கணினியும் காதலும்.
Terabyte kathal !
இது அண்மையில் வெளிவந்து இளைஞர்களின் மனதில் காதல் துள்ளாட்டம் போட வைத்த "கத்தி" (kathi movie) படத்தில் இடம்பெற்ற பாடல்.
அதெல்லாம் சரிதான் அது என்ன ''டெரா டெரா டெரா பைட்டா "
அது வேறொன்றும் இல்லைங்க, பொதுவாக ஒரு பொருளின் அளவை குறிப்பிட "லிட்டர்" (litre (or) liter), "கிலோகிராம்" (Kg), "மெட்ரிக் டன்" (metric ton) என்கின்ற அளவுகளையெல்லாம் பயன்படுத்துகிறோம் அல்லவா. அதுபோல எண் மற்றும் எழுத்துருவிலான தகவல்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான டிஜிட்டல் அளவீடுதான் (number of data) டெரா பைட் - Tera Byte.
மேலும் பாடல் வரிகளில் வரும் பிட், பைட், டெரா பைட் எல்லாமே வெறும் அர்த்தம் இல்லாத வெற்று வார்த்தைகள் என்று நினைத்து விடாதீர்கள், அத்தனையும் அர்த்தம் பொதிந்த நவீன டிஜிட்டல் அளவைகள்தான்.
அதாவது நம்ம கதாநாயகர் இந்த பாடல் மூலமா காதலியிடம் என்ன மெசேஜ் சொல்லுறாருன்னா... உன்மீது தான் வைத்துள்ள காதல் தோய்ந்த எண்ண அலைகளானது டிஜிட்டல் அளவையில் சொல்லப்போனால் ''டெரா பைட்'' கணக்கில் மனதில் கொட்டி கிடப்பதாக சிம்பாலிக்கா சொல்லறாப்ல!..
என்னடா இது காதலுக்கு வந்த சோதனை... இப்போதுதான் குருமா... சாரி... "திருமா" தயவில் "நாடகக் காதல்" பற்றி கேள்விப்பட்டோம்... அதற்குள்ளாக "விஞ்ஞான காதல்" வேறு வந்துவிட்டதா? என்கிறீர்களா...
பின்ன என்னங்க... ஊரையும் கெடுக்கும்... சாரி... உயிரையும் கொடுக்கும் உடன்பிறப்புகள் வாழும் இந்த திராவிட திருநாட்டிலே "விஞ்ஞான ஊழல்" இருக்கும்போது "விஞ்ஞான காதல்" இருக்கக்கூடாதா?
சரி!.... இனி "டெரா பைட்" - ஐ பற்றி சுருக்கமாக பார்ப்போம்..
கணினிகளில் தகவல்களை அதாவது எண்கள், எழுத்துக்கள் மற்றும் ஆடியோ, வீடியோ என அனைத்து தகவல்களையும் பைனரி - binary எனப்படும் டிஜிட்டல் கோடுகளாக மாற்றப்பட்டே ''ஹார்ட் டிஸ்க்'' (Hard disk) எனப்படும் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுகின்றன.
எண்களை இரண்டு வகைகளில் அளவிடலாம். அதில் ஒன்று டெசிமல் (Decimal) மற்றொன்று பைனரி (Bainary).
டெசிமல் என்பது வெறும் பத்தே பத்து எண்கள்தான் (desi என்றால் 10 என்று பொருள் ) அவை 0 - 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 ஆகிய 10 எண்களை குறிக்கும். இந்த 10 எண்களை கொண்டு பிற அனைத்து எண்களையும் உருவாக்கிவிட முடியும். இந்த முறையில்தான் நாம் வகுத்தல்,பெருக்கல்,கழித்தல், முதலான அனைத்து வரவு செலவு கணக்குகளையும் போடுகிறோம்.
ஆனால் இந்த டெசிமல் கணக்கு முறைகளெல்லாம் Computer என்னும் கணினிக்கு ஆகாது, ஏனெனில் டெசிமல் கணக்கு என்றால் அதற்கு கொஞ்சம் அலர்ஜி..
டெசிமல் எண்களிலுள்ள நெளிவு சுளிவுகளையெல்லாம் வைத்து இது 3 இது 4 என்று அதனால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாது... பெருமூளை கொஞ்சம் வீக்.... ( அதற்கு மூளையே கிடையாது என்பது வேறு விஷயம் )
எனவே அதற்கு மிகவும் பிடித்தமான நெளிவு சுளிவு இல்லாத பைனரி என்னும் முறையில் கணக்கிடும் முறையே அதற்கு ஒத்துவரும்.
