"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Cobra Snake.

நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Cobra Snake.

நாகப்பாம்பு - Nakappampu.

Cobra Snake.

[Part 1]

"நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே - உனக்கு
நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே"

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிரமாதமான நடிப்பில், 1967ல் வெளிவந்த  "திருவருட்செல்வர்" என்னும் படத்தில் இடம்பெற்ற மிக அற்புதமான பாடல் இது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீங்கள் பலமுறை பார்த்திருக்கக்கூடும். இதுவரை பார்க்கவில்லையெனில் ஒருதடவையாவது பார்த்துவிடுங்கள்.

என்ன, பார்த்துவிட்டீர்களா? பாடல் நன்றாக இருக்கிறதா? அதில் வரும் காட்சிகளும் நன்றாக இருக்கிறதா? அப்புறமென்ன ரசித்து ஜோராக ஒருதடவை கைதட்டுங்கள்.

ஆனால், ஒரு கண்டிஷன். கைதட்டுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ரொம்பவும் எமோஷனலாகி பாடலில் வரும் காட்சிகளைப்போல் ஏதோ ஒரு சூழலில் பாம்புக்கடியால் பாதித்தவரை படுக்கவைத்து இதேபோல் பாட ஆரம்பித்து விடாதீர்கள்.

ஏனென்றால், நீங்கள் பாடிக்கொண்டிருக்கும்போதே Property "பாடி" யாகிடும். பாடி முடித்த கையோடு பாடையும் கட்டவேண்டி வரலாம்.

சரி, அது இருக்கட்டும். இப்போது நாம் நாகப்பாம்பு என்றால் என்ன என்பதனையும். அதன் வாழ்க்கை சூழலைப்பற்றியும் சிறிது பார்ப்போம் வாருங்கள்.

    நாகப்பாம்பு [Cobra] என்பது வேறு, கருநாகம் [King Cobra] என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் குணத்திலும், வடிவத்திலும் முற்றிலும் வேறுபட்டவை. நாம் ஏற்கனவே கருநாகத்தைப்பற்றி முன்பொரு பதிவில் விரிவாக பார்த்துவிட்டோம். எனவே இப்பொழுது நாம் நாகப்பாம்பை பற்றி மட்டும் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

    நல்ல பாம்பு - Nalla pambu.

    Cobra - கோப்ரா.

    பெயர் - நாகப்பாம்பு - Cobra.

    வேறுபெயர் - நல்லபாம்பு.

    திணை - விலங்கினம்.

    தொகுதி - முதுகு நாணிகள் [Chordata].

    துணை தொகுதி - முதுகெலும்பிகள்[Vertebrata].

    வகுப்பு - ஊர்வன.

    முதன்மை வகை - Tetrapoda.

    வகை - Reptillia.

    வரிசை - Squamata.

    துணைவரிசை - சர்பன்டிஸ் [Serpentes].

    குடும்பம் - எலாப்பிடே - Elapidae.

    இனம் - N. naja.

    பேரினம் - நாகம் - naja.

    தேசியம்.

    ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் வெப்பமண்டல பிரதேசங்களில் வாழ்கின்றன. தென்னாப்பிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசிய தீவுகள்வரை நாகப்பாம்புகள் பரவலாக காணப்படுகின்றன.

    ஆயுள்.

    இதன் ஆயுள் சுமார் 20 வருடங்கள். ஆனால் தற்காலங்களில் பல பாம்புகள் அற்ப ஆயுளிலேயே உயிரை விடுகின்றன. உயிரை விடுகின்றன என்பதைவிட கொல்லப்படுகின்றன என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

    ஷீக்கள், பர்ஸ்சுகள், பெல்ட்டுகள் மற்றும்பல ஆடம்பரப்பொருட்கள் தயாரிக்க நாகப்பாம்பின் தோல்கள் பயன்படுத்தப்படுவதால் இவற்றின் அழகிய தோல்களுக்காக இந்தியாவில் மட்டுமே இலட்சக்கணக்கில் நாகப்பாம்புகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரம் தெரியவில்லை.

    உடலமைப்பு.

    பழுப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த பழுப்பு நிறங்களை கொண்டுள்ளன. சுமார் 6 முதல் 7 அடி  நீளம் வரை வளரும் தன்மையுடையது. தனக்கு ஆபத்து நேரும் தருணத்தில் எதிரிகளை எச்சரிக்கும் விதமாக படம் எடுத்து சீறும்.

