அமினோ அமிலங்கள்.
புரதங்கள்.
[Part - 1]
நம் காதுகளில் அடிக்கடி வந்து விழும் வார்த்தைகள் "புரோட்டீன்" [Protein] அல்லது "புரதம்" என்னும் வார்த்தைகள்தான். எந்த ஒரு உணவை எடுத்துக்கொண்டாலும் இது புரோட்டீன் சத்து நிறைந்ததாக்கும் என்று பலபேர் ஜெர்க் விடுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஆனால் இந்த புரதம் என்பது உணவில் உள்ள ஏதோ ஒரு சத்து என்ற அளவில்தான் நமக்கு தெரியுமேயொழிய வேறு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. நான் இங்கு புரதத்தைப்பற்றிய பல சிக்கலான உள்கட்டமைப்புகளைப்பற்றி பேசி உங்களை குழப்பத்தில் ஆழ்த்தப்போவதில்லை. மாறாக புரதம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளும் வகையிலான சில அடிப்படை விஷயங்களை பற்றி மட்டுமே மேலோட்டமாக மிக சுருக்கமாக அலச இருக்கிறேன்.
நம் உடல் தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமென்றால் அதற்கு நான்கு வகையான அடிப்படை பொருட்கள் அல்லது விஷயங்கள் தேவை. அவை.
- நீர்
- காற்று
- வெப்பம்
- செல்களின் இயக்கம்.
நம் உடலிலுள்ள ஒரு செல் தொடர்ந்து உயிர்வாழ வேண்டுமெனில் மூன்று சிக்கலான மூலக்கூறுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவை.
- DNA - Deoxyribonucleie acid. (டிஆக்ஸி ரைபோ நியூக்ளிக் அமிலம்).
- RNA - Ribonucleie acid. ( ரைபோ நியூக்ளிக் அமிலம்).
- Protein - புரோட்டீன் என்னும் புரதங்கள்.
நீர், காற்று, வெப்பம் தெரியும். செல்களைப்பற்றியும் அதிலுள்ள DNA , RNA பற்றியும் கூட ஓரளவு தெரிந்துவைத்துள்ளோம். DNA, RNA என்பது ஏதோ ஒரு அமிலம் என்பது புரிகிறது. ஆனால் இந்த "புரதம்" என்பது என்ன என்கிறீர்களா?
அதுவும் அமிலம்தான். "அமினோ அமிலம்".
அதாவது DNA - RNA என்பது "நியூக்ளிக் அமிலம்" என்றால், புரதம் என்பது "அமினோ அமிலம்" அவ்வளவுதான்.
இரண்டுமே கரிம அமிலங்கள்தான் என்றாலும், இரண்டிலும் அடங்கியுள்ள மூலக்கூறுகளைக்கொண்டு இரண்டும் வெவ்வேறாக பிரித்தறியப்படுகின்றன.
நியூக்ளிக் அமிலம் 'நியூக்ளியோடு" அலகுகளை கொண்டது. இதில் கார்பன் சர்க்கரை, பாஸ்பேட் தொகுதி, நைட்ரஜன், காரம் போன்ற மூலக்கூறுகளை அடங்கியுள்ளன.
"அமினோஅமிலம்" என்பது ஒரு கார்பன் அணு [Carbon] (ஆல்பா கார்பன்), ஒரு ஹைட்ரஜன் அணு [Hydrogen], ஆக்சிஜன்[Oxygen], நைட்ரஜன் [Nitrogen], அமைன் - அமினோ தொகுதிகள் (-NH₂) கார்பாக்சைல் தொகுதிகள் (-COOH) மற்றும் மாறிலி வேதிவினை குழுக்களைக்கொண்ட ஒரு மூலக்கூறு.
அமினோஅமிலத்தின் தன்மையை பொறுத்து அதில் வேறுசில தனிமங்களும் இடம்பிடித்திருக்கும். குறிப்பாக சிலவற்றில் கந்தகங்களும் [Sulfur] இடம்பிடித்துள்ளன.
இத்தொகுதிகளின் தன்மையை பொறுத்து அவைகள் பல அமினோ அமிலங்களாக தரம் பிரிக்கப்படுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் சேர்ந்து ஒரு சங்கிலி தொடராக பிணைக்கப்படும்போது அது புரோட்டீனாக உருவகம் பெறுகிறது.
இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Amino Acids - Protein.
