மருத்துவப் பழமொழிகள்.
Maruthuva Palamolikal.
"மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண்" என்பது முன்னோர்கள் வாக்கு.
உடலை உருவாக்குவதும் உணவே. அந்த உடலை நோய்நொடியில்லாமல் காப்பதும் உணவே. இதனை நாம் புரிந்து கொண்டால்தான் ஆரோக்கியமான உடலையும் வளமான வாழ்வையும் பெறமுடியும். இந்த உண்மையை சரியாகப் புரிந்துகொண்ட நம் முன்னோர்கள் ஆரோக்கியம் சார்ந்த பொன்மொழிகளை உணவு சார்ந்த பழமொழிகளாக வடித்துவைத்து சென்றுள்ளனர். அப்படியான பழமொழிகளை இன்றைய இலக்கியம் பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
Health Proverbs.
நோயற்ற வாழ்வே.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
- ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ...
- இம்பூறல் காணாமல் இருமி செத்தான்.
- அஞ்சடக்க அகிலமும் அடங்கும்.
- ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்.
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- நோயை கட்ட வாயை கட்டு.
- வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்கு கொடு.
- நொறுங்க தின்றால் நூறு வயசு.
- மென்று தின்றால் நன்று.
- இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு.
- உண்டதும் குளித்தால் உடலில் சேராது.
- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.
- பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.
- லங்கனம் பதமம் ஔஷதம்.
- கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்து குடி.
- மூலிகை அறிந்தால் மூவுலகம் ஆளலாம்.
- வள்ளல் (வள்ளல் கீரை) தாய்போல் பிள்ளையை வளர்க்கும்.
- மாமன்மார் செய்யாததை ஒரு மாமரம் செய்யும்.
- மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்.
- ஒருவேளை யோகி, இருவேளை போகி, மூவேளை ரோகி, எப்போதும் உண்பவன் துரோகி.
- வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.
Corona... go... go... |
- கடுக்காய் செய்யும் நன்மை தாயைவிட அதிகம்.
- கடுக்காய்க்கு அகத்தில் நஞ்சு, சுக்குக்கு புறத்தில் நஞ்சு.
- கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
- ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய், இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.
- சூரிய ஒளி வரும் ஜன்னலை அடைத்து வைத்தால் வைத்தியன் வரவுக்காக வாசலை திறந்து வைக்கவேண்டி இருக்கும் .
- இலவச வைத்தியம் பயனற்ற மருந்தையே உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும்.
- பலபேரிடம் வைத்தியம் பார்த்தால் சில நாட்களிலேயே சிலபேர் கூடி அழும்படி ஆகிவிடும்.
- தேள்கடிக்கே மந்திரிக்க தெரியாதவன் பாம்புகடிக்கு வைத்தியம் பார்ப்பானா?
- போறவன் பொன்னை தின்னு, இருக்கிறவன் இரும்பை தின்னு.
- மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை, வெட்டை முற்றினால் கட்டை.
- ஆற்று நீர் வாதம் போக்கும், ஊற்றுநீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் இரண்டையும் போக்கும்.
- பசித்த பின்பே புசி .
- தின்றுதான் பாரு முடக்கத்தான், "வாதமே" முடங்கிபோய் கிடக்கத்தான்.
- துஞ்சல் கண்ணுக்கு பொன்னாங்கண்ணி தின்னு, மஞ்சள் கண்ணுக்கு கரிசலாங்கண்ணி தின்னு.
- அரை வயிற்றுக்கு ஆயுள் அதிகம்.
- வில்வப்பழம் தின்றால் பித்தம் போகும். பனம்பழம் தின்றால் பசியும் போகும்.
- தன்காயம் காக்க வெங்காயம் போதும்.
- வெங்காயம் உண்போருக்கு தங்காயம் பழுதில்லை.
- எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.
- அமிழ்தமே ஆனாலும் உன் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லையெனில் அது உனக்கு நஞ்சென அறி.
- கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கையும் இருக்க வேண்டும்.
- சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
- அரசமரத்தை சுற்றிவந்தால் அரசாள மகவு வரும்.
- நாக்குக்கு செல்லம் கொடுத்தால் வாழ்வு நாசமாய் போகும்.
- விருந்தும் மருந்தும் மூன்றே நாள்.
- மருந்து கால் மதி முக்கால்.
- இருட்டுக்கு முந்தி இரவு உணவை கொள்.
- நீரை சுருக்கி, மோரை பெருக்கி, நெய்யை உருக்கி உண்.
- பல்லக்கில் ஏற இரும்பை தின்னு, பாடையில் போக பொன்னை தின்னு.
- முருங்கை உண்ண நொறுங்கும் மேகம்.
- வல்லாரை இருக்க கல்லாரை கண்டதுண்டோ.
- மலச்சிக்கல் ஒன்றே ஆதி நோய், அதன் பின்னால் வருபவையெல்லாம் மீதி நோய்களே.
- பசித்தபின்பே ருசி.
- வயிறு பெரிதானால் மூளை சிறிதாகும்.
- அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
- பெரும் பஞ்சத்தைவிட பெருந்தீனியே ஆளைக்கொல்லும்.
- காட்டிலே புலி கொல்லும். வீட்டிலே புளி கொல்லும்.
- சீரை தேடின் கீரை தேடு.
- வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி.
- சிறுபிள்ளை இல்லாத வீடும் வீடல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறியல்ல.
- சீரகம் இல்லா உணவு சிறக்காது.
- மலம் தங்கினால் பலம் போச்சு.
- பணச்சிக்கலைவிட மலச்சிக்கலே ஆபத்தாகும்.
- மலச்சிக்கல் பணச்சிக்கலையும் வருவிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
- மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
- சுக்கு உண்டால் மக்கு விலகும்.
- மக்களைக் காக்குமாம் மணத்தக்காளி.
- சித்தம் தெளிய சத்தம் குறை.
- தாய் அறியாத சூல் உண்டோ?
- பாலோடாயினும் காலத்தே உண்.
- பால் உண்டவன் பந்திக்கு முந்தான்.
- சூரிய ஒளி புகமுடியாத வீட்டில் வைத்தியனுக்கு வேலை அதிகம்.
⏩⏪⏩⏪⏩⏪⏩⏪
2 கருத்துகள்
அருமையான சிறந்த தொகுப்பு... Bookmark செய்து வைத்துள்ளேன்... நன்றி...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.