    உணவு.

    தவளை, எலி, பல்லி, பறவைகள், பறவைகளின் முட்டைகள் மற்றும் சிறிய ரக பாலூட்டிகளை உணவாக உட்கொள்கின்றன.

    பொதுவாகவே உணவுகளை பாம்புகள் அப்படியே முழுமையாக  விழுங்குவதால் அவைகள் முழுவதுமாக ஜீரணிக்க பலநாட்கள் ஆகும். எனவே பலநாட்கள் இவைகளால்  உணவில்லாமல் வாழமுடியும். மேலும் இதன் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு பொருட்களால் மாதக்கணக்கில்கூட இவைகளால் உணவில்லாமல் உயிர்வாழ முடியும்.

    வசிப்பிடம்.

    மரப்பொந்துகள், எலி வளைகள், கறையான் புற்றுகள், இடிபாடுகளுடன் கூடிய பாழடைந்த கட்டிடங்களில் வாழ்கின்றன.

    மேலும் இவைகள் வாழும் இடத்திலுள்ள சுற்றுப்புற தட்பவெப்பநிலை நாகப்பாம்புகளை மிகவும் பாதிக்கும். மிகவும் குளிர்ச்சியான கால நிலைகளில் நாகபாம்பினால் சுசுறுப்பாக இயக்கமுடிவதில்லை. மிகவும் சோர்வாகவே காணப்படும். அதேவேளையில் சுற்றுப்புற சூழ்நிலைகளில் அளவுக்கதிகமாக வெப்பம் அதிகரித்தால் இவைகள் இறந்துவிடும் நிலையும் ஏற்படும்.

    இனப்பெருக்கம்.

    இவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. 20 முதல் 40 முட்டைகள் வரை இடுகின்றன. 60 லிருந்து 80 நாட்கள் வரை கவனமாக அடைகாக்கின்றன. மற்ற வகை பாம்புகளைவிட இந்த நாகப்பாம்பிற்கு குடும்ப பாசம் கொஞ்சம் அதிகம். ஏனெனில் இவைகள் ஆணும் பெண்ணுமாக சேர்ந்தே வாழ்கின்றன.

    Cobra Snake.

    பாம்பு குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும் வரை நிமிடநேரம் கூட பிரியாமல் மிக கவனமாக முட்டைகளை பாதுகாக்கின்றன. அதற்கு காரணமும் உண்டு. இதன் முட்டைகளை காட்டுப்பன்றிகள் மற்றும் கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் திருடி தின்றுவிடுகின்றன. எனவே இந்த பகற்கொள்ளையர்களிடம் இருந்து தன் சந்ததியை பாதுகாக்கவே சதாசர்வ காலமும் முட்டையின் அருகிலேயே விழிப்புடன் இருந்து பாதுகாக்கின்றன.

    முட்டைக்குள்ளிருக்கும் பாம்பு குட்டிகளுக்கு மூக்கின் நுனியில் கூர்மையான ஒரு பல் போன்ற அமைப்பு இருக்கும். அதன் துணைகொண்டு முட்டையின் ஓடுகளை கிழித்துக்கொண்டு வெளிவருகின்றன. சிலநாட்களில் இந்த தற்காலிக பல் தானாகவே விழுந்துவிடும்.

    விஷத்தின் தன்மை.

    இவைகள் "Cytotoxic" என்னும் விஷத்தை கொண்டுள்ளன.இவற்றின்    தலைப்பகுதியிலுள்ள இரு நச்சு சுரப்பிகளில்  துளையுடன் கூடிய இரு விஷப்பற்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் இதன் நச்சுப்பற்கள் உடைந்துபோனால் கூட அந்த இடத்தில புதிதாக வேறு நச்சுப்பற்கள் முளைத்துவிடுகின்றன. இந்த பற்கள் மூலம் வெளியேறும் நஞ்சின் அளவு 4 முதல் 6 துளிகள் வரை இருக்கும்.

