"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" பில்லாந்தஸ் இனங்களும் கீழாநெல்லியும் - Keelanelli - Phyllanthus Species.

பில்லாந்தஸ் இனங்களும் கீழாநெல்லியும் - Keelanelli - Phyllanthus Species.

கீழாநெல்லி - பில்லாந்தஸ் அமாரஸ்.

Keelanelli - Phyllanthus amarus.

[PART - 1]

நாம் இந்த பதிவில் "கீழாநெல்லி" - Phyllanthus amarus (பில்லாந்தஸ் அமாரஸ்)  என அழைக்கப்படும் மூலிகையைப் பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். "கீழ் காய் நெல்லி" என்பதே காலப்போக்கில் "கீழாநெல்லி" என்று மருகிவிட்டன.

இதற்கு "கீழ் காய் நெல்லி" என்று பெயர்வரக் காரணம் நெல்லியைப் போன்று இலைகளையும், காய்களையும் பெற்றிருப்பதால் மட்டுமல்ல, கூட்டிலைகளின் கீழாக இலை நடுத்தண்டில் வரிசையாக காய்களை கொண்டிருப்பதால்தான் இதற்கு "கீழ்க்காய் நெல்லி" என்று பெயர் ஏற்பட்டுள்ளது.


இலைகளின் கீழ் பகுதியில் வரிசையாகக் காய்களைக் கொண்டுள்ளதால் இதனை கீழாநெல்லி என்கின்றோம் என்பதெல்லாம் சரிதான்... இதைப்போலவே இலைகளின் மேலாக காய்களைக் கொண்டுள்ள நெல்லி வகைகள் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினோமென்றால் "ஆம் இருக்கின்றது" என்பதே அதற்கான பதில்.

அதற்கு "மேலாநெல்லி" என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் "Phyllanthus tenellus". இது இலைகளுக்கு மேலாக வரிசையாக நெல்லிக்காய்களைப் போன்ற சிறிய காய்களைக் கொண்டுள்ளதால் இதற்கு "மேலாநெல்லி" என்று பெயர்.

Phyllanthus tenellus

Phyllanthus_tenellus_2

சரி,... இந்த மேலாநெல்லியைப்பற்றி பிறிதொரு பதிவில் விரிவாகப் பார்ப்போம். இப்பொழுது நாம் கீழாநெல்லியைப்பற்றி பார்க்கலாம்.

கீழாநெல்லியானது "பில்லாந்தஸ்" (Phyllanthus) என்னும் பேரினத்தை சார்ந்தது. இந்த பிலாந்தஸ் பேரினத்தில் மொத்தமாக 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மேலே நாம் பார்த்த "மேலாநெல்லி" (Phyllanthus tenellus) யைத் தவிர பிற அனைத்துமே இலைகளின் கீழாகத்தான் காய்களைக் கொண்டுள்ளன.

ஆனால் இதில் Phyllanthus amarus (பில்லாந்தஸ் அமாரஸ்) என சொல்லப்படும் இனத்தை மட்டுமே நாம் "கீழாநெல்லி" என்ற பெயரில் மருந்தாக பயன்படுத்திவருகிறோம். எனவே இலைகளின் கீழாக வரிசையாக காய்களை கொண்டுள்ளதாலேயே அது கீழாநெல்லி என்னும் மூலிகையாக ஆகிவிடாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

நாம் இங்கு "பில்லாந்தஸ்" என்று பெயர் தாங்கிய 1200 வகையான தாவரங்களைப் பற்றியும் பார்க்கப் போவதில்லை. மாறாக அதிலுள்ள வெறும் 12 வகையான தாவரங்களைபற்றி மட்டுமே பார்க்க இருக்கிறோம்.

ஏனென்றால், இந்த 12 வகை தாவரங்கள் மட்டுமே மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த 12 வகையான தாவரங்களில் நம்முடைய கீழாநெல்லியும் ஒன்று.

எனவே, நாம் இப்பதிவில் இந்த 12 வகையான தாவரங்களையும் அவர்களின் இடத்திற்கே சென்று கொஞ்சம் குசலம் விசாரித்துவருவோம் வாருங்கள்.

ஏனென்றால்..

நம்முடைய கீழாநெல்லி ஐயங்காரைப்பற்றி முழுதாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருடைய குலம், கோத்திரம், குடும்பம், குழந்தைக்குட்டி வகையறாக்களைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமல்லவா?

