"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" அயோடின் - Iodine Element.

அயோடின் - Iodine Element.

அயோடின்.

Iodine Element.

          நாம் அனைவரும் இப்போது சிலகாலமாக பரவலாக கேட்கப்படும் ஒரு வார்த்தை "அயோடின்". நம் வீட்டின் சமையல் கூடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட இந்தப்பொருள் நம் உணவின் அன்றாட தேவையாகவும் மாறிவிட்டன.

Iodine

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற நிலைமாறி "அயோடின் இல்லாத உப்பு குப்பையிலே" என்ற நிலைமைக்கு வந்துவிட்டது.

சரி, சமையல் உப்புகளில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் அதேவேளையில் உணவில் சிறிதளவாவது கண்டிப்பாக ஒவ்வொருவரும்  சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று அரசாங்கத்தாலும் பரிந்துரைக்கப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற இந்த அயோடினில் (Iodine) அப்படி என்னதான் இருக்கிறது. தெரிந்துகொள்ள வாருங்கள்.

IODINE.

பெயர் - அயோடின் - Iodine.

வகை - வேதியியல் தனிமம் - Chemical Element.

குடும்பம் - ஹாலோஜன் (Halogen).

தன்மை - திடப்பொருள் மற்றும் நச்சுத்தன்மை.

பண்பு - அலோகம் - Nonmetal.

நிறம் - கரு நீலம் - Dark blue.

குறியீடு - I.

அணு எண் - 53.

அணு நிறை - 126 . 90447.

அணு ஆரம் - 140 பிக்கோ மீட்டர். [1× 10 ⁻ ¹²].

அடர்த்தி - 4 . 933 g .cm-³.

உருகுநிலை - 113.7 ⁰ C [236.66 ⁰ F ].

கொதிநிலை - 184 . 3 ⁰ C [363.7 ⁰ F ].

கண்டறிந்த விஞ்ஞானி - பெர்னார்டு கூர்டாய்ஸ் ( Bernard Courtois). பிரெஞ்சு.

கண்டறிந்த ஆண்டு - 1811 ம் ஆண்டு.

அயோடின் (Iodine) சாதாரண நிலையில் கருநீல நிறமாகவும் வெப்பப்படுத்தும்போது ஊதா நிறமாகவும் மாறுகிறது. மேலும் இது பளபளப்பு தன்மை கொண்ட தனிமம்.

கிரேக்க மொழியில் ''ஐயோடேஸ்'' (Iyodes ) என்றால் 'வயலட்' அல்லது 'கருநீலம்' என்று பொருள். எனவே இதன் நிறத்தை வைத்தே இதற்கு ''அயோடின்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அயோடின் தனிமத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் ''பெர்னார்டு கூர்டாய்ஸ்'' ( Bernard Courtois) என்னும் பிரெஞ்சு (French) விஞ்ஞானி. 1811 ம் ஆண்டு கந்தக அமிலத்தில் (Sulfuric acid) கடல்பாசி (Seaweed) சாம்பலை கரைத்து தன்னுடைய ஆய்வு கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தற்செயலாக அயோடினை கண்டறிந்தார்.

அயோடின் என்பது உப்பு அல்ல.பொதுவாக உப்பு என்பது ஒன்றிற்கு மேற்பட்ட தனிமங்கள் அடங்கிய சேர்மத்தை குறிப்பதாகும். ஆனால் அயோடின் என்பது ஒரு வேதியியல் தனிமம். நச்சுத்தன்மை வாய்ந்தது.

மேலும் இது ஒரு அலோகம் (non - metallic). இது காற்று, நீர், மண் முதலியவைகளில் பலவித உலோகங்களுடன் கலந்து காணப்படுகின்றன. பூமியில் கிடைக்கும் தனிமங்களில் இது மிகவும் அரிதானது மற்றும் அதிக கனமானது.

பூமியில் கிடைக்கும் அரிதான தனிமங்களின் வரிசையில் இது 47 வது இடத்தையும், அதிகமாக கிடைக்கும் தனிமங்கள் வரிசையில் 61 வது இடத்தையும் பிடித்துள்ளது.

