"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" ஹெலிகோனியா அங்கஸ்டா - Heliconia angusta.

ஹெலிகோனியா அங்கஸ்டா - Heliconia angusta.

ஹெலிகோனியா அங்கஸ்டா.

Angusta.

          உலகெங்கிலும் பெரும்பான்மையான வீட்டு தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் தாவர இனம் "ஹெலிகோனியா அங்கஸ்டா" (Heliconia angusta).

"சிவப்பு - வெள்ளை", "மஞ்சள் - வெள்ளை" மற்றும் "ஆரஞ்சு - வெளிர் மஞ்சள்"  என தன் இதழ்களில் வண்ணம்காட்டி புன்முறுவலித்து நிற்பவைகள் இவை.

angusta.
Heliconia angusta.

அழகுக்கு அழகு சேர்க்கும் இத்தாவரத்தை பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    Heliconia Angusta.

    தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா அங்கஸ்டா - Heliconia angusta.

    பொதுப் பெயர் :- இந்த ஹெலிகோனியா அங்கஸ்டாவானது பொதுவாக அனைவராலும் "கிறிஸ்துமஸ் ஹெலிகோனியா" (Christmas heliconia) என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் இவைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் காலகட்டங்களில் பூக்க ஆரம்பிக்கின்றன. அதாவது டிசம்பர் (December) முதல் மார்ச் (March) வரை பூக்கின்றன. எனவேதான் இதனை "கிறிஸ்துமஸ் ஹெலிகோனியா" என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர்.

    வேறு பெயர்கள் :- 

    • ஹெலிகோனியா பைகோலர் பெந்த (Heliconia bicolor Benth).
    • ஹெலிகோனியா அகஸ்டிஃபோலியா ஹீக் (Heliconia agustifolia Hook).
    • ஹெலிகோனியா பிரேசிலியன்சிஸ் ஹீக் (Heliconia Brasiliensis Hook).

    தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.

    குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).

    பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.

    இனம் :- அங்கஸ்டா - Angusta.

    வரிசை :- Zingiberales.

    பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.

    வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள். குறிப்பாக அட்லாண்டிக் காடுகளில் நீரோடைகளுக்கு அருகாமையில் ஏராளமாக வளர்கின்றன.

    வகைகள்.

    இதில் சிறு சிறு மாற்றங்களுடன் பல இனங்கள் இருந்தாலும் அவைகளில் மூன்று இனங்களே மிக பிரதானமானவை. ஒன்று சிவப்பு மஞ்சரி, மடல்களையும் வெள்ளை நிற மலர்களையும் கொண்டது. இதனை சிவப்பு கிறித்துமஸ் (Red Christmas) என அழைக்கின்றனர்.

    Heliconia angusta - Red Christmas.

    இரண்டாவது மஞ்சள்நிற மஞ்சரி, மடல்களையும், வெள்ளை நிற பூக்களையும் கொண்டவை. இதனை மஞ்சள் கிறிஸ்துமஸ் (Yellow Christmas) என அழைக்கின்றனர்.

    Heliconia angusta - Yellow Christmas.

    மூன்றாவது ஆரஞ்சு நிற மஞ்சரி, மடல்களையும் வெளிர் மஞ்சள்நிற பூக்களையும் கொண்டவை. இதனை ஆரஞ்சு கிறிஸ்த்துமஸ் (Orange Christmas) என்று அழைக்கின்றனர்.

    Heliconia angusta - Orange Christmas.

    இந்த மூன்றுமே கண்களைப் பறிக்கும் அழகு கொண்டவையாகவும் அனைவராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றன.

    தாயகம்.

    தென் அமெரிக்காவின் வெப்பமண்டலங்களில் பரவலாக காணப்படுகிறது. இதன் தாயகம் பிரேசில் (Brazil). மேலும் புளோரிடா (Florida), காம்பியாவில் (Gambia) மட்டுமல்லாது தாய்லாந்திலும் (Thailand) செழிப்பாக வளர்கிறது.

    தற்காலங்களில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அனைவரது வீட்டுத்தோட்டங்களிலும் பூத்துக்குலுங்கும் ஒரு மலர்செடியாக பரவி வருகிறது. தாவரவியல் பூங்காக்களிலும் அதிக அளவு வளர்க்கப்பட்டு வருகிறது.

    தாவரத்தின் தன்மை.

    இது 3 முதல் 5 அடி உயரம் வரை வளரும் ஒரு அழகிய தாவரம். இலைகள் பசுமையானது. இதன் இலைகள் இஞ்சி (Ginger), மஞ்சள் (Turmeric) மற்றும் மாவிலைகளைப் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் இலைகள் 40 முதல் 55 சென்டிமீட்டர் நீளமும், 6 முதல் 10 சென்டிமீட்டர் அகலத்தையும் கொண்டது.

    இது தன்னுடைய அதிர்ச்சியூட்டும் அழகால் அனைவரையும் தன் பக்கம் இழுத்துள்ளது. அதிக அளவு பராமரிப்பு தேவைப்படாத தாவரம். அதனாலேயே இது அனைவராலும் விரும்பப்படுகிறது.

    மலர்களின் தன்மை.

