பாத பத்மாசனம்.
Bound Lotus Posture.
யோகாசனம் வரிசையில் இன்று நாம் உடலுக்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் "பாத பத்மாசனம்" அல்லது "பத்த பத்மாசனம்" என்னும் பயிற்சியைப்பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
பாத பத்மாசனம் பயிற்சியை திறன்பட செய்யவேண்டுமெனில் முதலில் பத்மாசன பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
ஏனெனில், பாதபத்மாசன பயிற்சிக்கு அடிப்படையாக அமைவது பத்மாசனமே...
"பத்மாசனம்" பயிற்சியைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி செய்வதற்கு அமரக்கூடிய அற்புதமான ஆசனம்தான் பத்மாசனம். இது உடலுக்கு உறுதியும் மனதிற்கு அமைதியும் தரவல்லது.
நாம் இப்பொழுது அதே பத்மாசன பிரிவை சேர்ந்த... அதிலிருந்து சிறிது மாறுபட்ட பயிற்சியை பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்...
பாத பத்மாசனம் - பத்த பத்மாசனம்.
Baddha - Padmasana.
நாம் இப்போது பார்க்க இருக்கும் பயிற்சியின் பெயர் பாத பத்மாசனம். பெயருக்கேற்ப இதுவும் பத்மாசனம் போன்ற தோற்றத்தையே தருகிறது என்றாலும் அதிலிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளன.
இந்த ஆசனமும் பத்மாசனம் போன்றே பயிற்சி செய்ய வேண்டுமென்றாலும் பத்மாசனத்தில் இரு கைகளையும் இரு தொடைகளின்மீது "சின்முத்திரை" நிலையில் வைத்திருப்போம். ஆனால் இந்த பாத பத்மாசனத்தில் இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று இரு பாதங்களிலுள்ள பெருவிரல்களை பிடித்தபடி வைக்கவேண்டும்.
இதனை பயிற்சி செய்வதற்கு முன்னால் இந்த ஆசனத்திற்கான பெயர் காரணத்தை பார்ப்போம்...
''பத்மம்'' என்றால் தாமரையை குறிக்கும். ஆசனம் என்றால் இருக்கையை குறிக்கும்.
மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரு கால்களும் பார்ப்பதற்கு தாமரை பூவின் இதழை போன்ற வடிவத்தில் காட்சி தருவதாலும் இருகைகளும் இரு பாதங்களை பிடித்தநிலையில் இருப்பதாலும் இது "பாத பத்மாசனம்" என பெயர் பெற்றுள்ளது.
இதற்கு "பத்த பத்மாசனம்" என ஒரு பெயரும் உண்டு. "பத்த" என்றால் "கட்டப்பட்ட" என்று பொருள். இப்பயிற்சியில் ஈடுபடுபவர்களை பார்க்கும்போது கைகள் இரண்டும் பின்னால் கட்டி வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு தோற்றத்தை தருவதால் இது "பத்த பத்மாசனம்" எனவும் அழைக்கப்படுகிறது.
இதனை பயிற்சி செய்வது எப்படி என்பதனை இனி பார்ப்பபோம்...
செய்முறை.
ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி இடது தொடைமீது வைக்கவும்.
அதே போல் இடதுகாலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். இந்நிலையில் இரு கால்களின் குதிகால்களும் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்கவேண்டும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும்.
அதன்பின் இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று வலது கையால் இடதுகால் பெருவிரலையும், இடது கையால் வலதுகால் பெருவிரலையும் பிடித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் இதே நிலையில் முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். மூச்சை நன்கு இழுத்து அதே வேளையில் மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக விடவும்.
இந்நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு அதன்பின் கால்களை மாற்றிப்போட்டு பயிற்சி செய்யவேண்டும்.
அதாவது வலது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது இடது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். அதன்பின் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். முன்போல கைகளை பின்னால் கொண்டுசென்று பெருவிரலை பற்றிக்கொண்டு ஓரிரு நிமிடம் நிமிர்ந்து உட்காரவும். மூச்சை இயல்பாக விடவும்.
இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும்.
இது சொல்வதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் கடினம். பழக பழக எளிதாகும்.
பயன்கள்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றுவர முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். குதிகால் நரம்புகள் பலம் பெறும்.
மூட்டுவலிகள் நீங்கும். கால் மற்றும் முதுகு வலிகள் குணமாகும். வாதநோய், மூச்சுப்பிடிப்பு, சுவாசக்கோளாறுகள் நீங்கும்.
மார்புக்கூடு விரிவடையும். மலச்சிக்கல் நீங்கும். தொந்தி கரைவதோடு ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பையும் உண்டாகும்.
புஜம், தோள்பட்டை, முதுகு பலம் பெறுவதோடு அந்தந்த உறுப்புகளிலுள்ள வலிகளும் குணமாகும்.
முழங்கை, மணிக்கட்டு, மார்பு முதலியன நன்கு வலிமை பெறும்.
எனவே, இப்பயிற்சியை தொடர்ந்து பயின்றுவர நோயற்ற வளமான வாழ்வை பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை!!..
💙💙💙💙💙💙💙
2 கருத்துகள்
பார்க்க எளிதாக தான் உள்ளது...!
பதிலளிநீக்குஆமாம்... பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பது போல...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.