ஹெலிகோனியா கார்டன்.
Heliconia Garden.
Part - 2.
கெலிகோனியா கார்டன் - Heliconia Garden என்னும் இத்தொடரின் முதல் பகுதியில் சிலவகை ஹெலிகோனிய தாவர இனங்களைப் பார்வையிட்டோம். அதன் இரண்டாவது பகுதியாகிய இதில் மேலும் சில ஹெலிகோனிய தாவர இனங்களை பார்வையிடுவோம் வாருங்கள்.
இப்பதிவின் முதல் பகுதியை பார்வையிட அடுத்துள்ள சுட்டியை சுட்டுங்க...
>> ஹெலிகோனியா கார்டன் - Different Types of Heliconia Garden <<
Heliconia Garden.
இதிலுள்ள பல்வேறு இனங்களை பார்வையிடுவதற்கு முன்னால் முதல் பகுதியில் சொல்லாத ஹெலிகோனியாவின் குடும்ப பாரம்பரியத்தை கொஞ்சம் இந்த பதிவில் அறிந்துகொள்வது அவசியம். ஏனென்றால்... வரலாறு முக்கியம் அமைச்சரே!!
குடும்ப பாரம்பரியம்.
பொதுவாக தாவரவியல் துறையில் ஒரே இயல்பு மற்றும் பண்புகள் கொண்ட பலவகை தாவரங்கள் ஒரே குடும்பமாக தொகுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த "ஹெலிகோனியா" (Heliconia) என்னும் குடும்பத்தில் ஒன்லி ஹெலிகோனிய வகை தாவரங்களுக்கு மட்டுமே அனுமதி.
ஹெலிகோனியாவில் சுமார் 200 இனங்கள் மட்டுமே உள்ளன. இந்த இருநூறு இன தாவரங்களுக்கு மட்டுமே ஹெலிகோனிய குடும்பத்தில் குடும்ப உறுப்பினராக நீடிக்கும் தகுதி உண்டு. வெளியிலிருந்து வேறு யாராவது நானும் உன் தூரத்து சொந்தம்தான் என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் வர முயற்சி செய்தால் விளையாட்டு விபரீதமாகி முடிவில் வெட்டுக்குத்தில் போய் நின்றுவிடும்.
உண்மைதான், தன்னுடைய குடும்பத்தில் தன்னுடைய இரத்த உறவான கெலிகோனியாக்களுக்கு மட்டுமே இடம்கொடுத்து தங்களுடைய பரம்பரையின் பாரம்பரியத்தை இம்மியளவுகூட பிசகாமல் இன்றளவும் கட்டிக்காத்துவருகின்றன இந்த ஹெலிகோனியாக்கள்!!!
பெரும்பாலான கெலிகோனியாக்கள் வாழைமரம் போலவே காட்சி தருகின்றன. இலைகளும் அச்சு அசலாக வாழை இலைபோலவே இருக்கின்றன!!
இருந்தால் என்ன?.. பூக்களில்தான் நிறைய வேறுபாடுகள் உள்ளதே.. பூக்கள் மட்டுமா.. காய்களும்தான் மேட்ச் ஆகவில்லையே!..
இலைகள் ஒன்றாக உள்ளது என்பதற்காக எல்லோராலும் "சூனா பானா" ஆகிவிடமுடியுமா என்ன?
பரம்பரையை பின்னுக்குத்தள்ளிவிட்டு பழக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்தால்... இத்தனைநாள் கட்டிக்காத்துவந்த குடும்ப பாரம்பரியத்தை வெட்டிசாய்த்ததுபோல் ஆகிவிடாதா?
எனவேதான், பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும்கூட வாழைமரத்திற்கு ஹெலிகோனியா குடும்பத்துடன் ஒட்டிஉறவாட அனுமதி இல்லை.
(பாவம் .. வாழைமரம் இன்றும்கூட "முசேசி" (Musaceae) என்னும் ஏழைப்பட்ட குடும்பத்தில்தான் வாழ்க்கைப்பட்டுக்கொண்டு இருக்கிறது).
சரி, இனி வாழைமரத்துக்காக பரிதாபப்படுவதை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு ஹெலிகோனியாவால் நமக்கு என்ன பயன் என்பதனை கொஞ்சம் அலசுவோமா?..
பயன்கள்.
ஹெலிகோனியம் மலர்கள் அவைகளின் வடிவங்கள் மற்றும் கவர்ச்சியான வண்ணங்களினால் மலர் அலங்காரங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.
