"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" மஞ்சள் கரிசலாங்கண்ணி - Manjal Karisalankanni - Sphagneticola calendulacea.

மஞ்சள் கரிசலாங்கண்ணி - Manjal Karisalankanni - Sphagneticola calendulacea.

மஞ்சள் கரிசலாங்கண்ணி.

Manjal Karisalankanni.

[Part - 2]

கரிசாலை என்னும் "கரிசலாங்கண்ணி" மூலிகையில் மூன்று வகையான தாவர இனங்கள் உள்ளன. அவையாவன...

  1. வெள்ளை கரிசலாங்கண்ணி.
  2. மஞ்சள் கரிசலாங்கண்ணி.
  3. சீமை கரிசலாங்கண்ணி.
இதில் "வெள்ளை கரிசலாங்கண்ணி" யைப்பற்றி விரிவாக ஏற்கனவே முதல் பகுதியாகிய [Part - 1] ல் பார்த்தோம். அதனை படிக்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.

👉"வெள்ளை கரிசலாங்கண்ணி - Eclipta prostrata - Karisalankanni - False Daisy."👈

இரண்டாவது பகுதியாகிய இப்பதிவில் "மஞ்சள் கரிசலாங்கண்ணி" மற்றும் "சீமை கரிசலாங்கண்ணி"யை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்க்க இருக்கிறோம்.

    வெள்ளை கரிசலாங்கண்ணியை அதனுடைய வெண்மை நிற பூக்களை கொண்டும், மஞ்சள் கரிசலாங்கண்ணியை மஞ்சள் நிற பூக்களை கொண்டும் எளிதாக கண்டறிந்துவிட முடியும் என்றாலும் கூட மஞ்சள் கரிசலாங்கண்ணியை இனங்கண்டறிவதில் சில குழப்பங்களும் உள்ளன.

    ஏனெனில், மஞ்சள் கரிசலாங்கண்ணிகளின் பூக்களும், சீமை கரிசலாங்கண்ணி என்னும் ஒருவகை களை செடியின் பூக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவத்தை கொண்டுள்ளன. பூக்கள்தான் ஒரே மாதிரியானவையே தவிர இலைகள் வெவ்வேறு வடிவங்களைத்தான் கொண்டுள்ளன. எனவே இவ்விரண்டு தாவரங்களையும் இலைகளின் வடிவங்களைக்கொண்டு எளிதாக பிரித்து கண்டறிந்துவிட முடியும்.

    Wedelia chinensis leaf
    மஞ்சள் கரிசலாங்கண்ணி.


    Sphagneticola trilobata.
    சீமை கரிசலாங்கண்ணி.

    சரி... இனி "பொற்றலை கையான்தகரை" என்னும் மஞ்சள் கரிசலாங்கண்ணியை பற்றியும், "வெட்டுவா தழை" என்னும் சீமை கரிசலாங்கண்ணியை பற்றியும் தனித்தனியாக பார்ப்போம்.

    பொற்றலைக்கையான்தகரை.

    Wedelia chinensis.

    ஆங்கில பெயர் - வேடெலியா சினேஸிஸ் - Wedelia chinensis.

    வேறு பெயர்கள் - பொற்றலைக்கையான், பொற்றலை, பொற்கொடி, பொற்றலை கரிப்பான், பொற்றலை கையான்தகரை, பொற்பாலை, பொற்றிலைப்பாவை,

    தாவரவியல் பெயர் - ஸ்பாக்னெடிகோலா காலெண்டுலேசியா - Sphagneticola calendulacea.

    குடும்பம் - அஸ்டரேசியே - Asteraceae.

    வளரும் நாடுகள் - சைனா, ஜப்பான், மியான்மர், இந்தியா, கம்போடியா, வியட்னாம் ஆகிய கிழக்காசிய நாடுகளில் இது பரவலாக காணக்கிடைகின்றன.

    வளரும் இடங்கள் - பொதுவாக இவைகள் வயல்வெளிகள் மற்றும் ஈரப்பாங்கான புல்வெளிகளில் வளருகின்றன.

    வெள்ளை கரிசலாங்கண்ணியானது எங்கும் பரவலாக காணப்படுவது. ஆனால் மஞ்சள்கரிசலாங்கண்ணி அப்படி அல்ல. 