    இதன் விஷம் சுவாசமண்டலத்தை வெகுவாக பாதிக்கின்றன. இதன் விஷத்தினால் தற்காலிகமாக கண்கள் செயலிழப்பதோடு இமைகளும் மூடிக்கொள்ளும். கண்களை திறந்து பார்க்கமுடியாத ஒரு நிலை ஏற்படும். நரம்பு மண்டலம் பாதிப்பதோடு மூச்சுத்திணறலும் ஏற்படும்.

    இதன் விஷம் நரம்பு மண்டலத்தை கடுமையாக தாக்கி இதயம், நுரையீரல் முதலியவற்றை செயலிழக்கச்செய்து பக்கவாதத்தையும், மரணத்தையும் விளைவிக்கிறது.

    கடிபட்டவுடன் முதல் அறிகுறியாக களைப்பும், தூக்க உணர்வும் ஏற்படும். பிறகு படிப்படியாக தலை சுற்றல், வாந்தி, உடல் நடுக்கம், இதய துடிப்பு  குறைதல் மற்றும் மூச்சடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் பேர் பாம்புக்கடிப்பதால் இறப்பதாக ஒரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. இதில் பெரும்பாலான இறப்புகள் நாகப்பாம்பு கடிப்பதாலேயே நிகழ்கின்றன.

    நாகப்பாம்பு கடித்தால் கடிபட்டவர் கண்டிப்பாக இறந்துபோவார் என்று சொல்வதற்கில்லை. முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

    நாகப்பாம்பின் விஷம் மருத்துவத்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குவதால் இதனுடைய விலையும் அதிகம். 1 மி.லி நாகப்பாம்பின் விஷம் சுமார் 30,000 ரூபாய்.

    இனங்கள்.

    இந்த நாகப்பாம்பில் மட்டும் 12 வகைக்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும் நான்கு இனங்கள் மட்டுமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அவையாவன.

    1. நாஜா மெலனோலூகா - வன நாகம்.
    2. நஜா ஆஷே - ஸ்பிட்டிங் கோப்ரா - ஆஷேவின் விஷம் துப்பும் நாகம்.
    3. நஜா மொசாம்பிகா - மொசாம்பிக் கோப்ரா.
    4. நஜா நஜா - இந்திய நாகம் [நல்லபாம்பு]. Indian Spectacled Cobra.

    இதுதவிர "வெள்ளைநாகம்" என்றொரு வகையும் இருப்பதற்கான ஆதாரங்களும் அண்மையில் கிடைத்துள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள நான்குவகை நாகங்களில் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள "நஜா ஆஷே" கொஞ்சம் வித்தியாசமான ரகம். எனவே அதைப்பற்றி சிறிது ஆராய்வோம்.

    நஜா ஆஷே - ஸ்பிட்டிங் கோப்ரா.

    "ஸ்பிட்டிங் கோப்ரா ரிங்கல்ஸ்" என்று அழைக்கப்படும் இது அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது. பிற வகை நாகத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது பொது இடங்களில் நாகரிகத்தை கடைபிடிக்க தெரியாத ரகம்.

    Cobra Snake_Spitting cobra

    எப்படியென்றால், இதன் அருகில் நீங்கள் சென்றால். ஆரம்பக்கட்டத்தில் "கொரானா" பரவலின்போது இந்தியாவில் பரவலாக அரங்கேறிய சம்பவம் போல உங்கள் மீதே துப்பிவைத்துவிடும். பயபுள்ள கொரானாவுக்கு பொறந்ததா இருக்கும்போல.

    தன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தால் எதிரிகளின் கண்களை குறிபார்த்து விஷத்தை பீச்சியடிக்கும் தன்மை வாய்ந்தது. இவ்வாறு சுமார் 2 முதல் 3 மீட்டர் வரை விஷத்தை பீச்சியடிக்கும் திறன் படைத்தது.

    இதேபோல் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் "Ringhals" அல்லது "Spitting cobra" வகை பாம்புகளும் கண்களை குறிபார்த்து விஷத்தை உமிழும் தன்மையுடையன. இதேபோல் ஆப்பிரிக்காவில் பரவலாக காணப்படும் "கறுப்பு கழுத்து நாகம்" [Black - necked spitting cobra] கூட விஷத்தை துப்பும் வகையை சார்ந்ததே.

