மணத்தக்காளி.
Black nightshade.
[PART - 1]
"குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி...
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி...
குக்கூ குக்கூ"
"என்ஜாயி எஞ்சாமி...
அது யாரு காலங்காத்தால "தாத்தா தாத்தா"ன்னு என்ன வச்சு பாட்டு பாடுறது...
நான்தான் தாத்தா...
அடடே... நம்ம சீனுக்குட்டியா... இன்னைக்கு என்ன ஒரே சந்தோஷமா இருக்கே... பாட்டெல்லாம் வேற பலமா இருக்கு...
ஆமாம் தாத்தா... உண்மையாக சொல்லப்போனா நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்... நீங்களே சொல்லுங்க தாத்தா... என்னோட குரல் குயில் குரல் மாதிரி இனிமையா இருக்கா?
என்ன தாயி திடீருன்னு இப்படியொரு கேள்விய இந்த தாத்தாகிட்ட கேட்டுப்புட்ட? வயசுக்காலத்துல இப்படியொரு இக்கட்டான கேள்வியை கேட்டு தாத்தாவை தர்மசங்கடமான நிலைமைக்கு அழாக்கலாமா?
சும்மா சொல்லுங்க தாத்தா... ஏன்னா நான் "நைட்ஷேட் பெர்ரி" சாப்பிடுறேன்... இதை சாப்பிட்டா நம்முடைய குரல் குயில் மாதிரி இனிமையாக ஆகிடுமாம்.. அதான் கேட்டேன்...
இன்னாது.. நைட்டுல "பொரி" சாப்பிடுறீயா?..
அய்யோ தாத்தா... அது பொரி இல்ல... பெர்ரி (berry). அதாவது தமிழில் மணத்தக்காளி கீரைன்னு சொல்லுகிறோமில்லையா அதன் பெயர்தான் ஆங்கிலத்தில் "பிளாக் நைட்ஷேட்". (Black nightshade) மணத்தக்காளியோட கருமையான அந்த சிறிய பழத்தோட பெயர்தான் "பெர்ரி" புரியுதா?
ஓ, மணத்தக்காளி பழமா? அதுக்குத்தான் ஆங்கிலத்துல "பிளாக் நைட்ஷேட் பெர்ரி" (Black nightshade berry) ன்னு பேரா?
ஆமாம் தாத்தா... இதை சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நம்முடைய கரகரப்பான குரல்கூட குயிலின் இனிமையான குரல் மாதிரியே ஆகிடுமாம்.
ம்.. ம்ம்... அத எந்த காது அவிஞ்ச "கபோதி" பய சொல்லிட்டு போனான்னு தெரியலியே!...
என்ன தாத்தா முணுமுணுக்கிறீங்க?..
ஒண்ணுமில்ல சீனுகுட்டி... குரல் குயில் மாதிரி ஆகணுமே என்கிற ஆர்வக்கோளாறுல அதன் காய்களையும் பறித்து விழுங்கிடாத தாயி.. அப்புறமா குயிலுக்கு பதிலா மயிலு வந்துடப்போகுது. ஏற்கனவே நீ பாடுற பாட்டு நம்ம "காத்து கருப்பு கலை"க்கு டூயட் போடுறது மாதிரியே இருக்குது.
அய்யய்யோ... ஏன் தாத்தா அப்படி சொல்லுறீங்க?
நான் ஏன் அப்படி சொல்லுறேன்னு தெரிசுக்கணுமுன்னா முதல்ல மணத்தக்காளியோட தாவரவியல் பெயரை நீ தெரிஞ்சுக்கோணும்...
ம்ஹீம் ... என்ன தாத்தா அது?
சொல்லுறேன் ஆனா நீ அப்படியே ஷாக் ஆகிடக்கூடாது.
சொல்லுங்க தாத்தா...
இதனுடைய அறிவியல் பெயர் "Solanum americanum" (சோலனம் அமெரிக்கனம்). இதில் "சோலனம்" (Solanum) என்பது எதைக்குறிக்கிறது தெரியுமா?
தெரியாது தாத்தா...
சோலனம் என்பது "சோலனைன்" (Solanine) என்னும் ஒருவித சேர்மமான அல்கலாய்டுகளை குறிக்கிறது.
கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க தாத்தா?
