"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நாளமில்லா சுரப்பிகள் - Endocrine glands.

நாளமில்லா சுரப்பிகள் - Endocrine glands.

Endocrine glands.

நம் உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க வேண்டுமெனில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிக முக்கியம். இப்பதிவில் உடலின் மிக இன்றியமையாத பகுதியாகிய நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி அறிய இருக்கிறோம்.


நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப்பற்றி ஆராயும் மற்றும் அறியும் பிரிவுக்கு "என்டோகிரைனாலஜி" (Endocrinology) என்று பெயர்.

நாளமில்லா சுரப்பிகளை பற்றி முதன்முதலில் ஆராய்ந்த "தாமஸ் அடிசன்" என்பவரே "நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை" என இன்றளவும் போற்றப்படுகிறார்.

நாளமில்லா சுரப்பிகள்.

பொதுவாக விலங்கினங்களின் உடல்களில் இரு வகையான சுரப்பிகள் உள்ளன. அவையாவன நாளமுள்ள (நரம்பு ) சுரப்பிகள், மற்றும் நாளமில்லா சுரப்பிகள்.

நாளமுள்ள சுரப்பிகள் ''என்சைம்'' என்று சொல்லப்படும் நொதிகளை சுரக்கின்றன. ஆனால் நாளமில்லா சுரப்பிகளோ ''ஹார்மோன்'' என்னும் திரவங்களை உற்பத்திசெய்கின்றன.

நாளமில்லா சுரப்பிகள் உற்பத்திசெய்யும் இந்த திரவங்களுக்கு "ஹார்மோன்" என்ற பெயரை முதன்முதலில் சூட்டியவர்கள் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உடற் செயலியல் வல்லுனர்களான "W.H பேய்லிஸ்" மற்றும் "E.H ஸ்டார்லின்". 1909 ம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து "செக்ரிடின்" என்னும் திரவத்தை கண்டறிந்தபோதுதான் முதன்முதலில் அதனை ஹார்மோன் என்ற பெயரில் வகைப்படுத்தினர்.

நாளமுள்ள சுரப்பிகள் என்றால் குறிப்பிட்ட நாளங்கள் வாயிலாக ''என்சைம்'' ஒரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு கடத்தப்படும். எடுத்துக்காட்டாக உமிழ்நீர் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள், பால் சுரப்பிகளை குறிப்பிடலாம்.

நாளமில்லா சுரப்பிகள் (endocrine glands) என்பவை நாளமுள்ள சுரப்பிகளைப் போல் நாளங்களின் மூலமாக ஹார்மோன்களை கடத்தாமல் நேரடியாகவே இரத்தத்தில் ஹார்மோன்களை கலக்கச் செய்து அதன்மூலம் விரைவாக உடல் முழுவதும் பரவசெய்து உடலை விரைவாக செயல்பட வைப்பது. எடுத்துக்காட்டாக பிட்யூட்டரி, தைராய்டு, தைமஸ் முதலியவைகளை குறிப்பிடலாம்.

நாளமுள்ள சுரப்பி மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இரு பண்புகளும் கணையத்தில் காணப்படுவதால் கணையத்தை ''இரட்டை பண்பு சுரப்பி'' என அழைக்கின்றனர்.

ஹார்மோன்கள் என்பது வேதிப்பொருட்களைக் கொண்ட நீர்ம நிலையிலுள்ள புரதங்கள் அல்லது ஸ்டீராய்டுகள். எந்த உறுப்பு அல்லது திசுக்களுக்கு அந்த வேதிப்பொருளின் பயன்பாடு தேவையோ அவைகள் நேரிடையாக இரத்தத்திலிருந்து அந்த வேதிப்பொருள்களை எடுத்துக்கொள்கின்றன.

