Classification of Epiphyllum Species.
முன் பத்து இனங்கள்.
[Part 3].
நாம் தொடர்ந்து தொடர்பதிவாக "எபிஃபில்லம்" (Epiphyllum) என்னும் கள்ளிவகை தாவரங்களைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்த்துவருகிறோம். இந்த எபிஃபில்லமானது "ஆர்க்கிட்" (Orchids) ரக கள்ளிவகையை சேர்ந்தது.
இந்த ஆர்கிட் ரக கள்ளிகள் மிகவும் கவர்ச்சிகரமான மலர்களை மலரச் செய்வதால் ஒவ்வொருவர் வீடுகளிலும் தற்போது மலர் தோட்டங்களில் இவைகள் வேகமாக இடம்பிடித்துவருகின்றன.
மக்கள் இதனை அதிகமாக விரும்புவதற்கு காரணம் வெறும் அழகு மட்டுமல்ல.. இந்த செடிகளை பராமரிப்பது மிக எளிதானதும்கூட, மேலும் இதற்கு குறைந்த அளவு நீர்பாசனமே போதுமானது என்பதுவும் கூடுதல் காரணம்.
இந்த ஆர்க்கிட் ரக கள்ளிகளில் 10 வகையான பேரினங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவை -
Tamil | English |
---|---|
எபிஃபில்லம் | Epiphyllum |
ஹைலோசீரியா | Hylocereeae |
அகாந்தோசெரியஸ் | Acanthocereus |
அபோரோகாக்டஸ் | Aporocactus |
டிஸ்கோக்டஸ் | Disocactus |
கிம்னாச்சியா | kimnachia |
சூடோரிப்சலிஸ் | Pseudorhipsalis |
செலினிசெரியஸ் | Selenicereus |
வெபரோசெரியஸ் | Weberocereus |
ரிப்சாலிஸ் | Rhipsalis |
எபிஃபில்லம் இனங்கள்.
Epiphyllum Species.
இந்த பேரின வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ள பேரினம்தான் எபிஃபில்லம். இந்த எபிஃபில்லம் என்னும் பேரினத்தை பற்றிதான் தொடர்ந்து இரு பதிவுகளில் பார்த்துவருகிறோம். இதன் முதல் இரு பகுதிகளில் இத்தாவரத்தைப்பற்றிய சில அடிப்படை விஷயங்கள் மற்றும் பராமரிப்பு அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. இதன் முதல் இரு பகுதிகளையும் அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்க் - ஐ கிளிக்குங்க ...
>> குலேபகாவலி - எபிஃபில்லம் - Epiphyllum. [Part -1]. <<
>> எபிஃபில்லம் தாவர பராமரிப்பு - Epiphyllum Plant Care. [Part - 2]. <<
எபிஃபில்லம் என்னும் இந்த பேரினத்தில் 20 வகையான இயற்கையான இனங்கள் மட்டுமல்லாது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட கலப்பினங்களும் உள்ளன. இதில் 20 வகையான இயற்கை இனங்களாவன...
Type of Epiphyllum Species.
TAMIL | ENGLISH |
---|---|
எபிஃபில்லம் ஆக்சிபெட்டலம் | Epiphyllum oxypetalum |
எபிஃபில்லம் கார்டஜென்ஸ் | Epiphyllum cartagense |
எபிஃபில்லம் கிரெனாட்டம் | Epiphyllum crenatum |
எபிஃபில்லம் குவாத்தமாலென்ஸ் | Epiphyllum guatemalense |
எபிஃபில்லம் தோமசியம் | Epiphyllum thomasianum |
எபிஃபில்லம் பையூரி | Epiphyllum baueri |
எபிஃபில்லம் ஃபைலாந்தஸ் | Epiphyllum phyllanthus |
எபிஃபில்லம் லாய் | Epiphyllum laui |
எபிஃபில்லம் ஹீக்கரி | Epiphyllum hookeri |
எபிஃபில்லம் ட்ரைமெட்ரேல் | Epiphyllum trietrale |
எபிஃபில்லம் ஆங்குலிகர் | Epiphyllum anguliger |
எபிஃபில்லம் தாமஸ் | Epiphyllum thomas |
எபிஃபில்லம் காடடம் | Epiphyllum caudatum |
எபிஃபில்லம் கிராண்டிலோபம் | Epiphyllum grandilobum |
எபிஃபில்லம் பிட்டேரி | Epiphyllum Pittieri |
எபிஃபில்லம் ருப்ரோகோரோனாட்டம் | Epiphyllum rubrocoronatum |
எபிஃபில்லம் லிபிடோகார்பம் | Epiphyllum lepidocarpum |
எபிஃபில்லம் கொலம்பியன்ஸ் | Epiphyllum Columbiense |
எபிஃபில்லம் பூமிலம் | Epiphyllum pumilum |
எபிஃபில்லம் கிரிசோகார்டியம் | Epiphyllum Chrysocardium |
மேற்கண்ட 20 வகையான இனங்களில் ஒவ்வொன்றின் தன்மைகளுக்கேற்ப அவைகளின் அமைப்பில் சிற்சில மாற்றங்கள் தென்படலாம். இந்தப்பதிவில் எபிஃபில்லம் தாவரத்திலுள்ள 20 வகையான இனங்களில் முதல் 10 இனங்களை பற்றியும் அவைகளின் தன்மைகளைப்பற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
எபிஃபில்லம் ஆக்சிபெட்டலம்.