தாவரங்களை பாதிக்கும் "பாக்டீரியா" மற்றும் "பூஞ்சாண" நோய்களை அழித்தொழிக்க பயன்படுத்தப்படும் பூஞ்சாணக்கொல்லி மருந்து பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?
ஆமாம்... கடைகளில் கிடைக்கும்.. அது ரொம்ப விஷமாச்சே...
அதுதான் இது. மணத்தக்காளி வேர், தண்டு, இலை, காய் என அனைத்துப் பாகங்களிலும் இது பரவி காணப்படுகிறது. அதனாலதான் இந்தமாதிரியான தாவரங்களை "சோலனம்" (solanum) என்னும் பிரிவுக்குள் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள். இந்த பிரிவில் ஆயிரக்கணக்கான தாவரங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த மணத்தக்காளி. இந்த "சோலனைன்" (Solanine) பற்றி நீ எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?
இல்லையே... இது பற்றி யாருமே சொல்லவே இல்லையே தாத்தா?
சொல்லமாட்டார்கள்... யாருமே சொல்லமாட்டார்கள்... எதை முக்கியமாக சொல்லவேண்டுமோ அதை சொல்லமாட்டார்கள். எதுவெல்லாம் சொல்ல தேவையில்லையோ அவை எல்லாவற்றையும் ஆளாளுக்கு சகட்டுமேனிக்கு உளறிக்கொண்டு திரிவார்கள்.. ஆனால் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லவே மாட்டார்கள்.. இதுதான் இந்த மனித சமுதாயத்தின் சாபக்கேடு...
என்ன தாத்தா "சோலனைன்", "பூஞ்சாணக்கொல்லி" என்று என்னவெல்லாமோ சொல்லி பீதியை கிளப்புகிறீர்கள்?...
பயப்படாதே... "சோலனைன்" (Solanine) என்பது தன்னை தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க, பூஞ்சாணத்தை ஒழிக்க, தங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை வீரியப்படுத்திக்கொள்ள தாவரங்கள் தங்களுக்குள்ளாகவே உருவாக்கிக்கொள்ளும் ஒரு இயற்கை பூஞ்சாணக்கொல்லி அவ்வளவுதான்.
என்னது இயற்கை பூஞ்சாணக்கொல்லியா... அப்படியொண்ணு இருக்கா?
ஆமாம்... கண்டிப்பாக... இந்த சோலனைன் என்பது குளுக்கோசுடன் கூடிய ஒருவித "அல்கலாய்டு" (Alkaloid). இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து தாவரங்களை பாதுகாக்கும் கேடயமாக வேலை செய்கிறது.
அப்படியென்றால் மணத்தக்காளி விஷமா? இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
இல்லை.. பாதிப்பில்லை.. சமைத்து சாப்பிடுவதால் பாதிப்பில்லை. ஆனால் இதன் இலைகள், காய்கள் முதலியவைகளை அதிக அளவில் தொடர்ந்து சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டுவந்தால் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்பை ஏற்படுத்துமா?!.. அப்படியென்றால் சமைத்து சாப்பிடும்போதுமட்டும் ஏன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை?.
மணத்தக்காளி இலை மற்றும் காய்களை சமைக்கும்போது வெப்பத்தினால் இதிலுள்ள சோலனைன்களின் செறிவு பன்மடங்கு அழிக்கப்பட்டுவிடுவதால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனவே நன்கு சமைத்த பின்பே இதனை சாப்பிடவேண்டும். சமைக்காமல் தொடர்ந்து பச்சையாக சாப்பிடப்படும் மணத்தக்காளியால் என்றுமே உடலுக்கு கெடுதல்தான்.
இதன் இலைகள் மற்றும் காய்கள் கசப்பு சுவையுடன் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது இதனை யார் பச்சையாக சாப்பிடுவார்கள்?..
சாப்பிடுகிறார்கள் அம்மணி... இதன் இலைகள், தண்டுகள் மற்றும் காய்களில் சோலனைன் என்னும் உடல்நலத்தை பாதிக்கும் ஆல்கலாய்டுகள் பரவி உள்ளன என்பதனை தற்போதுதான் அறிவியல் கண்டறிந்து நிரூபித்துள்ளன!!.