"புரதம்" என்பது ஒரு தனிப்பொருள் அல்ல பல பொருள்கள் அடங்கிய கூட்டுப்பொருள் என்பதனை பார்த்தோம்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பல அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்த ஒரு சங்கிலித்தொடர் அமைப்பையே நாம் புரதங்கள் என்கிறோம். அதாவது "புரதம்" அல்லது "புரதசத்து" என்று நாம் குறிப்பிடும் அந்த அமைப்பிற்குள் பல வகையான அமினோ அமிலங்கள் ஒரு நீளமான சங்கிலித்தொடராக ஒன்றை அடுத்து ஒன்றாக வரிசையாக அடுக்கப்பட்டு அல்லது பிணைக்கப்பட்டு இருக்கும்.
உள்ளே இருக்கும் அமினோ அமிலங்களின் எண்ணிக்கை மற்றும் வகைதனைப் பொறுத்து புரதங்களை பலவகைகளாகப் பிரிக்கின்றனர்.
அதாவது நீங்கள் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் தனித்தனியாக இருக்கும்போது அதன் பெயர் "அமினோ அமிலம்". அதுவே ஒன்றிற்கு மேற்பட்ட அமினோஅமிலங்கள் ஒன்றையடுத்து ஒன்றாக சங்கிலிபோன்று மாலையாக தொடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த தொகுப்பின் பெயர்தான் "புரோட்டீன்"!!!. என்ன புரிந்ததா?!.
இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதற்கு ஏதுவாக நாம் "பூக்களை" (Flower) எடுத்துக்கொள்வோம். தனித்தனி பூக்களாக இருந்தால் அதன் பெயர் "மலர்". ஆனால் பல மலர்கள் ஒன்றாக தொடுக்கப்பட்டிருந்தால் அதனை "மலர்" என்று அழைக்காமல் வேறு பெயரில் "பூ மாலை" என்று அழைக்கிறோமல்லவா!!... அதுபோலத்தான் இதுவும்!!!... தனித்தனியாக இருந்தால் அதன் பெயர் "அமினோ அமிலம்". பல அமினோ அமிலங்கள் ஒன்றாக தொடுக்கப்பட்டிருந்தால் அதன் பெயர் "புரோட்டீன்"...
சரி.. இனி மேட்டருக்கு வருவோம்... நாம் உண்ணும் உணவில் சங்கிலி தொடர்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த புரதங்கள் வயிற்றில் உள்ள ஜீரண நீர்களால் தனித்தனியாக உடைக்கப்பட்டு தனித்தனி அமினோ அமிலங்களாக மாற்றம் பெறுகின்றன. இவைகள் குடலுறுஞ்சிகளால் உறிஞ்சப்பட நம் உடலுக்கு தேவைப்படும் அமினோ அமிலங்கள் மட்டும் கல்லீரலால் கிரகிக்கப்பட உடலுக்கு தேவைப்படாத அமினோ அமிலங்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
நம் உடலின் பெரும்பகுதி புரதங்களினால் ஆனது என்பது உங்களுக்கு தெரியும். நமது குருதியில் உள்ள ஹீமோகுளோபினில் (Hemoglobin) 95 சதவீதம் புரதமே உள்ளது.
தசை, தோல், தசைநாண்கள், நரம்புகள் அனைத்துமே புரதங்களினால் ஆனவைதான்.
உடலை சமசீராக வைத்துக்கொள்ள நம் உடலில் சுரப்பிகளால் சுரக்கப்படும் அத்தனை ஹார்மோன்களும் புரோடீன்கள் என்று சொல்லப்படும் அமினோ அமிலங்கள்தான்.
அப்படியென்றால், நம் உடலுக்கு மொத்தம் எத்தனை வகையான அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன என கேட்கிறீர்கள்தானே. அதிகமொன்றும் தேவையில்லை வெறும் 21 வகையான அமினோ அமிலங்களே அத்தியாவசியமான புரதங்களாக நம் உடலுக்கு தேவைப்படுகின்றன.
இந்த 21 வகையான அமினோ அமிலங்களில் ஏதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டால் கூட நம் உடலில் எதாவது ஒரு பாதிப்பு தோன்ற ஆரம்பித்துவிடும்.
இந்த 21 வகையான அமினோ அமிலங்களில் 12 வகையான அமினோ அமிலங்களை நம் உடலே தயாரித்துக்கொள்கின்றன. ஆனால் மீதியுள்ள 9 வகையான அமினோ அமிலங்களே மிக முக்கியமானவைகள்.
