Pituitary Gland - Hypophysis.
[Part - 1]
''எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்றார் மூதறிஞரான நம் ஔவைப்பாட்டி. அத்துணை சிறப்பு பெற்றது நம் மூளை. ஏனெனில் நம்முடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவது மூளையே.
உள்ளுறுப்பு, வெளியுறுப்புகள் மட்டுமல்ல நம் சிந்தையில் எழும் அத்தனை எண்ணங்களை இயக்குவதும் இதே மூளைதான். மூளையை உயிரின் தலைமையகம் எனலாம்.
பிட்யூட்டரி சுரப்பி.
இவ்வுடல் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான அத்தனை கட்டளைகளும் மூளையிலிருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. மூளையிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அந்தக்கட்டளைகளை ஏற்று உடலின் அனைத்து உறுப்புகளை ஆரோக்கியமாக செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவை உடலிலுள்ள சுரப்பிகள் எனலாம்.
பொதுவாக சுரப்பிகளை இரு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன நாளமுள்ள (நரம்பு ) சுரப்பிகள், மற்றும் நாளமில்லா சுரப்பிகள்.
நாளமுள்ள சுரப்பிகள் ''என்சைம்'' என்று சொல்லப்படும் நொதிகளை சுரக்கின்றன. ஆனால் நாளமில்லா சுரப்பிகளோ ''ஹார்மோன்'' என்னும் திரவங்களை சுரக்கின்றன.
நாளங்கள் என்றால் என்சைம்களை வெளியேற்ற நுண்ணிய துளைகளை கொண்ட குழாய்கள் போன்ற அமைப்பினை கொண்ட நரம்புகளாகும்.
நாளமுள்ள சுரப்பிகள் என்றால் குறிப்பிட்ட நாளங்கள் வாயிலாக என்சைம் ஒரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு கடத்தப்படும். எடுத்துக்காட்டாக உமிழ்நீர் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள், பால் சுரப்பிகள் ஆகியவைகளை குறிப்பிடலாம்.
நாளமில்லா சுரப்பிகள் (endocrine glands) என்பவை நாளமுள்ள சுரப்பிகளைப்போல் நாளங்களின் மூலமாக ஹார்மோன்களை கடத்தாமல் நேரடியாகவே இரத்தத்தில் ஹார்மோன்களை கலக்கச் செய்து விரைவாக உடலை செயல்பட வைக்கிறது. எடுத்துக்காட்டாக பிட்யூட்டரி, தைராய்டு, தைமஸ் முதலியவைகளை குறிப்பிடலாம்.
நாளமுள்ள சுரப்பி மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இரு பண்புகளும் கணையத்தில் காணப்படுவதால் கணையத்தை ''இரட்டை பண்பு சுரப்பி'' என அழைக்கின்றனர். இது நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் இருவழிகளில் செயல்படுகிறது. நாளமுள்ள சுரப்பியாக கணையம் செயல்படும் அதேவேளையில் நாளமில்லா சுரப்பியாக கணையத்திலுள்ள ''லாங்கர் ஹான் திட்டுகள்'' ( பான்கிரியாஸ்) செயல்படுகின்றன.
உடலின் அனைத்து உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செயல்படுபவை இந்த நாளமில்லா சுரப்பிகளே.
ஆரோக்கியம் மட்டுமல்லாது உடலின் அன்றாட வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் முதலியவற்றை தூண்டுவதோடு ஆபத்துக்காலங்களில் இதய துடிப்பை அதிகரிக்க செய்து விரைவாக தப்பித்து ஓடுதல் அல்லது எதிர்வினையாற்ற உடலை தூண்டுதல் முதலிய அனைத்து அனிச்சை செயல்களையும் நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன.
அதுமட்டுமல்லாது பாலியல் தூண்டல், இனப்பெருக்கம் முதலியவற்றிற்கும் இதனுடைய பங்களிப்பு மிக அவசியம். எனவே இத்துணை சிறப்பு பெற்ற நாளமில்லா சுரப்பிகளை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
நம் உடலில் பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன . அவையாவன -
- பிட்யூட்டரி (ஹைப்போபைஸிஸ்).
- பினியல் (Pineal ).
- தைராய்டு.
- பாரா தைராய்டு.
- தைமஸ்.
- கணையத்திலுள்ள பான்கிரியாஸ் (லாங்கர் ஹான் திட்டுகள்).
- அட்ரீனல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா).
- இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பிகள்).
இந்த சுரப்பிகள் ஒவ்வொன்றும் உடலில் பலவிதமான இயக்கங்களுக்கு இன்றியமையாதவை என்றாலும் பிற அனைத்து சுரப்பிகளையும் விட முதன்மை சுரப்பியான பிட்யூட்டரி (ஹைப்போபைஸிஸ்) சுரப்பிக்கே ''தலைமை சுரப்பி'' என்கிற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
பிட்யூட்டரி சுரப்பி என்பது நம் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பி வகையை சார்ந்தது. இதனை அறிவியலாளர்கள் ''ஹைப்போபைசிஸ்'' என்ற பெயரிலும் அழைக்கின்றனர். கபாலத்திற்குள் இது உள்ளதால் இதனை ''கபச் சுரப்பி'' என்று பெயரிட்டு தமிழில் அழைக்கிறோம்.
இது பட்டாணியின் வடிவத்தை பெற்றுள்ள ஒரு சிறிய சுரப்பி. 0.5 கிராம் எடை மட்டுமே கொண்டது. அளவில்தான் சிறியதே தவிர திறனில் மிக பெரியது. ஏனெனில் உடலிலுள்ள அத்தனை நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்துவதும் இயக்குவதும் இதுதான். எனவேதான் இந்த சுரப்பி ''தலைமை சுரப்பி'' (Master gland) என்று அழைக்கப்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பி பாதிப்படைந்தால் உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங்களும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலும் மிக கடுமையாக பாதிப்படையும் என்பது உறுதி. எனவே இத்துணை மகத்துவம் வாய்ந்த ''பிட்யூட்டரி'' பற்றி இனிவரும் தொடர் பதிவுகளில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சியாகிய இரண்டாவது பகுதியை படிக்க பக்கத்திலுள்ள சுட்டியை சொடுக்குங்க.
>>"பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 2."<<
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.