    மஞ்சள் கரிசலாங்கண்ணியானது கிழக்காசிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால் தெற்காசிய பகுதிகளில் இவைகள் மிகவும் அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றன. எனவே கார்டனிலிருந்து கன்றுகளை வாங்கி வீட்டிலேயே வளர்த்துவரலாம்.

    இவைகள் தெற்காசிய பகுதிகளில் மிகவும் அபூர்வமாகவே காணக்கிடைப்பதால் இங்கு எளிதாக கிடைக்கக்கூடியதும் ஆற்றங்கரை ஓரங்களில் களை செடியாக வளரக் கூடியதுமான மஞ்சள் பூ பூக்கும் "சீமை கரிசலாங்கண்ணி" என்னும் களைச்செடியை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்னும் பெயரில் விற்பனை செய்கின்றனர்.

    நம்முடைய இடங்களில் ஆற்றோரங்களில் மஞ்சள் நிற பூவுடன் ஏராளமாக வளர்ந்து நிற்பது உண்மையில் மஞ்சள் கரிசலாங்கண்ணி அல்ல. அது சீமை கரிசலாங்கண்ணி என்று கூறப்படும் ஒருவகை களைச்செடி. இது "ஆற்று கரிசலாங்கண்ணி" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது.

    எனவே, மஞ்சள் கரிசலாங்கண்ணிக்கும் சீமை கரிசலாங்கண்ணிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.

    வகை - குறுஞ்செடி வகையை சேர்ந்தது. ஆனால் படரும் தன்மையையும் கொண்டுள்ளன.

    இனப்பெருக்கம் - இதன் தண்டுகளில் வேர் முடிச்சுகள் உற்பத்தியாகின்றன. எனவே இவைகள் தண்டுகள் மூலமாக எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன. தண்டுகள் மூலமாக மட்டுமல்லாது விதைகள் மூலமாகவும் இரு வழிகளில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

    தாவரத்தின் தன்மை.

    வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் இது சல்லிவேர் அமைப்பை கொண்டுள்ளன. குத்துச்செடியாக வளரும் அதே வேளையில் படர்ந்து வளரும் தன்மையையும் பெற்றுள்ளதால் கணுக்களில் வேர்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளன.

    தண்டுகள் லேசான சிவப்பு நிறத்துடன் உரோமங்களுடன் அல்லது உரோமங்கள் இல்லாமலும் காணப்படுகின்றன.

    செடியின் அனைத்து பாகங்களும் வெள்ளை கரிசலாங்கண்ணி போலவே உள்ளன. ஆனால் இலைகள் பளபளப்பாகவும் பூக்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன.

    இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணியில் உள்ள சிறப்பு என்னவென்றால் வெள்ளை கரிசலாங்கண்ணியைவிட மஞ்சள் கரிசலாங்கண்ணியே மருத்துவத் தன்மை மிகுந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல வெள்ளை கரிசலாங்கண்ணியைவிட இதில் கசப்பு சுவையும் குறைவு.

    Manjal Karisalankanni

    மேலும் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரையாக பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல. மூலிகையாக மட்டுமே பயன்படுத்துவதற்கு ஏற்றது. ஆனால் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணியை மூலிகையாகவும், கீரையாகவும் உணவில் பயன்படுத்த முடியும்.

    இலைகளின் அமைப்பு.

    இலைகள் எதிர் எதிர் திசைகளில் காம்பில்லாத தோற்றத்துடன் அல்லது குறுகிய காம்புகளுடன் காணப்படுகின்றன.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி - Manjal Karisalankanni - Sphagneticola calendulacea.

    இலைகள் 2 அங்குல நீளத்தில் ஈட்டி போன்று நீள் வட்டத்தில் இருக்கின்றன. இலைகளின் இரு ஓரங்களும் ரம்பப் பற்கள் போன்ற அமைப்பை பெற்றுள்ளன.

    இலைகளின் பயன்.

    இலைகளே அதிக அளவில் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலைகளை நன்றாக அரைத்து உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர உடல் விசேஷ பொலிவை பெறும்.

    பூக்களின் அமைப்பு.

    பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாலேயே இது மஞ்சள் கரிசலாங்கண்ணி என்னும் பெயரை பெறுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணியைப்போல இதுவும் "கதிர்பூக்கள்" வகையை சேர்ந்ததுதான். 10 லிருந்து 20 கதிர் இதழ்களை கொண்டுள்ளன.

