Salaphasana.
சலபம் என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இவ்வாசனத்தில் அமரும்போது உடலானது வெட்டுக்கிளியின் தோற்றத்தை பெறுவதால் இதற்கு "சலபாசனம்" என பெயர் ஏற்பட்டது.
ஆஸ்துமா மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கான அற்புதமான ஆசனம் இது.
பொதுவாகவே யோகாசனப் பயிற்சியானது செல்களிலும், நரம்பு மண்டலங்களிலும் உயிர்மின்னாற்றலை தூண்டி முதுமையிலும் இளைஞர்களுக்கே உரித்தான உற்சாக மனநிலையை நல்குவது.
சலபாசனம்.
''சலபாசனம்'' என்னும் இவ்வாசனமானது மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் திறன் படைத்தது. இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை காண்போம்..
செய்முறை.
முதலில் ஒரு கெட்டியான தரைவிரிப்பின்மீது குப்புற படுக்கவும். கைகள் இரண்டும் உடலினை ஒட்டியபடி உள்ளங்கை இரு தொடைகளுக்கும் அடியில் தரையை அழுத்தியபடி வைத்துக்கொள்ளவும்.
இனி மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இருகால்களையும் மடங்காமல் நேராக நீட்டிவைத்தபடியே மெதுவாக மேலே உயர்த்தவும். முகவாய், மார்பு, வயிறு, இடுப்பு வரை உள்ள பகுதி தரையில் நன்கு அழுத்தியபடி இருக்கவும். கால்கள் மட்டும் சாய்வான நிலையில் மேலே தூக்கியபடி இருக்க வேண்டும்.
மூச்சை அடக்கியபடியே சில வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி கால்களை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும்.
சில வினாடி ஓய்வுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்யவும். இப்பயிற்சியை 3 அல்லது 4 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.
பலன்.
தினந்தோறும் இப்பயிற்சியை அதிகாலையில் பயின்று வருவது மிகுந்த நன்மையை உண்டு பண்ணும். இப்பயிற்சியானது நுரையீரலுக்கு மிகுந்த வலிமையை தருகிறது. இது மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக ஆஸ்துமா முதலிய நோய்களை துரத்துவதற்கு சிறந்த ஆசனம்.
நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் பலப்படுத்துகிறது. கணையத்தை பலப்படுத்துவதில் இவ்வாசனம் மிக சிறப்பாக செயல்படுகிறது.
குடல்புண், இரைப்பை புண், உதர விதான இறக்கம், சிறுநீர் கடுப்பு, முதுகு வலி முதலியவற்றை குணப்படுத்துகிறது.
இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் இப்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். கர்ப்பிணி பெண்களும் இப்பயிற்சியை செய்தல் கூடாது.
குறிப்பு.
எந்த வகையான யோகாசனப்பயிற்சி செய்தாலும் அன்றைய தின யோகாசனப்பயிற்சியை முடிக்கும் போது கடைசி ஆசனமாக ''சவாசனம்'' கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். சவாசனம் செய்யும் முறை பற்றி இத்தளத்தில் பிறிதொரு இடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது பயின்று பயன் பெறுக.
2 கருத்துகள்
இன்றைக்கு யோகதினம் என்று உங்க பதிவை பார்த்தவுடன் சட்டென்று உதித்தது.இதை என்னவென்று சொல்வீர்கள்....
பதிலளிநீக்குவலிப்போக்கன் .. ஆம் நண்பரே !!! இன்று யோகா தினம், உலகிற்கெல்லாம் யோகா என்கிற ஒரு அற்புத கலையை நாம் கொடுத்துள்ளோம் என்று பெருமை கொள்ள சொல்கிறது இந்நாள் !!! இந்த நன்நாளில் தங்கள் கருத்தினை பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.