ஆனால் அறிவியல் வளர்ச்சி அடையாத பழங்காலத்திலேயே குடல்புண், வயிற்றுபுண் மற்றும் வாய்ப்புண்கள் முதலியவைகளை குணப்படுத்தும் திறன் மணத்தக்காளிக்கு உள்ளது என கண்டறியப்பட்டதால் இதனை கீரைகளாக சமைத்து சாப்பிடுவதுடன் இதன் இலைகளை பச்சையாக தினந்தோறும் மென்று சாப்பிடுதல் மற்றும் சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பழக்கமும் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. அது இன்றும் தொடர்கிறது.
ஆனால் இதனை சமைத்து சாப்பிட்டாலே போதிய பலன் கிடைத்துவிடும் என்றும், இதனை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்புகள்தான் மிஞ்சும் எனவும் அறிவியலால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இதனை பச்சையாக சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வது அவசியம்.
அதைப்போல இதனை சமைத்து சாப்பிட்டாலும்கூட சிலபேருக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நீர்போன்ற பேதிகழிச்சலை ஏற்படுத்தும். இது உடலில் நீர்சத்து குறைய வழிவகுப்பதுடன் குடல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து எப்போதாவது ஒருதடவை மட்டும் சாப்பிட்டுவரலாம். அப்படி சாப்பிடும் வேளைகளில் பிற கீரைகளைப்போல் நிறைய சாப்பிடாமல் அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நாமும் நம்மை பழைய பழக்க வழக்கத்திலிருந்து மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டியது அவசியம். காலத்திற்கு ஏற்ப நம் பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்ய முன்வராவிட்டால் பாதிப்பு என்னவோ நமக்குதான்.
அய்யகோ... சமைக்காமல் சாப்பிடுவது ஆபத்தா?.. இதன் பழங்களை நான் தொடர்ந்து பலநாட்களாக அப்படியே சாப்பிட்டுவருகிறேனே. அப்போ என்னோட கதி அதோகதிதானா?
அதெல்லாம் பயப்படவேண்டிய தேவையில்லை சீனுகுட்டி.. ஏன்னா... இந்த சோலனைன் என்கின்ற இந்த தாவரங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பூஞ்சாணக்கொல்லியானது காய்களில் 0.65% அளவில் காணப்படுகின்றன என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க ஆரம்பிக்க இதிலுள்ள சோலனைனின் அளவும் படிப்படியாக குறைந்துகொண்டே வருகின்றன.
இதன் காய்கள் பழுக்கும்போது அதிலுள்ள சோலனைன் அளவு படிப்படியாக 0.45% அளவில் குறைந்துவிடுகிறது. நன்கு கனிந்த பழங்களில் 0.3% அளவில்கூட குறைந்துவிடுவதுண்டு. எனவே நன்கு கனிந்த பழங்களை உண்பதால் உடலுக்கு தீங்கில்லை என்றாலும் அளவோடு சாப்பிடவேண்டியது அவசியம். அரைகுறையாக பழுத்த பழங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
அப்பாடா.. இப்போதான் எனக்கு உசுரே வந்தது தாத்தா...
உனக்கு உசுரு வந்ததெல்லாம் சரிதான்.. ஆனா நீ சாப்பிட்ட இதே பழத்தை மிக சிறிய குழந்தைகள் சாப்பிட்டாங்கன்னா இந்நேரத்துல உசுரே போயிருக்கும் தெரியுமா?
என்ன தாத்தா சொல்லுறீங்க?
உண்மையைத்தான் சொல்கிறேன்... ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இப்பழங்களை அதிக அளவில் உண்ணக்கொடுத்தால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் கெட வாய்ப்புள்ளது. எனவே குடல்புண் மற்றும் வாய் புண்கள் ஆறும் என காரணம்காட்டி இதனை குழந்தைகளுக்கு புகட்டாமல் இருப்பதே நல்லது.
அப்படியென்றால் சிறிய குழந்தைகள் இந்த பழங்களை சாப்பிடுவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்துள்ளது என்கிறீர்களா?
ஆபத்துள்ளது என்று சொல்லவில்லை.. இதனால் சில குழந்தைகளின் உயிரே போயுள்ளது என்று சொல்லுகிறேன்...
ஐய்யய்யோ என்ன தாத்தா சொல்லுறீங்க?