ஏனெனில், இந்த ஒன்பது வகையான அமினோ அமிலங்களை மனித உடலால் சுயமாக உருவாக்கிக்கொள்ள முடியாது. அவைகளை வெளியிலிருந்துதான் பெறமுடியும்.
எனவே இந்த 9 வகையான அமினோ அமிலங்களை "Essential Amino Acids" என்றும் மீதி 12 வகையான அமினோ அமிலங்களை "Nonessential Amino Acids" என்றும் அழைக்கிறோம்.
முக்கிய அமினோ அமிலங்களாகிய அந்த 9 வகையான அமிலங்களை தயாரிக்கும் திறன் நம் உடலுக்கு இல்லை என்பதால் இந்த புரதங்களை நாம் வெளியிலிருந்துதான் பெறவேண்டும் என்று பார்த்தோமல்லவா?. வெளியிலிருந்து என்றால் எங்கிருந்து?.
தாவரங்களிலிருந்து.
ஆம், இந்த அதிமுக்கியமான 9 வகையான அமினோ அமிலங்களை தன்னிச்சையாக உற்பத்திசெய்யும் திறன் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ இல்லை என்பதால் தாவரங்களில் இருந்தே நமக்கு தேவையான இந்த புரதங்களை பெறுகிறோம். தாவரங்களே புரதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக விளங்குகின்றன.
தாவரங்களிலிருந்தே நமக்கு தேவையான புரதங்களை பெறுகிறோம் என்றால் தாவரங்களை சாப்பிடாத மாமிசத்தை மட்டுமே சாப்பிட்டு வாழும் சிங்கம், புலி முதலிய விலங்குகள் தங்களுக்கு தேவையான புரதங்களை எங்கிருந்து பெறுகின்றன என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கான பதில் அவைகளும் தாவரங்களிருந்தே பெறுகின்றன என்பதே.
என்ன குழப்பமாக இருக்கிறதா? உண்மைதான். தாவரங்களை ஆடு, மாடு போன்ற விலங்குகள் சாப்பிட, அந்த தாவரத்திலிருந்து பெறப்பட்ட புரதங்கள் மேற்குறிப்பிட்ட விலங்குகளின் உடலில் மாமிசமாக சேமிக்கப்பட, அந்த விலங்குகளை அடித்து சாப்பிடும்போது அந்த புரதங்களை சிங்கம், புலி போன்ற மாமிச பட்சிணிகள் எளிதாக பெற்றுக்கொள்கின்றன.
எது எப்படியோ.. புரோட்டீன்களை உற்பத்திசெய்யும் மூலகாரணிகளாக தாவரங்களே விளங்குகிறது என்பது மட்டும் நன்கு விளங்குகிறது.
மண்ணிலிருந்து பெறப்படும் நைட்ரஜன் மற்றும் நீருடன் விண்ணிலிருந்து அதாவது வளிமண்டலத்திலிருந்து பெறப்படும் கார்பன்டை ஆக்ஸைடு இவைகளுடன் சூரியனிலிருந்து பெறப்படும் சக்தியையும் பயன்படுத்தி தாவரங்கள் புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
ஒருநாளைக்கு மனித உடலுக்கு 60 கிராம் புரதம் தேவைப்படுகிறது.
இந்த அமினோ அமிலங்களை உணவின்மூலமாக பெறுவதே உடலுக்கு நன்மை விளைவிக்கும். ஆனால் இந்த அமினோ அமிலங்கள் அனைத்தும் தற்பொழுது மாத்திரைகளாகவும், சிரப், டானிக்காகவும் விற்பனைக்கு வந்துவிட்டன. தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இவைகளை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொண்டால் பல ஆபத்தான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
நம் உடலுக்கு தேவைப்படும் அமினோ அமிலங்களை "Essential Amino Acids" மற்றும் "Nonessential Amino Acids" என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக பார்த்தோமல்லவா. இதில் "Essential Amino Acids" ஐ "அத்தியாவசியமான அமினோ அமிலம்" என்றும், "Nonessential Amino Acids" ஐ "அத்தியாவசியமில்லாத அமினோ அமிலம்" என்றும் குறிப்பிடுகின்றனர்.
அத்தியாவசியமில்லாத அமினோ அமிலம் என்று இருப்பதால் உடனே அது நம்முடைய உடலுக்கு அவ்வளவாக தேவையில்லை என்று நீங்களாகவே முடிவுகட்டிவிடாதீர்கள். அதுவும் நம் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற அமினோஅமிலம்தான்.