Epiphyllum oxypetalum.
பெயர் :- எபிஃபில்லம் ஆக்சிபெட்டலம் - Epiphyllum oxypetalum.
தாயகம் :- மெக்சிகோ (Mexico), வெனிசுலா (Venezuela) மற்றும் பிரேசிலை (Brazil) பூர்வீகமாகக் கொண்டது.
தாவரத்தின் தன்மை.
"ஆக்சிபெட்டலம்" என்னும் இந்த இனமானது அனைத்து இடங்களிலும் வளரும் பொதுவானதொரு இனம். இந்தியாவில் பெரும்பாலான வீட்டு தோட்டங்களை ஆக்கிரமித்துள்ளதுவும் இதுவே. இதைத்தான் இங்கு "பிரம்மகமலம்" என கொண்டாடுகின்றனர்.
ஆனால், இது உண்மையில் பிரம்மகமலம் அல்ல. பிரம்மகமலம் என்பது குறுந்தாவரப்பிரிவை சேர்ந்த ஒரு புதர்செடி. ஆனால் இந்த ஆக்சிபெட்டலமோ கள்ளி வகையை சேர்ந்தது. இரண்டும் ஒன்றல்ல.
இந்த ஆக்சிபெட்டலமானது மெல்லிய தட்டையான முதல்நிலை தண்டுகளை கொண்டது. 6 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது.
இந்த இனம் மிக வேகமாக வளர்ந்து பலன் தருவதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
பூக்களின் ரம்மியமான அழகு, ஆளையே கிறங்கடிக்கும் வாசனை மற்றும் இரவில் மலரும் தன்மை ஆகிய காரணங்களால் இது "இரவின் ராணி" என்று பெருமைப்படுத்தப்படுகிறது.
இலைதண்டுகளின் தன்மை.
இலைத்தண்டுகள் தடித்தவை. தட்டையானவை. நீர்ப்பற்றுடன் கூடியவை.
இதன் இலைகள் 2 மீட்டருக்கும் அதிகமான நீளம் வரை இருப்பதுண்டு. பொதுவாக இலைகள் என்று அழைக்கப்படும் இலைத்தண்டுகள் 10 முதல் 12 செ.மீ அகலம் கொண்டவை. இதன் விளிம்புகள் அலை அலையான தோற்றம்கொண்டவை.
மலர்களின் தன்மை.
பூக்கள் வெண்மையானது. இது கோடை அல்லது வசந்த காலங்களில் இரவில் மட்டுமே பூக்கும் தன்மையுடையது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் 18 செ.மீ விட்டம்கொண்ட பெரிய மலர்களை மலரச்செய்கின்றன. ஒரு பருவத்திற்கு தொடர்ந்து பலநாட்கள் பூக்கும் தன்மையுடையது.
இது வருடத்திற்கு ஒருதடவை மட்டுமே பூக்கும் என்பதுவும், தெய்வீகத்தன்மை பொருந்தியது என்பதுவும் முற்றிலும் தவறான தகவல். இதற்கு ஏற்றவகையில் பருவநிலை அமைந்தால் வருடத்திற்கு ஐந்தாறு தடவைகூட பூக்கும் இயல்புடையது.
பூக்கள் இலைதண்டுகளின் இரு ஓரங்களிலும் மலர்கின்றன. பூ தண்டுகளின் நீளம் சுமார் 20 செ.மீ. வரை உள்ளன.