உண்மையைத்தான் சொல்லுகிறேன் சீனுக்குட்டி... இப்பழங்களுக்கென்று ஒரு விசேஷ தன்மையுள்ளது. அது யாதெனில் இப்பழங்களை அதிக அளவில் சாப்பிட்டால் ஒருவிதமான போதையை உண்டுபண்ணி நம்மை மயக்கநிலைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே 6 அல்லது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்பழங்களை சாப்பிட கற்றுக்கொடுத்தோம் என்றால் நம் கண்காணிப்பில் இல்லாத சமயங்களிலும் நமக்கே தெரியாமல் இப்பழங்களை தேடிச்சென்று பறித்து உண்ணும் வாய்ப்பு இருக்கின்றன.
நன்கு கனிந்த பழங்களை மட்டுமல்லாது அரைகுறையாக பழுத்த பழங்களையும் சேர்த்தே இவர்கள் பறித்து சாப்பிடுவார்கள் என்பதால் இவர்களின் உடலில் இந்த சோலனைனின் செறிவு அதிகரிக்க வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும்.
ஐயையோ...
ஆமாம்... இந்த சோலனைனானது உடலினுள் குறைந்த அளவில் சென்றால் பெரிய அளவில் பாதிப்புகளை வெளிப்படுத்துவதில்லை என்றாலும் அதிக அளவில் உடலினுள் செல்ல நேர்ந்தால் அது முதலில் வாந்தியை ஏற்படுத்துகின்றன.
இது அதிக அளவில் உடலினுள் செல்லும்போது போதைவஸ்துபோல செயல்படுவதால் மயக்கத்தை உண்டாக்கி மூச்சுவிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
தாத்தா எனக்கு ஒரு சந்தேகம்... இந்த மணத்தக்காளியால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றால் இதன் இலைகளை கீரையாகவும் இதன் காய்களை வற்றலாகவும் பக்குவம் செய்து உண்கிறார்களே அவர்களெல்லாம் ஆரோக்யமாகத்தானே இருக்கிறார்கள் அது எப்படி?
சபாஷ் நல்ல கேள்வி... நச்சுத்தன்மை உள்ளது என்பதால் இது மக்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டுதான் வருகிறது.
இதன் நச்சு மனிதர்களை பாதிப்பதில்லையா என்றால் எதிர்பார்க்கும் அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்கு காரணம் இந்த தாவரத்தின் மூன்றே மூன்று பகுதிகள்தான் உணவாக பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் இலை, காய் மற்றும் பழங்கள்.
இதில் காய்களில் அதிக அளவில் சோலனைன் உள்ளது என்றாலும் நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல அந்த காய் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க பழுக்க அதிலுள்ள சோலனைனின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டே வருகின்றன. நன்கு பழுத்த பழங்களில் மிக குறைந்த அளவே சோலனைன் இருப்பதால் இது உடலுக்கு அதிக அளவில் தீங்கு தருவதில்லை.
எனவே நன்கு கனிந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். அளவோடு சாப்பிடவேண்டியது அவசியம். குழந்தைகள் இன்னும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது சாப்பிடாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் இது குழந்தைகளுக்கான உணவுப்பொருள் அல்ல.
பழங்களுக்கு அடுத்தபடியாக இதன் இலைகள் மற்றும் காய்கள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் பொரியலாகவும், வற்றலாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காய்களிலும் இலைகளிலும் அதிக அளவு சோலனைன் உள்ளன என்பது உண்மை.
ஆனால் இதனை உணவாக பயன்படுத்துவதால் யாரும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லையே? என்னும் சந்தேகம் அனைவருக்குமே வருவது இயல்புதான். இதற்கான காரணமும் நான் ஆரம்பத்தில் சொன்னவைதான். இதன் இலைகளும் காய்களும் சமைக்கும் தருவாயில் வெப்பப்படுத்தும்போது இதிலுள்ள சோலனைன் (Solanine) வெப்பத்தினால் அழிக்கப்படுகிறது. எனவே இதனை சமைப்பதால் உடலுக்கு தீங்கில்லையென்றாலும் வெப்பத்தினால் இந்த சோலனைன்னானது முழுமையாக நீங்கிவிடுவதில்லை.