இது அதிக அளவில் கடல்களில்தான் உப்புடன் கலந்து காணப்படுகின்றது. சாதாரண நிலையில் திட நிலையில் உள்ள தனிமம். இது 113.7 ⁰ C வெப்பநிலையில் உருகும் தன்மையுள்ளது. உருகும் என்றால் நீர் போல் உருகுவதில்லை. அதற்கு பதிலாக ஆவியாகும் தன்மைக்கு தயாராகின்றன. 183⁰ C வெப்பநிலையில் ''வயலட்'' நிறத்தில் ஆவியாகி பதங்கமாகி விடும். இதன் வாயு கண்களிலும் நுரையீரலிலும் எரிச்சலை உண்டுபண்ணும்.

Iodine Element

போலார் கரைசலுடன் சேர்க்கப்படும் போது அயோடின் மின் கடத்தும் தன்மையை பெறுகிறது. இது அதிக எலக்ட்ரான் அடர்த்தி கொண்ட தனிமம். தூய்மையான அயோடின் நீரில் மிக குறைந்த அளவே கரையும் அதாவது 3.45 லிட்டர் நீரில் 1 கிராம் அயோடின் மட்டுமே கரையும்.

அயோடின் ஆய்வகங்களில் ஆக்சிஜன் (Oxygen) அணுக்களை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது. இது காரங்களுடன் வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது. மேலும் அசிடிக் அமிலம் (Acetic Acid) தயாரிக்கவும், பாலிமர் (Polymer) தயாரிக்கும் தொழில்கூடங்களிலும் வினையூக்கியாக பயன்படுகிறது.

மேலும் மருத்துவ துறைகளிலும், சாயம் தோய்க்கும் துறைகளிலும், ஒளிபடத்துறைகளிலும், நீரை சுத்திகரிப்பதற்கும் அயோடின் கலந்த மருந்துப்பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன.

உண்மையில் அயோடின் தோலில் எரிச்சலை உண்டுபண்ணும். அதுமட்டுமல்ல இதிலிருந்து பெறப்படும் ''அயோடைடு'' மிகவும் நச்சுத்தன்மை வாய்த்தது ஆகும்.

அயோடினிலிருந்து பெறப்படும் அயோடைடு நச்சுக்குணம் உடையது என்றாலும் அயோடின் மருத்துவத்துறையில் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆல்கஹாலுடன் சேர்த்து ''டிங்சர் அயோடின்'' என்ற கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது.

''அயோடின் 131'' என்ற ரேடியோ நியூக்ளிடைடு (radionuclides) அணுஆயுத கருவி உற்பத்தி துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அயோடின் 131 புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதால் தற்போது பயன்பாட்டில் இல்லை எனலாம். அயோடினின் கதிரியக்க ஐசோடோப்புகளை தைராய்டில் வரும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அயோடினானது நம் உடலுக்கு மிக குறைந்த அளவில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒருவித கனிம சத்து.

"நான் வளர்கிறேனா மம்மி" - என்று உங்கள் குழந்தை கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கொஞ்ச வேண்டுமெனில் உங்கள் குழந்தைக்கு அவசியம் தேவை அயோடின். குழந்தைகளுக்கு மட்டுமல்ல கரு முதல் எரு வரை மனித வாழ்க்கைக்கு கண்டிப்பாக தேவைப்படும் ஒரு கனிம சத்து இது எனலாம்.

ஆம், மனித உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுவது இதுவே.

உங்கள் உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிக முக்கியமானது ''தைராய்டு''. இந்த சுரப்பி ''தைராக்ஸின்'' என்னும் ஹார்மோனை தடையில்லாமல் சுரந்தால் மட்டுமே உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் சாத்தியமாகும்.

இந்த தைராக்சின் ஹார்மோனில் அதிக அளவில் இருப்பது அயோடின் மூலக்கூறுகள்தான். எனவே நீங்கள் உண்ணும் உணவில் போதிய அளவில் அயோடின் இருந்தால்தான் மேற்கண்ட தைராய்டு சுரப்பி நேர்த்தியாக வேலை செய்யும்.

Iodine salt

எனவே.. உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு பல சத்துக்கள் அவசியமாயினும் மிக அதிக அளவில் துணைபுரிவது அயோடின் என்னும் இந்த கனிம சத்துதான்.

