"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நல்மொழி தந்த பொன்மொழிகள் - The Best Proverbs In Best Language.

நல்மொழி தந்த பொன்மொழிகள் - The Best Proverbs In Best Language.

The Best Proverbs In Best Language.

நாம் தொடர்ந்து சில பதிவுகளில் வாழ்வில் மறந்துபோன மற்றும் வழக்கில் மறைந்துபோன சான்றோர்களின் நீதியுரைகளான பொன்மொழிகள் பலவற்றையும் வெளிக்கொணர்ந்து வருகின்றோம்.


"மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது" என்னும் சொற்றொடருக்கு ஏற்ப இப்பழமொழிகள் ஓரிரண்டு வாக்கியங்களில் மட்டுமே அமையப்பெற்றாலும் சொல்ல வந்த கருத்துகளை நச்சென்று உணர்த்துவதால் இது "எழுதா இலக்கியம்" என்றும் அழைக்கப்படுகின்றன.

கடினப்பட்டு கலங்கி நிற்கும் மனதை இரண்டே வாக்கியங்களில் மகிழம்பூவாய் மலரச் செய்பவையான பழமொழிகள் சிலவற்றை இப்பதிவிலும் பார்க்கலாம் வாருங்கள்.


நல்மொழி தந்த பொன்மொழிகள்.