150⁰C (302⁰F) வெப்பநிலையில் இது சிதைக்கப்படுவதில்லை. மாறாக 170⁰C (338⁰F) வெப்பநிலையில்தான் சோலனைன்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. எனவே சோலனைன் ஐ அழிக்கவேண்டுமெனில் 170⁰C வரை இதன் தழைகளை சூடாக்கவேண்டியது அவசியம். ஆனாலும் இந்த வெப்பநிலையில் முழுமையாக சோலனைன் (Solanine) அழிக்கப்படுவதில்லை. 40 % சோலனைன் - ஐ அழிக்கவேண்டுமெனில் 210⁰C (410⁰F) வெப்பநிலையில் தொடர்ந்து 10 நிமிடங்கள் சூடாக்கவேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்.
எனவே, இதன் கீரைகளாகட்டும் அல்லது காய்களின் வற்றலாகட்டும் அளவோடு சாப்பிட்டுவருவது அவசியம். தினந்தோறும் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவை எடுத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வது நலம்.
அப்படியென்றால் இதன் இலைகளையோ, காய்களையோ பச்சையாக சாப்பிடுவது தீங்கானது என்கிறீர்களா?
கண்டிப்பாக ... இதன் இலைகளிலும் காய்களிலும் சோலனைன் (Solanine) அதிக அளவில் உள்ளதால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பச்சையாக சாப்பிடுவதால் பெரியவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் மிக சிறிய குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.
பெரியவர்களுக்கு இது ஆரம்பகட்டங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலோ அல்லது ஜூஸாக பருகி வந்தாலோ இதிலுள்ள "சோலனைன் ஆல்கலாய்டு" என்னும் நச்சு கல்லீரலில் படிந்து தலைசுற்றல், பிதற்றல், மனக்குழப்பம், பேச்சில் தடுமாற்றம் முதலியவைகளை ஏற்படுத்துவதோடு கண்பார்வையையும் கடுமையாக பாதிக்கும்.
நாட்டு மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது என காரணம்காட்டி இதனை பச்சையாக தொடர்ந்து சாப்பிட்டுவரும் பட்சத்தில் "கல்லீரல்" கடுமையாக பாதிக்கப்படலாம்.
இதன் இலைகள் மற்றும் காய்களை பச்சையாக சாப்பிடுவது மனிதர்களுக்கு மட்டும்தான் ஆபத்தானதா? அல்லது விலங்குகளுக்கும் ஆபத்துதானா?
இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் நச்சுத்தன்மையானதுதான். பொதுவாக விலங்குகள் இதனை விரும்பி உண்பதில்லை.
இதன் காய்களிலும், இலைகளிலும் நைட்ரேட் உப்புகளும் (Nitrate salt) அதிக அளவில் காணப்படுகின்றன. இவைகள் மனித உடலுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் தீங்குவிளைவிப்பவைதான். தீவனங்களில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்தால் விலங்குகளுக்கு வியர்வை, காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கால்நடைகளுக்கு இதனை தீவனமாக கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.
ஆனால் இதனை பறவைகளுக்கு தாராளமாக தீவனமாக கொடுக்கலாம். பாலூட்டிகளுக்கு மட்டுமே இது ஆபத்தை விளைவிக்கின்றன. பறவைகளுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு பாதிப்பை கொடுப்பதில்லை. ஏனெனில் இதிலுள்ள "நைட்ரேட் உப்பு" பறவைகளில் உடலில் போய் சேர்வதில்லை. மாறாக அவைகள் மலங்களின் வழியாக வெளியேறிவிடுகின்றன. இதனால் அவைகள் பாதிப்படைவதில்லை. விவசாய நிலங்களுக்கு "நைட்ரேட் உரம்" தேவையெனில் பறவைகளின் எச்சங்களை உரமாக பயன்படுத்த பரிந்துரைப்பதை நீ அறிந்திருக்கலாம்.
சரி....O.K.... சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்று சொல்லுங்க தாத்தா?
இலைகளையோ அல்லது அதன் சாறுகளையோ அல்லது அதன் காய்களையோ பச்சையாக அதிக அளவில் சாப்பிட நேர்ந்தால் தலைசுற்றல், மயக்கம், குமட்டல், சமநிலை இழப்பு, மங்கலான பார்வை, வாய் வறட்சி, குழப்பம், பிரமைகள், மூச்சுத்திணறல் முதலியவைகளை ஏற்படுத்தலாம்.
