குலேபகாவலி.
Epiphyllum.
Part - 1.
"குலேபகாவலி" (Gulaebaghavali) இந்த பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் நம் மனம் கவர்ந்த ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்து 2018 ல் வெளியான ஒரு தமிழ் திரைப்படம்.
இதேபெயரில் 1955 ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒருபடம் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதுவும் தமிழ் திரைப்படம்தான். டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராஜகுமாரி நடித்து 1955 ல் வெளிவந்து வெற்றிநடைபோட்ட திரைப்படம்.
இதே குலேபகாவலி என்ற பெயரில் முதன்முதலாக 1935 ம் ஆண்டிலும் ஒருபடம் வெளிவந்தது என்பது உங்களுக்குத் தெரியுமோ? தமிழ்நாடு டாக்கீஸ் என்னும் நிறுவனத்தின் தயாரிப்பில் வி.ஏ. செல்லப்பாவுடன் ராஜலட்சுமி நடித்து வெளிவந்த தமிழ்ப்படம்.
அதுசரி, இந்த குலேபகாவலி திரைப்படங்களையெல்லாம் ஏன் இங்கு பட்டியலிட்டுக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா? காரணமாகத்தான் ...
இந்த படங்களுக்கும் நாம் இப்போது இந்த பதிவில் பார்க்கப்போகும் நபருக்கும் நெருங்கிய தொடர்பொன்று உள்ளது.
யார் அந்த நபர் என்று கேட்கிறீர்களா?
அவர்தான் "எபிஃபில்லம்" (Epiphyllum).
யார் இந்த எபிஃபில்லம்?
இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் வெளிநாட்டிலிருந்து "இரவின் ராணி" (Queen of the night) என்ற பட்டப்பெயருடன் இந்தியாவுக்குள் புதிதாக அடியெடுத்து வைத்த மனம் கவர்ந்த அன்னிய தேசத்து இளவரசி.
அடியெடுத்து வைத்த கையோடு நம்மவர்களின் தயவால் "குலேபகாவலி" (Gulaebaghavali) என்று பெயர்சூட்டிக்கொண்டதோடு நில்லாமல் கொரானாபோல் அவ்வப்போது தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு மக்களை குழப்பம் அடையச் செய்பவள்.
வெறும் குழப்பங்களோடு நிறுத்திவிடாமல் பலபேரின் மூளையை மழுங்கடித்து அவர்களை கிட்டத்தட்ட கோமாளியாகவே ஆக்கிய பெருமைவாய்ந்த பெருங்கள்ளியைப் பற்றித்தான் நாம் இங்கே இப்போது பார்க்க இருக்கிறோம்.
என்னது பெருங்கள்ளியா ?
ஆம் கள்ளியேதான்...
தன்னுடைய ஆர்ப்பரிக்கும் அழகால் பலபேர் மனதை கொள்ளையடித்ததால் மட்டுமல்ல.. கள்ளி என்னும் குலத்தில் உதித்தவள் என்பதாலும் அவள் கள்ளியேதான். காக்டேசியே என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்தவள்.
ஆம், இரவு இளவரசி (Princess of the night) என்னும் பட்டப்பெயருடன் வலம்வரும் கள்ளி இனத்தை சேர்ந்த "எபிஃபில்லம்" என்னும் தாவரத்தைப் பற்றித்தான் இப்போது இங்கே பார்க்க இருக்கின்றோம்.
எபிஃபில்லம்.
நாம் இப்போது பார்க்கப்போவது கள்ளிவகை தாவரத்தைப்பற்றியது. இது "காக்டேசியே" (Cactaceae) என்னும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. கள்ளி இனம் என்றவுடனேயே பாலைவனத்தில் வளரும் கள்ளியை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். மாறாக இது சோலைவனத்தில் வளரும் கள்ளி இனம்.
பொதுவாக நம்முடைய இடத்திலேயே கூட பல வகையான கள்ளி இனங்கள் இருப்பதை காணலாம். ஆறுமுக கள்ளி, சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக்கள்ளி, இலைக்கள்ளி, கொம்புக்கள்ளி, கொடி கள்ளி என பலவகையான கள்ளி இனங்கள் உள்ளன. இதுபோன்ற கள்ளி இனங்களில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் "எபிஃபில்லம்" என்ற கள்ளி இனமும்.