    Sphagneticola calendulacea flower

    கதிர் பூக்கள் வரிசையில் வட்டு சிறுமலர்கள் வகையை சேர்ந்தது. சுமார் 20 வட்டு சிறுமலர்களை கொண்டுள்ளன. இதுபற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இக்கட்டுரையின் முதல் பகுதியாகிய கரிசலாங்கண்ணி என்னும் வெள்ளை காரிசலாங்கண்ணியை பார்வையிடவும். மற்றபடி முந்தைய பதிவில் நாம் வெள்ளை கரிசலாங்கண்ணிக்கு சொன்ன அத்தனை விஷயங்களும் இதற்கும் பொருந்தும்.

    விதைகளின் அமைப்பு.

    இதன் கனியானது "சிப்செல்லா" (உலர் வெடியா கனி) வகையை சார்ந்தது. அடி ஒடுங்கி மேல்பாகம் சிறிது பருத்து ஆப்பு வடிவில் இவைகள் காணப்படுகின்றன. இந்த கனியுறைக்குள் கருமைநிற விதைகள் காணப்படுகின்றன.

    சரி.. இனி மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மருத்துவக் குணங்களைப்பற்றி சிறிது பார்ப்போம்..

    மருத்துவ குணங்கள்.

    இதன் வேர், இலை, விதை, பூ என அனைத்துமே மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

    இதன் இலைகளைக்கொண்டு பாண்டு, சோகை, மூலம், மறதி, மயக்கம், நீர்க்கட்டு, மலக்கட்டு, சளி, பித்த எரிச்சல், காசம், இளைப்பு, இருமல், காய்ச்சல், வீக்கம், கட்டி, ஜலதோஷம், தொழுநோய், கல்லீரல் நோய், தோல்நோய், கண்காசம், காதுவலி, இரத்தப்போக்கு, அழுத்தம், கடுப்பு, பொடுகு மற்றும் பூச்சிக்கடிகளால் ஏற்பட்ட ஊரல் முதலிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்..

    அதுமட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தமாக்குவதிலும் உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி உடலுக்கு வலிமையை தருவதிலும் சிறப்பானது என சொல்லப்படுகிறது. இரத்தத்தை உற்பத்தி செய்து இரத்த சோகையையும் நீக்குகிறது. ஊளைச்சதைகளையும் குறைக்கிறது.

    இதற்கு பாக்டீரிய எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி தன்மைகள் உள்ளதால் சிறுநீரக தொற்றை தடுத்து நிறுத்துகிறது.

    இலைகளில் இருந்து பெறப்படும் சாறுகளில் வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. மேலும் கண்களுக்கு குளிர்ச்சியூட்டி கண் நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பார்வை நரம்புகளையும் பலப்படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு 8 துளி தேனுடன் 2 துளி பொற்றலைகையான் சாறு சேர்த்து கொடுத்துவர இருமல், சளி தொல்லையிலிருந்து எளிதில் விடுபடும்.

    இதில் கால்சியமும் பாஸ்பரசும் அதிகமுள்ளதால் நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கின்றன.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை மென்று சாறினை உட்கொள்வதோடு அதனுடைய இலைகளால் பல் துலக்கிவர வாய்ப்புண் குணம்பெறுவதோடு வாய் நாற்றமும் நீங்கும். பற்களும் உறுதியாகி பளிச்சிடும்.

    Sphagneticola calendulacea leaf_flower

    அதுமட்டுமல்லாமல் தலைமுடிகளுக்கும் அதிக அளவில் நன்மை செய்கின்றன. இளநரை மற்றும் பொடுகை போக்குகிறது.

    இதன் இலைசாறுகளை அளவோடு அருந்திவர கல்லீரலும், மண்ணீரலும் பாதுகாக்கப்படுகிறது.

    ஆறாத புண்கள் மற்றும் வெட்டுக் காயங்கள்மீது இதன் இலைச்சாற்றை தொடர்ந்து தடவிவர விரைவில் ஆறுகிறது.

    பெண்களுக்கு வெள்ளைப்படுதல், வெட்டை முதலியவைகளை தடுப்பதோடு மாதவிடாய் கோளாறுகளையும் நீக்கி கருப்பையையும் பலப்படுத்துகிறது.

