பாத ஹஸ்தாசனம்.
யோகம் என்ற பதத்திற்கு ''ஒருமுகப்படுத்துதல்'' மற்றும் ''இணங்கியிருத்தல்'' என்று பொருள்.
அலைபாயாமல் அமைதியாக இருக்கும் மனதில்தான் சாந்தி நிலவும்.
சாந்தியும், சமாதானமும் நிலவும் மனதில்தான் ஆரோக்கியமும், ஆனந்தமும் நிலைகொண்டு இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டே சான்றோர்கள் மனதையும், உடலையும் புலன்களின்பால் அலைபாயாமல் ஒருமுகப்படுத்தி ஒரே நிலையில் சிறிதுநேரம் அமர்ந்திருந்து பயிற்சி செய்யும் முறையை நமக்கு கொடையாக தந்துள்ளனர். அப்பயிற்சியே "யோகாசனம்" எனப்படுகிறது.
நாம் உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியம் தரும் பலவித யோக பயிற்சிகளை தொடர்ந்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று "பாத ஹஸ்தாசனம்" என்னும் பயிற்சியைப்பற்றி பார்க்க இருக்கிறோம்.
"பாதம் ஹஸ்தம் ஆசனம்" என்பதையே "பாத ஹஸ்தாசனம்" என்கிறோம்.
இதில் "பாதம்" என்பது காலின் பாதங்களை குறிப்பது. "ஹஸ்தம்" என்பது உள்ளங்கைகளை குறிப்பது.
உடலை வளைத்து கைகளால் கால்பாதங்களை தொடுவதால் இதற்கு "பாத ஹஸ்தாசனம்" என்று பெயர்.
இனி, இதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.
Patha Hastasana.
பயிற்சி முறை :- இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக்கொண்டு நேராக நிற்கவும்.
இரண்டு கைகளையும் காதுகளை ஒட்டினாற்போல மேல்நோக்கி நேராக உயர்த்தவும்.
மூச்சை ஒருதடவை நன்றாக உள்ளுக்கிழுத்து பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே மெதுவாக முன்பக்கமாக குனிந்து கைகளால் காலின் பெருவிரல்களை தொடவும். அல்லது தரையை தொடவும்.
அவ்வாறு தொடும்போது தலை முழங்காலை தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவும். உடலில் இடுப்பு மட்டுமே வளைய வேண்டுமேயொழிய முழங்கால்கள் மடங்குதல் கூடாது.
எனவே கால்களை வளைக்காமல் விரைப்பாக வைத்துக்கொள்ளவும்.
இதே வகையில் "உத்தனாசனம்" என்று மற்றொரு பயிற்சி முறையும் உள்ளது. அதுவும் பார்ப்பதற்கு இதேபோன்று தோற்றமளித்தாலும் இதைவிட கொஞ்சம் கடினமான பயிற்சி.
ஏனெனில், பாதஹஸ்த ஆசனத்திலுள்ளதுபோல கைகளால் பாதத்தை தொடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் இன்னும் நன்கு உடலை வளைத்து உள்ளங்கைகளை தரையில் ஊன்ற வேண்டும். அந்த பயிற்சியையும் அடுத்து பார்க்க இருக்கிறோம்.
சரி,.. இப்போது இந்த பாதஹஸ்த முறையில் பெருவிரலை தொட்டபடி 10 வினாடிகள் இருக்கவும். மூச்சை இயல்பாக விடலாம்.
பின்னர் இரண்டு கைகளையும் காதுகளை ஒட்டியபடியே வைத்துக்கொண்டு மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே மெதுவாக நிமிர்த்து நிற்கவும். பின் மூச்சை வெளிவிட்டபடியே கைகளை கீழே இறக்கவும்.
பத்து அல்லது 20 வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போலவே செய்யவும்.
இவ்வாறு திரும்ப திரும்ப 7 முதல் 8 தடவை இந்த பயிற்சியை செய்யவும்.
பலன்கள்.
இப்பயிற்சியினால் இடுப்பும், வயிற்றின் உள்ளுறுப்புகளும் நன்கு பலமடைகின்றன. கால்களும் நன்கு பலம் பெறுகின்றன. மூளைக்கு புதிய இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்படைகின்றன.
இப்பயிற்சியால் அதிக அளவு இடுப்புச்சதைகள் குறைவதோடு அதிகப்படியான தொந்தியும் மறைகின்றன.
தொடர் பயிற்சியால் வயிற்றின் உள்ளுறுப்புகள் அழுத்தப்பட்டு பலம் பெறுகின்றன. குறிப்பாக கணையம், பித்தப்பை, கல்லீரல் வலிமை பெறுகின்றன.
அடிவயிறு, குடல்களுக்கு நல்ல இரத்தம் பாய்ந்து ஜீரண சக்தி அதிகரிக்கிறது.
மேலும் இப்பயிற்சியால் வாய்வு, வயிற்றுவலி, நரம்புக்கோளாறுகள், நீரழிவு முதலிய நோய்கள் நீங்குகின்றன.
எச்சரிக்கை.
இதயநோய் மற்றும் அதிக அளவில் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சியை செய்யும்போது மிக கவனமாக இருக்கவேண்டியது அவசியம். கழுத்து, இடுப்பு, முதுகில் பிரச்னை உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
💖💖💖💖💖💖💖
4 கருத்துகள்
சிறு வயதில் எளிதாக இருந்தது...
பதிலளிநீக்குஆம்.. சிறு வயதில் எளிதாக இருப்பது பின்னாளில் எளிதாக இருப்பதில்லை... எனவேதான் இளமையில் கல் என்று சொல்லியுள்ளார்கள் சான்றோர்கள்... தங்கள் கருத்துகளுக்கு நன்றி தனபாலன் சார் !!..
நீக்குஇப்போதும் தினமும் செய்கிறேன். அதுவும் சூரியநமஸ்காரம் செய்யறப்ப இரண்டாவது ஸ்டெப் ஆச்சே...தலை குனிந்து முட்டியைத் தொடும். கழுத்துப் பிரச்சனை ஸ்பாண்டிலைட்டிஸ் உண்டு. கழுத்திற்கான பயிற்சி முடித்து அதன் பின் சிறிது ஓய்வு கொடுத்து மீண்டும் தொடர்வேன். டச் வுட் இதுவரை பிரச்சினை இல்லை...
பதிலளிநீக்குகீதா
நன்றி !! சகோதரி... நானும் 15 வருடங்களுக்கும் மேலாக யோகா செய்த அனுபவம் உண்டு. ஆனால் தற்போது சிலவருடங்களாக வேலைப்பளு காரணமாக செய்ய முடியவில்லை. என் கடந்தகால யோகாசன பயிற்சியில் கிடைத்த அனுபவங்களையே இங்கு பதிவாக எழுதிவருகிறேன்.. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.