எபிஃபில்லம் என்னும் இந்த கள்ளிவகை தாவரம் அழகான வாசனை வீசும் பெரிய மலர்களை உற்பத்தி செய்வதால் தற்போது பலவீடுகளில் அழகு செடிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.
கள்ளி வகைகளில் ஆர்க்கிட் கள்ளி (orchid cacti), பற்றி படரும் கள்ளி (climbing cacti), இலை கள்ளி (leaf cacti) என பலவகைகள் உள்ளன.
"ஆர்க்கிடேஸியே" என்னும் தாவர குடும்பத்திலுள்ள தாவரங்களைத்தான் "ஆர்க்கிட்" தாவரங்கள் என்கிறோம். இந்த குடும்பத்திலுள்ள தாவரங்கள் அனைத்துமே அழகான மலர்களுக்குப் பெயர்போனவை.
கள்ளி இன தாவரங்கள் "ஆர்க்கிடேஸியே" குடும்பத்தை சேர்ந்தவை இல்லையென்றாலும், கள்ளி தாவரங்களில் எதுவெல்லாம் அழகான மலர்களை மலரச் செய்கிறதோ அதையெல்லாம் "ஆர்க்கிட்" ரக கள்ளிகள் என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றோம்.
அந்தவகையில் நெஞ்சை கொள்ளைகொள்ளும் அழகழகான மலர்களை மலரச்செய்வதால் நம்முடைய எபிஃபில்லம் கள்ளியும் "ஆர்க்கிட்" ரக கள்ளி என்னும் பெருமையை பெறுகிறது.
ஆர்க்கிட் ரக கள்ளி பேரினம்.
இந்த ஆர்க்கிட் வகை கள்ளிகளில் மிகப்பழமையான மரபு வழி பேரினங்களாக 8 க்கும் மேற்பட்டவை கண்டறியப்பட்டுள்ளது. அவைகள் :-
Tamil | English |
---|---|
எபிஃபில்லம் | Epiphyllum |
ஹைலோசீரியா | Hylocereeae |
அகாந்தோசெரியஸ் | Acanthocereus |
அபோரோகாக்டஸ் | Aporocactus |
டிஸ்கோக்டஸ் | Disocactus |
கிம்னாச்சியா | kimnachia |
சூடோரிப்சலிஸ் | Pseudorhipsalis |
செலினிசெரியஸ் | Selenicereus |
வெபரோசெரியஸ் | Weberocereus |
ரிப்சாலிஸ் | Rhipsalis |
இதில் நாம் இப்போது பார்க்கப்போவது முதல் பேரினமான "எபிஃபில்லம்" (Epiphyllum) என்னும் இனத்தை பற்றித்தான். வாருங்கள் பார்க்கலாம்...
Epiphyllum.
திணை :- தாவரம் (Plant).
வகை :-பூக்கும் தாவரம் (Flowering Plant).
பிரிவு :- இருவித்திலை தாவரம் (dicotyledonous plant).
குடும்பம் :- காக்டேசியே - Cactaceae. (கள்ளி).
துணைகுடும்பம் :- Cactoideae.
வரிசை :- Caryophyllales.
பேரினம் :- எபிஃபில்லம் - Epiphyllum.
இனம் :- எ.ஒக்ஸிபெடாலம் - E . oxypetalum.
தாவரவியல் பெயர் :- எபிஃபில்லம் ஆக்சிபெடாலம்- Epiphyllum oxypetalum.
பெயர்க்காரணம்.
Epi + phyllum = Epiphyllum (இலைகளில் பூப்பது).
"Epi" என்பது கிரேக்க சொல். இதற்கு "அதன் மேல்" என்று பொருள்கொள்ளலாம். "phyllum" என்பது "இலை" என்று பொருள்படும். எபிஃபில்லம் என்றால் "இலையின் மேல் பூப்பது" என்று பொருள்.