அப்படி தெரிந்து வைத்திருந்தால்தானே ஐயங்காரை ஆத்துப்பக்கமோ அல்லது குளத்துப்பக்கமோ அல்லது அட்லீஸ்ட் அதிகாலையில் கொல்லைப் பக்கமாகவோ பார்த்தால்கூட கூச்சப்படாமல் குசலம் விசாரிக்க முடியும்!! என்ன நான் சொல்லுறது சரிதானுங்களே? வாங்க கொஞ்சம் சூசகமாக விசாரிப்போம்.

    பில்லாந்தஸ் பேரினம்.

    Phyllanthus Genus.

    பில்லாந்தஸ்ஸியே (Phyllanthaceae) என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்த குறிப்பிட்டவகை  தாவரங்களை உள்ளடக்கியதுதான் பில்லாந்தஸ் (Phyllanthus) என்னும் பெயர்தாங்கிய பேரினவகை குரூப்ஸ்.

    இந்த "பில்லாந்தஸ்" என்பது நம்முடைய நெல்லி இனத்தை குறிப்பது. இந்த நெல்லி (Phyllanthus) பேரினத்தில் உலகம் முழுவதும் மொத்தமாக 750 முதல் 1200 வரையான சிற்றின தாவரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இவைகளில் ஒன்றுதான் நம்முடைய கீழாநெல்லி.

    கீழாநெல்லியை பார்ப்பதற்கு முன்னால் அதன் மிகநெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை சந்தித்து குசலம் விசாரிப்போமா!!.

    இந்த உறுப்பினர்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியகண்டங்கள் முழுவதும் பரவி காணப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இதில் மரங்களாக வளர்பவை, புதர்செடிகளாக வளர்பவை என இரு பிரிவுகள் உள்ளன. புதர்செடிகளாக வளரும் பிரிவிலுள்ள தாவரங்களில் சுமார் 12 வகையான தாவரங்களே நோய்தீர்க்கும் மூலிகைகளாக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பில்லாந்தஸ் மூலிகை தாவரங்கள்.

    இந்த பில்லாந்தஸ் தாவரங்களிலுள்ள 1200 வகையான தாவரங்களில் வெறும் 12 வகையான தாவரங்கள் மட்டுமே மூலிகைகளாக உலகின் பல்வேறு நாட்டினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஆரம்பத்திலேயே பார்த்தோமல்லவா... அவைகளைப்பற்றிய விபரங்களை கீழேயுள்ள அட்டவணையில் காண்க...

    TAMIL ENGLISH
    பி. அஜ்மேரியனுஸ் P. ajmerianus
    பி. டெபிலிஸ் P. debilis
    பி. ஃப்ரேட்டெர்னஸ் P. fraternus
    பி. யுரினரியா P. urinaria
    பி. கொழிகோடியனஸ் P. kozhikodianus
    பி. மடராஸ்படன்சிஸ் P. maderaspatensis
    பி. ஹீடீ P. rheedii
    பி. ரோடன்டிஃபோலியஸ் P. rotundifolius
    பி. ஸ்கேப்ரிஃபோலியஸ் P. scabrifolius
    பி. விர்கேட்ஸ் P. virgatus
    பி. நிரூரி P. niruri
    பி. அமாரஸ் P. amarus

    இந்த 12 இனங்களில் கடைசியாக உள்ள "பில்லாந்தஸ் அமாரஸ்" (Phyllanthus amarus) தான் இக்கட்டுரையின் கதாநாயகனாகிய நம்ம ஊரு "கீழாநெல்லி".

    முதலில் மருத்துவத்தன்மையுள்ள இந்த 12 வகையான "பில்லாந்தஸ்" இனங்களைப்பற்றியும் சுருக்கமாக பார்ப்போம்.


    பில்லாந்தஸ் அஜ்மேரியனுஸ்.

    Phyllanthus ajmerianus.

    Phyllanthus ajmerianus

    தாவரவியல் பெயர் Phyllanthus ajmerianus.

    இந்த இனம் இந்தியாவில் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே காணக்கிடைப்பதாக கூறப்படுகிறது. இது அடித்தண்டிலிருந்து பல்வேறு கிளைகளாக கிளைக்கும் தன்மையை பெற்றுள்ளன. 5 லிருந்து 8 செ. மீ  வரை மட்டுமே மேல்நோக்கி வளர்கின்றன மற்றபடி பக்கவாட்டில்லேயே தரைக்கு இணையாக படர்கின்றன.