    கரிசலாங்கண்ணியை பொடிசெய்து வைத்துக்கொண்டு தினந்தோறும் 5 கிராம் அளவில் தேனுடன் கலந்து அருந்திவரலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    வாரத்திற்கு இரண்டு நாட்கள் இதனை கீரையாக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குடல் பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்துவர உடல் நன்கு பொலிவு பெறும்.

    உணவாக பயன்படுத்தும் முறை.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை கொண்டுவந்து பருப்புடன் சேர்த்து வேகவிட்டு பொரியலாகவோ, கடையலாகவோ அல்லது சாம்பராகவோ செய்து சாப்பிட்டுவரலாம்.

    இதில் நார்சத்து அதிகமென்பதாலும், ஜீரணிப்பதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளும் என்பதாலும் இரவில் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். பகலில் தாராளமாக உணவில் சேர்த்துவரலாம். ஆனால் அளவு அதிகரிக்காமல் மிதமான அளவில் சாப்பிட்டுவருவது நன்மை பயக்கும்.

    பயிரிடும் முறை.

    இதனை வீடுகளிலேயே வளர்த்துவரலாம். வீட்டை சுற்றி தோட்டம் அமைக்க வசதி இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அகலமான பூந்தொட்டிகளில் வளர்க்கலாம். மாடி தோட்டங்களிலும் கூட இதனை வளர்க்க முடியும்.

    இதுவரை மஞ்சள் கரிசலாங்கண்ணியை பற்றிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டோம். இதே சமயத்தில் "சீமை கரிசலாங்கண்ணி" யை பற்றிய சில அடிப்படை விஷயங்களையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

    சீமை கரிசலாங்கண்ணி.

    Sphagneticola trilobata.

    தாவரவியல் பெயர் - ஸ்பாக்னெடிகோலா த்ரீலோபாட்டா - Sphagneticola trilobata.

    ஆங்கில பெயர் - வெடிலியா த்ரீலோபாட்டா - Wedelia trilobata.

    தாயகம் - மத்திய அமெரிக்கா.

    Sphagneticola trilobata

    பயன் - அழகு தரும் தாவரமாக பயன்படுகிறது.

    வேறுபெயர்கள் - ஆற்றுக்கொடி கரிசலாங்கண்ணி, ஆற்று கரிசாலை, குத்து கரிசாலை, வெட்டுவா தழை. 

    பேரினம் - Sphagneticola.

    இனம் - S.trilobata.

    காணப்படும் இடங்கள் - வயல்வெளிகள், ஆற்றங்கரை மற்றும் ஈரப்பாங்கான புல்வெளிகளில் செழித்து வளருகின்றன. தற்போது பரவலாக நீர்வளம் பொருந்திய அனைத்து இடங்களிலும் வளர்கின்றன.

    பெயர்காரணங்கள் - கரிசலாங்கண்ணியைபோலவே பூக்கள் காணப்படுவதால் கரிசலாங்கண்ணி என பெயர் ஏற்பட்டுபோனது.

    "சீமை" என்பது "சீர்மை" என்பதின் திரிபு. சீர்மை என்றால் சீர் பொருந்திய அல்லது சிறப்பு பொருந்திய அல்லது நேர்த்தியான என்று பொருள்.

    நம் நாட்டில் உயர்வாக கருதிய சில இடங்கள் மற்றும் சில பொருள்களை சீமை என்று அடைமொழியிட்டு அழைத்துவந்தனர்.

    நம் நாட்டைவிட மேலை நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவைகளை சிறப்புப்பொருந்திய நாடுகளாக நம் முன்னோர்கள் கருதியதால் அங்கிருந்து யார் இந்தியாவுக்குள் காலெடுத்து வைத்தாலும் அவர்களை "சீமை துரை" என பெருமையாக அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

    அதுபோல வெளிநாட்டிலிருந்து இங்குவந்த சில தாவரங்களை பிரித்து இனம் காண்பதற்கு சீமை என பெயரிட ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த தாவரமானது அமெரிக்க தேசங்களிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த தாவரம் என்பதாலும் இதன் பூக்கள் அச்சு அசலாக மஞ்சள் கரிசாலையை ஒத்து இருப்பதாலும் இதனை "சீமை கரிசலாங்கண்ணி" என பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