மலர் அலங்காரத்திற்காக மட்டுமல்ல வீடுகள், பூங்கா மற்றும் அலுவலக முகப்புகளில் அழகுதரும் செடிகளாகவும் இது வளர்க்கப்பட்டுவருகிறது.
வெறும் அழகுதரும் செடியாக மட்டுமல்ல இந்த தாவரத்தை பழங்குடியினர் பலர் நோய்தீர்க்கும் மூலிகையாகவும் (Herbal Plants) பயன்படுத்திவருகின்றனர்.
நோய் தீர்க்கும் மூலிகையாக மட்டுமல்ல பசிதீர்க்கும் உணவாகவும் இது பயன்டுத்தப்படுகிறது. "ஹெலிகோனியா பிஹாய்" (Heliconia bihai) போன்ற சில இனங்களின் வேர்த்தண்டு கிழங்குகள் வறுத்து அல்லது சமைத்து உண்ணப்படுகிறது. இதன் இளந்தளிர்களும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வளரும் நிலப்பகுதிகள்.
தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டுவருகிறது.
இதனை வளர்ப்பதற்கு போதிய அளவு நிலப்பரப்பு இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா?.. கவலையை விட்டொழியுங்கள். ஏனென்றால் இதில் பலவற்றை நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் உள்ள பூந்தொட்டிகளில்கூட வளர்த்துவரலாம். மலர்களுக்கும் குறைவிருக்காது, உங்கள் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.
Different Types of Heliconia.
ஹெலிகோனியா இண்டிகா.
Heliconica indica.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா இண்டிகா - Heliconica indica.
இனம் :- இண்டிகா - Indica.
இது 4 முதல் 8 அடி உயரம் வரை வளருகின்ற நடுத்தர இனம். இலைகள் 6 முதல் 7 அடி நீளமுள்ளதாக இருப்பதோடு பளப்பளப்பான மேற்பரப்பை கொண்டிருக்கும். இலைகளின் நிறம் பச்சையாகவும் அதில் பழுப்புகலந்த வெள்ளை நிறத்தில் வரைவரையான கோடுகளையும் பெற்றிருக்கும். ஆரஞ்சு அல்லது கருஞ்சிவப்பு நிறமுள்ள அழகான பூக்களையும் கொண்டுள்ளன.
💢💢💢💢
ஹெலிகோனியா கொல்காண்டியா.
Heliconia colgantea.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா கொல்காண்டியா - Heliconia colgantea.
இனம் :- கொல்காண்டியா - Colgantea.
தாயகம் :- இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது வாழைமரத்தை ஒத்து காணப்படுகின்றன. இலைகளும் அவ்வாறே காணப்படுகின்றன. 2 முதல் 3.5 மீட்டர் உயரம்வரை வளருகிறது.
இதன் இலைகள் அதிகபட்சமாக 5 அடி நீளத்திலும், முக்கால் அடி அகலத்திலும் காணப்படுகின்றன.
பூக்கள் மேலிருந்து கீழாக தொங்கியநிலையில் காட்சியளிக்கின்றன. பூ மடல்கள் சிவப்பு நிறத்துடனும், 7 முதல் 11 எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு மடல்களுக்குள்ளும் 15 முதல் 20 எண்ணிக்கையில் மஞ்சள்நிற பூக்கள் உள்ளன.
ஹெலிகோனியா எமிக்டியானா.
Heliconia aemygdiana.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா எமிக்டியானா - Heliconia aemygdiana.
இனம் :- எமிக்டியானா - Aemygdiana.
தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட தாவரம். தென் அமெரிக்க (South America) நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
இது 5 முதல் 12 அடி உயரம்வரை வளரும் நடுத்தர இனம். குறுகிய தடிமனான தண்டுகள் மட்டுமே 3 முதல் 6 அடி உயரம்வரை இருக்கின்றன.
இலைகள் வாழை இலைகளைபோல நன்கு பரந்து காணப்படுகின்றன.
இதன் மஞ்சரிகளின் மடல்கள் சுழல் அமைப்புகளில் காணப்படுகின்றன. பூக்களின் மடல்கள் சிவப்புநிறத்திலும், பூக்கள் இளம்மஞ்சள் நிறத்திலும், காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் நீல நிறத்திலும் காணப்படுகின்றன.
விதைத்த ஓராண்டில் பூக்க ஆரம்பித்துவிடும். மே முதல் ஆகஸ்ட் வரை பூக்கின்றன. பூப்பதற்கான சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்தால் வருடம் முழுவதும் பூப்பதற்கும் இவைகள் தயக்கம் காட்டுவதில்லை.
💢💢💢💢
ஹெலிகோனியா கிரிக்சியானா.