அதேவேளையில் இதிலுள்ள சில வேதியியல் பொருட்கள் கல்லீரல் புற்றுநோயை குணப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். எனவே இதிலுள்ள தீங்குதரும் அம்சங்களை விலக்கி நன்மை செய்யும் மூலக்கூறுகளை ஒன்றிணைத்து மருந்தாக உருவாக்கும்போது உடலுக்கு பலவித நன்மைகளைத்தரும் வாய்ப்பும் உள்ளது.
இந்த சோலனத்தைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன் அதனைப்பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க தாத்தா...
தாராளமாக சொல்கிறேன் கேள்...
சோலனைன்.
Solanine.
நம்முடைய உடலை எத்தனையோ வைரஸ், பாஃடீரியாக்கள் தாக்குகிறதல்லவா? அதனை எதிர்த்து போராடுவதற்கு நம்முடைய உடலில் எதிர்பு சக்தி உள்ளது அல்லவா? அதுபோல அனைத்து வகையான தாவரங்களிலும் தன்னை தாக்கும் பூஞ்சை, பாஃடீரியாக்களை எதிர்த்து அழிக்க தாவரங்களும் சிலவித ரசாயனங்களை தங்கள் உடலில் உற்பத்தி செய்கின்றன.
இப்படி பூஞ்சைகளை எதிர்த்து போராடுவதற்கான ரசாயனங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு தாவரமும் தங்களின் தேவைக்கேற்ப வெவ்வேறு வகையான ரசாயனங்களை உற்பத்தி செய்து தங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கிக்கொள்கின்றன. இந்த இரசாயனங்களினால் நம்முடைய உடலுக்கு பெரிதாக தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் சில இரசாயனங்கள் மட்டும் பாலூட்டிகளுக்கு தீங்குவிளைவிப்பவை. அவற்றில் ஒன்றுதான் இந்த சோலனைன் என்னும் ஆல்கலாய்டு.
சோலனைன் என்பது குளுகோசுடன் கூடிய ஒரு நச்சுத்தன்மையுள்ள இரசாயன படிக பொருள். அதாவது ஆல்கலாய்டு. இது தண்ணீரில் அவ்வளவாக கரையாது. ஆனால் ஆல்கஹால்கலில் கரையும் தன்மையுடையது. இதற்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்லும் பண்புகள் உள்ளதால் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள தாவரங்கள் அவைகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தங்கள் உடல்பாகங்களில் இந்த அல்கலாய்டுகளை உற்பத்தி செய்து சேமித்து வைக்கின்றன.
பொதுவாக "தக்காளி" என்று குறிப்பிடுகிறோமல்லவா? அதில் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கனக்கான இனங்கள் உள்ளன. இந்த அனைத்து வகையான தக்காளி இனங்களுமே பூஞ்சாண பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள சோலனைன் என்னும் இந்த ஆல்கலாய்டுகளை தங்கள் இலை மற்றும் தண்டுகளில் சேமித்து வைக்கின்றன.
இந்த அல்கலாய்டு எந்தெந்த தாவரங்களிலெல்லாம் உள்ளதோ அவைகளையெல்லாம் "சொலனேசியே" என்னும் தாவர குடும்பத்துக்குள் அடக்குகின்றனர். இந்த குடும்பத்திலுள்ள "சோலனம்" என்னும் பேரினத்தில் சுமார் 1500 க்கும் அதிகமான சிற்றினங்கள் உள்ளன. இவைகளை தனித்தனியாக இனங்காண அவைகளுக்கு தனித்தனி பெயர்கொடுத்து சிற்றினங்களாக வகைப்படுத்துகிறார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த சிற்றின தாவரங்களில் பெரும்பான்மையான தாவரங்களை நாம் உணவாக பயன்படுத்துவதில்லை. சில தாவரங்களை மட்டுமே உணவாக பயன்படுத்துகிறோம். இவ்வாறு இலைகளை உணவாக பயன்படுத்தும் தாவரங்களைத்தான் நாம் "மணத்தக்காளி" என அழைக்கிறோம்.
இவ்வாறு உணவாக பயன்படுத்தப்படும் தாவரங்கள் கண்டங்களுக்கு கண்டம் நாடுகளுக்கு நாடு வேறுபடுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள சிற்றின தாவரங்களில் சுமார் 7 வகையான தாவரங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்ளப்படுவதை அறியமுடிகிறது. எனவே இந்த 7 வகையான மணத்தக்காளி இனங்களை பற்றியும் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
சோலனைன் பாதிப்புகள்.
Solanine side effects.
