"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" அஜினோமோட்டோ - Ajinomoto.

அஜினோமோட்டோ - Ajinomoto.

அஜினோமோட்டோ.

AJI-NO-MOTO.

பெயர் :- அஜினோமோட்டோ. [ AJI-NO-MOTO ].

உணவுகளுக்கு சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு டேஸ்ட் மேக்கர்  உப்பு.

வேதியியல் பெயர் :- மோனோ சோடியம் குளூட்டாமேட். - MONO SODIUM GLUTAMATE. [MSG ].


அஜினோமோட்டோ ???

அஜினோமோட்டோ என்பது என்னவென்று தெரியுமா?. இதை தெரியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. ஆம். உணவிற்கு அதிக அளவில் சுவையை அளிக்கிறது என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் ஒருவகை வேதியியல் உப்பு.

"அஜினோமோட்டோ'' என்பது உப்பின் பெயர் அல்ல. இந்த உப்பை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்தின் பெயர்.

இந்த நிறுவனம் 1909 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமை நிறுவனம் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இயங்கி வருகிறது. அனைத்து நாடுகளிலும் உற்பத்தி நிறுவனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தயாரிக்கும் உப்பின் பெயர் ''மோனோ சோடியம் குளூட்டாமேட்" சுருக்கமாக ''MSG''. ஆனால் நாம் நிறுவனத்தின் பெயராலேயே  இந்த உப்பை அழைத்து வருகிறோம்.

இந்த உப்பானது உணவுப் பொருட்களுக்கு சுவையூட்ட பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வேதியியல் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சரி, இனி அஜினோ மோட்டோவின் வரலாற்றை  கொஞ்சம் ஆராய்வோம்.

அஜினோமோட்டோவின் வரலாறு.

அஜினோமோட்டோ என்னும் சமையல் உப்பை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள்தான்.

நாம் உணவில் வாசனைக்காக கருவேப்பிலை மற்றும் புதினா பயன்படுத்துகிறோம் அல்லவா. அதுபோல சீனர்களும், ஜப்பானியர்களும் உணவில் சுவையையும், வாசனையும் ஏற்படுத்துவதற்காக ''கடற்பாசி'' என்னும் தாவரத்தை பயன்படுத்தி வந்தார்கள். தங்கள் உணவுகளின் அபார சுவைக்கு கடற்பாசியே காரணம் எனவும் நம்பினர்.

எனவே இதுபற்றி ஆராயமுற்பட்ட ஜப்பானிய பேராசிரியரான "கிக்குனே இக்கேடா" [Kikunae Ikeda]. என்பவர் கடல்பாசியின் சுவைக்கு அதிலுள்ள ''குளூட்டாமிக் அமிலம் - Glutamic acid '' என்னும் வேதிப்பொருள்தான் காரணம் என்பதனைக் டோக்கியோ அரசு பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்து கண்டறிந்தார். இதை அவர் கண்டறிந்த ஆண்டு 1908 ஜூலை 25.

Ajinomoto Kikunae Ikeda

அதன் பின் தெடர்ந்து ஆராய்ந்ததின் பயனாக கடல்பாசியிலிருக்கும் குளூட்டாமிக் அமிலத்திலிருந்து ''குளூட்டாமேட்- glutamate '' என்னும் உப்பை தனியாக பிரித்தெடுப்பதிலும் வெற்றி கண்டார். அதன்பின் தான் கண்டறிந்த குளூட்டாமேட் என்னும் உப்பை வியாபாரமாக்க முடிவு செய்தார் . 

1909 ஆண்டு தன் நண்பர் உதவியுடன் அஜினோ மோட்டோ - AJI-NO-MOTO என்ற பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து குளூட்டாமேட் என்னும் வேதியியல் உப்பின் உற்பத்தியை தொடங்கினார்.

''எங்களுடைய தயாரிப்பான இந்த உப்பை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தினால் உணவின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்'' என்று விளம்பரப்படுத்தினார்.

விற்பனை பெருகியது. உற்பத்தியும் பெருகியது.

1920 களில் இந்த உப்பின் உற்பத்தி வெறும் 20 டன் தான், ஆனால் இதன் தற்போதைய உற்பத்தி  எவ்வளவு தெரியுமா? 12 லட்சம் டன்.

இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? அறிந்தால் அதிர்ந்து போவீர்கள். ஆம்.. ஏறத்தாழ 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பொதுவாக இந்த உப்பானது ரெடிமேட் உணவுகளை சுவையூட்டவும், பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

நூடுல்ஸ், சீன உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் துரித உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான நொறுக்கு தீனிகளில் இது சேர்க்கப்படுகிறது.

மேலும் இந்த உப்பு பல வீடுகளில் பெண்களால் சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தற்பொழுது இந்த அஜினோமோட்டோ பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.

சரி இந்த உப்பில் அப்படி என்னதான் இருக்கிறது? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் எதாவது  இருக்கிறதா என் று கேள்வி எழுப்பினீர்கள் என்றால், கண்டிப்பாக இல்லை.

இன்னும், சொல்லப்போனால் உடலுக்கு மிகவும் தேவைப்படுகிற சத்துக்கள் நிறைத்து காணப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த உப்பில் இரண்டே இரண்டு பொருட்கள்தான் உள்ளன. இரண்டும் நம் உடலுக்கு தேவைப்படும் சத்துப் பொருட்கள்தான். ஒன்று "சோடியம் - Sodium" மற்றொன்று "குளூட்டாமேட் - glutamate ". சோடியம் 22% -ம், குளூட்டாமேட் 78% -ம்  உள்ளது.

சோடியம் நமக்கு தெரிந்த பொருள்தான். அது என்ன "குளூட்டாமேட்" ?.

நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த குளூட்டாமிக் அமிலத்தை தினந்தோறும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் தினந்தோறும் அருந்தும் பால், பால் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஒரு சாதாரண அமினோ அமிலம்தான் இது.

நம் உடலுக்கு பெரிய அளவில் இது தேவைப்படவில்லை என்றாலும் நாள்தோறும் சிறிதளவு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய சத்து.

ஓ. அப்படியா நம் உடம்பிற்கு அவசியமான சத்து என்றால் நிறைய சாப்பிடலாமே. அஜினோ மோட்டோ என்கிற பெயரில் தனியாக பாக்கெட் போட்டு விற்கிறார்கள் என்றால் கிலோ கணக்கில் வாங்கி சாப்பிடவேண்டியது தானே என்கிறீர்களா. அங்குதான் ஒரு சிக்கல் இருக்கிறது.

Ajinomoto Food Poison

இதுல, அப்படி என்ன சிக்கல் என்கிறீர்களா? சிக்கலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் நம் உடலைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

அஜினோமோட்டோவின் தன்மைகளை ஆராய்வதற்கு முன் முதலில் நம் உடம்பைப்பற்றிய சில சிக்கலான அடிப்படை உண்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் அஜினோ மோட்டோவினால் நம் உடலுக்கு ஏற்படும் சிக்கல்களையும் எளிதாக உங்களால் புரிந்துகொள்ள முடியும் எனவே நம் உடலைப்பற்றி சிறிது ஆராய்வோம்.

உடம்பிற்கு தேவையான வைட்டமின் முதற்கொண்டு அனைத்து சத்துக்களுமே ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தேவை. நம் உடம்பிற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சத்துக்கள் தேவையோ அந்த அளவிற்கு சத்துக்களை நாம் எடுத்துக்கொண்டால் மட்டுமே நோயற்ற ஆரோக்கிய வாழ்வை நாம் பெற முடியும்.

சத்துக்களின் அளவு குறையும் பட்சத்தில் அது சில நோய்களை ஏற்படுத்தலாம். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் சத்துக்களின் அளவு நமக்கு தேவைப்படுவதை விட அதிக அளவில் இருந்தால் அது மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற இலக்கணத்திற்கு ஏற்ப நம் உடலுக்கு மிகவும் நன்மை செய்யும் சத்தாக இருந்தாலும் கூட அளவு அதிகமானால் மிகப்பெரிய தீங்குகளை ஏற்படுத்தி விடும் என்பது உண்மை. சிலநேரங்களில் குணப்படுத்தமுடியாத அளவிற்கு உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகின்றன என்பது வேதனையான உண்மை.