ஏனெனில், ஆரம்பத்தில் அறிவியலாளர்கள் இது இலைகளில் பூப்பதாகவே கருதினர். ஆனால் தற்போது நம் கண்களுக்கு இலைபோல காட்சிதருவது உண்மையில் இலை இல்லையென்பதும், உண்மையில் அவைகள் இலைபோல காட்சியளிக்கும் இரண்டாம் நிலை தண்டுகளே என்பதனையும் தற்போது கண்டறிந்துள்ளனர். என்றாலும் ஆரம்பத்தில் வைத்த பெயரே இன்றளவும் நீடிக்கிறது.
ஆங்கில பெயர் :- Orchid cactus (ஒர்க்கிட் கள்ளி), Climbing cactus (ஏறும் கள்ளி), Night blooming cereus (இரவு மலரும் கள்ளி), Jungle cactus (காட்டுக்கள்ளி).
வேறுபெயர்கள் :- இரவு இளவரசி (Princess of the night), இரவு ராணி (Queen of the night)
தமிழ் பெயர் :- குலேபகாவலி (Gulaebaghavali).
தமிழ் பெயரின் வரலாறு.
இது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலர் இல்லை என்பதாலும், வட அமெரிக்க கண்டத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த புதுவரவு என்பதாலும் நெடுங்காலமாக பெயரிடப்படாமலேயே இருந்து வந்தது.
இது மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் எத்தனை நாளைக்குத்தான் இரவல் பெயரால் அழைப்பது. இதற்கு நம்முடைய மறத்தமிழிலும் ஒரு பெயர் வைக்க வேண்டுமல்லவா? அதுதானே தமிழர் மரபு. கூடவே நம் தமிழுக்கும் பெருமை. எனவே தீர ஆலோசித்து சில பத்து வருடங்களுக்கு முன்னர்தான் பெயர்சூட்டும் விழா நடத்தி "குலேபகாவலி பூ" என பெயர் வைத்துள்ளனர்.
இந்த குலேபகாவலி என்னும் பெயரை நம்மவர்கள் செலக்ட் செய்ய காரணமென்ன?
நாம் ஆரம்பத்திலேயே பார்த்ததுபோல குலேபகாவலி என்பது அரேபிய கதையை தழுவி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்து 1955 ல் வெளிவந்த ஒரு திரைப்படம். கண்கள் குருடான மகாராஜாவின் கண்பார்வையை மீட்டுத்தரும் ஒரு அதிசய மலரைத்தேடி பகாபலி நாட்டிற்கு பயணிக்கும் இளவரசனை பற்றிய கதை.
அரேபிய மொழியில் "குல்" என்றால் பூ. பகாவலி என்றால் ஒரு நாடு. குலேபகாவலி என்றால் பகாவலி என்னும் நாட்டில் கிடைக்கும் அதிசய பூ என்று பொருள்.
பகாவலி என்று ஒரு நாடா? என்று உலக வரைபடத்தில் தேட ஆரம்பித்துவிடாதீர்கள். இது கதைக்கான ஒரு கற்பனை நாடு அவ்வளவே.
எனவே, இந்த எபிஃபில்லத்திற்கு தமிழில் பெயரில்லாத குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு "நாங்க வைக்கிறோம் பாருடா பேரு" என்று எம்.ஜி.ஆர் ரசிகர்களால் வரிந்துகட்டிக்கொண்டு 1955 ல் வைக்கப்பட்ட பெயர்தான் "குலேபகாவலி".
குலேபாகவலி என்பது அரேபிய சொல் என்பதால் இன்னும் இந்த பெயரை அதிகாரப்பூர்வமாக ரெஜிஸ்ட்டர் பண்ணவில்லையாம்.
இதற்கிடையில் இன்னும் சிலரோ இதற்கு செந்தமிழில்தான் பெயர் வைக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே தமிழ் இலக்கியங்களையெல்லாம் புரட்ட ஆரம்பித்துவிட்டனர்.
