உத்தனாசனம்.
Uttanasana.
சித்தர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒன்று "யோகக்கலை". உடலை வளப்படுத்துவதற்கு பல்வேறு பயிற்சிகள் உள்ளது என்றாலும் உடலையும் மனதையும் ஒருசேர வளப்படுத்தும் திறன் இந்த யோகக்கலைக்கு மட்டுமே உண்டு.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதுபோல் உடல் என்ற ஒன்று இருந்தால்தான் வாழ்க்கை என்னும் ஓவியத்தை அழகாக தீட்டிப்பார்க்க முடியும்.
வாழ்வியல் ஓவியத்தை தீட்டிப்பார்க்க உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.
உடலுக்கு உறுதியையும், ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த பலவகையான யோக ஆசன பயிற்சிகள் இருந்தாலும் அவைகளில் நாம் இப்போது பார்க்கப்போகும் "உத்தனாசனம்" மிக முக்கியமானது.
இந்த பயிற்சியானது முன்பு பார்த்த பாத ஹஸ்த ஆசனத்தை போன்றதுதான் என்றாலும் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது மட்டுமல்லாமல் கொஞ்சம் கடினமானதும் கூட.
ஏனெனில் பாத ஹஸ்த ஆசனத்தில் உடலை முன்னோக்கி வளைத்து கை விரல்களால் கால் பெருவிரலை அல்லது தரையை தொட்டால் போதுமானது. ஆனால் இந்த உத்தனாசனத்தில் உடலை இன்னும் அதிகமாக முன்னோக்கி மடித்து உள்ளங்கைகளை தரையில் ஊன்றவேண்டும். எனவே பாத ஹஸ்த ஆசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றபின்பு இந்த உத்தனாசனத்தை பயிற்சி செய்வது சிறப்பு.
சரி, இனி இந்த உத்தனாசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.
செய்முறை.
இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு விரிப்பின்மீது நேராக நிமிர்ந்து நிற்கவும்.
இரண்டு கைகளையும் காதுகளை ஒட்டினாற்போல மேல்நோக்கி நேராக உயர்த்தவும். மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே இடுப்பை வளைத்து முன்னோக்கி குனிய வேண்டும்.
அவ்வாறு குனியும்போது இடுப்பை மட்டுமே முன்னோக்கி வளைக்க வேண்டுமேயொழிய கால்களை வளைக்காமல் விரைப்பாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு உள்ளங்கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும்.
மூச்சை இயல்பாக விடலாம். அல்லது மூச்சை நன்றாக இழுத்து அடக்கிவைத்தும் கொள்ளலாம்.
15 முதல் 20 வினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு அதன்பின் மூச்சை வெளிவிட்டபடியே மெதுவாக நிமிரவும்.
பத்து அல்லது 20 வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போலவே செய்யவும்.
இவ்வாறு திரும்ப திரும்ப 7 முதல் 8 தடவை இந்த பயிற்சியை செய்யலாம்.
பலன்கள்.
இப்பயிற்சியால் இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால், முதுகு, தோள்பட்டை, கைகள் என அனைத்து உறுப்புகளும் வலிமை பெறுகின்றன.
வெளி உறுப்புகள் மட்டுமல்லாது வயிற்றிலுள்ள உள்ளுறுப்புகளும் இப்பயிற்சியால் நன்கு அழுத்தப்பட்டு பலம் பெறுகின்றன. குறிப்பாக சிறுகுடல், பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல் முதலியன வலிமை பெறுகின்றன.
இப்பயிற்சியால் மலச்சிக்கல் நீக்குவதோடு ஜீரணசக்தியும் மேம்படுகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளையும் சரிசெய்கின்றன.
எச்சரிக்கை.
கழுத்து, இடுப்பு, முதுகில் பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
இதயநோய் உள்ளவர்களும் அதிக அளவில் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் இப்பயிற்சியை செய்யும்போது மிக கவனமாக பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.
பாதஹஸ்தாசனம் என்னும் பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றபின் இந்த உத்தாசனம் பயிற்சியில் ஈடுபட்டால் பழகுவதற்கு எளிதாக இருக்கும். எனவே பாத ஹஸ்தானத்தில் நன்கு தேர்ச்சி பெற்றபின் இதனை பயில்வது சிறப்பு.
"பாதஹஸ்தானம்" பயிற்சி செய்யும் முறையைப்பற்றி அறிய கீழேயுள்ள சுட்டியை சுட்டுங்க...
>>பாத ஹஸ்தாசனம் - Patha Hastasana - Hand to Foot Pose.<<
💕💕💕💕💕💕
4 கருத்துகள்
ஆத்தாடி இது மிகவும் சிரமம் தான்...
பதிலளிநீக்குஆமாம்... உண்மையில் சிரமம்தான்...
நீக்குSUPER....
பதிலளிநீக்குநன்றி !!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.