உதாரணமாக "வைட்டமின் C - (Vitamin C )" - யை எடுத்துக்கொள்வோம். வைட்டமின் C என்பது ''எல் அஸ்கார்பிக்'' ( L - ascorbic acid) அமிலம் ஆகும். இது மனிதனுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான ஊட்டச்சத்து. நாம் உண்ணும் உணவில் வைட்டமின் C யின் அளவு குறைந்தால்  நமக்கு வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு "ஸ்கர்வி" (Scurvy) மற்றும் சருமநோய்களை ஏற்படுத்தும்.

ஆனால் அதே வைட்டமின் C யை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் அது ''டயேரியா'' (Diarrhea) என்னும் நோயை உருவாக்கிவிடும்.

மேலும், அஜீரணம், குமட்டல், வாந்தி, தலைவலி, சோர்வு, தூக்கமின்மை முதலியனவற்றையும்  ஏற்படுத்திவிடும். குழந்தைகளுக்கு வைட்டமின் C யை அதிக அளவில் கொடுத்தால் உடல் தோல்கள் தடித்து விஷமித்து விடும். இதிலிருந்து நாம் அறிந்துகொள்வதென்ன?

நமக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களுமே நம் உடலுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் முழுமையான ஆரோக்கியத்தை தரும். சத்துக்கள் குறைந்தால் நோய் உண்டாக்கும். ஆனால் சத்துக்கள் அதிகரித்தாலோ அது இன்னும் மோசமான விளைவுகளையும் நோய்களையும் ஏற்படுத்திவிடும் என்பது புரிகிறதல்லவா?

சரி,  இப்போது அஜினோ மோட்டோ பிரச்சினைக்கு வருவோம்.

அஜினோ மோட்டோவில் சோடியமும் 22% மும், குளூட்டாமேட் 78% மும் உள்ளது. இதில் சோடியம் என்பது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் சத்து. நாம் பயன்படுத்தும் சமையல் உப்பில் நிறையவே உள்ளது. நம் உடலின் நீர்ம அளவை நிர்ணயிப்பது இதுவே.

அதுமட்டுமல்ல இரத்த ஒட்டம், இரத்த அழுத்தம், நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு சோடியம் இன்றியமையாதது.

இவ்வளவு நன்மைதரும் சோடியத்தை நாம் அதிக அளவில் உட்கொள்ள நேர்ந்தால் விளைவு விபரீதமாகிவிடும். உடலிலுள்ள கால்சியத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிடும். இதனால் எலும்புகள் பலவீனமடையும். மேலும் இதயமும், சிறுநீரகமும் பாதிப்படையும்.

இதைப்போலவே அஜினோமோட்டோவிலுள்ள குளூட்டாமேட்டும் உடலுக்கு நன்மை செய்வதுதான். மூளை வளர்ச்சிக்கு தேவையான ''குளுட்டோ தயான்'' மற்றும் ''காமா அமினோ புட்ரிக்'' (Gama amino Butiric acid) அமிலம் போன்றவற்றை தயாரிக்க இது உதவுகிறது. மூளையின் நரம்பு வளர்ச்சிக்கும் இதன் பங்கு முக்கியம். ஞாபக சக்தியையும் வளர்க்கும்.

ஆனால் குளூட்டாமேட் அதிகம் உட்கொண்டால் அது மூளையை கடுமையாக பாதிக்கும். மூளையின் செல்களை அழித்துவிடும். மூளையின் மிக முக்கிய பகுதியான ''ஹைப்போ தலாமஸ்'' (hypothalamus gland) - ஐ சிதைத்து விடும். ஞாபகசக்தி மங்கும். உடலில் பல விபரீத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Food Poison vaivelu comedy

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போது  இது மட்டும் நஞ்சாகாதா என்ன?.

அஜினோ மோட்டோவில் நம் உடலுக்கு தேவைப்படும் அளவைவிட மிக அதிக அளவில் சோடியமும், குளூட்டாமேட்டும் ஒருசேர இருப்பதே இப்பொழுது பிரச்சனை. 

அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் உணவில் அஜினோமோட்டோ சேர்த்தால்தான் உணவு சுவையாகவும் அதிக நாட்கள் கெடாமலும் இருக்கும் என்பதால் அதிக அளவில் சேர்க்கப்பட்டு கிட்டதட்ட அந்த உணவை விஷமாகவே மாற்றி விடுகின்றனர் என்பதுதான் இங்கு வேதனையே.