    அவ்வாறு பீச்சியடிக்கப்பட்ட விஷம் தோலின்மீது பட்டால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இதன் விஷம் கண்களில் பட்டுவிட்டால் மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணும். சிறிது நேரம் கண்கள் தெரியாத நிலை ஏற்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாம்பு எதிரிகளிடமிருந்து தப்பித்துவிடும். அந்த வேளையில் எரிச்சல் தாங்காமல்  கண்களை கசக்கிவிடக்கூடாது. அப்படி கசக்கினால்.

    "புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
    இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே". 

    என்று பாடிக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்துவிட வேண்டியதுதான். ஏனென்றால் கண்களை கசக்கினோமென்றால் கண்டிப்பாக நிரந்தரமாக பார்வை பறிபோய்விடும். அதற்கு மாறாக உடனடியாக காலம் தாழ்த்தாமல் சுத்தமான நீரினால் கண்களை கசக்காமல் அலம்பவேண்டும். இதனால் நிரந்தர பார்வை இழப்பிலிருந்து தப்பலாம்.

    black necked spitting cobra

    பொதுவான தன்மை.

    இது பொதுவாக கருமையுடன் கலந்த பழுப்பு, மஞ்சள் கலந்த வெள்ளை, வெளிர்சாம்பல் நிறங்களில் காணப்படும்.  இவைகளின் சிறப்பே படம் எடுப்பதுதான். படம் எடுப்பதற்கான காரணம் காசு பார்ப்பதற்காக அல்ல,  எதிரியை அச்சுறுத்துவதற்காகத்தான். இதற்கு துணைபுரிவது அவற்றின் தலைப்பகுதியில் இருக்கும் விரியக்கூடிய ஒரு விசேஷ தசை அமைப்பு. 

    நாகப்பாம்பின் ஒரு பிரிவில் அவற்றின் படத்தில் மூக்குக்கண்ணாடி போன்ற ஒரு குறியீடு இருக்கும். இதனை "Spectacled cobra" என அழைக்கின்றனர். மற்றொருவகையான பிரிவில் மூக்குக்கண்ணாடியில் ஒற்றைக்கண்ணாடி போன்ற வடிவம் மட்டுமே இருக்கும் இதனை "monocled cobra" என அழைக்கின்றனர்.

    நாஜா ஆஷே மட்டுமல்ல மேற்குறிப்பிட்டுள்ள நான்கு இனங்களில் ஒன்றான "நஜா நஜா" என்று சொல்லப்படும் இந்தியநாகமான நல்லபாம்பும் கொஞ்சம் வித்தியாசமான ரகம்தான். எனவே அதுபற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

    அதுசரி, இதனுடைய பங்காளிகளுக்கெல்லாம் "நாகப்பாம்பு" என்று பெயர் இருக்கும்போது அதே இனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி நாகத்திற்கு மட்டும் "நல்லபாம்பு" என்று பெயர்வர காரணம் என்ன தெரியுமா?

    இந்திய நாகத்தில் 1 டஜனுக்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருந்தாலும் பெரும்பாலான வகை நாகங்கள் பிற நாகங்களைப்போல பொது இடங்களில்  அநாகரீகமாக நடந்துகொள்வதில்லை. அதாவது முகத்திற்கு நேராக விஷத்தை துப்புவதில்லை. (ஒரிருவகை இந்திய நாகங்களை தவிர). எனவேதான் இதற்கு "நல்ல"பாம்பு என்று பெயர். என்ன புரிகிறதா. (ஆஹா. கண்டுபுடிச்சுட்டேன்.)

    இந்திய நாகமான நல்லபாம்பைப்பற்றி அறிய..

    இந்த கட்டுரையின் இரண்டாம் பகுதியை [Part 2] பார்வையிட இங்கு கிளிக்குங்க..

    >> நாகப்பாம்பு - நல்ல பாம்பு - Naja naja - Indian Cobra. <<.


    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    4 கருத்துகள்

    1. ஸ்பிட்டிங்க் கோப்ரா - ஆஹா... என்னவெல்லாம் அற்புதங்கள், விதங்கள் படைப்பில்...

      ஆங்காங்கே சேர்த்திருக்கும் சில வரிகள் சிரிக்க வைத்தன!

      தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சிவா.

      பதிலளிநீக்கு
    2. இதே போல் பலர் வாழும் நாட்டில் இருக்கிறோம் தலைவரே...!

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.