  • கோபுரமும் எட்டுமாம் குபேரனுக்கு.
  • சடையை பிடித்தால் சந்யாசி தன்னோடு வருவான்.
  • பொன் களங்கப்பட்டால் புடம் போடலாம். பெண் களங்கப்பட்டால்?
  • பொன்னாங்கண்ணிக்கு புளி இட்டு ஆக்கினால் அண்ணாமலையாரும் அண்ணாந்து நிற்பார்.
  • கோபமும் தாபமும் கூடிக் கெடுக்கும். குடியையும் கெடுக்கும்.
  • பேசாது இருந்தால் பிழையொன்றும் இல்லை.
  • கோவிந்தா என்றால் கோடி ஸ்நானம் என்பதற்காக குளிக்காமல் இருப்பதா?
  • கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம்வெட்ட போகிறான்?
  • கோரை குடியைக் கெடுக்கும்.
  • பொருந்திய ஒழுக்கம், திருந்திய செல்வம்.
  • பொல்லாத காலம் சொல்லாமலே வரும்.
  • பொல்லாத மனம் புத்தி கேளாது.
  • கோள் சொல்லி குடும்பத்தைக் கெடுத்தாலும் குடிவரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.
  • கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • சகத்தை கெடுத்து சுகத்தை வாங்குகிறார்.
  • சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல.
  • சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்.
  • பொந்தில் அகப்பட்ட மந்தியை போல.
  • பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்கும்.
  • பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது.
  • சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு?
  • சந்நியாசியின் பயணமெல்லாம் திண்ணை விட்டு திண்ணை குதிப்பதுதான்.
  • சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்கு போனால் ஏச்சும் இல்லை, பேச்சும் இல்லை.
  • சொட்டைக் கண்ணுக்கு இரட்டை தீவட்டி.
  • பொடிச் சூட்டுக்கு ஆற்ற மாட்டாமல் படிநெருப்பில் குதித்தானாம்.
  • பொடிப்பயல் ஆனாலும் நொடிப்பொழுதில் செய்வான்.
  • சமணன் கையில் அகப்பட்ட சீலைப்பேனைக் கொல்லவும் மாட்டான், விடவும் மாட்டான்.
  • சர்க்கரை தொண்டை மட்டும், சவ்வாது கண்ட மட்டும்.
  • சருகு அரிக்க நேரம் இருக்கு, ஆனால் குளிர் காயத்தான் நேரமில்லை.
  • சனத்தோடு சனம் சேரும், சந்தனத்தொடு கர்ப்பூரம் சேரும்.
  • சனப்பலம் இருந்தால் மனப்பலமும் கூடும்.
  • சாத்திரத்துக்கு திருமந்திரம், தோத்திரத்துக்கு திருவாசகம்.
  • சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தை கண்டு சுகம் பெறுவது எக்காலம்?
  • சாது பெண்ணுக்கு ஒரு சூதுப்பிள்ளை வந்தது போல.
  • சித்திரத்தை குத்தி அப்புறத்தே வைப்பான்.
  • சித்திரபுத்திரனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?
  • சித்திரை அப்பன் தெருவிலே, நித்திரை அப்பன் தின்னையிலே.
  • சித்திரை எள்ளை சிதறி விதை.
  • சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனும் இல்லை. ஐப்பசி மாதத்தில் பிறந்த அதிர்ஷ்டக்காரனும் இல்லை.
  • சிரிக்கத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவனே.
  • சிரிப்பாய் சிரித்து தெருவிலே நிற்கிறது.
  • சிரிப்பு குடியைக் கெடுக்கும், சீதளம் உடலைக் கெடுக்கும்.
  • சிறுக சிறுக குத்துகிறது எல்லாம் சித்திரத்துக்கு அழகு.
  • பெண்டுகளாலேயே பெருமாள் குடி கெட்டது.
  • பெண்ணை வெறுத்தல் பேரின்பம்.
  • சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.
  • சிற்றூண் என்றும் இனிது.
  • சிறியார் இட்ட வேளாண்மை அறுவடையும் ஆகா, களம் வந்தும் சேரா.
  • சிறு பிள்ளை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் விட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
  • சீமையிலே பாதி ஸ்ரீவத்ஸ கோத்திரம்.
  • சீர் அற்ற பானைக்கு செம்பொன் பூச்சு எதற்கு?
  • ஸ்ரீரங்கத்து நடை அழகு. காஞ்சீபுரம் குடை அழகு.
  • சீரணி கெட்டால் கோரணி.
  • சேலைமேல் சேலைகட்டி தேவரம்பை ஆடினாலும் ஓலை மேல் எழுத்தாணி ஊன்றும் உயர்பெண் ஆவாரோ?
  • சேலையை விற்று சீலாவை கொள். ஓலையை விற்று ஒராவைக் கொள்.
  • சீவனும் கெட்டது. வியாதியும் பொட்டென்று நின்றது.
  • சீறி வரும் வடவாக்கினியை சிறு குட்டை நீர் அவிக்குமா?
  • சுக்கிர திசை பிட்டத்திலே அடிக்கிறது.
  • சுக்கிர திசை வந்தால் சுமந்து வந்து கொடுக்கும்.
  • சுக்கு கண்ட இடத்திலே பிள்ளை பெற்றாளாம், செக்கு கண்ட இடத்திலே தலை விரித்தாளாம்.
  • சுக்கு கண்ட இடத்திலே பிள்ளையை பெற்று அதற்கு சூரிய நாராயணன் என்று பெயரும் வைத்தானாம்.
  • சுகத்தை தள்ளினாலும் துக்கத்தை தள்ளலாகாது.
  • குணமில்லா சுந்தரி வாழும் வீடு சுடுகாடு.
  • பைத்தியக்காரன் கிழித்த துணி கோவணத்துக்கும் ஆகாது.
  • குணம் மாறினால் சுண்ணாம்பும் கிடைக்காது.
  • சுட்ட சட்டி தொடாதவளா உடன் கட்டை ஏறப்போகிறாள்?
  • சுடலை ஞானம் திரும்பி வரும் மட்டும்.
  • சுடு நெருப்பை மடியில் முடியலாமா?