நமக்கு தேவையான சோடியம் சமையல் உப்பின் மூலமாகவும் காய்கறிகள் மூலமாகவும் போதிய அளவில் கிடைத்துவிடுகின்றன.

குளூட்டாமிக் அமிலமும் பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளின் மூலம் நமக்கு போதிய அளவில் கிடைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் நம் உடலே திசுக்களில் நடக்கும் சில வேதிவினைகளின் மூலம் இதனை சுயமாகவே உற்பத்தி செய்துகொள்கிறது. இது இப்படி இருக்க உணவில் சுவையை அதிகரிக்கிறேன் என்று சொல்லி அஜினோமோட்டோ உணவில் சேர்க்கப்படும்போது உணவில் சோடியத்தின் அளவும் குளுட்டாமிக் அமிலத்தின் அளவும் அதிக அளவில் அதிகரிக்கின்றன.

இது உடலுக்கு நன்மையை விட கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு உடலுக்கு தீமையை ஏற்படுத்தி விடுகின்றன. சுவை தருகிறது என்ற ஒரேயொரு காரணத்திற்காக உடல்நலத்தை காவு கொடுக்கமுடியுமா ? 

எனவேதான், அஜினோமோட்டோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அஜினோமோட்டோவை  தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஆபத்தாகும் அஜினோமோட்டோ.

உண்மையில் உணவுப் பொருட்களுக்கு சுவையூட்ட பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னாலும், அது உண்மை அல்ல, உணவுப்பொருட்களுக்கு விஷமூட்ட பயன்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.

ஆம். இந்த மோனோ சோடியம் குளூட்டாமேட் உப்பு சேர்க்கப்பட்ட உணவை தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளின் மூளை தன் செயல் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது மட்டுமல்லாமல் மூளையானது தன் அளவிலும் சுருங்கிப்போய் விடுகிறது என்பதனை அறிந்தால் அதிர்ந்து போய் விடுவீர்கள். மூளையும், கல்லீரலும் இதனால் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

vadivelu Ajinomoto

மேலும் தலைவலி, பார்க்கின்ஸன், அல்சைமர், மூளைப்புற்று, இரைப்பை கேன்சர், உடல் பருமன், சர்க்கரை நோய், இதயநோய்,ஆஸ்துமா, ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, மனஅழுத்தநோய் மற்றும் பல நோய்களுக்கு இது காரணமாக அமைகிறது.

நம் உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் தாதுப்பொருள் துத்தநாகம். ஆனால் அதையும் நம் உடல் கிரகிக்க விடாமல் தடுத்து விடுகிறது இந்த அஜினோ மோட்டோ என பெயர் தாங்கி நிற்கும் மோனோ சோடியம் குளுட்டாமேட்.

சில உணவகங்களில் இதன் ஆபத்தை உணராமல் சைவ, அசைவ உணவுகள் மற்றும் பிரியாணிகளிலும் இந்த வேதி உப்பை பயன்படுத்துகின்றனர். பல வீடுகளிலும் சமையலுக்கு பெண்கள் இதனை பயன்படுத்துகின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இந்த உப்பானது உணவின் சுவையை அதிகரிக்கிறது என்பதே.

ஆனால் இந்த கூற்று உண்மையா என்றால் உண்மையல்ல என்றே சொல்லவேண்டும். விளம்பரங்கள் மூலம் அப்படியான ஒரு பிரம்மை ஏற்படுத்தப்படுகிறதேயொழிய இந்த உப்பானது எந்த விதத்திலும் உணவின் சுவையை அதிகரிப்பதில்லை என்பதே நிதர்சன உண்மை.

இந்த உப்பானது எந்த விதத்திலும் உணவின் ருசியை அதிகப்படுத்தவில்லை என்பதனை விஞ்ஞானிகள் பல ஆய்வுகள் மூலம் நிரூபித்தும் விட்டனர்.

Poison vadivelu comedy

அதேவேளையில் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சோடியமும், குளூட்டாமிக் அமிலமும் அதிகரித்து உடலுக்கு பலவித கெடுதல்களை உண்டுபண்ணுகிறது என்றும் எச்சரிக்கின்றனர்.