Heliconia griggsiana.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா கிரிக்சியானா - Heliconia griggsiana.
இனம் :- கிரிக்சியானா - Griggsiana.
வாழைமரம்போன்ற தோற்றத்தையே இவைகளும் கொண்டுள்ளன. இலைகளும் வாழைஇலைபோலவே அகலமாக காணப்படுகின்றன.
இது பிறவகை ஹெலிகோனியக்களைவிட பலமான தண்டுகளை கொண்டுள்ளன. எனவே இவைகள் வேகமாக வீசும் காற்றுகளையும் தாங்கி நிற்கும் திறன்படைத்துள்ளன. அதேபோல, குளிர்ச்சையான பருவ நிலைகளையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு. ஆனால் இந்த பண்பு பிற ஹெலிகோனியாக்களுக்கு இல்லை.
மேலும் இது மேலிருந்து கீழாக தொங்கும் மஞ்சரியை கொண்டுள்ளன. அழகான சிவப்புநிற மஞ்சரியானது சிறிது வளைந்து நெளிந்த தன்மையுடன் கொஞ்சம் கொஞ்சமாக திருங்கிய நிலையில் கீழிறங்கி வருவதை காண கண்கோடி வேண்டும். இந்த காட்சியை அழகு என்றால் அது அபத்தமாகிவிடும் என்பதால் பேரழகு என்றே செப்பவேண்டியுள்ளது. மிதமான கருமையும் இதமான சிவப்பும் கலந்த 10 ற்கும் மேற்பட்ட மடல்கள் இணைந்து ஒரு மந்தகாசமான அழகை தாவரத்திற்கு கொடுக்கின்றன என்றால் அது மிகையில்லை.
💢💢💢💢
ஹெலிகோனியா லடிஸ்பாதா.
Heliconia latispatha.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா லடிஸ்பாதா - Heliconia latispatha.
இனம் :- லடிஸ்பாதா - Latispatha.
தெற்கு மெக்சிகோ மற்றும் மத்திய தென் அமெரிக்க (South America) பகுதிகளை பூர்வீகமாக கொண்ட இது ஒரு நடுத்தர இனம். 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது.
மேல்நோக்கி வளருகின்ற 18 அங்குல நிமிர்ந்த மஞ்சரியை கொண்டுள்ளது. மஞ்சரி மேலே செல்லசெல்ல கொஞ்சம்கொஞ்சமாக சுழலும் தன்மையை பெற்றிருப்பது சிறப்பு.
பசுமையான மஞ்சரி தண்டில் மஞ்சள்நிற மடல்கள் தொலைவில்நின்று பார்க்கும்போதுகூட மங்களகரமாய் காட்சியளிக்கின்றன. இலைகள் கூட லேசான மஞ்சள்கலந்த பச்சை நிறத்திலேயே காட்சிதருகின்றன. சில லேசான ஆரஞ்சு நிறங்களிலும் பூக்கின்றன.
இதனை நீங்கள் உங்கள் வீட்டுத்தோட்டங்களில் தாராளமாக வளர்த்துவரலாம். ஏனெனில் தன்னுடைய சகலைகளைப்போல முரண்டுபிடிக்காமல் கடுமையான பருவநிலைகளைக்கூட தாக்குப்பிடித்து "டேக் இட் ஈஸி பாலிசி" எனறு வளரும் இனம்.
எனவே, கோடைகாலங்களில் பூக்கும் இதனை தாரளமாக பூந்தொட்டிகளில்கூட நீங்கள் வளர்த்துவரலாம். கலனில் வளரும்போதும் தன் நலனில் அக்கரை செலுத்தி வளமாகவே வளருகிறது. உண்மையை சொல்லப்போனால் இந்த "லடிஸ்பாதா" (Heliconia latispatha) ரொம்பவே சமத்துங்க.
💢💢💢💢
ஹெலிகோனியா டேனியல்சியானா.
Heliconia danielsiana.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா டேனியல்சியானா - Heliconia danielsiana.
இனம் :- டேனியல்சியானா - Danielsiana.
இந்த இனமானது கோஸ்டாரிகா (Costa Rica) மற்றும் பனாமாவை (Panama) பூர்வீகமாக கொண்டது. இது வாழை மரத்தை ஒத்த தாவரம். இதன் இலைகள் கூட வாழையிலைப்போன்றே காணப்படுகின்றன.