மேலும் நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் திரவங்களானது வெறும் நோய்களை தீர்ப்பது மட்டுமல்லாமல் உடலின் அன்றாட வளர்ச்சி, வளர்ச்சிதை மாற்றம் முதலியவற்றை தூண்டுவதோடு ஆபத்துக்காலங்களில் இதய துடிப்பை அதிகரிக்க செய்து விரைவாக தப்பித்து ஓடுதல் அல்லது எதிர்தாக்குதல் செய்ய உடலை தூண்டுதல் முதலிய அனைத்து அனிச்சை விஷயங்களையும் நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்யும்  ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன.

மேலும் மனதின் உணர்ச்சிகளான சந்தோசம், அழுகை, கோபம் முதலியவைகளையும் ஹார்மோன்களே தோற்றுவிக்கின்றன.

சரி,  இனி மனித உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்..

மனித உடலிலுள்ள நாளமில்லா சுரப்பிகளாவன..

  • பிட்யூட்டரி (ஹைப்போபைஸிஸ்),
  • பினியல் (Pineal ).
  • தைராய்டு,
  • பாரா தைராய்டு,
  • தைமஸ்,
  • கணையம் (அ ) பான்கிரியாஸ் (லாங்கர் ஹான் திட்டுகள்),
  • அட்ரீனல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா),
  • இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பிகள்). 

 பிட்யூட்டரி சுரப்பி ( அ ) ஹைப்போபைஸிஸ்.

இது நம்முடைய தலையில் மூளைப்பகுதியில் அமைந்துள்ளது. இது இரு கதுப்புகளை கொண்டுள்ளது. மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதலாமஸோடு இணைந்துள்ள இந்த சுரப்பியின் அளவு ஒரு பட்டாணியின் அளவே !!!.

மனித உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளை இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் மூளையில் அமைந்துள்ள இந்த ''பிட்யூட்டரி'' சுரப்பியின் வேலை!.. எனவேதான் இந்த சுரப்பி ''தலைமை சுரப்பி'' (Master gland) என்று அழைக்கப்படுகிறது. பிட்யூட்டரி சுரப்பி பாதிப்படைந்தால் உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்பது உறுதி.

பினியல் சுரப்பி.

இதுவும் நம்முடைய தலையின் மூளைப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்த சுரப்பியானது ''மெலட்டோனின்'' என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் காலநிலைக்கு ஏற்ப நம்முடைய தூக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

தைராய்டு சுரப்பி.

நம்முடைய கழுத்துப்பகுதியில் குரல்வளையின் இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை கொண்டுள்ள சுரப்பி.

இது ''தைராக்சின்'' என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோனில் இருவகையான பொருள்கள் உள்ளன. அவை ''டைரோசின்'' என்னும் அமினோஅமிலம் மற்றும் ''அயோடின்''.

தைராய்டு சுரப்பியானது உடலின் வளர்ச்சிதை மாற்றம், திசு வளர்ச்சி, எலும்புகள் வளர்ச்சி, நரம்புகள் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் முதலியவைகளை ஊக்கப்படுத்துவதால் இதனை உடலின் ''ஆளுமை சுரப்பி'' என அழைக்கின்றனர்.

பாரா தைராய்டு சுரப்பி.

தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் சிறிய வட்டவடிவில் நான்கு திட்டுகளாக அமைந்துள்ளது.

இது ''பாராதார்மோன்'' என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது மனித உடல் மற்றும் இரத்தத்தில் ''கால்சியம்'' மற்றும் ''பாஸ்பரஸின்'' அளவை பராமரிக்கிறது.

Master gland

தைமஸ் சுரப்பி.

இது நம்முடைய மார்புப்பகுதியின் மேற்புறத்தில் மூச்சுக்குழாயை ஒட்டி கீழ்ப்பக்கமாக அமைந்துள்ளது.

இது ''தைமோசின்'' என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோனானது ''நோய் தடைக்காப்பு மண்டலம்'' சிறப்பாக செயல்பட உதவுகிறது.

கணையம் மற்றும் லாங்கர் ஹான் திட்டுகள்.

