ExoMars 2016.
[part - 2]
பூமியை தவிர்த்து வேறு எதாவது கிரகங்களில் நம்மை போல் அறிவார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்கின்ற தேடல் பன்னெடுங்காலம் மனித சமுதாயத்திற்கு இருந்து வருகிறது. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அறிவியல் சமுதாயம் அண்மையில் எக்ஸோமார்ஸ். ExoMars 2016 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
உயிரைத்தேடி புறப்பட்ட இந்த விண்கலத்தின் பயணம் தன் இலக்கை எட்டியதா என்பது பற்றிய ஒரு சிறு அலசலே இந்த கட்டுரை..
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க கீழேயுள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க..
>> எக்ஸோமார்ஸ். ExoMars 2016 part - 1 <<
சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம் பற்றி அறிய கடந்த 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி புளோரிடாவிலுள்ள ராக்கட் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ''கியூரியாசிட்டி ரோவர்'' (Curiosity rover) என்ற விண்கலம் அமெரிக்காவால் அனுப்பி வைக்கப்பட்டது.
கியூரியாசிட்டியின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து பூமியில் இருப்பது போல செவ்வாய் கிரகத்திலும் மீத்தேன் வாயு உள்ளது என்பதனை கியூரியாசிட்டி விண்கலம் கண்டறிந்தது. பொதுவாக மீத்தேன் உருவாவதற்கு உயிரினங்களின் பங்கும் பெருமளவில் இருப்பதாக நம்பப்படுவதால் செவ்வாய் கிரகத்தில் அளவில் பெரிய உயிரினங்கள் இல்லாவிட்டாலும் மிக சிறிய உயிரினங்களான பாக்டீரியாக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கியூரியாசிட்டி தன் ஆய்வை தெளிவாக செயல்படுத்தி வந்தாலும் இடையிடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் அதன் ஆய்வை பாதித்துவந்தன.
எனவே செவ்வாயில் உயிரினங்களின் இருப்பைப்பற்றி இன்னும் தெளிவாக ஆய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியமும் இணைந்து அதி நவீன ஆய்வுக்கலம் ஒன்றை உருவாக்கியது.
2016 ல் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட அந்த ஆய்வுக்கலத்திற்கு ''எக்ஸோமார்ஸ்2016'' (Exomars2016) என்று பெயரும் வைக்கப்பட்டது. இந்த கலம் நெதர்லாந்து நாட்டிலுள்ள ஏரோஸ்பேஸ் மையத்தில் வடிவமைக்கப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், கனடா மற்றும் ரஷ்ய நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவான இந்த எக்ஸோமார்ஸ் விண்கலம் அதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களிலேயே அதிநவீனம் செறிந்ததாகும்.
செவ்வாயில் உயிரின வாழ்க்கைக்கு தேவையான உயிர் வாயுக்களைப்பற்றி தெளிவாக அறியும் விதத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட ''எக்ஸோமார்ஸ் 2016'' என்ற அதிநவீன ஆய்வுக்கலத்தை ''ஏரியான் 500'' என்ற விண்கலம் சுமந்து கொண்டு கஜகஸ்தானில் உள்ள ''பைக்காரா'' என்னும் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ரஷ்யாவின் ''புரோட்டோன் எம்'' ராக்கெட் மூலம் 2016 ம் ஆண்டு மார்ச் 14 தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த ''ஏரியான் 500'' என்னும் விண்கலமானது 4.3 டன் எடை கொண்டது. இதன் ஆயுள் 5 ஆண்டுகள். மணிக்கு 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் அதாவது செகன்டிற்கு 5.8 கிலோ மீட்டர் வேகத்தில் 5 கோடி கிலோமீட்டர் ( 5 மில்லியன் கி.மீ) பயணித்து 7 மாதத்திற்குள்ளாக செவ்வாய் கிரகம் அடைய வேண்டும் என்பதே இதன் இலக்கு.
ஏழு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை அடைந்தாலும் இது உடனே தன்னுடைய ஆய்வை தொடங்காது. ஏனெனில் இது தன்னை செவ்வாய் கிரகத்தின் சரியான சுற்றுவட்ட பாதையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மேலும் சில மாதங்கள் ஆகும் என்பதால் சரியாக ஒருவருடம் கழித்தே தன் ஆய்வுபணியை தொடங்கும். அதாவது 2017 ன் இறுதியிலேயே செவ்வாய் கிரகத்தை ஆராயும் படி கட்டளையிடப்பட்டிருந்தது .
இதில் ''டிஜிஓ'' [TGO] மற்றும் ''ஜியோபரேலி'' [Schiaparelli] என்ற இரு ஆய்வுக்கலன்கள் பொருத்தப்பட்டிருந்தன. டிஜிஓ என்னும் ஆய்வுக்கலம் செவ்வாயை அதன் சுற்றுவட்ட பாதையில் சுற்றிவந்து அந்த கிரகத்தை ஆய்வு செய்யும். புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.
இந்த ஆய்வுக்கலத்திலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஜியோபரேலி என்னும் வட்ட வடிவ ஆய்வுக்கலன் நேரடியாக செவ்வாய்கிரகத்தின் தரைப்பகுதியில் இறங்கி மீத்தேன் வாயு குறித்து ஆய்வு நடத்தும்.
2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 14 ம் தியதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸோமார்ஸ் திட்டமிட்டபடி 7 மாதங்கள் வெற்றிகரமாக தன் பயணத்தை முடித்து அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்க வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டிருந்து.