ஆனால், இதில் பல கலப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கலப்பின வகைகள் பல்வேறு நிறங்களில் பூப்பது மட்டுமல்லாது பகலிலும் பூக்கும் தன்மையை பெற்றுள்ளன. இது விரைவாக வளர்ந்து சீக்கிரமே பூப்பெய்வதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.
காய்களின் தன்மை.
அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் மட்டுமே இதில் காய்கள் மற்றும் விதைகள் உற்பத்தியாகின்றன. இதன் பழங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
பழங்கள் 12 செ.மீ நீளம் கொண்டவையாக உள்ளன. இது சாப்பிடுவதற்கும் உகந்ததே. பழங்களின் உள்ளே கூழ்போன்ற வெண்மைநிற சதைகளினூடே சிறிய கருமைநிற விதைகள் பரவலாக புதைந்துள்ளன. இலைத்தண்டுகள் மூலமாகவும் விதைகள் மூலமாகவும் புதிய தாவரங்களை உற்பத்தி செய்ய முடியும்.
💢💢💢💢
எபிஃபில்லம் கார்டஜென்ஸ்.
Epiphyllum cartagense.
தாவரத்தின் தன்மை.
பாறை இடுக்குகள் மற்றும் பிற உயரமான மரங்களில் தொற்றிக்கொண்டு வளர்கிறது. இலைத்தண்டுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கின்றன.
மலர்களின் தன்மை.
இளஞ்சிவப்பு நிற குழாய்வடிவ தண்டுகளில் லேசான மஞ்சள் கலந்த வெள்ளை நிற பூக்களை பூக்கின்றன. கோடைகாலம் ஆரம்பமாகும்போது இவைகள் பூக்கத் தொடங்குகின்றன.
எபிஃபில்லம் கிரெனாட்டம்.
Epiphyllum crenatum.
பெயர் :- எபிஃபில்லம் கிரெனாட்டம் - Epiphyllum crenatum.
வேறுபெயர்கள் :- எபிஃபில்லம் கிரானட் - Epiphyllum granite.
தாயகம் :- இந்த இனத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா (Central America). பின்னாளில் இவைகள் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா (Europe) கொண்டுவரப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவின.
தாவரத்தின் தன்மை.
27 அங்குல நீளமும் 4 அங்குல அகலமும் கொண்ட இலைத்தண்டுகளை கொண்டுள்ளன. இலைகள் மெலிதான நீலம் கலந்த சாம்பல் நிறம் பூசப்பட்ட பச்சை வண்ணத்தில் உள்ளன. இலைகள் ஆழமான நெளிவு சுழிவுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது கொள்ளை அழகு. அதில் பச்சைக்கலந்த வெண்ணிற பூக்கள் கண் சிமிட்டுவது இன்னும் பேரழகு.
மலர்களின் தன்மை.
10 லிருந்து 15 செ.மீ விட்டம் கொண்ட பச்சைக்கலந்த வெண்ணிற மலர்களை கொண்டுள்ளன. மலர்கள் வாசனை நிரம்பியது மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் மலர்ந்தநிலையில் இருப்பது அதிசயம்.
ஏனெனில், பொதுவாக எபிபைலும் இனத்தை சேர்ந்த தாவரங்கள் இரவில் மட்டுமே பூக்கின்றன. சூரியன் வருவதற்குள் வாடிப்போய்விடும். கலப்பினங்கள் மட்டுமே பகலிலும் பூத்திருக்கும். ஆனால் இந்த "எபிபைலும் கிரெனாட்டம்" கலப்பினத்தை சேர்ந்தது அல்ல. எனவே இவைகள் பகலிலும் மலர்ந்த நிலையில் காணப்படுவது உண்மையில் ஆச்சரியமே!!..
பழங்களின் தன்மை.
இளஞ்சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவில் காணப்படுகின்றன. அதிக அளவு சதைப்பற்றுடனும், விதைகளுடனும் காணப்படுகின்றன.
எபிஃபில்லம் குவாத்தமாலென்ஸ்.
Epiphyllum guatemalense.
பெயர் :- எபிஃபில்லம் குவாத்தமாலென்ஸ் - Epiphyllum guatemalense.