''பான்கிரியாஸ்'' (Pancreas) என்ற கணைய சுரப்பியானது நம்முடைய வயிற்று பகுதியில் இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையில் மஞ்சள் வண்ணத்தில் காணப்படுகிறது.

இது நாளமுள்ள சுரப்பியாகவும், நாளமில்லா சுரப்பியாகவும் இருவழிகளில் செயல்படுகிறது. நாளமுள்ள சுரப்பியாக கணையம் செயல்படும் அதே வேளையில் நாளமில்லா சுரப்பியாக கணையத்திலுள்ள ''லாங்கர் ஹான் திட்டுகள்'' செயல்படுகின்றன.

இது ''குளுக்கோகான்'' ஹார்மோனையும், இன்சுலின் என்ற ஹார்மோனையும் சுரக்கின்றன. இது இரத்தத்திலுள்ள ''குளுகோஸ்''  அளவை சமநிலைப்படுத்த பயன்படுகிறது.

அட்ரீனல் சுரப்பி.

இரு சிறுநீரகங்களின் மேற்புறங்களில் அமைந்துள்ள இது ''அட்ரீனலின்'' என்னும் ஹார்மோனை சுரக்கிறது.

உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த ஹார்மோன் இரத்தத்தில் கலந்து இதய துடிப்பை அதிகரிக்க செய்து உடல் உறுப்புகளை வேகமாக இயங்கும்படி செய்கிறது. ஆபத்துக்காலங்களில் வேகமாக ஓடி தப்பிப்பதற்கோ அல்லது எதிர்த்து சண்டையிடுவதற்கோ உடலை தயார் செய்கிறது . எனவே இதை ''அவசரகால ஹார்மோன்'' என அழைக்கின்றனர்.

இனப்பெருக்க சுரப்பிகள்

''விந்தகம்'' மற்றும் ''அண்டகம்''.

இனப்பெருக்க சுரப்பிகள் ஆண்களிடம் விந்தகமாகவும், பெண்களிடம் அண்டகமாகவும் செயல்படுகின்றன. 

விந்தகம்.

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விந்தகம் மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. அவையாவன..

  • செமினிஃபெரஸ் குழல்கள்,
  • செர்டோலிசெல்கள்,
  • லீடிக் செல்கள்.

இவற்றில் லீடிக் செல்களே நாளமில்லா சுரப்பியாக செயல்படுகின்றன. இவை ''டெஸ்டோஸ்டீரான்'' என்னும் ஹார்மோனை சுரக்கின்றன. இது விந்து செல் உற்பத்தியை தூண்டுகிறது. மற்றும் இரண்டாம் நிலை பால்பண்புகளை (குரலில் ஆண்தன்மை மிளிர்தல், மிடுக்கான தோற்றம், அரும்பு மீசை, தாடி மற்றும் மறைவிடங்களில் உரோமத்தை வளரச்செய்தல்) உண்டாக்குகிறது.

அண்டகம்.

பெண்களின் இனப்பெருக்க உறுப்பான இது பெண்களின் அடிவயிற்று பகுதியின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இது இருவகையான ஹார்மோன்களை சுரக்கின்றன. அவையாவன..

  • ஈஸ்ட்ரோஜன்,
  • புரோஜெஸ்டிரான்.

இந்த ஹார்மோன்கள் பெண்கள் பருவமடைதலை தூண்டுகிறது,  இரண்டாம் நிலை பால்பண்புகளையும் தூண்டுகிறது. மேலும் அண்டசெல் உருவாகவும் அவைகள் முதிர்ச்சி பெறவும் உதவி செய்கிறது.

Pancreas

இந்த பதிவில் நாளமில்லா சுரப்பிகளை பற்றிய சில அடிப்படை விஷயங்களை மிக சுருக்கமாக பார்த்தோம். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு நாளமில்லா சுரப்பிகளைப் பற்றியும் தனித்தனியாக விரிவாக அறியலாம்..

💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்