விண்கலம் முதல் கட்டமாக இரண்டாக பிரிந்து செயற்கைக்கோளை செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும். இதை அடுத்து ''ஸ்கைப்பர் அலி'' என்ற பகுதி செயற்கை கோளிலிருந்து தனியாக பிரிந்து செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி தரை இறங்க வேண்டும். இந்த செயல் திட்டம் மிக சரியாக வெற்றிபெற்றால் செவ்வாய் கிரகம் குறித்து பல உண்மைகள் தெரிய வருவதோடு பூமியின் பரிணாமம் குறித்தும் பல அரிய உண்மைகள் நமக்கு தெரிய வரும்.
திட்டமிட்டபடி பூமியில் இருந்து செலுத்தப்பட்ட இந்த விண்கலம் வெற்றிகரமாக 5 கோடி கிலோமீட்டர் பயணித்து செவ்வாய் கிரகத்தை நெருங்கியது. நாளொன்றுக்கு நான்குமுறை செவ்வாய்கிரகத்தை சுற்றி வலம் வந்த எக்ஸோமார்ஸ் செவ்வாய் குறித்த பல புதிய தகவல்களை புகைப்படங்களாகத் தர தொடங்கியது.
செவ்வாய் கிரகத்தில் நீர்வீழ்ச்சி இருப்பது போன்ற படத்தையும் அதே நீர் வீழ்ச்சிகள் கோடைகாலத்தில் மறைந்து போவதையும் படம்பிடித்து அனுப்பியது. மீத்தேன் வாயு செவ்வாய் கிரகத்தில் எந்த இடத்திலிருந்து கசிந்து வெளியேறுகிறது என்பதனையும் தெளிவாக பூமிக்கு அனுப்பியது.
பயணத்தின் அடுத்த கட்டமாக ''ஸ்கைபர் அலி'' தன் பயணத்தை தொடங்க தயாரானது. இது செயற்கை கோளிலிருந்து தன்னை விடுவித்துகொண்டு வெளியேறி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்க தயாரானது. திட்டமிட்டபடி பாதுகாப்பாக தரை இறங்க அதில் பொறுத்தப்பட்ட பாராசூட்டும் செவ்வனே வேலை செய்தது. சரியான நேரத்தில் வெப்ப தடுப்பும் வெளியேறி தன் கடமையை செய்தது. ஆனால் தொடர்ந்த அடுத்த விநாடியில்தான் சோதனையோடு கூடிய வேதனை ஆரம்பமானது.
ஏனெனில் எக்ஸோமார்ஸ்ன் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து பார்த்து வடிவமைத்த விஞ்ஞானிகள் அதன் ஜாதகத்திலுள்ள ''செவ்வாய் தோஷத்தை'' கவனிக்க தவறிவிட்டார்கள்.
விஞ்ஞானிகள் போடும் திட்டம் சரியாக இருந்தாலும் விண்கலத்தின் ''கட்டம்'' சரியில்லையென்றால் கஷ்டம்தான் போல..
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கிணங்க செவ்வாய் தோஷத்தை கவனிக்க தவறியவர்கள் அதற்கான பரிகார பூஜை செய்யவும் தவறியதால் இது தரையை தொடுவதற்கு ஒரு நொடிக்கு முன்பாகவே இதனை இயக்கிய மென்பொருள் அடுத்த கட்டளையை பிறப்பிக்க இதனால் ஸ்கைபர் அலி குழப்பமடைய தொடங்கியது.
ஸ்கைபர் அலி தான் தரை இறங்கியதாக தவறாக நினைத்துக் கொண்டு தரையிலிருந்து சரியாக 2 மீட்டர் தொலைவிலேயே தன் இஞ்சினை நிறுத்தியது. விளைவு ஸ்கைபர் அலி வேகமாக சென்று செவ்வாயில் வாயோடு வாய்வைத்து முத்தமிட்டு தன் கடைசி மூச்சை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் எக்ஸோமார்ஸின் ஒருபகுதி வெற்றி.. ஆனால் விதி செய்த சதியால் அதன் மறுபகுதி தோல்வியில் முடிந்தாலும் விஞ்ஞானிகள் அதனை தோல்வியாக நினைக்கவில்லை.. இது தங்களுடைய முயற்சிக்கு கிடைத்த ஒரு நல்ல அனுபவ பாடமாகவே எடுத்துக்கொண்டனர்.
எனவே மனம்தளராத நம் விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் 2021 ல் பயணிக்க புதிய அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது ''எக்ஸோமார்ஸ் 2020''. இதன் பயணம் வெற்றிபயணமாக அமைய நாமும் இணைந்தே வாழ்த்துவோம்!!
2 கருத்துகள்
செவ்வாய் கிரகத்துக்கும் செவ்வாய் தோஷம் இருப்பது அறிந்து திகைப்பாக இருக்கிறது நண்பரே...
பதிலளிநீக்குகலம் புறப்பட்டது செவ்வாய்க்கிழமையோ...
செவ்வாய் கிரகத்திலிருந்து பலகோடி கி.மீ தள்ளி இருக்கும் நம்மையே செவ்வாய் தோஷம் அட்டாக் பண்ணும்போது ... செவ்வாய் - யை சில கி.மீ நெருங்கி செல்லும் விண்கலத்தை அட்டாக் செய்வதில் ஆச்சரியம் இல்லையே நண்பரே!!! விஞ்ஞானிகள் போடும் திட்டம் சரியாக இருந்தாலும் விண்கலத்தின் ''கட்டம்'' சரியில்லையென்றால் கஷ்டம்தான்... ஹ ... ஹஹா .... பதிவில் வரும் ''செவ்வாய் தோஷம்'' எல்லாம் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே ... சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் ஜி...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.