    இதேபோல "அகத்தி" செடியைப்போலவே காட்சிதரும் வெளிநாட்டிலிருந்து அறிமுகமான ஒரு தாவரத்திற்கு "சீமை அகத்தி" என்று பெயரிடப்பட்டுள்ளதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    ஆற்றின் ஓரங்களில் அதிகமாக காணப்படுவதால் "ஆற்றுகொடி கரிசலாங்கண்ணி", "ஆற்று கரிசாலை" என்றும், வெட்டு, குத்து இவைகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு இதன் இலைச்சாறுகள் பயன்படுத்தப்படுவதால் குத்து கரிசாலை, வெட்டுவா தழை என சிறப்பு பெயரிட்டும் அழைக்கப்படுகின்றன.

    தாவரத்தின் தன்மைகள்.

    பூக்கள் 8 முதல் 12 வரை கதிர் இதழ்களை கொண்டிருக்கும். இது நிறைய மஞ்சள் நிற பூக்களை பூப்பதால் வீட்டு தோட்டத்தை அழகுபடுத்துவதற்காக வெளி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அழகுச்செடி. இதன் பூக்கள் பார்ப்பதற்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி பூக்கள்போல இருப்பதால் பலபேர் இதனையே மஞ்சள் கரிசலாங்கண்ணி என நினைத்துவருகின்றனர். ஆனால் இதன் இலைகள் மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளைப்போல் இருப்பதில்லை.

    இதன் இலைகள் மூன்றாக பிரிந்திருப்பது போன்ற வடிவத்தில் இருக்கும். எனவேதான் இதற்கு "trilobata" என பெயர் வைக்கப்படுள்ளது. சீமை கரிசலாங்கண்ணியின் இலைகள் பிளவுபட்ட மூன்று மடல்களை கொண்டிருப்பதை வைத்து இதனை எளிதாக அடையாளம் காண முடியும்.

    Sphagneticola trilobata leaf
    சீமை கரிசலாங்கண்ணி.

    பலர் இந்த சீமை கரிசலாங்கண்ணி செடியை மஞ்சள் கரிசலாங்கண்ணி என தவறாக நினைத்துக்கொண்டு தங்கள் வீடுகளில் வளர்த்து வருவதுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது உடலுக்கு எந்தவித நன்மையையும்  தரப்போவதில்லை. நன்மை தராதது மட்டுமல்ல உடலுக்கு தீங்குகளை ஏற்படுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.

    உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த சீமை காரிசலாங்கண்ணியை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்னும் பெயரில் கீரை விற்பனையாளர்கள் விற்றுவருவது வேதனை. எனவே கீரை விற்பவர்களிடம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

    சீமை கரிசலாங்கண்ணியின் நன்மைகள்.

    வெட்டுக்காயங்களை விரைவாக ஆற்றுவதாக சொல்லப்படுகிறது. மற்றபடி இதில் நன்மைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உட்கொண்டால் உடலுக்கு தீமை தருவது. களைச்செடிகளாக வளர்ந்து பயிர்களுக்கும் அதிக அளவில் தீங்கு விளைவிக்கின்றன.

    சீமை கரிசலாங்கண்ணி முழு அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணியில் கெடுதல்களே இல்லையா? என்றால் அதிலும் கெடுதல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகள் என்னென்ன என்பதனையும் சிறிது பார்ப்போம்.

    வெள்ளை மற்றும் மஞ்சள்

    கரிசலாங்கண்ணியின் தீமைகள்.

    கரிசலாங்கண்ணியை குழந்தைகளுக்கு மருந்தாக கொடுக்கும்போது அளவறிந்து கொடுக்க வேண்டும். அளவு அதிகப்படின் சளி, காய்ச்சல், ஜலதோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இக்கீரை குளிர்ச்சியானது என்பதால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்த்துவிடுவது நல்லது.

    இதனை அளவோடு சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். ஆனால் அளவுக்கதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும். எனவே அளவோடு உண்டுவருதல் அவசியம்.

    கரிசலாங்கண்ணியை மேல்பூச்சாக பயன்படுத்தும்போது சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம். தோல்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் தொடர்ந்து பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும், பாலூட்டும் போதும் இதனை தொடர்ந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    வெள்ளை கரிசலாங்கண்ணியை அதிக அளவில் பயன்படுத்தி வந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, அலர்ஜி முதலியவைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து நீண்டகாலம் சாப்பிட்டுவர மலக்குடலில் அழற்சியை ஏற்படுத்தி இரத்தப்போக்கை உண்டாக்கும். எனவே அளவறிந்து பயன்படுத்துவது நன்மை சேர்க்கும்.

