Mars planet.
பூமியிலிருந்து பார்க்கும்போது சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதால் ''செவ்வாய்'' என பெயர் பெற்றது. செவ்வாய் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்கு காரணம் இங்குள்ள நிலப்பரப்பில் அதிக அளவில் ''இரும்பு ஆக்ஸைடு'' உள்ளதால் இங்குள்ள மணல் மற்றும் மலைகள் அத்தனையும் சிவப்பு நிறமாக உள்ளன. எனவேதான் இங்கிருந்து பார்க்கும்போது செவ்வாய் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.
செவ்வாய் கிரகம்.
இதற்கு வானியலில் ''மார்ஸ்'' (Mars ) என்று பெயர். '' Mars '' என்பது ரோமானிய போர்க்கடவுளின் பெயர்.
இது சூரியனிலிருந்து பூமிக்கு அடுத்தபடியாக உள்ள நான்காவது கிரகம். பூமியை விட சிறியது. இதன் எடை 6.4171 ϰ 10²³ Kg. இதன் விட்டம் 6,755 . 2 கி . மீ. கன அளவு 1.6318 ϰ 10¹¹ Km³. சராசரி அடர்த்தி - 3.9335 ± 0.0004 g/cm³.
பூமியின் ஈர்ப்புவிசையோடு இதன் ஈர்ப்பு விசையை ஒப்பிட்டோமானால் 3 ல் 1 பங்கு ஈர்ப்புவிசையை கொண்டுள்ளது. மிக சரியாக சொல்லவேண்டுமெனில் 37 % ஈர்ப்பு விசையை கொண்டுள்ளது.
இது சூரியனிலிருந்து சுமார் 227.9 மில்லியன் கி . மீ தொலைவிலும், பூமியிலிருந்து 54.6 மில்லியன் கி.மீ தொலைவிலும் உள்ளது.
இது தன்னைத்தானே சுற்றி வருவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. இதன் சுழல் அச்சு சாய்வுகோணம் 25.19 டிகிரி. சூரியனை வினாடிக்கு 24.077 கி.மீ வேகத்தில் 687 நாட்களில் சுற்றிவருகிறது. இது தன்னைத்தானே சுற்ற வினாடிக்கு 24.2 கி.மீ வேகத்தில் 24 மணி 37 நிமிடம் எடுத்துக்கொள்கிறது.
நமது சூரியகுடும்பத்திலுள்ள கோள்களில் பூமிக்கு அடுத்த படியாக செவ்வாய் கிரகத்தில்தான் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவேதான் உலக அளவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இது பூமியை விட அளவில் சிறியது என்றாலும் இதன் பருவநிலை பூமியை ஒத்ததாகவே காணப்படுகின்றன. இதனுடைய ஒரு ஆண்டு 687 நாட்கள் என்றாலும் 1 நாள் என்பது பூமியின் 1 நாளுக்கு சமமாகவே அமைகிறது. அதாவது செவ்வாயின் 1 நாள் என்பது 24.6 மணிநேரமாகும்.
இதன் வெளிப்பரப்பு வெப்பநிலை + 27 ⁰ c முதல் - 140 ⁰ c வரை காணப்படுகிறது. மேலும் உறை நிலையில் போதிய அளவு நீரும், மெலிதான காற்று மண்டலமும் உள்ளன. கார்பன் டை ஆக்சைடு (Carbon Di Oxide ) அதிக அளவில் உள்ளது.
மேலும் இது இரண்டு துணைக்கோள்களை (நிலவு) கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ''போபோஸ்'' (Phobos). ரோமானிய பெயர். போபோஸ் என்றால் ரோமானிய மொழியில் அவசரம் என்று பொருள். இதற்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு தெரியுமா?.. வெறும் 5800 கிலோ மீட்டர்கள்தான். நம்முடைய நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 4 லட்சம் கிலோ மீட்டர்கள். அப்படியென்றால் போபோஸ் செவ்வாய் கிரகத்தை எவ்வளவு அருகாமையில் சுற்றி வருகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் இது ஒவ்வொரு வருடமும் மிக சிறிய அளவில் தன் தாய் கிரகமாகிய செவ்வாய்கிரகத்தை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. (பய புள்ளைக்கு அம்மா மேல எம்புட்டு பாசம்)..
இப்படியே போனால் இன்னும் 100 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாயின் மடியில் போபோஸ் சென்று விழுந்து விடும் என்று சொல்கிறார்கள்.
செவ்வாயின் மற்றொரு துணைக்கோள் ''தைமோஸ்''. தைமோஸ் என்றால் ரோமானிய மொழியில் பயம் என்று பொருள். ஆம் உண்மைதான்.. கொஞ்சம் அவசரக்காரனாகிய தன் சகோதரன் போபோஸ் - ஐ கண்டால் இதற்கு கொஞ்சம் பயம். எனவேதான் அது பயணிக்கும் திசையில் சுற்றி வராமல் அதற்கு எதிர் திசையில் சுற்றி வருகிறது.
செவ்வாயில் இரும்பு முதலான உலோகங்கள் நிறைந்துள்ளன. மேலும் சிலிக்கன், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரைடு பரவியுள்ளதோடு மேலும் பல தனிமங்களையும் கொண்டுள்ளன.
இது மெலிதான காற்றுமண்டலத்தையும் கொண்டுள்ளது. இதன் வளிமண்டல அழுத்தம் பூமியோடு ஒப்பிடும்போது 1% ற்கும் குறைவு. இதில் கார்பன் டை ஆக்சைடு, ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் மோனாக்சைடு அடங்கியுள்ளது.
இங்குள்ள கனிம வளங்களை ஆராயவும், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் பற்றி ஆராய்வதற்கும் இந்தியா அண்மையில் (2014 - ம் ஆண்டு ) ''மங்கள்யான்'' என்னும் விண்கலத்தை அனுப்பியதை நாம் அறிவோம்.
இங்கு மெலிதான காற்றுமண்டலம் உள்ளதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி அறிந்துகொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்க.
>> செவ்வாய் - பயோடேட்டா - Mars bio data <<
2 கருத்துகள்
நல்ல தகவல்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே !!!....
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.