  • சுண்டினாலும் பாற்சுவை சுண்டுமோ?
  • சுத்தம் உள்ள இடத்திலே சுகமும் உண்டு.
  • சுதேசம் விட்டு பரதேசம் போகாதே.
  • பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை.
  • பெண் சிரித்தால் போயிற்று. புகையிலை விரித்தால் போயிற்று.
  • பெண்டாட்டிக்கு ஆற்றமாட்டாதவன் சட்டி பானையை உடைத்தானாம்.
  • பைந்தமிழ் புலவனே பாட்டுக்கு ஏற்றவன்.
  • பையச் சென்றால் வையகம் தாங்கும்.
  • பையத் தின்றால் பனையையும் தின்னலாம்.
  • பெண்டாட்டி குதிர்போல, அகமுடையான் கதிர் போல.
  • பெண்டாட்டி இல்லாதவன் பிணத்தை கட்டி அழுத கதை.
  • பெண்ணை போற்றி வளர். ஆணை அடக்கி வளர்.
  • பெய்த மழைக்கும், காய்ந்த வெயிலுக்கும் சரி.
  • பெய்தால் பெய்யும் புரட்டாசி, பெய்யாவிட்டால் பெய்யும் ஐப்பசி.
  • பெரியோர் எல்லோரும் பெரியோர் அல்ல.
  • பெருக்கு ஆற்றில் நீந்தத்தெரியாதவனை வெள்ளம் கொண்டோடி போகும்.
  • பெருங்கயிறு முடி அழுந்தாது.
  • பெரு வயிற்றை நம்பி சீமந்தம் வைத்தாற்போல.
  • பெற்ற தாய் ஆனாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்.
  • பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெண்சாதி மடியைப் பார்ப்பாள்.
  • பேச்சை கொடுத்து ஏச்சை வாங்குவதா?
  • பேசத் தெரியாதவன் பையில் உள்ள படிப்பும், வீசத் தெரியாதவன் கையில் உள்ள வாளும் இருந்தும் இல்லாதது போன்றதே.
  • பேடி கையில் ஆயுதம் பிரகாசிக்குமா?
  • பேடி கையில் ரம்பை அகப்பட்டதுபோல.
  • பேத்திக்கு இட்டாலும் கூத்திக்கு இடாதே.
  • பேதை ஆனாலும் தாய் தாய்தான், நீர் ஆனாலும் மோர் மோர்தான்.
  • பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிடுங்குபட்டுதான் சாக வேண்டும்.
  • பேயும்  அறியும் பெண்சாதி பிள்ளையை.
  • பெயர் இல்லாத சந்நிதியும் பாழ், பிள்ளை இல்லாத பெருஞ்செல்வமும் பாழ்.
  • அடிமேல் அடிவைக்க சீவன் இல்லை, பெயர் மட்டும் தாண்டவராயனாம்.
  • பேராசைக்காரனுக்கு மிஞ்சுவது எல்லாமே தீராத நஷ்டம்தான்.
  • பேராசை தரித்திரம், தீராத உபத்திரவம்.
  • பேராசை கொண்டு பெருந்தொகையை இழந்தவன் போல.
  • பேரின்பம் வேண்டின் சின்றின்பம் துறக்க.
  • பையில் இருந்தால்தானே கையில் வரும்.
  • பைசா நாஸ்தி, படபடப்பு ஜாஸ்தி.
  • சின்ன கண்ணி அகமுடையான் செவ்வாய்கிழமை செத்தானாம். வீடு வாசல் மெழுகி வைத்து வெள்ளிக்கிழமை அழுதாளாம்.
  • சினத்தால் அறுத்த மூக்கு சிரித்தால் வருமா?
  • சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.
  • பைத்தியம் தெளிந்து பண்டாரம் ஆன கதை.
  • பைத்தியம் முதலில் பாயைத்தான் பிராண்டும்.
  • சிந்தாது இருந்தால் மங்காது இருக்கலாம்.
  • சிந்தை நொந்தவர்களுக்கு கந்தனே துணை.
  • பையப் பையப் பாயும் தண்ணீர்... கல்லும் கசியப் பாயும்.
  • பொக்கை வாய்க்கு ஏற்ற பொரி உருண்டை.
  • பொங்கல் வந்தால் தெரியும், பிறந்த இடத்து பெருமை.
  • பொங்குகிற பதநீருக்கு பதம் போட்டது போல.
  • பொங்கு சனி செல்வத்தையும் பொங்கச் செய்யும்.
  • பொங்கும் காலம் புளி. மங்கும் காலம் மாங்காய்.
  • பொங்கும் காலத்தே புளி நயக்கும். மங்கும் காலத்தே மாங்காய் நயக்கும்.
  • சாலோடு தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீரே தாகம் தீர்க்கும்.
  • சித்தி பெறாத மருந்தும் மருந்தோ? பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?
  • பொதிக்கு அளக்கிறதுக்கு முன்னே சத்திரத்துக்கு அளப்பதா?
  • பொதியை வைத்துவிட்டு பிச்சைக்கு போனானாம். அதையும் வைத்துவிட்டு செத்து கிடந்தானாம்.
  • பொதுவிலே அகமுடையான் புழுத்து செத்தானாம்.
  • சாகத் திரிகிறான் சண்டாளன், சாப்பிட்டுத் திரிகிறான் பெண்டாளன்.
  • சாகும்வரை சங்கடம் என்றால் வாழ்வதுதான் எப்போது?
  • சாடி சட்டி சூளையிலே கோடை இடி விழுந்தாற் போலே.
  • பொய் நின்று மெய்யே வெல்லும்.
  • பொரித்து கொட்டினாலும் அசைத்துக் கொட்டாதே.
  • சர்க்கரை பொங்கலுக்கு பத்தியம் இல்லை, சாண்வயிறும் நிரம்பிவிட்டால் வயிற்றுவலி தீர வைத்தியமும் இல்லை.
  • சரடு ஏறுவது கந்தைக்கு லாபம்.
  • பொறுக்கியிலும் பொறுக்கி பொன்னம்பலப் பொறுக்கி.
  • பொறுக்கி பயலுடன் சிறுக்கிக்கு என்ன பேச்சு?
  • பொறுத்தல் ஆரம்பத்தில் கசப்பாயினும் பொறுக்க பொறுக்க தித்திப்பாய் விளையும்.
  • மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டாசியாம்.
  • பொன்னாங்கண்ணிக்கு புளி இட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பொறுத்தார் பூமி ஆழ்வார், பொங்கினார் காடு ஆழ்வார்.
  • பொன் ஆபரணத்தைக் காட்டிலும் புகழ் ஆபரணமே பெரியது.
💟💟💟💟💟💟

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

2 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.