    இதன் இலைகள் முட்டைபோன்று நீள் வட்டவடிவில் உள்ளன. பூக்கள் ஈட்டி வடிவமான 5 இதழ்களை கொண்டுள்ளன. அடியில் ஒன்றாக இணைந்து மேலே பிரிந்த 5 மகரந்த தாள்களையும் கொண்டுள்ளன.

    இதன் காய்கள் கோள வடிவிலும் உள்ளே உள்ள விதைகள் முக்கோண வடிவிலும் காணப்படுகின்றன. விதைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் 1 மி.மீ அளவில் உள்ளது. விதைகள் முதுகுப்புறத்தில் 6 அல்லது 7 கோடுகளுடன் காணப்படுகின்றன.


    பில்லாந்தஸ் டெபிலிஸ்.

    Phyllanthus debilis.

    Phyllanthus debilis plant.

    தாவரவியல் பெயர் Phyllanthus debilis.

    ஆங்கிலம் Phyllanthus debilis.

    தாயகம் - இந்தியா மற்றும் இலங்கை.

    இது வருடாந்திரமாக வாழும் தாவரம். இது ஆண் மற்றும் பெண் பூக்களை தனித்தனியே கொண்டுள்ளன. சுமார் இரண்டரை அடி உயரம்வரை நிமிர்ந்து வளருகின்றன. அதேவேளையில் அடித்தண்டிலிருந்து பக்கக்கிளைகளையும் உற்பத்தி செய்கின்றன.

    இது மாற்றிலையடுக்கில் சிறகுவடிவ கூட்டிலையை கொண்டது. ஒவ்வொரு இலைத்தண்டுகளும் 2 அங்குலத்திலிருந்து 4 அங்குலம்வரை நீளம் இருக்கின்றன. அதில் இருபக்கங்களிலும் 15 லிருந்து 35 வரையிலான குறுகிய நீள்வட்ட இலைகள் மாற்றிலையடுக்கில் உள்ளன. இலைகள் 8 லிருந்து 21 மி.மீ நீளமும், 2.5 முதல் 5 மி.மீ அகலமும், இலையின் காம்புகள் 0.4 மி.மீ நீளத்திலிருந்து 1 மி.மீ  நீளத்திலும் இருக்கின்றன.

    Phyllanthus debilis flower and fruits.

    இனப்பெருக்கம் விதைகள்மூலமாகவே நடைபெறுகின்றன. விதைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் 1 மி.மீ அளவில் உள்ளன. விதைகள் முதுகுப்புறத்தில் 6 அல்லது 7 கோடுகளுடனும் காணப்படுகின்றன.


    பில்லாந்தஸ் ஃப்ரேட்டெர்னஸ்.

    Phyllanthus fraternus.

    தாவரவியல் பெயர் Phyllanthus fraternus.

    தமிழ் பெயர் - நில நெல்லி.

    மலையாள பெயர் - கிஜார் நெல்லி.

    Phyllanthus fraternus pant.

    ஆங்கில பெயர் - இது ஆங்கிலத்தில் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை...

    • Shatterstone,
    • Stone breaker.
    • Gulf leaf flower.
    • Child pick-a-back.
    • Gale of wind.
    • Hurricane Weed.

    இது வருடாந்திர தாவர இனம். இவைகள் பெரும்பாலும் காட்டு பகுதிகளிலேயே காணப்படுகின்றன. சில இடங்களில் சாலையோரங்களிலும் காணப்படுவதுண்டு.

    அதிகப்படியாக 23 அங்குல உயரம்வரை கிளைகளே இல்லாமல் வளரும் இனம். அதுவும் நேராக வளராமல் இடுப்பு ஒடிந்தவன் எழுந்து நிற்பது போல கொஞ்சம் கோணல்மாணலாகத்தான் நிற்கிறது. இலைகள் 11மி.மீ நீளத்திலும் 4.8 மி .மீ அகலத்திலும் உள்ளன.

    புல்வெளி, பாறைகள், மண் மற்றும் சரளை நிலங்களில் வளர்கின்றன. சாகுபடி நிலங்களில் களைச்செடிகளாகவும் வளருவதுண்டு.

    ஆண்பூக்கள், பெண்பூக்கள் என தனித்தனி பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூக்களும் ஆறு இதழ்களை கொண்டுள்ளன.