பைனரி எண்கள் அமைப்பு.
Binary.
பைனரி என்பது இரும பெருக்கத்தில் அமையும் ஒரு கணக்கீட்டு முறை. அதாவது 1 - 2 - 4 - 8 - 16 - 32 - 64 - 128 - 256 - 512 - 1024 - என அதன் மதிப்பு இரட்டிப்பாகி போய்க்கொண்டே இருக்கும். இதில் 3, 5, 6, 7 என்கிற எண்களையெல்லாம் காணவில்லையே எப்படி கணக்கிடுவது என்று திகைக்காதீர்கள், எல்லா எண்களும் இதற்குள் அடங்கி இருக்கின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள பைனரி நம்பரில் 2 உடன் 1 ஐ கூட்டினால் 3 கிடைத்துவிடும். அதேபோல் 4 உடன் 1 ஐ கூட்டினால் 5 கிடைத்துவிடும். அதேபோல் 4 உடன் 2 ஐ கூட்டினால் 6 கிடைத்துவிடும். 4 + 2 + 1 மூன்றையும் சேர்த்து கூட்டினால் 7 கிடைத்துவிடும். இதுதாங்க பைனரி கணக்கு.
ஆனால் நான் ஏற்கனவே சொன்னது போல கணினிக்கு சிறுமூளை, பெருமூளை, முகுளம், கிட்னி, சட்னி எதுவும் இல்லையல்லவா! அதனால் நாம் சொல்லும் எந்தவிதமான எண்களையும், கட்டளைகளையும் அது பைனரி எண்களாகவே இருந்தால்கூட அதனால் புரிந்து கொள்ள முடியாது. கஷ்டம்தான்.
ஆனாலும் நம்முடைய அதிர்ஷ்டம் என்னவென்றால் கணினிக்கு மூளையே இல்லையென்றாலும் நாம் சொல்லும் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டும் அதனால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அந்த கட்டளைகள் என்ன தெரியுமா?
அதுதான் ''YES'' or ''NO''.
இப்போழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கணினியால் இரண்டே இரண்டு கட்டளைகளை மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றால் keyboard மூலம் நிறைய எண்கள், எழுத்துக்கள் மற்றும் கட்டளைகளை (Command) தட்டச்சு செய்து கணினிக்குள் அனுப்புகிறோமே? அதையும் அது புரிந்துகொள்வதுபோல தெரிகிறதே? என்பதுதான் அது.
முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் கீ போர்டில் தட்டச்சு செய்கிற அனைத்து லெட்டர் மற்றும் கமெண்ட்களும் எனக்கும், உங்களுக்கும் புரிந்து கொள்வதற்கும் மனதில் பதிய வைப்பதற்கானதேயொழிய கணினிக்கானது அல்ல. கணினிக்கு அது புரியவும் புரியாது.
நாம் தட்டச்சு செய்யும் அத்தனை கமெண்ட்களும் keyboard ல் உள்ள ''மைக்ரோ பிராசசர்'' (Micro Processor) மூலம் கணினிக்கு புரியும் விதத்தில் YES or NO என்கிற இரு கட்டளைகளாக மாற்றப்பட்ட பின்னரே கணினிக்குள் செலுத்தப்படுகின்றன. அதை குறியீடுகளாக ''0'' மற்றும் ''1'' என்ற டிஜிட்டல் கோடுகளில் வரையறுக்கிறோம். இதில் ''0''என்பது NO என்றும் ''1''என்பது YES என்றும் பொருள்.
அதாவது கணினியிடம் எந்த எண்ணுடன் எந்த எண்ணை கூட்ட வேண்டும் என்பதை '' 1 '' என்ற கமெண்டிலும் எதையெல்லாம் கூட்டாமல் விடவேண்டும் என்கிற கட்டளையை '' 0 '' என்கிற கமெண்டிலும் ( 10011011 ) கொடுத்து விட்டால் போதும். எவ்வளவு பெரிய கணக்கையும் கண நேரத்துல கூட்டி விடை கொடுத்து விடும். அவ்வளவு வேகம்.