மேலும் இது உடலின் வெப்பத்தை பாதுகாப்பதிலும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை ஆரோக்கியமான நிலையில் வைத்து கொள்ளவும் இது மிகவும் அவசியமானது.

ஆனால் பூமியில் இந்த கனிம சத்து அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவதில்லை. என்றாலும்... பால் (Milk), முட்டை (Egg), தானியம் (Cereal), மாமிச உணவு (Carnivorous food), மற்றும் அனைத்து கடல் சார்ந்த உணவுகளிலும் சிலவகையான காய்கறிகளிலும் ஓரளவில் கிடைக்கின்றன.

நமக்கு அன்றாடம் வயதிற்கேற்ப 50 மைக்ரோ கிராம் முதல் 150 மைக்ரோ கிராம் வரை அயோடின் தேவைப்படுகிறது. 100 கிராம் காய்கறி, மாமிசம் அல்லது முட்டையில் 25 மைக்ரோ கிராம் அயோடின் சத்து உள்ளது.

அயோடின் சத்து குறைந்தால் ''முன்கழுத்து கழலை'' (Goiter) நோய் வருவதுடன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியும் அறிவுத்திறனும் பாதிப்படையும். உலகம் முழுக்க 50,000,000 குழந்தைகள் அயோடின் பற்றாக்குறையால் பாதிப்படைந்துள்ளனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.

அயோடின் சத்து குறைவினால் உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருவுற்ற பெண்களுக்கு தினந்தோறும் 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை. இதில் ஏதாவது குறைவு நேர்ந்தால் கரு சிதைவு (Miscarriage) ஏற்படும். பிறக்கும் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி இருக்காது. அறிவுத்திறன் மற்றும் கற்றல் திறனை வெகு அளவில் பாதிக்கும்.

எனவே, உணவில் அயோடின் சத்து பற்றாக்குறையை போக்க அரசாங்கமே அயோடின் கலந்த உப்பை விநியோகிப்பதுடன் அதை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ளவும் பரிந்துரைக்கிறது.

நம் உடலுக்கு அயோடினின் தேவை.

(1 நாளைக்கு)

People Of This Age The Need For The Body
சிறு குழந்தைகளுக்கு 50 to 60 மைக்ரோ கிராம்
சிறுவர்களுக்கு 70 to 120 மைக்ரோ கிராம்
பெண்களுக்கு 100 to 120 மைக்ரோ கிராம்
ஆண்களுக்கு 130 to 150 மைக்ரோ கிராம்
கர்ப்பிணி பெண்களுக்கு 100 to 120 மைக்ரோ கிராம்
பாலூட்டும் பெண்களுக்கு 150 to 170 மைக்ரோ கிராம்
அயோடின் குறை பாதிப்பு உள்ளவர்களுக்கு 300 மைக்ரோ கிராம்

ஒரு தேக்கரண்டி அயோடின் கலந்த உப்பில் சுமார் 150 மைக்ரோ கிராம் (0.15 மில்லி கிராம் ) அயோடின் உள்ளது.

''அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'' என்பது போல உடலுக்கு நன்மை விளைவிக்கும் அனைத்து சத்துக்களுமே உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அளவில் அதிகரித்தாலும் அது தீமையை விளைவிக்கும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

Goiter

ஒருவருக்கு முன்கழுத்து கழலை நோய் வந்துள்ளது என்றால் உடனே அவருக்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். ஏனென்றால் உடலில் அயோடின் சத்து அளவு அதிகரித்தால்கூட முன்கழுத்து கழலை நோய் வரும் என்பதனை நினைவில் நிறுத்தி எதனால் முன்கழுத்து கழலை நோய் வந்துள்ளது என்பதனை அறிந்து அதன் பின் அயோடின் கலந்த உணவை எடுத்துக் கொள்வதா அல்லது குறைத்துக் கொள்வதா என முடிவு செய்யுங்கள்.

எனவே, உடலுக்கு நம்மை அளிக்கும் அயோடினை அளவு அறிந்து உண்போம். வளம் அறிந்து வாழ்வோம். நன்றி!

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

6 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.