    கயானா, பிரெஞ்சு கயானா மற்றும் சுரினாம் பகுதிகளில் இது மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்படுகிறது.

    காய்ச்சல், வயிற்றுபோக்கு, இருமல், விக்கல் இவைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மலேரியா மற்றும் மஞ்சட்காமாலைக்கு சிகிச்சையளிக்க வேர்கள் மற்றும் இலைகள் பயன்படுத்தப்படுகிறது.

    காயங்கள், புண்கள், சிரங்கு, படை மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க இதன் காய்கள் பயன்படுத்தப்படுகிறது. தோல் தொற்று நோய்களுக்கு இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

    வேர் மற்றும் இலைகள் காயவைத்து தூளாக செய்து புண்களை ஆற்ற பயன்படுத்துகின்றனர்.

    இத்தாவரத்தின் இனப்பெருக்கம் விதைகள் மூலமாக நடைபெறுகின்றன.


    பில்லாந்தஸ் யுரினரியா.

    Phyllanthus urinaria.

    Phyllanthus urinaria.

    தாவரவியல் பெயர் Phyllanthus urinaria.

    பூர்வீகம் - ஆசியா. தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.

    தமிழ் பெயர் - செங்கீழாநெல்லி அல்லது சிவப்பு கீழாநெல்லி.

    Phyllanthus urinaria fruits.

    இது தமிழில் "செங்கீழாநெல்லி" அல்லது "சிவப்பு கீழாநெல்லி" என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இதன் கனிகள் சிவப்புநிறத்தில் காணப்படுகின்றன.

    இது இரண்டடி உயரம் வளரக்கூடியது. செங்குத்தாக வளர்வதோடு பக்கவாட்டிலும் கிளைகளை பரவசெய்கின்றன. இலைகளை நீள்வட்ட வடிவில் உள்ளன. சிறிய வெண்மை நிற மலர்களையும், பச்சை நிற காய்களையும் கொண்டுள்ளன. காய்கள் கனியும்போது சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன.

    Phyllanthus urinaria flower fruits.

    பொதுவாக வயல்கள், காடுகள், தரிசுநிலங்களில் காணப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் இது பரவலாக மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.


    பில்லாந்தஸ் கொழிகோடியனஸ்.

    Phyllanthus kozhikodianus.

    Phyllanthus kozhikodianus plants.

    தாவரவியல் பெயர் Phyllanthus kozhikodianus.

    குடும்பம் - பில்லாந்தஸ்ஸியே - Phyllanthaceae.

    பேரினம் - பில்லாந்தஸ் - Phyllanthus.

    பலவித மருந்துகளை உட்கொண்டதால் பாதிப்படைந்த கல்லீரலை குணப்படுத்தும் திறன் இதற்கு உள்ளதாக கூறப்படுகிறது.


    பில்லாந்தஸ் மடராஸ்படன்சிஸ்.

    Phyllanthus maderaspatensis.

    தாவரவியல் பெயர் Phyllanthus maderaspatensis.

    Phyllanthus maderaspatensis fruits.

    வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக காணப்படுகின்றன. தென்னிந்திய பகுதிகளில் கரிசல் மற்றும் செம்மண் நிலங்களில் பரவலாக காணப்படுகின்றன.

    குறைவான கிளைகளுடன் நிமிர்ந்து வளரக்கூடியது. 1 வருடத்திற்கும் மேலாக வாழும் தன்மைகொண்டது. இது 3 அடி முதல் அதிகப்படியாக 4 அடி வரை வளரும் இயல்புடையது.

    ஒரு அச்சில் 1லிருந்து 4 ஆண்பூக்களும், ஒரே ஒரு பெண் பூக்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு காய்களுக்குள்ளும் 6 விதைகள் இருக்கின்றன. விதைகள் முக்கோண வடிவத்துடன் 1.5 மி.மீ நீளத்தில் அடர் பழுப்பு நிறத்தில் பளபளப்பாக காணப்படுகின்றன. விதைகள் மூலமாக இனப்பெருக்கம் நடைபெறுகின்றன. விதைத்த 3 மாதங்களில் தாவரங்கள் பூக்க ஆரம்பித்துவிடுகின்றன.

    கென்யாவில் இத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் குடிநீரானது பாலுணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

    பல்வலி, தலைவலி, மூச்சுக்குழல் அழற்சி, வாதநோய், மஞ்சட்காமாலை, சிரங்கு, இரைப்பை கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.