தாயகம் :- இதன் பூர்வீகம் குவாத்தமாலா (Guatemala). எனவேதான் இதன் பூர்வீகத்தை அடிப்படையாகக்கொண்டு "எபிஃபில்லம் குவாத்தமாலென்ஸ்" (Epiphyllum guatemalense) என அழைக்கப்படுகிறது.
தாவரத்தின் தன்மை.
ஒன்றரை அடி உயரம்வரை நேராக வளரும் தன்மையுடையது. இதில் இரண்டு வகையான இனங்கள் உள்ளன. அவைகள் இரண்டும் ஒன்றிற்கொன்று இலைத்தண்டுகளின் வடிவங்களில் வேறுபடுகின்றன.
இது பிறவகை எபிஃபில்லம் தாவரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் இதன் இலைத்தண்டுகள் வளைந்து நெளிந்து சுருண்டு வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகின்றன. இதன் விசேஷமான அமைப்பினால் தொங்கும் கூடைகளில் இவைகள் தொங்கு செடியாக வளர்க்கப்படுகின்றன.
இதன் இலைத்தண்டுகள் சராசரியாக 5 செ.மீ விட்டத்தை கொண்டுள்ளது. அடர்ந்த பச்சை நிறத்தையும் முறுக்கப்பட்ட வித்தியாசமான வடிவத்தையும் கொண்டுள்ளன.
மலர்களின் தன்மை.
இது 6 அங்குல மலர்த்தண்டுகளில் 3 அங்குல அளவுகொண்ட வெள்ளைநிற பூக்களை பூக்கின்றன. வழக்கம்போல பூக்கள் இரவுநேரங்களில்தான் மலர்கினறன.
காய்களின் தன்மை.
அழகான வெண்மை கலந்த இளஞ்சிவப்புநிற பழங்களை கொடுக்கின்றன. பழங்களின் உள்ளே கூழ்போன்ற அதிக சதைப்பற்றுடன் காணப்படும் இது சிறிய கருமைநிற விதைகளையும் கொண்டுள்ளன. இந்த பழங்கள் உண்ணக்கூடியதாகவே உள்ளன.
எபிஃபில்லம் தோமசியம்.
Epiphyllum thomasianum.
பெயர் :- எபிஃபில்லம் தோமசியம் - Epiphyllum Thomasianum.
தாயகம் :- மத்திய அமெரிக்கா (Central America). கோஸ்டாரிகா (Costa Rica) முதல் குவாத்தமாலாவரை (Guatemala) காணப்படுகின்றன.
தாவரத்தின் தன்மை.
இவைகள் தோராயமாக 4 மீட்டர் உயரம்வரை வளர்கின்றன. காடுகளிலுள்ள பாறை இடுக்குகள் மற்றும் பிற உயரமான மரங்களில் தொற்றிக்கொண்டு வளர்கிறது. இலைத்தண்டுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கின்றன.
மலர்களின் தன்மை.
25 செ.மீ விட்டம் கொண்ட மலர்களை மலர செய்கின்றன. மொட்டுகள் சிவப்பு நிறத்திலும், பூக்கள் வெண்மை நிறத்திலும் காணப்படுகின்றன. மகரந்தத்தை தாங்கி நிற்கும் மகரந்த காம்புகளானது மஞ்சள் நிறத்தில் காணப்படுவது மலருக்கு விசேட கவர்ச்சியை கொடுக்கின்றன. இரவு நேரத்தில் மட்டுமே மலர்கின்றன.
பழங்களின் தன்மை.
காய்கள் வரைகளுடன் பச்சை நிறத்திலும், பழங்கள் சிவப்பு நிறத்தில் மேற்புறம் வரைகளுடன் உருண்டை வடிவிலும் உள்ளன. பழங்களின் உள்ளே கூழ்போன்ற வெண்மைநிற சதைகளினூடே சிறிய கருமைநிற விதைகள் பரவலாக புதைந்துள்ளன.
எபிஃபில்லம் பையூரி.
Epiphyllum baueri.
பெயர் :- எபிஃபில்லம் பையூரி - Epiphyllum baueri.
தாயகம் - பனாமா (Panama), கொலம்பியா (Colombia).
மலர்களின் தன்மை.
வெண்மை நிற மலர்களை கொண்டுள்ளன. மலரை தாங்கிநிற்கும் மலர்த்தண்டுகள் பச்சை நிறத்தில் குழாய் போன்ற அமைப்புடன் 23 முதல் 26 செ.மீ நீளம் வரையில் காணப்படுகின்றன. இந்த மலர்தண்டுகள் உரோமம் போன்ற செதில்களால் மூடப்பட்டுள்ளன. மலர்த்தண்டுகளின் விட்டம் 3 முதல் 5 மில்லி மீட்டர்.