சோலனைன் உணவில் அதிகரித்தால் பெரியவர்களுக்கு தலைவலி, சோம்பல், மயக்கம், வீக்கம், தொண்டை எரிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, வயிறு பிடிப்பு, தைராய்டு பிரச்சனைகள், உணர்வு இழப்பு, பக்கவாதம், காய்ச்சல், மஞ்சள் காமாலை, தாள் வெப்பநிலை, அரிப்பு, வலி, வீக்கம் மற்றும் அதிக உமிழ்நீர் சுரப்பு இவைகள் ஏற்படலாம். தொடர்ந்து உட்கொள்ள நேர்ந்தால் குடல், இரைப்பை செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஆனால் குழந்தைகள் இதனை சாப்பிடும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இன்னும் ஆபத்தானவை. கடுமையான தலைவலி, பிரமை பிடித்ததது போன்று வெறித்து பார்த்தல், கால் பிடிப்பு ஏற்படுவதுடன் நேரம் செல்ல செல்ல இரத்த அழுத்தம் குறைவதுடன் இதயத்துடிப்பும் படிப்படியாக குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலைமையையும் ஏற்படுத்திவிடுகிறது.
இதன் இலைகளையோ, காய்களையோ சிறுகுழந்தைகள் பச்சையாக சாப்பிட கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம். குடல்புண்களை ஆற்றும் என காரணம்காட்டி இதன் இலைச்சாற்றை சிறுகுழந்தைகளுக்கு புகட்டிவிடாதீர்கள். அப்படி புகட்டினீர்கள் என்றால் அது பூஞ்சாண மருந்தை புகட்டுவதற்கு சமமாகும். பல குழந்தைகளுக்கு இது கொடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏனெனில், இந்த சோலனைன் என்னும் நச்சுவானது கிளைகோல்கலாய்டு. "சபோனின்" இரசாயன குடும்பத்தை சேர்ந்த கிளைகோல்கலாய்டு நச்சு ஆகும். இது ஒரு இயற்கை பூஞ்சாணகொல்லி மருந்து. எனவே இது பச்சையாக உண்பதற்கு ஏற்றதல்ல. நன்கு சமைத்தபின்பு மட்டுமே சாப்பிட ஏற்றது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
இந்த சோலனைன் அதிகரிப்பால் ஒருவர் மரணமடையவேண்டுமெனில் அவருடைய உணவில் உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து சராசரியாக 100 மி.கி முதல் 300 மி.கி வரை இருத்தல் வேண்டும். ஆனால் இந்த நச்சுப்பொருள் குடல்களால் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை. ஆதலால் 300 மி.கி அளவுள்ள சோலனைன் ஐ நீங்கள் உட்கொண்டால்கூட அது உங்களுக்கு மரணத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே...
எனவே இந்த சோலனைன் உங்கள் உடலில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது சோலனைன் அளவைப்பொறுத்து மட்டுமல்ல உங்கள் உடலின் ஜீரணசக்தியையும் பொறுத்தே அமையும்.
சோலனைன் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்ட 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்குள்ளாக மேற்கண்ட பாதிப்புகள் தொடங்குகின்றன. சில நேரங்களில் அதிக அளவு சோலனைன் எடுத்துக்கொண்டால் சாப்பிட்ட 10 வது நிமிடங்களில் கூட பாதிப்புகள் தொடங்குகின்றன.
சரி தாத்தா... இதனை சமைத்து சாப்பிடும் போது அதனால் என்னனென்ன நோய்களெல்லாம் குணப்படுகின்றன. யாரெல்லாம் சாப்பிடலாம்... யாரெல்லாம் இதனை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்பதனையும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
தாராளமாக சொல்லுகிறேன் சீனுகுட்டி.. ஆனால் அதற்கு முன்னால் உலக மக்களால் 7 வகையான சிற்றின தாவரங்கள் மணத்தக்காளி என்னும் பெயரில் உணவாக உட்கொள்ளப்படுகிறது என்று முன்பே பார்த்தோமல்லவா? எனவே அந்த 7 வகையான மணத்தக்காளி இனங்களை பற்றி முதலில் பார்க்கலாம். அதுபற்றிய விபரத்தை பார்ப்பதுடன் உன்னுடைய கேள்விகளுக்கும் பதிலை தேடலாம் சரியா?
