறையக்கூடாது.
  • குற்றத் தண்டனையிலும் சுற்றத் தண்டனை நல்லது.
  • குற்றத்தைத் தள்ளிக் குணத்தைப் பாராட்டு.
  • குற்றம் அடைந்த கீர்த்தி குணம் கொள்வது அரிது.
  • குற்றம் உள்ள நெஞ்சும், குறும்பி உள்ள காதும் தினவெடுக்கத்தான் செய்யும்..
  • குற்றாலத்தில் குளித்தவனும் செத்தான். குடைவரையில் தூங்கினவனும் செத்தான்.
  • குறட்டுக் கத்தி ஆண் பிள்ளையை விடாது, கொளுத்து கூடை பெண் பிள்ளையை விடாது.
  • குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீரா.
  • கூலிக்கு பாவம் குறுக்கே வந்தது.
  • குறுணிக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு பதக்கு நெல்லுக்கு ஆசைப்பட்டால்?
  • குறையறக் கற்றவன் கோடியில் ஒருவன்.
  • குறை உள்ளார்க்கு உண்டு குறுகுதல், கறை உள்ளார்க்கு உண்டு கருகுதல்.
  • குறைய சொல்லி நிறைய அள.
  • குறையை நினைத்து கோவிலுக்கு போனாளாம்... அங்கு குறைவில்லா குறைவந்து கொண்டையிலே ஏறிக்கிச்சாம்.
  • குன்றிமணி இல்லா தட்டான் குசுவுக்கே எல்லாம் விட்டான்.
  • துரும்பு கிள்ளிப்போட சீவனில்லை.. பெயர் என்னவோ "பனைபிடுங்கி".
  • கூடி வருகிற காலம் வந்தால் குடுமிகூட நட்டமாய் நிக்குமாம்.
  • கூடும் காலம் வந்தால் தேடும் பொருள் நடு மடியிலே.
  • கூடைக்கல்லும் பிள்ளையாரானால் எந்தக்கல்லைதான் கும்பிடுவது?

💢💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. வழக்கம் போல ஓரிரண்டு பழமொழிகள் தவிர - குறிப்பாகக் கொண்டவன் சப்போர்ட் பற்றிய இரண்டும் ரொம்ப யதார்த்தம் - மற்றவை புதிது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி!! இன்னும் பல பழமொழிகள் புதிதாக வர இருக்கின்றன. நன்றி!

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.