1.3 முதல் 1.8 அங்குல நீளம்கொண்ட இளஞ்சிவப்புநிற மகரந்த நாளங்களில் வெண்ணிற மகரந்தங்கள் நிரம்பியுள்ளன. நடுவேயுள்ள ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற வெல்வெட் போன்ற சூலகமுடி பூவிற்கு விசேஷ அழகை கொடுக்கின்றன.
பழங்களின் தன்மை.
இதன் பழங்கள் சிறிது நீளமான வடிவமுடன், கண்களை பறிக்கும் பளபளப்பான சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. அதிக சதைப்பற்றுடன் காணப்படும் பழங்கள் கருமைநிற விதைகளையும் ஏராளமாக கொண்டுள்ளன.
எபிஃபில்லம் ஃபைலாந்தஸ்.
Epiphyllum phyllanthus.
பெயர் :- எபிஃபில்லம் ஃபைலாந்தஸ் - Epiphyllum phyllanthus.
தாயகம் :- இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு இனம். பனாமா (Panama) மற்றும் பெரு (Peru) நாடுகளை பூர்வீகமாக கொண்டவை.
தாவரத்தின் தன்மை.
இதன் முதன்மை தண்டுகள் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. இவைகள் 50 முதல் 100 செ.மீ நீளமுடையதாக உள்ளன. இதன் இலைதண்டுகள் 25 லிருந்து 50 செ .மீ வரை வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
மலர்களின் தன்மை.
இவைகளும் வழக்கப்போல் இரவில்தான் பூக்கின்றன. அதுவும் வெள்ளை நிறத்தில். பூவின் மையத்திலுள்ள சூலக தண்டானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தந்து மலருக்கு விசேஷ கவர்ச்சியை கொடுக்கின்றன. பூக்கள் 14 லிருந்து 18 செ.மீ விட்டத்தை கொண்டுள்ளன.
காய்களின் தன்மை.
காய்கள் பச்சை நிறத்துடனும், பழங்கள் சிறிது நீளமாக வரைகளுடனும், சிவப்பு நிறத்துடனும் காணப்படுகின்றன. பழங்களின் உள்ளே கூழ்போன்ற வெண்மைநிற சதைகளினூடே சிறிய கருமைநிற விதைகள் பரவலாக புதைந்துள்ளன.
எபிஃபில்லம் லாய்.
Epiphyllum laui.
பெயர் :- எபிஃபில்லம் லாய் - Epiphyllum laui.
தாயகம் :- இது மெக்ஸிகோ (Mexico) பிரதேசத்தை தாயகமாகக்கொண்டு அங்குள்ள பாறை இடுக்குகள் மற்றும் காடுகளிலுள்ள உயர்ந்த மரங்களை தொற்றி வளர்கின்றன.
தாவரத்தின் தன்மை.
தாவரத்தின் தண்டுகள் 2 செ. மீ விட்டத்தை கொண்டுள்ளன. இதன் தண்டுகளில் 5 மிமீ அளவில் சிறு சிறு முட்கள் காணப்படுகின்றன.
இலைகள் 2 முதல் 3 அங்குல விட்டத்தை கொண்டுள்ளது. மெல்லிய தளிர் இலைகளை பாதுகாக்கும் வண்ணமாக அவைகளின் தண்டுகளில் பரவலாக மெல்லிய முற்கள் காணப்படுகின்றன.
மலர்களின் தன்மை.
அகன்ற இதழ்களைக்கொண்ட வெள்ளை கிரீம் நிற பூக்கள். மலரின் வெளிப்புற இதழ்கள் மஞ்சளுடன் கலந்த பழுப்பு நிறத்தை கொண்டுள்ளன. மாலை நேரங்களில் பூக்க ஆரம்பிக்கின்றன. மலர்கள் 12 லிருந்து 16 செ.மீ விட்டத்தை கொண்டுள்ளன.
இது மலர்ந்தும் மலராத பாதி மலர்போல மலர்ந்த நிலையில் புனல்போல காட்சியளிக்கின்றன. மலர்ந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கண்களுக்கு விருந்தளிப்பது இதன் சிறப்பு.
காய்களின் தன்மை.