    பில்லாந்தஸ் ஹீடீ.

    Phyllanthus rheedii.

    Phyllanthus rheedii.

    தாவரவியல் பெயர் Phyllanthus rheedii.

    கேரளாவிலுள்ள பழங்குடியின மக்கள் இந்த மூலிகையின் அனைத்து பகுதிகளையும் கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திவருகின்றனர்.

    Phyllanthus rheedii leaf

    இந்த தாவரம் antihyperglycemic, antihyperlipidemic மற்றும் ஆக்சிஜனேற்ற விளைவுகளையும் கொண்டுள்ளன.


    பில்லாந்தஸ் ரோடன்டிஃபோலியஸ்.

    Phyllanthus rotundifolius.

    Phyllanthus rotundifolius.

    தாவரவியல் பெயர் Phyllanthus rotundifolius.

    இது ஒரு வருடாந்திர மூலிகை. சுமார் ஒன்றரை அடி (45 cm) உயரம்வரை வளருகிறது. பெரும்பாலும் இவைகள் மணல் மற்றும் வண்டல்மண் நிலங்களிலேயே அதிக அளவில் காணப்படுகின்றன. கடலோரப்பகுதிகளிலும் காணக்கிடைக்கிறது. சிலநேரங்களில் பயிர்களினூடே களைச்செடியாகவும் காணப்படுவதுண்டு.

    Phyllanthus rotundifolius flowers.

    இலைகள் வட்டவடிவில் கொஞ்சம் பெரிதாகவே உள்ளன. ஆனால் இலைக்காம்பு மிகவும் குறுகியது. 1.5 செ.மீ அளவே நீளம் கொண்டது.

    ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியே உள்ளன. பூக்கள் 3 மகரந்த தாள்களை கொண்டுள்ளன. விதைகள் முதுகில் கோடுகளை கொண்டுள்ளன. விதைகள்மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.

    இதன் இலைச்சாறு காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.


    பில்லாந்தஸ் ஸ்கேப்ரிஃபோலியஸ்.

    Phyllanthus scabrifolius.

    தாவரவியல் பெயர் :- Phyllanthus scabrifolius.

    இந்த மூலிகை கர்நாடகாவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் நாட்பட்ட வெட்டைநோய், வயிற்றுபோக்கு, சிறுநீர்தாரை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இதன் சாற்றினை கொண்டு சிகிச்சையளிகின்றனர்.

    Phyllanthus scabrifolius leaf

    விதைகளை புண்களை ஆற்ற பயன்படுத்துகின்றனர். சொறி சிரங்குகளுக்கு இதன் இலைகளை அரைத்து பூசுகின்றனர். வேர்களை மஞ்சட்காமாலை நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர்.


    பில்லாந்தஸ் விர்கட்ஸ்.

    Phyllanthus virgatus.

    Phyllanthus virgatus.

    தாவரவியல் பெயர் :- Phyllanthus virgatus.

    தமிழ் பெயர் :- படர் நெல்லி.

    இவை பெரும்பாலும் காடுகளிலேயே காணப்படுகின்றன. இது உயரமாக வளர்வதுடன் தாவரத்தின் அடிப்பகுதியில் நிறைய பக்கக்கிளைகளை உற்பத்தி செய்து அதிகபரப்பளவில் படர்கின்றன. இதனாலேயே இது தமிழில் "படர்நெல்லி" என அழைக்கப்படுகிறது.

    Keelanelli

    கிழக்கு ஆசியா, இந்திய துணைக்கண்டம், தாய்லாந்து, மியான்மர், சீனா, மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆஸ்திரேலியா உட்பட இன்னும் சில பகுதிகளில் இவைகள் காணக்கிடைக்கின்றன.

    இது சுமார் 2 அடி உயரம்வரை வளரக்கூடிய வருடாந்திர தாவரம். சில சமயங்களில் 3 அடி உயரம்வரை வளர்வதுண்டு.

    குழந்தைகளின் குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க இத்தாவரம் பயன்படுவதாக கூறப்படுகிறது.


    பில்லாந்தஸ் நிரூரி.

    Phyllanthus niruri.

    Phyllanthus niruri.

    தாவரவியல் பெயர் Phyllanthus niruri.

    பில்லாந்தஸ் நிரூரிக்கும், பில்லாந்தஸ் அமரஸ்க்குமான வித்தியாசங்களை கண்டறிவது கடினமான விஷயமாகவே உள்ளது.

