வரலாற்றை பறைசாற்றும் டைரி.
ஆனந்தரங்கம் பிள்ளை.
[Part 3]
புதுச்சேரியில் வருவாய்துறை அதிகாரியாக பணியாற்றியவர் ''அர்மோன்கலுவா மொபார்''. பிரெஞ்சுக்காரர். எனினும் தமிழ்மொழியின் மீதுள்ள பற்றினால் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
1846 ம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்துறை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கப் பிள்ளையை பற்றியும் அவர் பிரெஞ்சு திவான்களுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்து வந்ததையும் நண்பர்கள் வாயிலாக அறிந்து கொண்டார்.
எனவே ஆனந்தரங்கப் பிள்ளை (ananda ranga pillai) வாழ்ந்து வந்த மாளிகை போன்ற வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.
இந்த பதிவின் ''முதல்'' பகுதியை படிக்க சுட்டியை தட்டுங்க.
>> ஆனந்தரங்கம் பிள்ளை - anandha ranga pillai - Introduction. <<
Diaries of History in Tamil.
வரலாற்றை பறைசாற்றும் டைரி.
அர்மோன்கலுவா மொபார் 1846 ம் ஆண்டு ஆனந்தரங்கப் பிள்ளையின் மாளிகைக்கு விஜயம் செய்தார். அப்போது ஏறத்தாழ ஆனந்தரங்கப் பிள்ளை மறைந்து 85 வருடங்கள் ஒடியிருந்தது.
அது ஒரு அந்திசாயும் மாலை நேரம். இதுவரையில் அந்த மாளிகையை சுற்றிப்பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் ''மாலைக்கண்'' வியாதி என்றால் இவருக்கு மட்டும் ''கழுகுக்கண்'' போலும். சும்மா மாளிகையை சுற்றிப் பார்க்க வந்தவரின் கழுகுக்கண்களில் தமிழ்தாயின் தங்கக்கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டிய வைரக்கல் ஒன்று தூசுகளுக்கு மத்தியில் ஒளி மங்கிப்போய் கிடப்பதை தற்செயலாகக் கண்டார்.
ஆம், தூசுகளுக்கு மத்தியில் தீண்டுவாரின்றி கிடந்த அந்த வைரம் வேறு எதுவுமல்ல அது ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய ''டைரி'' தான்.
அதை கையிலெடுத்துப் புரட்டிப்பார்த்தவர் அதிர்ந்தார்.
1736 ம் ஆண்டு முதல் 1760ம் ஆண்டுவரை நடந்த அன்றாட அரசியல் நிகழ்வுகள் அத்தனையும் குறிப்புகளாக எழுதப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
ஒரு சிறந்த வரலாற்று குறிப்பேடு தன் கையிலுள்ளதை அவரால் நம்பவே முடியவில்லை.
அக்கால அரசியல் அமைப்பு, ஆங்கிலேயர்களின் நிர்வாகம், தில்லியின் மீதான பாரசீக படையெடுப்பு, போரின்போது குற்றவாளிகளாக சிறை பிடிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனைகள், வெளிநாட்டு பயணிகளின் இந்திய வருகை மற்றும் 18 ம் நூற்றாண்டில் நடந்த பல நிகழ்வுகள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் இது ஒரு சிறந்த வரலாற்று கருவூலம் என்பதனை அறிந்துக்கொண்ட அவர் துள்ளிக்குதித்தார்.
அந்த அரிய பொக்கிஷத்தை தன் இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டார்.
உடனே அவர் தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த டைரியை பிரஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்ய முடிவு செய்தார்.
மேலும் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் இந்த குறிப்பேட்டில் அரசியல் நிகழ்வுகள், அரசியல் சூழ்ச்சிகள், கலகங்கள், முற்றுகைகள், வணிகர்களின் நிலை, அந்தக்காலத்தில் பல்வேறு நாடுகளுக்கிடையே நடந்த வணிகம், நவாப்களின் தர்பார், பிரெஞ்சுக்காரர்களின் அரசாள துடிக்கும் முயற்சி, அந்நியர்கள் இந்தியாவில் அடித்த கொள்ளை, அதனால் மக்கள் பட்டபாடு. அனைத்தையும் விளக்கியிருந்தார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த சம்பவங்கள், போர் தந்திரங்கள், பல பிரஞ்சு தலைவர்களின் குணநலன்கள், அவர்களின் வரலாறு பற்றிய குறிப்புகள், மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது, மேலும் அந்த காலத்தில் தலைவிரித்தாடிய லஞ்சம், சாதீய சண்டைகள், சாதீய சண்டைகளுக்கு அன்றைய அரசு கொடுத்த விசித்திர தண்டனைகள், கிறிஸ்தவ சர்ச்களில் தாழ்த்தப்படடவர்களுக்கு தனி இருக்கைகள் அமைத்து அவர்களை பிரித்து வைத்து.... தீண்டாமைக்கு தொடர் தூபம் போட்டது முதலியவைகளையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கிறிஸ்தவ கோயில்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி இந்துக்கோவிலான ''வேத புரீஸ்வரர்'' கோவிலை மக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே ஆங்கிலேயர்களால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.