இது 4.5 முதல் 8 மீட்டர் உயரம்வரை வளரும் இனம். ஈரப்பதமான காட்டுப்பகுதிகளில் வளருகின்றன. அடர்ந்த காடுகளில் வளர்ந்துவந்த இதனை "வால்டர் ஜான் எமில் கிரேஸ்" (1984) என்பவர்தான் முதன் முறையாக ஆராய்ந்து இதுபற்றிய பல உண்மைகளை வெளிஉலகிற்கு அறிவித்தார்.
அதிகப்படியாக 4 முதல் 5 வரை பசுமையான இலைகளை கொண்டுள்ளன. இதன் இலைக்காம்புகள் 1 லிருந்து 1.8 மீ நீளமுடையது. இலைகள் 2 அடி அகலத்துடனும் அதிகப்படியாக 10 அடி நீளத்துடனும் காணப்படுகின்றன. இலைக்காம்புகள் வெள்ளை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறம்வரை உள்ளன.
இது ஆண்டுமுழுவதும் பூக்கின்றன. இதன் மஞ்சரிகள் 3.5 அடி நீளத்தில் மேலிருந்து கீழ்நோக்கி தொங்கியபடி காணப்படுகின்றன. மஞ்சரிகளின் இருமருங்கிலும் மலர் மடல்கள் 10 முதல் 40 செ.மீ நீளத்தில் ஆரஞ்சு முதல் சிவப்பு நிறம்கொண்டதாக உள்ளன.
மஞ்சரிகள் மற்றும் மடலின் இருமருங்கிலும் நீளமான வெண்மைநிற உரோமங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் இலைக்காம்புகளில் உரோமம் போன்ற அமைப்பு எதுவுமில்லை.
மடலினுள் மலர்கள் 15 முதல் 20 எண்ணிக்கையில் உள்ளன. மலர்கள் மஞ்சள் நிறத்திலிருந்து அடர்ந்த பழுப்புநிறம்வரை உள்ளன. சூலகம் வெண்மை நிறத்தில் உரோமங்களற்று காணப்படுகின்றன. மகரந்த நாளங்கள் வெண்மை நிறத்திலும் அதன் முடிவில் மகரந்தங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகின்றன. இதில் உற்பத்தியாகும் பழங்களும் உரோமங்களற்றே காணப்படுகின்றன.
இதன் பழங்கள் பறவைகளுக்கு உணவாகப்பயன்படும் அதே வேளையில் இதன் சிறிய தளிரிலைகள் பழங்குடியின மக்களால் சமைத்துண்ணப்படுகிறது.
💢💢💢💢
ஹெலிகோனியா வெல்லரிஜெரா.
Heliconia vellerigera.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா வெல்லரிஜெரா - Heliconia vellerigera.
இனம் :- Vellerigera.
இது கொலம்பியா (Colombia), பெரு (Peru), ஈக்வடார் (Ecuador) மற்றும் கோஸ்டாரிகா (Costa Rica) ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டு வளருகின்றன. இது மிக உயரமாக வளரக்கூடிய இனம். சுமார் 20 அடி உயரம்வரை வளருகிறது.
சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறமான மஞ்சரியில் அதே சிவப்பு ஆரஞ்சு கலந்த நிறத்தில் 20 செ.மீ லிருந்து 30 செ.மீ நீளம் வரையிலான மலர் மடல்கள் காணப்படுகின்றன. மஞ்சரி மற்றும் மடல் முழுக்க வெண்மைநிற உரோமங்கள் சூழ்ந்துள்ளன. மடல்களின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் அந்த மஞ்சள் பூசிய மலர்களின் அழகை சுதி சேர்த்து சொல்ல கவி கோடி வேண்டும் ...
"பஞ்சும் மடலினுள் துஞ்சும் மலரது
மஞ்சம் விடுத்து மஞ்சள் குளித்து
கொஞ்சும் இதழ்களில் வஞ்சி சிரிப்பது
நெஞ்சம் நெகிழும் விஞ்சிய காட்சியாம்
ஐயமில்லை இப்பதிவே சாட்சியாம்".
இதுவரை ஹெலிகோனியவகை தாவரங்கள் சிலவற்றை பார்வையிட்டோம். இன்னும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கெலிகோனிய வகை தாவரங்களை பார்வையிடுவோம். நன்றி!
4 கருத்துகள்
கவி வரிகள் போலவே அழகு...
பதிலளிநீக்குநன்றி ...நன்றி !!
நீக்குஹெலிகோனியா இங்கு இப்படிப் பல வகைகளில் பார்க்கலாம். பூங்காக்களில். அழகழகு வித்தியாசமான வடிவங்களில்...
பதிலளிநீக்குநல்ல் தகவல்கள்
கீதா
நன்றி சகோதரி !!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.