    இது ஒரு வருடாந்திர தாவரம். கடலோரப்பகுதிகளில் வளரும் ஒரு வெப்ப மண்டல தாவரம். 6 அங்குலத்திலிருந்து 25 அங்குலம் உயரம்வரை வளருகிறது. தண்டுகள் வெளிர்பச்சை நிறமானவை. வெளிர் பச்சை நிற பூக்களை கொண்டுள்ளன.

    இதில் வேர், தண்டு, இலை, காய்கள் அனைத்துமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலைகள் இரத்த சோகைக்கும், வேர்கள் வயிற்றுப்போக்கிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    இதுவரையில் நாம் 11 வகையான பில்லாந்தஸ் (Phyllanthus) தாவரங்களை பார்த்தோமல்லவா... இவைகள் அனைத்துமே இலைகளின் கீழாகத்தான் காய்க்கின்றன என்றாலும் இவைகளில் எதுவுமே கீழாநெல்லி அல்ல. பின் ஏன் இவர்களைப்பற்றி இவ்வளவு நேரம் பார்த்தோமென்றால் இவைகளும் பார்ப்பதற்கு கீழாநெல்லிபோல் காட்சி அளிப்பதாலும், கீழாநெல்லிக்கும் இதற்குமான வித்தியாசங்களை கண்டுணர வேண்டுமென்பதாலும், இவைகளும் மருத்துவ குணங்களை கொண்டிருப்பதோடு பல இடங்களில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை புரிந்து கொள்வதற்காக மட்டுமே.

    இனி நாம் பார்க்கப்போகும் 12 வது இனமான பில்லாந்தஸ் அமரஸ் (Phyllanthus amarus) இனம்தான் நாம் வழக்கமாக அழைக்கப்படும் கீழாநெல்லி இனமாகும். வாருங்கள் அதுபற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை பார்ப்போம்.


    பில்லாந்தஸ் அமாரஸ்.

    Phyllanthus amarus.

    Phyllanthus amarus

    தாவரவியல் பெயர் Phyllanthus amarus (பில்லாந்தஸ் அமாரஸ்).

    தமிழ் பெயர் - கீழாநெல்லி.

    ஆங்கிலப்பெயர் - Stone breaker, Indian Phyllanthus.

    காணப்படும் நாடுகள் - இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா.

    வாழிடம் - வெப்ப மண்டல பிரதேசங்களில் வளரும் சதுப்புநில தாவரம். ஈரப்பதமான இடங்களில் செழித்துவளரும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வருடாந்திர தாவரமாகும்.

    Phyllanthus amarus leaf.

    நாம் மஞ்சட்காமாலைக்கு பயன்படுத்துகிறோமல்லவா கீழாநெல்லி. அது இந்த அமாரஸ்தான்.

    இதுவரை மருந்தாக பயன்படும் கீழாநெல்லி அல்லாத 11 வகையான    பில்லாந்தஸ் இனங்களைப்பற்றியும், அதனுடன் கடைசியாக கீழாநெல்லி என்று பெயர்பெற்ற "பில்லாந்தஸ் அமாரஸ்" பற்றியும் பார்வையிட்டோம்.

    இனி வரும் பகுதிகளில் "பில்லாந்தஸ் அமாரஸ்" என்று பெயர்தாங்கிய கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைப்பற்றியும், அதன் சாகுபடி நுட்பங்களைப்பற்றியும், உண்மையாகவே இதற்கு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் திறன் உள்ளதா? என்பது பற்றியும் அறிந்துகொள்ள இருக்கிறோம்.

    இதனை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இப்பதிவின் இரண்டாவது பகுதிக்கு வருகைதாருங்கள்.

    இரண்டாவது பகுதிக்கு செல்ல கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க.

    >>"கீழாநெல்லி - மருத்துவ குணங்கள் - Phyllanthus amarus - Medicinal properties"<<

    🌽🌽🌽🌽🌽🌽🌽

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    1. எதை எதிர்ப்பார்த்தேனோ அதை அடுத்த பதிவில் என்று சொல்லி விட்டீர்கள்... தொடர்கிறேன்...

      பதிலளிநீக்கு
    2. உங்கள் எதிர்பார்ப்பு அடுத்த பதிவில் நிறைவேறும் .. நன்றி நண்பரே !!!

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.