    இது அனைவரையும் வியக்கவைக்கும் பூக்களை கொண்டுள்ளன. இரண்டு எதிரெதிர் வரிசைகளில் கண்கவரும் பூ மடல்களை கொண்டுள்ளன. 7 முதல் 11 மடல்கள் காணப்படுகின்றன. இவைகள் தாவரத்தின் இனத்தினை பொறுத்து சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் காட்சியளிக்கின்றன.

    மடல்களின் உள்ளே வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிற மலர்கள் உள்ளன. டிசம்பர் (December) முதல் மார்ச் (March) வரை பூக்கின்றன.

    காய்களின் தன்மை.

    காய்கள் கோள வடிவமானவை, இதன் பழங்கள் நீல நிறத்தில் உள்ளன. ஒன்று முதல் மூன்று விதைகளைக் கொண்டுள்ளன. பழங்கள் பறவைகளுக்கும், ஊர்வனவகை விலங்குகளுக்கும் உணவாகின்றன.

    இனப்பெருக்கம்.

    இதன் வேர்ப்பகுதிகளில் கிளைக்கும் சிறியரக கன்றுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தைப் பெருக்குகின்றன.

    "ஹம்மிங்" (Humming bird) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.

    வளரும் நிலப்பகுதிகள்.

    தற்காலங்களில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.

    சாகுபடி.

    வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர் செய்யலாம். 

    இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 10 மாதங்கள்வரை ஆகலாம்.

    நல்ல தரமான பூக்கள் கிடைக்க வேண்டுமெனில் மக்கிய தொழு உரத்துடன் பாஸ்பரஸ் (Phosphorus) மற்றும் நுண்ணூட்ட சத்துக்களையும் (Micronutrients) இடவேண்டியது அவசியம்.

    சாதாரண காலங்களில் வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. ஆனால் அதிக வறட்சியான காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் விடவேண்டியது அவசியம்.

    வேர்ப்பகுதிகளில் எப்போதும் ஈரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வேர்ப்பகுதியில் நீர் தேங்கிநிற்க கூடாது. வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

    நோய் தாக்குதல்.

    இதனை பெரும்பாலும் நோய்கள் எதுவும் பாதிப்பதில்லை என்றாலும் நத்தையினங்கள் மற்றும் பலவித தாவரம் உண்ணும் புழுக்கள் இதனை பாதிக்கலாம். சிலந்தி பூச்சிகளாலும் இது அதிகம் பாதிக்கப்படலாம்.  

    அடுத்தப்படியாக இந்த தாவரத்தை அதிகம் பாதிப்பது "பூஞ்சை நோய்கள்".

    இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்திற்கு மாறினால் அல்லது தீயினால் சுட்டது போன்ற பிரவுண் நிறத்திற்கு மாறினால் "பைட்டோபதோரா" (phytophthora) என்னும் ஒருவித பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை அறிந்துகொள்ளலாம்.

    இது உருளைக்கிழங்கு (Potato) மற்றும் தக்காளி (Tomato) பயிர்களை அதிக அளவில் பாதிக்கும் ஒரு பூஞ்சை நோய். இது ஹெலிகோனியாவையும் பாதிக்கின்றன.

    இந்த நோயினால் எந்த தாவரம் பாதிக்கப்பட்டுள்ளதோ அதனை உடனடியாக அங்கிருந்து அகற்றிவிடுங்கள். இதனால் பிற செடிகளுக்கு இந்நோய் பரவுவதை தடுக்கலாம். மேலும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி இதனை கட்டுப்படுத்தலாம்.

    மேலும் இலைகள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தால் செடிகளுக்கு போதிய அளவில் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் இருக்கலாம். அல்லது மண்ணில் போதிய அளவு ஈரப்பதம் இல்லாமல் இருக்கலாம். மண்ணில் அதிக அளவில் சுண்ணாம்பு சத்து இருந்தாலும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதலடையும்.

    அதுபோல் இலைகள் சுருக்கம் அடைந்தால் நுண்ணூட்ட சத்து (Micronutrients) பற்றாக்குறையாக இருக்கலாம். பாஸ்பரஸ் (Phosphorus), மெக்னீசியம்(Magnesium), பொட்டாசியம் (Potassium) போன்ற சத்துக்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் இவ்வாறு நிகழும். அதுமட்டுமல்லாது போதிய அளவு நீர்ப்பாசனம் இல்லாமல் இருந்தால்கூட இலைகள் சுருளலாம்.

    பயன்கள்.

    தற்காலங்களில் வீட்டு தோட்டங்களில் இது பரவலாக இடம்பிடித்துவருகிறது. இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப்  பிடிக்கிறது.

    மலர் அலங்காரங்களுக்காக தாவரத்திலிருந்து இதன் பூங்கொத்துக்களை அகற்றினாலும் இதன் மஞ்சரிகள் தகுந்த சூழ்நிலையில் பாதுகாத்துவரும் பட்சத்தில் அதிகப்படியாக 10 நாட்கள்வரை வாடாமல் இருக்கும் தன்மையுடையவை.

    அங்கஸ்டாவிற்கு சிறிதும் சளைத்ததல்ல ஆரான்டியாகா!!.. இந்த ஆரான்டியாகாவைப்பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை சூசகமா தட்டுங்க.

    >>"ஹெலிகோனியா ஆரான்டியாகா - Heliconia aurantiaca."<<

    💟 💟 💟 💟 💟 💟

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    2 கருத்துகள்

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.