விளைவு, இலக்கியங்களில் தேடிப்பிடித்து எடுத்ததாக ஆளாளுக்கு ஒரு பெயர் வைக்க... இப்போது நம்மவரின் பெயரோ "குலேபகாவலி", "நள்ளிருள் ஒளிரி", "நள்ளிருள் நாறி", "நிஷாகாந்தி", நிஷாகந்தி, "அனந்த சயனப் பூ", "பிரம்மகமலம்", "நெகிழந்தி", "தமயந்தி", "சொப்பன சுந்தரி" என்று பல்வேறு பெயர்களில் அமர்க்களப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலக்கியத்தில் தேடுகிறேன் பேர்வழி என்று தேடியெடுத்த பெயர்களெல்லாம் ஏற்கனவே பன்னெடுங்காலத்துக்கு முன்பாகவே வேறு தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களாம்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள பெயர்களுக்கும் இந்த "எபிஃபில்லம்" (Epiphyllum) என்னும் தாவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ.
...[அடப்பாவிகளா இலக்கியத்திலிருந்து உருவுனதுதான் உருவுனீங்க யாருக்குமே வைக்காத பெயரா பார்த்து உருவக்கூடாதா?]...
நள்ளிருள் ஒளிரி, நிஷாகந்தி, நிஷாகாந்தி என்பதெல்லாம் "இருவாட்சி" என்னும் தாவரத்தின் காரண பெயர்களாம்.
"நள்ளிருள் நாறி" என்பது மரமல்லிகையின் மறு பெயராம்.
"அனந்த சயனப் பூ", "பிரம்மகமலம்" என்பது கோடானுகோடி வருடங்களாக இந்தியாவின் இமயமலை அடிவாரங்களில் பாரம்பரியமாக வளர்ந்துவரும் தாவரம். இது இமயமலையின் அடிவாரத்தில் உத்திரகண்டில் உள்ள மலர் பள்ளத்தாக்குப் பகுதியில் வளரும் ஒரு பாரம்பரிய புதர்செடி. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மையுடையது. ஆன்மீகத்தோடு சம்பந்தப்பட்டது.
ஆனால், நம் கட்டுரையின் கதாநாயகியான எபிஃபில்லம் (Epiphyllum) அதாங்க குலேபகாவலி... சில பத்து வருடங்களுக்கு முன்னாடிதான் இந்திய தேசத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ளது. எனவே பிரம்ம கமலத்திற்கும் இதற்கும் துளியளவுகூட சம்பந்தமே இல்லை. இது ஒரு கள்ளி செடி. அவ்வளவே.
இன்னும் சிலரோ இதன்பெயர் "நெகிழந்தி" என்று சொல்லி நம்மை நெகிழ வைப்பதோடு அவ்வப்போது புதிய புதிய பெயர்களை சூட்டி நம்மை பீதியிலும் ஆழ்த்தி வருகின்றனர்.
"திண்ணையில கேட்பாரற்று கிடந்தவனுக்கு திடுப்புன்னு வந்துச்சாம் கல்யாணம்"ங்குறது மாதிரி கேட்பாரற்று கள்ளி செடியா பூத்து நின்ற தாவரத்திற்கு "பிரம்மகமலம்". "அனந்த சயனம்"னு தவறான பெயரை சூட்டியதோடு நில்லாமல் பிரம்மா இந்த பூவிற்குள்தான் கால்நீட்டி படுத்துக்கொண்டு குறட்டை விடுகிறார் என்று கதையளந்துகொண்டு அதற்கு பொட்டுவச்சு, பூ வச்சு, தலைமுடிச்சு, மணிக்கிலுக்கி, தீபாராதனையெல்லாம் காட்டி கோமாளித்தனம் பண்ணும் வேலை இந்தியாவில்தான் அதிகம் நடந்துகொண்டுவருகிறது.
இதற்குக் காரணம் இந்த சமூகவலைத்தளங்கள்தான்.
ஆம், ஒருவர் தன்னுடைய பதிவுகளின் வழியாக ஒரு தவறான மெசேஜை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார் என்றால் அதில் உள்ள தவறுகள் மற்றும் உண்மைத்தன்மையை ஆராயாமல் "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்று அதே தவறை தாங்களும் செய்ய வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் இந்த சமூக வலைத்தளங்களால் மக்களுக்கு கிடைப்பதென்னவோ தவறான தகவல்கள்தான்.
இவர்கள் பூனையைக் காட்டி இதுதான் யானை நம்புங்கோ என்று பதிவிட்டால் அதையும் நம்பித்தொலைப்பதற்கு இந்தியாவில் ஒரு கூட்டம் கியூவில் நிற்கிறது என்பது உச்சகட்ட வேடிக்கை.
