ஹெலிகோனியா சார்டேசியா.
"ஹெலிகோனியம்" - Heliconia என்னும் இந்த பதிவின் மூலமாக மலர் அலங்காரத்திற்குப் பயன்படும் மலர்களில் முதன்மையான மலரான ஹெலிகோனிய மலர்களைப்பற்றி இத்தொடரில் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.
இந்த பதிவில் ஹெலிகோனிய தாவரங்களில் மிகவும் ரம்மியமான அழகையும், கவர்ச்சியான நிறங்களையும் ஒருசேரப்பெற்றுள்ள மலர்களை மலரச்செய்யும் "ஹெலிகோனியா சார்டேசியா" - Heliconia chartacea என்னும் தாவரத்தைப்பற்றி விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
Heliconia chartacea.
தாவரவியல் பெயர் :- ஹெலிகோனியா சார்டேசியா - Heliconia chartacea.
பொதுவான ஆங்கில பெயர் :- பிங்க் ஃபிளமிங்கோ ஹெலிகோனியா - pink flamingo heliconia.
தாவர பிரிவு :- பூக்கும் விதை தாவரங்கள் - Angiosperms.
குடும்பம் :- ஹெலிகோனியேசியே (Heliconiaceae).
பேரினம் :- ஹெலிகோனியா - Heliconia.
இனம் :- சார்டேசியா - Chartacea.
வரிசை :- Zingiberales.
பருவநிலை :- வெப்பமண்டல தாவரம்.
வாழிடம் :- ஈரப்பதம் நிரம்பிய வெப்பமண்டல மழைக்காடுகள்.
தாயகம் :- இது பிரேசிலை (Brazil) தாயகமாகக் கொண்ட இனம்.
வளரும் நிலப்பகுதிகள் :- தென் அமெரிக்க பிரதேசமான பிரேசிலைப் பூர்வீகமாகக்கொண்ட இனம். மேலும் இது வெனிசுலா (Venezuela), கயானா (Gayana), பிரெஞ்சு கயானா (French Guiana), சுரினாம் (suriname), பெரு (Peru) மற்றும் ஈக்வடார் (Ecuador) ஆகிய பிரதேசங்களிலும் இயல்பாக வளருகிறது.
தற்காலங்களில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் வீட்டு தோட்டங்களில் அழகுக்காகவும், விவசாய நிலங்களில் வியாபார நோக்கத்திற்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.
வகைகள்.
இதில் மீனா (Meeana) என்று சொல்லப்படும் செக்ஸி எல்லோ (Meeana - sexy yellow), ரோப்ஸ் ரெட் (Robs red), எச் . சார்டேசியா மரேசா (H . chartacea maresa), சார்டேசியா டெம்ப்ட்ரஸ் (Chartacea Temptress), கியூசெப் மஸ்ஸா (Giuseppe Mazza), செக்ஸி பிங்க் (Sexy Ping), மற்றும் செக்ஸி ஸ்கார்லெட் (Sexy Scarlet) என பல்வேறு வகைகள் உள்ளன.
இதில் செக்ஸி பிங்க் (Sexy Ping) மற்றும் செக்ஸி ஸ்கார்லெட் (Sexy Scarlet) என்ற இரு இனங்கள் மட்டுமே மிகவும் சிறப்பானதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் செக்ஸி பிங்க் என்னும் இனம் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டது. செக்ஸி ஸ்கார்லெட் இனமானது ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலைகள்கொண்ட பகுதிகளுக்கு மிகவும் ஏற்றது. இரண்டுமே விவசாயிகளுக்கு அதிக அளவு மகசூல் தருவதாக இனங்கண்டறியப்பட்டுள்ளது.
இனப்பெருக்கம்.
சிறிய ரக வேர் போன்ற கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இருவழிகளில் தன் இனத்தை பெருக்குகிறது.
"ஹம்மிங்" (Humming birds) போன்ற சிறிய ரக பறவைகளாலும், வௌவால்களாலும் (Bats) மற்றும் சில தேனுண்ணும் பூச்சிகளாலும் அயல்மகரந்த சேர்க்கை நடைபெறுகின்றன.
பூவாகி, காயாகி, கனியாகி கனிந்த பழங்கள் டானேஜர் (tanagers), த்ரஷ் (thrushes) மற்றும் பல பறவைகளால் உண்ணப்பட்டு அதன்மூலம் இதன் விதைகள் தொலைதூரங்களுக்கு கடத்தப்படுகின்றன.
தாவரத்தின் தன்மை.
அதிகப்படியாக 4 முதல் 8 மீட்டர்வரை உயரமாக வளரும் தாவரயினம். இலைகள் நீள்வட்ட வடிவில் சுமார் 3 மீட்டர் வரை நீளம் கொண்டவையாக இருக்கும். இலைகள் மற்றும் தண்டினில் மென்மையான மெழுகுப்பூச்சுகளை கொண்டிருக்கும்.