    தங்கச்சத்து கீரையும்

    வெள்ளிச்சத்து மூலிகையும்.

    எங்க இருந்துடா வரீங்க நீங்களெல்லாம்...

    பொதுவாக இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகளில் ஒரு கருத்து திரும்ப திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல தொலைக்காட்சிகளில் அதிகாலையில் தோன்றி கழுத்தறுக்கும் ஏழாம் அறிவு வைத்திய சிகாமணிகளாலும் இதே கருத்து வலியுறுத்தி கூறப்படுகிறது...

    வரலாற்று கல்வெட்டுகளில் செதுக்கி வைக்க வேண்டிய அவர்களின் அந்த அதி அற்புதமான கண்டுபிடிப்பு யாதெனில்...

    மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளில் நிறைய தங்கச்சத்துக்கள் உள்ளனவாம். "தங்கச்சத்து" உடம்புக்கு ரொம்ப அவசியமாம். எனவே இம்மாதிரியான தங்க சத்துள்ள கீரைகளைக் கண்டால் விட்டுவிடக் கூடாதாம்... காஞ்ச மாடு கம்பங்காட்டில் மேய்வதுபோல மேய்ந்துவிட வேண்டுமாம்... இதனால ஒடம்புல தங்கச்சத்து சகட்டுமேனிக்கு ஏறி ஒடம்பு "தகதக"ன்னு தங்கம் போல ஜொலிக்குமாம்.

    (ஹைய்யா... அப்போ அடுத்த ரவுண்டுல கபசுர குடிநீருக்கு பதிலாக இந்தியா முழுக்க "மஞ்சள் கரிசலாங் குடிநீர்" சப்ளை செய்துட வேண்டியதுதான். ஒரே வருடத்தில் கறுப்பு இந்தியர்கள் அனைவருமே செவ்விந்தியர்களாக மாறிடுவாங்க... ஒரே ஜாலிதான்...)

    ம்... ம்ம்... இதுதான் இந்த மெத்தப்படித்த நாசா விஞ்ஞானிகளான ஏழு தலைமுறை கண்ட வைத்திய சிகாமணிகளின் அருமையான கண்டுபிடிப்பு...

    Golden herb

    ungaluku enna pa neenga paithiyam

    இப்படியானவர்களை பார்த்தால் வேடிக்கையாகத்தான் உள்ளது. நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு இரும்பு, தாமிரம், துத்தநாகம் போன்ற உலோக சத்துக்கள் தேவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அனைத்து வகையான உலோகச் சத்துக்களும் நம் உடலுக்கு தேவைப்படுவதில்லை.

    நம் உடலுக்கு வைட்டமின், ப்ரோட்டீன் தாது உப்புக்களோடு உலோக அயனிகளான இரும்பு, செம்பு, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, கோபால்ட், மாலிப்டினம் இவைகள் மட்டும்தான் தேவைப்படுகின்றன. இதை தவிர்த்து தங்கம், வெள்ளி, வெண்கலம், பழைய ஈயம், பித்தளை, அலுமினியம், மண்வெட்டி, கடப்பாறை, பாக்குவெட்டி மாதிரியான உலோக சத்துக்களெல்லாம் தேவைப்படுவதில்லை.

    முக்கியமாக தங்கம், வெள்ளி, ஈயம், அலுமினியம், பாதரசம் முதலான உலோக  சத்துக்களெல்லாம் நம் உடலுக்கு தேவையே இல்லை. உண்மை இப்படியிருக்க ஒரு மூலிகையை காட்டி இந்த மீடியாக்களும், சமூகவலைத் தளங்களும் பண்ணுகிற அலப்பறை இருக்கே... அப்பப்பா தாங்கவே முடியல...

    கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி என்று ஏதோ ஒரு மூலிகையை கையில் வைத்துக்கொண்டு இதில் தங்கச்சத்து அதிகமுள்ளது எனவே இதனை எங்காவது கண்டால் உடனே பிடுங்கி திங்காம விட்டுடாதீங்கன்னு இவனுக பண்ணுற அட்டூழியம் இருக்கே... முடியலடா சாமி...