இந்த கோமாளி கூத்துகளையெல்லாம் பார்த்துக்கொண்டு தற்போது "நான் சிவனேன்னுதானடா வாழ்ந்துகிட்டு இருந்தேன். யாருடனாச்சும் வம்புதும்புக்கு போனேனா? கவுரவம் கவுரவம்னு சொல்லி ஆளாளுக்கு பேருவச்சு என் பேரையே நாறடிச்சுட்டீங்களேடா" ன்னு கண்ணில் நீர் வராதக்குறையாக புலம்பிகிட்டு திரியுதாம் இந்த எபிஃபில்லம்.
ச்சோ... என்னடா இந்த குலேபகாவலிக்கு வந்த சோதனை.
முத்தமிழ் வித்தகர்... தமிழினக் காவலர்... உடன்பிறப்புகளின் ஒப்பற்ற தலைவர்... "மனைவி", "துணைவி", "இணைவி" என்று தமிழர் பண்பாட்டுக்கே புதியதொரு இலக்கணத்தை வகுத்துத் தந்தவர்... இவையெல்லாவற்றிற்கும் மேலாக கடலில் தூக்கி போட்டாலும் மூழ்காமல் கரையேறும் கட்டுமரமாம் "கலைஞர்" மட்டும் இப்போது இருந்திருந்தால் இரவில் மட்டுமே பூக்கும் இதற்கு கொஞ்சும் தமிழில் "கார் இருள் காரிகை" என்று அழகாக பெயர்சூட்டி இந்நேரம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார். ம் ...ம்ம்... காலம் கடந்தபின் வருந்துவதில் என்ன பயன்...
சரி ஓ.கே... இதற்கு இன்னும் பொருத்தமான தமிழ்பெயர் எதுவும் வைக்கப்படவில்லை என்பதால் இப்பதிவில் இதை எபிஃபில்லம் - Epiphyllum. என்னும் அதன் அறிவியல் பெயராலேயே அழைத்துவருவோம்.
தாயகம்.
இது வட அமெரிக்க கண்டத்திலுள்ள மெக்சிகோ (Mexico) நாட்டின் வெப்ப மண்டல மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்டது. மெக்சிகோ காடுகளிலுள்ள பெரிய மரங்களின் தண்டினை தொற்றி வளர்கின்றன.
பயிராகும் நாடுகள்.
வட, தென் அமெரிக்க கண்டங்கள், சீனா (China), இலங்கை (Sri Lanka), இந்தியா (India), ஜப்பான் (Japan), இந்தோனேஷியா (Indonesia), கோஸ்டாரிகா Costa Rica), குவாத்தமாலா (Guatemala), ஹோண்டுராஸ் (Honduras), நிகரகுவா (Nicaragua), கியூபா (Cuba), பிரேசில் (Brazil), வெனிசுலா (Venezuela) மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் விரும்பி வளர்க்கப்பட்டுவருகிறது.
வாழிடம்.
இது மலைப்பிரதேசங்களில் வளரும் செடி இனம். இந்தியாவில் நீலகிரி (Nilgiris) மலைப்பகுதிகளில் இவைகள் காணப்படுகின்றன. தற்காலங்களில் பல வீடுகளில் அழகு தரும் மலர் செடியாக வளர்க்கப்படுகிறது.
வளரியல்பு.
சாதாரணமாக 3 முதல் 6 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. இது பெரிய மரங்களை பற்றிக்கொண்டு வளரும் இயல்புகொண்டது.
குளுமையான சீதோஷ்ணம் உள்ள இடங்களில் செழித்து வளருகின்றன. சாதாரண மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் தாங்கிவளரும் தன்மையை கொண்டுள்ளன. ஏராளமான கிளைகளுடன் காணப்படும் இது 20 வருடங்களுக்கும் மேலும் நீடித்து வாழும் இயல்புடையது.
இனப்பெருக்கம்.
இது தண்டுகள் மூலமாகவும், இலைகள்போல் காட்சிதரும் இரண்டாம் நிலை இலைதண்டுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் தன் இனத்தை பெருக்குகின்றன.
சில அடிப்படை புரிதல்கள்.