இது மேலிருந்து கீழாக தொங்கும் வடிவிலான பூங்கொத்துக்களை கொண்டுள்ளது. இந்த பூங்கொத்துக்களின் நீளம் 5 அடி அல்லது அதற்கும் அதிகமாக கூட இருக்கலாம். மடல்களின் நீளம் சராசரியாக 9 அங்குலம் நீளம்கொண்டவையாக இருக்கும்.
இதன் இலைகள் வாழை இலைபோல் நீண்ட இலைகளாக உள்ளன. இது மிகவும் உயரமாக வளரும் தாவர இனம்.
மலர்களின் தன்மை.
காண்பவரின் மனதை கவரும்வகையில் மேலிருந்து கீழாக தொங்கும் வடிவிலான பூங்கொத்துக்களை கொண்டுள்ளது. தாவரத்தின் உயரத்திற்கேற்ப பூங்கொத்துக்களும் நீளமாக அமையும்.
வரிசையாக மடல்களைக்கொண்ட நீளமான தண்டுடன்கூடிய இளஞ்சிவப்பு பூங்கொத்துகள் காற்றில் மெதுவாக அசைந்தாடுவதைகாண கண்கோடி வேண்டும்.
பூங்கொத்துக்களின் நிறம் பிற ஹெலிகோனியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெழுகினால் பூசப்பட்டுள்ளதுபோன்ற ஒரு வண்ணத்துடன் இளஞ்சிவப்பு, பச்சை, சாம்பல் மற்றும் வெள்ளி போன்ற பளபளப்புடனும், உறுத்தாத நிறத்துடனும் கண்களுக்கு குளிர்ச்சியாக அமைகிறது.
அழகான கவர்ச்சியான நிறத்துடன் அமைந்துள்ள இந்த மடல்களுக்குள்ளேதான் மெல்லிய பசுமைநிறத்துடன் கூடிய பூக்கள் ஒளிந்துள்ளன. ஆம். பூக்கள் பச்சை நிறத்துடன் காணப்படுகின்றன. இது ஆண்டு முழுவதும் பூக்கும்.
காய்களின் தன்மை.
கருவுறும் பூக்கள் வெண்மைநிற காய்களாக உருப்பெற்று கருநீல பழங்களாக கனிகின்றன. பழங்கள் சிறியதாக 1 செ.மீ விட்டம் கொண்டதாக இருக்கும். பழங்களினுள் கடுமையான ஓடுகளை கொண்ட விதைகள் ஒன்று முதல் மூன்று வரை உள்ளன.
கடினமான ஓடுகள் இருப்பதால் உள்ளிருக்கும் வித்திலைகள் எளிதாக பாதிப்பதில்லை. இதனால் இவைகளால் நீடித்த நாட்கள் உயிர்ப்புடன் இருக்க முடியும்.
சாகுபடி.
வேர் அடித்தண்டுகளில் கிளைக்கும் சிறு சேய் செடிகளை தனியாக பிரித்தெடுத்து நடுவதின் மூலம் இதனை எளிதாக பயிர்செய்யலாம்.
இதனை விதைகள் மூலமாகவும் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் விதைகள் திடமான ஓடுகளைக் கொண்டுள்ளதால் முளைக்க அதிகப்படியாக 12 மாதங்கள்வரை ஆகலாம்.
எனவே, விதைகள் விரைவாக முளைக்க வெதுவெதுப்பான நீரில் 2 அல்லது 3 நாட்கள் விதைகளை ஊற வைப்பதின்மூலம் விதைகளின் மேலோடுகள் மென்மையாக்கப்படுகின்றன. அதன்பின் எடுத்து விதைக்க விதைகள் விரைவாக முளைக்கும் திறனைப் பெறுகின்றன.
இது பயிர் செய்யப்படும் நிலம் வடிகால்வசதி உள்ளதாக இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வேர்ப்பகுதியில் நீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் "வேரழுகல்" (Root rot disease) நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நல்ல தரமான பூக்கள் வேண்டுமெனில் மக்கிய தொழுஉரம் இடவேண்டியது அவசியம்.
பயன்கள்.
இது வழக்கமான மலர் அலங்காரத்தில் இதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் வடிவமைப்பால் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.
மேலும் ஜப்பானிய பூக்களை காட்சிப்படுத்தும் கலையான "இக்பானா" (Ikebana) விலும் இதற்கு பிரத்தியேகமான இடம் உண்டு. இப்பூக்களை மரத்திலிருந்து தண்டுடன் வெட்டியெடுத்த பின் முறையாக பாதுகாத்துவந்தால் சுமார் 1 வாரம் முதல் 2 வாரம் வரை வாடாமல் இருக்கும் தன்மையுடையது.
ஹெலிகோனியாவின் பிறிதொருவகையான "ஹிர்சுட்டா" பற்றி அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
>> ஹெலிகோனியா ஹிர்சுட்டா - heliconia hirsuta <<
🍀 🍀 🍁 🍁 🍀 🍀
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.