    கொஞ்சம் விட்டா தங்கத்தை விட விலைமதிப்பு அதிகமுள்ள "பிளாட்டினம்" சத்து உள்ளது. எனவே இந்த மூலிகையை எங்கு கண்டாலும் உடனே புடுங்கி திங்காம இருந்திடாதீங்கன்னு சொன்னாலும் சொல்லுவானுக போல...

    platinum Nutrition

    என்னாது "பிளாட்டினமா"?...

    thalaimurai kanda sidha vaidhiya sigamani

    நமக்கு தேவையோ தேவையில்லையோ 70 கிலோ எடையுள்ள ஒருவருடைய உடம்பில் சுமார் 0.229 மில்லி கிராம் தங்கம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். தங்கம் மட்டுமல்ல உடலுக்கு தேவைப்படாத பல கழிவுகளும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கக்கூடிய "பாதரசம்", "ஈயம்" போன்ற விஷ உலோக வஸ்துக்கள் கூட உடலில் ஆங்காங்கே தேக்கமடைந்து மிக சொற்ப அளவில் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு காரணம் இவைகள் எல்லாவற்றையும் மிக துல்லியமாக வடிகட்டி அகற்றும் திறன் நம் உடலுக்கு இல்லையென்பதால்...

    உடலிலுள்ள இந்த 0.229 மில்லி கிராம் தங்கத்தினால் உடலுக்கு ஏதாவது நன்மை உள்ளதா என்றால் எந்த நன்மையும் இல்லை. ஆம்... உண்மைதான்... இந்த தங்க சத்தினால் நம் உடலுக்கு ஒரு குண்டூசி முனையளவு கூட பிரயோஜனமில்லை என்பதுதான் உண்மை.

    இன்னும் சொல்லப்போனால் மேற்கண்ட அளவைவிட தங்கம் நம் உடலில் அதிகரித்தால் அது நம் உடலில் விஷமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். எனவே அவ்வப்போது நம் உடலில் சேரும் தங்க தாதுக்களை வெளியேற்றும் பணியில் நம்முடைய கல்லீரலும், கிட்னியும் கூடுதல் முனைப்புடன் மும்முரமாக பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

    உடலுக்கு தேவையில்லாத இந்த தங்கம் என்னும் உலோக சத்து ஏதோ ஒரு காரணத்தால் உடலில் அதிகரித்தால் இறுதியில் அது கிட்னி செயலிழப்பில் கொண்டுபோய் விட்டுவிடும். வாயும் ஒரு பக்கமாக கோணிப்போகும். முடிவில் கிட்டதட்ட கிட்டினி சட்டினி ஆகி விடும்.

    உண்மை இப்படி இருக்க எந்த மூலிகையை எடுத்துக்கொண்டாலும் இதில் "தங்கம்" இருக்கு, "வெள்ளி" இருக்கு எனவே இதனை கண்டால் உடனே பிடுங்கி சாப்பிடுங்க என்று சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் கூவிக் கொண்டிருக்கும் இந்த பயித்தியக்கார பயலுக பண்ணுகிற அலப்பறை இருக்கே... இது எந்த விதமான லாஜிக் என்று உண்மையாகவே நமக்கு புரியவில்லை?..

    நம் உடலுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத இன்னும் சொல்லப்போனால் தீங்கு தரக்கூடிய ஒரு உலோகத்தை வைத்துக்கொண்டு தங்க சத்து மூலிகை, மண்ணாங்கட்டி சத்து மூலிகைன்னு கூப்பாடு போடுற இவனுகளெல்லாம் உண்மையிலேயே பயித்தியமா அல்லது பயித்தியம் வந்த மாதிரி நடிக்கிறானுகளா? ஒண்ணுமே புரியலையே ஈஸ்வரா ஏழு குண்டல வாடா, வெங்கட்ரமணா கோவிந்தா கோகோவிந்தா!!!...😩😪😫😭

    💢💢💢💢

    இதன் முதல் பகுதியை [Part - 1] படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள "லிங்க்" ஐ உங்கள் பட்டு விரல்களால் பட்டுன்னு தட்டுங்க.

    💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    1. சில தாவர பெயர்களை இன்று தான் வாசிக்கிறேன்...

      விளக்கங்களும் ஆதங்கமும் அருமை...

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.