பிரஞ்சுப்படையிலிருந்து தப்பியோடிய வீரனை பிடித்து 15 நாட்கள் சிறையில் அடைத்து வைத்தது மட்டுமல்லாமல் பிற வீரர்களுக்கு பாடம்புகட்டும் வகையில் மரண தண்டனை விதித்ததையும் விவரித்திருந்தார்.
மேலும், திருட்டில் ஈடுபட்டுவந்த குப்பலின் தலைவனை கடைத்தெருவில் மக்கள்முன்னிலையில் தூக்கில் தொங்கவிட்டது, அவர்களில் இருவருக்கு காதுகளை அறுத்தெறிந்து மட்டுமல்லாது ஆளுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்தது போன்ற அன்றாட நிகழ்வுகளையும் டைரியில் குறித்துள்ளார்.
இன்னும் அநேக விஷயங்களை தன் டைரியில் குறித்து வைத்திருந்தார்.
எனவே, இந்த டைரி மூலம் அந்த காலத்தில் நடந்த பல வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளபடியே அறிய முடிந்தது.
அத்தனை குறிப்புகளையும் அவர் தமிழிலேயே எழுதி வைத்திருந்தது சிறப்பு.
புதுச்சேரியை மையமாக கொண்டு எழுதப்பட்ட இந்த நிகழ்கால குறிப்புகள் அக்கால புதுச்சேரியின் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு ''டூப்ளே'' (Dupleix) கால இந்தியாவையும் தெளிவாக படம் பிடித்து காட்டியது.
தமிழில் எழுதப்பட்ட இவருடைய டைரி முதன் முதலில் பிரஞ்சு மொழியிலேயே வெளியாகியது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை ஆவண காப்பகத்தின் காப்பாளராக பணியாற்றிய "H .டாப்வெல்" என்பவரின் உதவியோடு நாட்குறிப்பு முழுவதும் ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டது.
ஆங்கில மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நாட்குறிப்பு 12 தொகுதிகளாக அச்சடிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.
நாட்குறிப்பு எழுதப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்பு அண்மையில்தான் அதாவது 1998 ம் ஆண்டில்தான் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
12 தொகுதிகளில் முதல் 8 தொகுதிகளை 1998 ல் வெளியிட்டது. கடைசி நான்கு தொகுதிகளை 2005 ல் பதிவேற்றி 2006 ல் புத்தகமாக வெளியிட்டது.
விளைவு, 25 ஆண்டுகால தமிழக, இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டை அறிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று கையேடு நமக்கு கிடைத்து விட்டது. இதுவே அக்காலத்தில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளை என்னும் ஒரு மனிதரை இக்காலத்திலும் நன்றியுடன் நினைவு கூறும் வரலாற்று ஆசிரியராக நம் கண்முன்னே நிறுத்துகிறது.
புதுவையில் இவர் நினைவாக இன்றும் ''ரங்கப் பிள்ளை வீதி'' (Rangapillai street) என்று ஒரு வீதி இருக்கிறது.
அன்றைய பிரஞ்சு அரசின் ஆளுநராக இருந்த ''ஜோசப் பிரான்சுவா தூப்ளே'' வுக்கு துபாஷியராக நெடுங்காலம் பணியாற்றிய இவர் 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் இவர் எழுதிய நாட்குறிப்பு என்னும் டைரியின் மூலம் இன்றும் நம்மனதில் வரலாறாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
300 ஆண்டுகளுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் தன்னை சுற்றி நடந்தவற்றை சிலநாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஒருவர் டைரியில் பதிவு செய்துள்ளார் என்றால் அது ஆச்சரியம் மட்டுமல்ல பாராட்டுக்குரியதுதானே?
வரலாற்றை வடித்தது மட்டுமல்லாமல் வடித்ததை நம் முன்னால் படைத்தவர் என்பதால் நாமும் அவரை வாயார வாழ்த்துவோமே!
2 கருத்துகள்
//அந்த காலத்தில் தலை விரித்தாடிய லஞ்சம்//
பதிலளிநீக்குபிரமிப்பான தகவல்கள் நண்பரே...
உண்மைகள் என்றுமே உறங்கி விடுவதில்லை என்பதற்கு இந்த டைரியே ஓர் சாட்சி.
வாருங்கள் நண்பரே !! தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி !!! ...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.