நம் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற அமினோ அமிலம் என்றால் பின் ஏன் அதை அத்தியாவசியமில்லாத அமினோ அமிலம் என்று கூறுகிறார்கள் என்று கேட்கிறீர்களா?
நம்முடைய உடலில் உள்ள திசுக்களில் ஏற்படும் வேதிவினைகளின் மூலம் நம் உடலே இதனை உருவாக்கிக்கொள்வதாலும், உணவின்மூலமாக மட்டுமே பெறவேண்டிய அத்தியாவசியம் எதுவும் இல்லையென்பதால் இதனை "அத்தியாவசியமில்லாத அமினோஅமிலம்" என்று அழைக்கின்றனர்.
எனவே இங்கு அத்தியாவசியமானது, அத்தியாவசியமில்லாதது என்பதெல்லாம் உணவின்மூலம் இதனை பெறுவதில் அத்தியாவசியமானது, அத்தியாவசியமில்லாதது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயொழிய நம்முடைய உடலுக்கு இந்த 21 வகை அமினோஅமிலங்களும் மிகமிக அத்தியாவசியமான அமிலங்கள்தான் என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.
சரி இனி இந்த Eassential மற்றும் Nonessential அமினோஅமிலங்களை பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
Essential Amino Acids.
TAMIL | ENGLISH |
---|---|
வாலின் | Valine |
லைசின் | Lysine |
திரியோனின் | Threonine |
லியூசின் | Leucine |
ஐசோலியூசின் | Isoleucine |
டிரிப்டோபான் | Tryptophan |
பினைல்அலனின் | Phenylalanine |
மெத்தியோனின் | Methionine |
ஹிஸ்டிடின் | Histidine |
Nonessential Amino Acids.
TAMIL | ENGLISH |
---|---|
அலனைன் | Alanine |
அஸ்பார்டிக் அமிலம் | Aspartic acid |
அஸ்பரஜின் | Asparagine |
குளூட்டாமிக் அமிலம் | Glutamic acid |
செரைன் | Serine |
ஆர்ஜினின் | Arginine |
சிஸ்டீன் | Cysteine |
குளூட்டமின் | Glutamine |
கிளைசின் | Glycine |
புரோலின் | Proline |
டைரோசின் | Tyrosine |
செலீனோசிஸ்டீன் | Selenocysteine |
இனி இந்த இருபத்தியொரு வகையான அமினோ அமிலங்களால் நம் உடலுக்கு ஏற்படும் பயன்களையும், அவைகள் கிடைக்கப்பெறும் உணவு வகைகளையும் பற்றி பார்ப்போம்.
வாலின் - Valine.
பெயர் :- வாலின். [Valine].
வேறுபெயர்கள் :- 2-Amino-3-methylbutanoic acid. [2-அமினோ-3-மீதைல் பியூட்டநோயிக் அமிலம்].
கண்டறிந்தவர் :- Hermann Emil Fischer.
மூலக்கூறு வாய்ப்பாடு :- C₅H₁₁NO₂.
மோலார் நிறை :- 117.15g/mol⁻¹.
அடர்த்தி :- 1.316 g/cm³.
உருகுநிலை :- 298⁰C.[568⁰F; 571 K].
கரையும் திறன் - நீரில் கரையக்கூடியது.
பயன்பாடு.
இது நம் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் அமினோ அமிலம். இது உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றன. தசை நாண்களின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் இதன் பங்கு அதிகம். இக்கட்டான சூழ்நிலைகளில் இது உடலுக்கு குளுக்கோஸை கொடுத்து சக்தியை அளிக்கும் அமினோ அமிலமாகும்.
மேலும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, கல்லீரலில் ஏற்படும் பழுதுகளையும் சரிசெய்யும் திறன் வாய்ந்தது. உடல் உறுப்புகளில் எதாவது பழுது ஏற்பட்டால் அதை சரி செய்கிற வேலையையும் இதுவே செய்கிறது. உடலில் உள்ள நைட்ரஜனின் சமநிலையை பேணிக்காப்பதும் இதுவே.
முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு மனிதனுக்கு தினம்தோறும் சுமார் 1820 மி.கி. அளவு Valine தேவைப்படுகிறது.
அதிகம் உள்ள உணவு பொருட்கள்.
மாடு, கோழி, பன்றி இறைச்சிகள், பால், தயிர், மீன், சோயாபீன்ஸ், பட்டானி, கொட்டை வகைகள், முழுதானியங்கள் மற்றும் பருப்பு வகை உணவுகளை அதிக அளவு உட்கொள்வதின் மூலம் valine ஐ எளிதில் பெற முடியும்.