சரி தாத்தா? ஆனா நான் முதன்முதலா கேட்ட சந்தேகத்தை நீங்கள் இன்னும் கிளீயர் பண்ணவே இல்லையே?
சந்தேகமா??!...
ஆமா...
என்ன சந்தேகம் சீனுக்குட்டி?!!..
இந்த மணத்தக்காளி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நம்மோட குரல் கரகரப்பு இல்லாமல் இனிமையாக மாறும்னு இந்த சமூக வலைப்பக்கங்களில் பரவலா சொல்லுறாங்களே அது உண்மையா? அது உண்மைன்னா என்னோட குரலும் "குயில் குரல்" மாதிரி இனிமையா மாறிடிச்சான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க தாத்தா?
ம்ம்ம்... இந்த பாழாய்ப்போன "விதி" என்னையும்கூட விடாம தொரத்துது பாத்தியா?
ம்... ஹீம்... சொல்லுங்க தாத்தா?
இத சாப்பிட்டா குரல் இனிமையாக மாறுமா... மாறாதான்னு எனக்கு தெரியல தாயி... ஆனாலும் உன்னைக்கொண்டே இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிடலாமுன்னு தோணுது.
என்னை வச்சு கண்டுபிடிக்க போறீங்களா?!!... எப்படி கண்டுபிடிப்பீங்க?
நீ இந்த பழங்களை எத்தனை மாதங்களாக சாப்பிட்டுட்டு இருக்க?
ம்ம்... ஒரு 5 மாத காலமாக சாப்பிட்டு வருகிறேன் தாத்தா?
அப்படீன்னா... மொதல்ல பாடுன அதே "என்சாமி என்சாமி" பாடலை மீண்டும் ஒருதடவை இந்த தாத்தாவுக்கு பாடி காமி... உன்னோட குரலை வச்சே இந்த பழங்கள் உண்மையாகவே குரலை இனிமையாக மாற்றுமா... அல்லது மாற்றாதா... என்பதனை நான் ஈஸியா கண்டு புடிச்சு சொல்லிடறேன்...
ஓ.கே... தாத்தா அப்போ பாடட்டுமா?
பாடுடி புள்ள...
"என்ஜாயி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி..."
அட ஆத்தி.. ஆச்சரியமா இருக்கே... வெறும் அஞ்சு மாசம் சாப்பிட்டதுக்கே உன்னுடைய கொரலு மெய்யாலுமே "குயிலு" கொரலு மாதிரி சும்மா கும்முன்னு ஆயிடுச்சே...
ஹய்யா ... நெசமாதான் சொல்லுறீங்களா தாத்தா?
நெசமாதாண்டி சொல்லுறேன் என் சீனுக்குட்டி...
"ஹய்யா ...
என் கடலே, கரையே
வனமே, சனமே
நிலமே, குளமே
இடமே, தடமே..."
போதும்.. போதும்.. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா லிஸ்ட் ரொம்ம்ப பெருசா போயிட்டு இருக்கு...
அய்யோ தாத்தா...
ஹாஹா.. ஹாஹ்ஹா.... ஐ ஆம் எஸ்கேப்...
💢💢💢💢💢
மணத்தக்காளி பற்றிய இப்பதிவின் இரண்டாவது பகுதியை [PART - 2] படிக்க கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...
6 கருத்துகள்
உரையாடல் மூலம் படிக்கும் போது மனதில் அருமையாக பதிகின்றது...
பதிலளிநீக்குநன்றி சார்!!!
நீக்குமிக நல்ல பதிவு.
பதிலளிநீக்குமணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வதுண்டு அவ்வப்போது கொஞ்சம் தானே போடுவது. அது போல கீரை சமைத்துத்தான் சாப்பிடுவதுண்டு.
வாய்ப்புண்ணிற்குப் பச்சையாக எடுப்பதில்லை. நெய் அல்லது நல்லெண்ணையில் வதக்கித்தான் சாப்பிடுவது.
எதுவுமே அதிகமானால் அளவுக்கு மீறினால் நஞ்சுதான்.
கீதா
தங்களின் கருத்துகளுக்கு நன்றி சகோதரி!!!
நீக்குமணத்தக்காளிக் கீரை பற்றி நிறைய அறிய முடிந்தது.
பதிலளிநீக்குநல்ல பதிவு
துளசிதரன்
நன்றி ஐயா!!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.