Bhujangasana - Sarpasana.
ஆசனங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது ''புஜங்காசனம்'' எனலாம். சூரிய நமஸ்கார பயிற்சியில் இதனுடைய பங்களிப்பும் மிக அதிகம். ஆண், பெண் முதற்கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் எளிதாக இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும்.
புஜங்காசனம்.
"புஜம்" என்றால் தோள், மற்றும் தோள்பட்டையிலிருந்து முழங்கைவரையுள்ள பகுதிகளைக் குறிக்கும். மேற்குறிப்பிட்ட உறுப்புகளை இந்த ஆசனம் பலப்படுத்துவதால் புஜங்காசனம் என பெயர் பெற்றது.
புஜங்காசனத்திற்கு ''சர்ப்பாசனம்'' என்றொரு பெயரும் உண்டு. ''சர்ப்பம்'' என்பது பாம்பைக் குறிக்கும் சொல். ஏனெனில் பயிற்சியின் போது நம் கழுத்து, தலை முதலியன பார்ப்பதற்கு நல்லபாம்பு படம் எடுப்பதுபோல தோற்றமளிப்பதால் இதனை ''சர்ப்பாசனம்'' எனவும் அழைக்கின்றனர்.
மேலும், வடமொழியில் "புஜங்கம்" என்பது பாம்பைக் குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதனாலேயே இதற்கு "புஜங்காசனம்" என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த புஜங்காசனத்தில் "அர்த்த புஜங்காசனம்" என்றும் ஒரு பயிற்சி உள்ளது. "அர்த்த" என்றால் பாதி என்று அர்த்தம். "அர்த்த புஜங்காசனம்" என்றால் "பாதி புஜங்காசனம்" என்று பொருள். பெயருக்கேற்ப புஜங்காசனத்தைவிட இதனை பயிற்சி செய்வது எளிதானது.
எனவே, புஜங்காசனம் செய்வது கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் முதலில் இந்த அர்த்த புஜங்காசனத்தை பயிற்சிசெய்து கைகள் மற்றும் தோள்பட்டைகள் நன்கு பலம் பெற்றபின் "புஜங்காசனம்" பயிற்சியை தொடங்கலாம்.
இந்த "அர்த்த புஜங்காசனம்" பயிற்சியை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழேயுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
>> அர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana <<
இந்த புஜங்காசன பயிற்சியானது ஆண், பெண் என இரு பாலருக்கும் வலிமை சேர்க்கும் பயிற்சி என்றே சொல்லவேண்டும். இதனை பெண்கள் தொடர்ந்து செய்துவர நல்ல கட்டுக்கோப்பான மார்பையும், உடல் வனப்பையும் பெறமுடியும்.
இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வர முதுகுவலி நீங்குவதோடு தொப்பையும் கரையும். மேலும் இது மார்பை விரிவடைய செய்வதோடு இதயம் நுரையீரலை பலப்படுத்தி, ஆஸ்துமாவையும் குணமாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் குணப்படுத்தும்.
இனி இதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.
செய்முறை.
முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். கால்களை இணைத்து நேராக வைத்துக்கொள்ளவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவும். தலைமுதல் கால்வரை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, இரண்டு முழங்கைகளையும் மடித்து இடுப்பிற்கு அருகில் தரையில் ஊன்றவும்.
அதன்பின் இடுப்பு தரையில் படிந்திருக்க இடுப்பிற்கு மேல் மார்பு, கழுத்து, தலை இவைகளை தரையிலிருந்து மூச்சினை மெதுவாக உள்ளுக்கு இழுத்தவாறே மேல்நோக்கி உயர்த்தவும்.
இந்த நிலையில் சில வினாடிகள் அப்படியே இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.
பின் மார்பையும், தலையையும் மூச்சை மெதுவாக வெளியில் விட்டபடி கீழே கொண்டு வந்து தரையை தொடவும். கைகளை தலைக்கு மேல் நேராக நீட்டவும். சில வினாடிகள் ஓய்வுக்கு பின் மீண்டும் முன்போல் செய்யவும்.
இந்த பயிற்சியை 5 அல்லது 6 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.
பலன்கள்.
முதுகெலும்பு நன்கு வளையும் தன்மையைப் பெறும். மார்பு நன்கு விரிவடையும். விலா எலும்புகள் உறுதியாகும். கூன் விழுந்த முதுகு நேராகும். முதுகுவலி, கழுத்துவலி குணமாகும்.
கழுத்து எலும்பு தேய்ந்து விட்டதாகச் சொல்லி சிலர் ''பட்டை'' கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள் அல்லவா, இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பட்டைக்கே பட்டை நாமம் போட்டு விடலாம்.
இருதயம், நுரையீரல் பலமடையும். ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, இதய கோளாறுகள் நீங்கும். ஜீரணசக்தியை அதிகரிப்பதோடு வயிற்றிலுள்ள கொழுப்பையும் கரைக்கும். நன்கு பசி உண்டாகும்.
குறிப்பு.
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், அதிக அளவில் குடல்வாயு பிரச்சனையால் வாடுபவர்களும் இந்த ஆசனத்தை செய்ய முன்வர வேண்டாம்.
இந்த புஜங்காசன பயிற்சியிலிருந்து இன்னும் மேம்பட்ட பயிற்சியாக திகழ்வது "தனுராசனம்". அதிக பலனை உடலுக்கு பெற்றுத்தரும் பயிற்சியாக விளங்கும் இந்த தனுராசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதுபற்றி அறிய அடுத்துள்ள "லிங்க்" ஐ கிளிக்குங்க.
>> தனுராசனம் - dhanurasana <<
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.