அடுத்து அமினோ அமிலங்களின் இரண்டாவது வகையான லைசின். [Lysine]. ஐ பற்றி பார்ப்போம்.
லைசின் - Lysine.
பெயர் :- லைசின். [Lysine].
வேறுபெயர்கள் :- 2,6-Diamino hexanoic acid. [2,6-டைஅமினோ ஹெக்சாநோயிக் அமிலம்].
கண்டறிந்தவர் :- Ferdinand Heinrich Edmund Drechsel. (1889).
மூலக்கூறு வாய்ப்பாடு :- C₆H₁₄N₂O₂.
மோலார் நிறை :- 146.190g/mol⁻¹.
உருகுநிலை :- 224.5⁰C
நீரில் கரையும் திறன் :- 1.5 kg /L. 25⁰C.
பயன்பாடு.
இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் அமினோ அமிலமாகும். புரதத்தின் மிக முக்கியமான ஒரு அங்கமாக திகழ்வதும் இதுவே.
Valine ஐ போலவே இதுவும் நைட்ரஜனை சமநிலைப்படுத்துவதில் பேருதவிபுரிகிறது. அதுமட்டுமல்ல குடலிலுள்ள உணவுத்துகளிலிருந்து கால்சியம், இரும்பு, துத்தநாக சத்துக்களை குடல்கள் உறிஞ்சு எடுப்பதற்கும், எலும்புகள் உருவாக்குவதற்கும் இதுவே உதவிபுரிகிறது. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு அமிலங்களை உடைக்கவும் இது தேவைப்படுகிறது.
அதுமட்டுமல்ல, நம் உடலில் நோய்களுக்கு எதிராக போராடும் ஆண்டிபயாடிக் (Antibodies) உருவாவதற்கும், உடல் இயக்கங்களுக்கு காரணமான ஹார்மோன்கள் உருவாவதற்கும், உடலிலுள்ள திசுக்கள் வளர்ச்சிபெறவும் இந்த அமினோ அமிலமே அடிப்படையாக அமைகின்றன.
இந்த அமினோ அமிலம் உடலில் குறைந்தால் புரத இயக்க ஆற்றல் குறைபாடு, இணைப்பு திசுக்களில் குறைபாடு, சோர்வு, எதிலும் கவனம் செலுத்தமுடியாமை, எரிச்சல், குமட்டல், முடி உதிர்தல், இரத்தசோகை, இனப்பெருக்க அமைப்புகளில் சிக்கல் மற்றும் சிவந்த கண்கள் முதலிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதேநேரத்தில் இதன் அளவு உடலில் அதிகரித்தால் நரம்புசார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
Parkinson's என்று சொல்லப்படும் நடுக்குவாதம், ஹைப்போ தைராய்டிசம் [hypothyroidism], சிறுநீரகநோய்கள் [kidney disease] மற்றும் ஆஸ்துமா முதலிய பிரச்சனை உள்ளவர்களின் உடல்களில் குறைந்த அளவு லைசின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முழுவளர்ச்சி அடைந்த மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஏறத்தாழ 2000 மில்லி கிராம் லைசின் தேவைப்படுகிறது.
இந்த லைசின் வணிக நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டு கோழி மற்றும் கால்நடை தீவனங்களில் அதன் தரத்தை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது.
அதிகம் உள்ள உணவு பொருட்கள்.
பால், முட்டை, ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சிகள், சீஸ், உருளைக்கிழங்கு, அவரை, பட்டாணி, கொண்டைக்கடலை, பருப்பு வகைகள் மற்றும் சிலவகை மீன் உணவுகளிலும் உள்ளன.
"அமினோ அமிலங்கள்" என்னும் இந்த தொடரின் முதல் பகுதியாகிய இப்பகுதியில் புரதங்களைப்பற்றியும், அதன் அமினோ அமிலங்களான வாலின், [Valine] மற்றும் லைசின் [Lysine] பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் மேற்கொண்டு மனித உடலுக்கு தேவையான பதினைந்திற்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இப்பதிவின் இரண்டாவது பகுதிக்கு வருகை தாருங்கள்.
2 கருத்துகள்
அனைத்தும் சங்கிலித் தொடர்களே... படங்களுடன் விளக்கம் அருமை...
பதிலளிநீக்குஆம் ... உலகின் அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்தால் அனைத்தும் ஒன்றிற்கொன்று தொடர்புடையதாகவே சங்கிலித்தொடராகவே இருக்கும். உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.