ஹெலிகோனியா ஹிர்சுட்டா.
H. hirsuta.
உங்கள் வீட்டு தோட்டங்களில் ஹெலிகோனியா என்னும் அழகுச்செடியை வளர்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களின் முதல் தேர்வாக "ஹெலிகோனியா ஹிர்சுட்டா" - Heliconia hirsuta இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் இது ஒரு சிறியவகை தாவரம் மட்டுமல்ல அனைத்து வகையான மண் வகைகளுக்கும் ஏற்ற தாவரமும் கூட. விரைவாகவும் வளரக்கூடியது. மேலும் கண்ணைக்கவரும் மலர்களை உற்பத்தி செய்து உங்களை குதூகலப்படுத்துவதில் முதன்மையானது.
Heliconia hirsuta.
இந்த ஹிர்சுட்டாவில் பல வகையான இனங்கள் உள்ளன. அவைகளாவன.
Tamil | Englisk |
---|---|
ஹிர்சுட்டா | Heliconia hirsuta |
ஹிர்சுட்டா மஞ்சள் பனாமா | Hirsuta yellow panama |
ஹிர்சுட்டா மஞ்சள்-பிங்க் | Hirsuta yellow-Pink |
ஹிர்சுட்டா ஆரஞ்சு | Hirsuta orange |
ஹிர்சுட்டா கோஸ்டா புளோரஸ் | Hirsuta costa flores |
ஹிர்சுட்டா அலிசியா | Hirsuta Alicia |
ஹிர்சுட்டா சுமேனியா | Hirsuta chumaniana |
இவைகள் மட்டுமல்லாது இதில் குறிப்பிடாத இன்னும் சில இனங்களும் உள்ளன.
இவைகள் 3 முதல் 6 அடி மட்டுமே வளரும் தன்மைகொண்டன. எனவே இது மாடி தோட்டங்களிலும், பூந்தொட்டிகளிலும் வளர்ப்பதற்கேற்ற ரகம். இன்னும் சொல்லப்போனால் "ஹிர்சுட்டா" உண்மையிலேயே "ஹாய் சுட்டி" என்று சொல்லவைக்கும் ரகம் !!!.
சரி !!! . இனி இந்த ஹிர்சுட்டாவைப்பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
Heliconia Basic information.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா ஹிர்சுட்டா - Heliconia hirsuta.
பொதுப் பெயர் :- போர்த்துகீசிய மொழியில் "பக்கோவா" என்றும், ஸ்பானிஷ் மொழியில் பிஜாவோ, இசிரா, பிளாட்டானிலோ மற்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டுவருகிறது.
தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.
குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).
இனம் :- ஹிர்சுட்டா - Hirsuta.
பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.
வரிசை :- Zingiberales.
பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.
Hirsuta yellow panama. |
தாயகம் :- மத்திய அமெரிக்கா (Central America), தென் அமெரிக்கா (South America) மற்றும் கரீபியன் (Caribbean) நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது.
வாழிடம் :- பெரும்பாலும் இவைகள் ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகளில் வளர்கின்றன.
அர்ஜெண்டினா (Argentina), ஈக்வடார் (Ecuador), பெலிஸ் (Belize), பொலிவியா (Bolivia), கொலம்பியா (Colombia), பிரேசில் (Brazil), கயானா (Guyana), பிரெஞ்சு கயானா (French Guiana), பனாமா (Panama), பராகுவே (Paraguay), ஹோண்டுராஸ் (Honduras), டொபாகோ (Tobago), நிகரகுவா (Nicaragua), வெனிசுலா (Venezuela), டிரினிடாட் (Trinidad), சுரினாம் (Suriname) மற்றும் பெரு (Peru) ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.
தாவரத்தின் தன்மை.
இலைகள் நீள்வட்ட வடிவமானது. இது சராசரியாக 40 சென்டிமீட்டர் நீளத்தில் கிடைமட்டமாக அமைந்துள்ளன. இனத்திற்கு இனம் இலைகளின் அமைப்பு மாறுபடுவதுண்டு. சில இனங்களின் இலைகள் இஞ்சி தாவரத்தின் இலைகளைப்போல் காணப்படுகின்றன. அவ்வாறான இனங்களை ஜிங்கிபீராய்டு (zingiberoid) என அழைக்கின்றனர்.
மலர்களின் தன்மை.
இதன் மஞ்சரிகள் மற்றும் அதனுடன் இணைந்த பூ மடல்கள் சிவப்பு நிறத்திலும், மெலிதான ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்திலும் தோன்றி நம்முடைய கண்களை கிறங்கடிக்கின்றன. இந்த மடல்கள் 6 முதல் 10 எண்ணிக்கை கொண்டதாகவும் ஒவ்வொன்றும் 6 முதல் 8 அங்குல நீளம் கொண்டதாகவும் உள்ளன.
மடல்களினுள்ளே இனங்களைப்பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பசுமை கலந்த மஞ்சள் நிறங்களைக்கொண்ட பூக்கள் பெரிதாக அழகுக்காட்டி நிற்பது கண்கொள்ளாக்காட்சி. "Hirsuta yellow panama' என்னும் இனம் பசுமை கலந்த மஞ்சள் நிற பூக்களை பூக்கிறது.