அயல்மகரந்த சேர்க்கை நடைபெற்றதின் விளைவாக கருவுருகின்றன. 4 முதல் 8 செ.மீ நீளம் கொண்ட சிவப்பு நிற பழங்களை உற்பத்தி செய்கின்றன.
எபிஃபில்லம் ஹீக்கரி.
Epiphyllum hookeri.
பெயர் :- எபிஃபில்லம் ஹீக்கரி - Epiphyllum hookeri.
தாயகம் :- தென் அமெரிக்காவின் (South America) வட பகுதியை தாயகமாக கொண்ட இது கியூபாவின் (Cuba) பாரம்பரிய மலர்.
வெனிசுலா (Venezuela), கியூபா (Cuba), கோஸ்டாரிகா (Costa Rica), எல் சால்வடோர் (El Salvador), குவாத்தமாலா (Guatemala), ஹோண்டுராஸ் (Honduras), நிகரகுவா (Nicaragua) மற்றும் மெக்சிகோ (Mexico) ஆகிய பிரதேசங்களில் பரவலாக காணப்படுகின்றன.
தாவரத்தின் தன்மை.
இது தம் அருகிலுள்ள பிற மரங்களை தொற்றிக்கொண்டு சுமார் 30 அடி உயரம்வரை வளரும் தன்மையுடையது. இலைகள் போன்ற அமைப்பைக்கொண்ட இலைத்தண்டுகள் நீளமானவை. தட்டையானவை. இலைகளின் நீளம் மற்றும் எடை காரணமாக இவைகள் கீழ்நோக்கி கவிழ்ந்தபடி காணப்படும்.
மலர்களின் தன்மை.
கோடைகாலங்களில் இவைகள் பூக்கின்றன. மலர்கள் வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. பூக்கள் இரவில் மலர்ந்து விடிவதற்குள் அயர்ந்துவிடும்.
இது பிற வகை எபிஃபில்லம் மலர்களைப்போல் பிரமாதமான வாசனையுடையது இல்லை என்றாலும் இலைவடிவ தண்டுகளில் குழாய்வடிவ பூ காம்புகளுடன் வெண்மைநிற பூக்கள் பூத்து குலுக்குவது அழகோ அழகு.
பழங்களின் தன்மை.
பழங்கள் ஊதா கலந்த சிவப்பு நிறத்தில் ஐங்கோண வடிவமைப்பில் காணப்படுகின்றன. பழங்களினுள் சிறிய கருப்பு நிற விதைகள் ஏராளமான அளவில் பழக்கூழினுள் புதைந்து காணப்படுகின்றன.
எபிஃபில்லம் ட்ரைமெட்ரேல்.
Epiphyllum trimetrale.
பெயர் :- எபிஃபில்லம் ட்ரைமெட்ரேல் - Epiphyllum trimetrale.
தாயகம் :- தென் அமெரிக்காவின் கொலம்பியாவை (Colombia) பிறப்பிடமாக கொண்டது.
தாவரத்தின் தன்மை.
தட்டையான முதல்நிலை தண்டுகளை கொண்டுள்ளன.
மலர்களின் தன்மை.
வெண்மை நிற அழகான மலர்களை மலரசெய்கின்றன..
இனப்பெருக்கம்.
தண்டுகள், இலைத்தண்டுகள் மற்றும் விதைகள்மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன.
குறிப்பு :- இந்த "எபிஃபில்லம் ட்ரைமெட்ரேல்" பொதுவாக எங்குமே பயிரிடப்படவில்லை என்பதால் இதுசார்ந்த புகைப்படங்களோ, இத்தாவரத்தைப்பற்றிய மேலதிகமான பிற விபரங்களோ நமக்கு கிடைக்கவில்லை.
இந்த பதிவில் "ஆர்க்கிட்" வகையை சேர்ந்த கள்ளி இன தாவரத்திலுள்ள எபிஃபில்லம் என்னும் பேரினத்திலுள்ள இருபது வகையான இனங்களில் முதல் பத்துவகையான இனங்களை பார்த்தோம். அடுத்துள்ள 10 வகையான இனங்களை பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்...
2 கருத்துகள்
மலர்கள் அழகோ அழகு...
பதிலளிநீக்குஉண்மை ... பார்த்தவுடன் நம் மனதையும் மலர செய்யும் திறன் மலருக்கு மட்டுமே உண்டு...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.