எபிஃபில்லம் என்பது எபிஃபைடிக் ரக கள்ளி தாவரத்தின் ஒரு இனமாகும். இரவில் மட்டுமே பூத்துக்குலுங்குவது இதன் சிறப்பு. வருடத்திற்கு ஒருமுறை அல்ல பலமுறை பூக்கும் தன்மையுடையது.
இவைகள் இரவில் பூப்பதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால் பகலில் பூக்கும் மலர்களில் மகரந்த சேர்க்கை தேனீக்களால் நடப்பதுபோல எபிபைலும் பூவின் மகரந்த சேர்க்கையானது இரவில் மட்டுமே நடமாடும் ஒருவகை அந்துப்பூச்சி (Humming bird moths) மற்றும் வௌவால்களால் (bats) மட்டுமே நடைபெறுகின்றன. எனவேதான் இப்படியொரு ஏற்பாடு.
இரவு இருட்டில் அயல்மகரந்த சேர்க்கையாளர்களுக்கு தன் இருப்பிடத்தை உணர்த்த அதிக அளவு நறுமணத்தையும் காற்றில் பரவவிடுகின்றன. அவ்வாறு பரவவிடும் நறுமணமானது சுமார் 500 மீட்டர் தாண்டியும் காற்றில் பயணிக்கின்றன.
அபரிமிதமான இதன் நறுமணத்திற்கு "பென்சைல் சேலிசிலேட்" (Benzyl Salicylate) மற்றும் "மெத்தில் லினோலியேட்" (Methyl linoleate) என்னும் நறுமண வேதிப்பொருட்களே காரணம்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இவைகள் இலைகளில்தான் பூத்திருப்பதுபோல் நம் கண்களுக்கு காட்சிதருகின்றன. அறிவியல் அல்லது தொழில்நுட்ப ரீதியாக பார்த்தோமேயானால் நம் பார்வைக்கு இலைகள்போல் காட்சிதருபவை உண்மையில் இலைகள் அல்ல. இலைகள்போல் செயல்படும் இரண்டாம்நிலை தண்டுகள்.
ஏனெனில் இவைகள் பார்ப்பதற்கு இலைகள் போல காணப்பட்டாலும் முழுக்க முழுக்க தண்டுகளின் குணாதிசயங்களையே கொண்டுள்ளன. நம் கண்களுக்கு இலைகள்போல் தெரிவதால் அது உடனே இலைகளாகிவிடாது. இலைகள் என்னும் அங்கீகாரம் அதற்கு கிடைக்கவேண்டுமெனில் இலைகளுக்குள்ள சில அடிப்படையான குணங்கள் அதற்கு இருக்க வேண்டும்.
ஆனால், இவைகளுக்கு இலைகளுக்கான குணங்கள் மிக சொற்ப அளவிலும் தண்டுகளுக்குள்ள குணங்களே மிகுதியான அளவிலும் உள்ளன. எனவே இவைகள் "இலைகளாக செயல்படும் சிறப்பு தண்டுகள் மற்றும் கிளைகள்" என்றோ அல்லது "இலைவடிவ இரண்டாம்நிலை தண்டுகள்" என்றோ குறிப்பிடப்படுகின்றன. எனவே இதனை நாம் எளிதாக புரிந்து கொள்வதற்காக இங்கு இவைகளை "இலைத் தண்டுகள்" என்ற பெயராலேயே அழைத்து வருவோம்.
இது வரையில் எபிஃபில்லம் (Epiphyllum) என்னும் கள்ளி இனத்தை சேர்ந்த பூக்கும் தாவரத்தைப் பற்றிய தொடர் பதிவின் முதல் பகுதியாகிய [Part - 1] இப்பதிவில் சில அடிப்படை விஷயங்களைப்பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியாகிய "சாகுபடி" மற்றும் "பராமரிப்பு" (Cultivation and Crop protection) அம்சங்களை தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் - Link ஐ கிளிக்குங்க!!
>> "எபிஃபில்லம் தாவர பராமரிப்பு - Epiphyllum Plant Care - Part 2" <<
2 கருத்துகள்
இந்த முறை விளக்கம் மிகவும் அருமை...
பதிலளிநீக்குநன்றி !
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.