பூக்கள் என்றால் சாதாரண பூக்கள்தானே என்று தப்பாக எடை போட்டுவிடாதீர்கள். பொதுவாக நம் வீட்டில் குழந்தைகளுக்கு கண்திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக கன்னத்தில் கருப்புநிறத்தில் திருஷ்டி பொட்டு வைக்கிறோமல்லவா? .. அதுபோல இந்த மலர் ஒவ்வொன்றுக்கும் அதன் நுனிப்பகுதியில் கருப்புநிற திருஷ்டி பொட்டு வைக்கப்படுள்ளது.
அதுமட்டுமல்ல .. திருஷ்டிப்பொட்டின் மேலே ஒரு வெள்ளைப்பொட்டும் வைக்கப்பட்டுள்ளது இன்னும் ஆச்சரியமே. "சுட்டி"யோட பவுசை பார்க்கும்போது "ஹிர்சுட்டானா" அவங்க அம்மாவுக்கு ரொம்பவும்தான் செல்லம்போல.
இது ஜூன் (June) முதல் செப்டம்பர் (September) வரை பூக்கின்றன. இது தேனீக்கள் (Honey bee), பட்டாம்பூச்சிகள் (Butterflies) மற்றும் பறவைகளுக்கு தேவையான மதுவையும் தாராளமாகவே உற்பத்தி செய்கின்றன.
காய்களின் தன்மை.
இவைகளின் காய்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலும் கனியும்போது கரு நீலநிறமாகவும் மாறுகின்றன. பழங்கள் சிறியவை 0.8 செ.மீ விட்டம் கொண்டவை. பழங்கள் ஒவ்வொன்றும் 1 முதல் 3 விதைகளைக் கொண்டுள்ளன.
இனப்பெருக்கம்.
சிறிய ரக கிழங்கு போன்ற வேர்பகுதிகளில் கிளைக்கும் இளம் கன்றுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தைப் பெருக்குகிறது.
"ஹம்மிங்" போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன. இவற்றின் பழங்கள் பறவைகளாலும், வொவ்வால்களாலும், சிறியவகை பிராணிகளாலும் விரும்பி உண்ணப்படுவதால் இவைகள்மூலம் விதைகள் தொலைதூரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதன்மூலம் இனம் விருத்தி அடைகின்றன.
குறிப்பாக வேர் கிழங்குகள் மூலமாக விரைவாக தன் இனத்தை பெருக்குகிறது.
வளரும் நிலப்பகுதிகள் :- தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வளர்க்கப்பட்டுவருகிறது. வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.
Type of heliconia-hirsuta. |
சாகுபடி.
வேர் தண்டுகளில் கிளைக்கும் சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின்மூலம் எளிதாக சாகுபடி செய்யலாம்.
விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்யலாம் என்றாலும் இவைகள் கடினமான ஓடுகளை கொண்டுள்ளதால் முளைப்பதற்கு அதிகநாட்கள் எடுத்துக்கொள்கின்றன. இதனாலேயே ஹெலிகோனியா வகை தாவரங்களை விதைகள் மூலமாக பயிர் செய்வதை யாரும் விரும்புவதில்லை.
விதைகள் விரைவாக முளைக்கச்செய்ய வெதுவெதுப்பான நீரில் 2 அல்லது 3 நாட்கள் ஊறவைக்கப்படுகிறது. இதன்மூலம் விதையின் மேலோடுகள் மென்மையாக்கப்பட்டு முளைப்புத்திறன் துரிதப்படுத்தப்படுகிது. ஆனால் இந்த முறையை பயன்படுத்தினால்கூட முளைப்பதற்கு குறைந்தது ஐந்து மாதம் முதல் ஆறுமாதகாலம் வரை காத்திருக்கவேண்டும்.
தரமான பூக்களைப்பெற வேண்டுமெனில் போதிய அளவு சூரிய வெளிச்சமும், மக்கிய தொழு உரங்களுடன் சிறிதளவு இரசாயன உரங்களும் தரவேண்டியது அவசியம்.
இந்த தாவரத்திற்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. ஆனால் வேர்களில் நீர் தேங்கி நிற்பது கூடாது. இது வேரழுகல் நோயை உண்டாக்கலாம். எனவே வடிகால் வசதி மிகமிக அவசியம்.
இதனை விவசாய நிலங்களில் பணப்பயிராகவும் பயிரிட்டு லாபம் பார்க்கலாம். எனவே ரம்மியமான அழகு பொருந்திய இதனை வீடுகளிலும், விளைநிலங்களிலும் விளைவித்து பயனடைவோம்.
பயன்கள்.
இது அடிக்கடி பூப்பதாலும், வாடாமல் நெடுநாட்கள் இருப்பதாலும், பராமரிப்பது எளிது என்பதாலும் பூங்காக்களிலும் வீடுகளிலும் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்காலங்களில் மலர் அலங்காரங்களிலும் இது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேல்நோக்கி தன்னுடைய மலர்களை மலரச்செய்து எழில்காட்டி நிற்கும் "ஹிர்சுட்டா" போலல்லாமல் நீளமான மலர்கொத்துக்களை தொங்கவிட்டபடி அழகுகாட்டி நிற்கும் "கோலின்சியானா" பற்றி அறிய விருப்பமா?... வாருங்கள் அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை கொஞ்சம் பலமாகவே தட்டுங்கள்.
>>"ஹெலிகோனியா கோலின்சியானா - Heliconia collinsiana."<<
2 கருத்துகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு... விளக்கம் அருமை...
பதிலளிநீக்குநன்றி ...!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.