முதல் 8 பைனரி பிட் தொகுப்பான [1] - [2] - [4] - [8] - [16] - [32] - [64] - [128] ஐ பைனரி கோடுகளாக YES or NO காமெண்ட்களான [1] மற்றும் [0] மட்டும் பயன்படுத்தி உலகிலுள்ள அத்தனை கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல் கணக்குகளையும் போட்டு விடலாம். அதுமட்டுமல்ல உலகிலுள்ள அத்தனை எழுத்துக்களையும், வார்த்தைகளையும், குறியீடுகளையும் புரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல அத்தனை ஒலி மற்றும் ஒளி [Audio, Video] சமிஞ்சைகளை கூட கணினியில் பைனரி கோடுகளாக சேமித்து வைக்கவும் முடியும்.
நீங்கள் எளிதாக புரிந்துகொள்வதற்காக 1 முதல் 9 வரையான டெசிமல் எண்களை எவ்வாறு பைனரி கோடுகளாக "yes" or "no" அதாவது "1 - 0" என்ற குறியீட்டு முறையில் வரையறுக்கப்படுகின்றன என கீழே உள்ள முதல் 4 பைனரி பிட்கள் மட்டுமே கொண்ட அட்டவணையில் காணலாம்.
இதில் எந்த இலக்கத்தின் கீழ் "1" என்ற கமெண்ட் வருகிறதோ அதையெல்லாம் கூட்ட வேண்டும். எந்த இலக்கத்தின் கீழ் "0" என்னும் கமெண்ட் வருகிறதோ அந்த நம்பரை எல்லாம் கூட்டாமல் விட வேண்டும் என்று புரிந்து கொள்க.
இதைப்போலவே எழுத்துகள் மற்றும் குறியீடுகளும் பைனரி கோடுகளாக மாற்றப்பட்டே கணினியில் சேமிக்கப்படுகின்றன. இதற்கு 8 பைனரி பிட் களை கொண்ட அலகு (byte) உபயோகப்படுத்தப்படுகிறது. அதை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.
இதைப்போலவே ஆடியோ மற்றும் வீடியோ file களும் மின்னலைகளாக மாற்றப்பட்டு அதன்பின் மின்னலைகள் "சேம்பிளிங்" என்ற தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி பைனரி கோடுகளாக மாற்றப்பட்டு அதன்பின்பே சேமிக்கப்படுகின்றன.
5 நிமிடம் இசைக்கக்கூடிய MP 3 பாடல் ஓன்றை சேமிக்க 5 மெகா பைட்டு அளவு கொண்ட பைனரி கோடுகள் தேவைப்படுகின்றன. எத்தனை பைட் சேர்ந்து 1 மெகா பைட் என்ற பைனரி அளவீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பைனரி அளவீடுகள்.
NB | TB | English |
---|---|---|
1 பிட் | 1 இலக்கம்.(0) or (1) | bit |
4 பிட் | 1 நிப்பிள் | Nibble |
8 பிட் | 1 பைட் | byte |
1024 பைட் | 1 கிலோ பைட் | Kilo Byte (KB) |
1024 கிலோ பைட் | 1 மெகா பைட் | Mega Byte (MB) |
1024 மெகா பைட் | 1 ஜிகா பைட் | Gega Byte (GB) |
1024 ஜிகா பைட் | 1 டெரா பைட் | Tera Byte (TB) |
1024 டெரா பைட் | 1 பீட்டா பைட் | Peta Byte (PB) |
1024 பீட்டா பைட் | 1 எக்ஸா பைட் | Exa Byte (EB) |
1024 எக்ஸா பைட் | 1 ஜெட்டா பைட் | Zetta Byte (ZB) |
1024 ஜெட்டா பைட் | 1 யோட்டா பைட் | Yotta Byte (YB) |
மேலே குறிப்பிட்டுள்ள அளவீடுகளை வைத்தே CD, Pen drive, Hard disk, Ram ஆகியவைகளின் கொள்ளளவு மதிப்பிடப்படுகிறது. மற்றும் ஆடியோ, வீடியோ file களின் properties களும் நிர்ணயிக்கப்படுகின்றன.
இப்போது சொல்லுங்கள் நம்முடைய கதாநாயகர் தன்னுடைய காதலின் ஸ்டேட்டஸ்டில்கூட எந்தவிதமான லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருகிறார் என்பது இப்போது உங்களுக்கு நன்கு புரிகிறதல்லவா?
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.