இந்த உப்பினால் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு எற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த அஜினோ மோட்டோவிற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சந்தையில் இதன் விற்பனை ஜோராக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

அண்மையில் மேகி நூடுல்ஸில் அதிக அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரியமும், அஜினோ மோட்டோ உப்பும் கலந்திருப்பதாக கூறி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல கவரில் அடைத்து விற்கப்படும் பல ரெடிமேட் உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனி - Snacks (ஸ்னாக்ஸ்) என்கின்ற பெயரில் குழந்தைகளுக்காக கவரில் அடைத்து விற்கப்படும் பலவகையான சிப்ஸ் போன்றவைகளிலும் இந்த உப்பு அதிக அளவில் சேர்க்கப்படலாம் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது .

இந்த உப்பானது உடலுக்கு மிக பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்று எவ்வளவு எடுத்து சொன்னாலும் தொடர்ந்து சிலர் இதனை பயன்படுத்தித்தான் வருகின்றனர்.

விஷம் என்று தெரிந்தும் மக்கள் ஏன் இதனை விரும்புகிறார்கள் தெரியுமா? விளம்பரம்தான். TV - ல் விளம்பரம் மட்டும் கொடுத்து விட்டால் போதும் கொடிய விஷத்தை கூட விலைபேசி வாங்கிச்செல்ல ஒரு கூட்டம் டெலிவிஷன் முன் தவம் கிடக்கிறது.

TV விளம்பரத்தை பார்த்துவிட்டு ''என் குழந்தை நூடுல்ஸ்தான் விரும்பி சாப்பிடும். தினம் ரெண்டு வேளை. ஸ்கூலுக்கு கூட நூடுல்ஸ் தான் கொடுத்து அனுப்புகிறேன் தெரியுமா. ரொம்ப சமத்து" என்று விஷத்தை உண்ண கொடுத்துவிட்டு அதன் ஆபத்தை உணராமல் தம்பட்டம் அடித்துக்கொண்டு திரிகிறோம்.

Food Poison ads

இது இப்படி இருக்க நம்முடைய ஒருசில ரெடிமேட் உணவகங்களில் உணவில் சுவை கூட்டுகிறோம் என்று சொல்லி அஜினோமோட்டோ உப்பை சைவ, அசைவ உணவுகள் மற்றும் பிரியாணிகளில் தூவி கனஜோராக விற்பனை நடக்கத்தான் செய்கிறது.

இந்த உப்பானது எந்த விதத்திலும் உணவின் தரத்தையோ சுவையோ அதிகரிப்பதில்லை என்று தெரிந்தும் கூட வெறும் விளம்பர மோகத்தினால் விஷத்தை உண்டு மகிழும் நாம் எப்போது திருந்த போகிறோம்.

உடலை சிதைக்கும் அரக்கன்.

அஜினோ மோட்டோ தொடர்ந்து உணவில் சேர்த்து வரும் பட்சத்தில் அது உடலுக்கு எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என மருத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்டது.

முதலில் எலிகளை வைத்து பரிசோதிக்க முடிவு செய்தனர். கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ  உப்பு கலந்த உணவை தொடர்ந்து கொடுத்து பரிசோதித்தனர். முடிவுகள் அதிர்ச்சியைத் தந்தன.

ஆம்.  பிறந்த எலிக்குட்டிகளை பரிசோதித்ததில் அவைகளின் மூளைப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மூளையின் பெரும்பகுதி செல்கள் வளர்ச்சியடையாமல் இருந்ததுடன் மூளையின் ஒருபகுதி அளவில் சுருங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் எலிகளை விட மனித உடம்பில்தான் இது 5 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமாம்.

செத்தாண்டா சேகரு.

ஆம். இந்த உப்பு கலந்த உணவு பண்டங்களினாலும், நொறுக்கு தீனிகளாலும் அதிகம் பாதிக்கப்படுவது  நம்முடைய மூளையும், சிறுநீரகமும்தான். சிறுநீரகம் மட்டுமல்லாது பெண்களுக்கு மலட்டுத்தன்மையையும் இது  ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவை அடிக்கடி கொடுப்பதால் மூளைவளர்ச்சி மட்டுமல்ல உடல்வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களிலும் பாதிப்பு ஏற்பட்டு உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

அதே வேளையில் அவர்களின் குடலில் குடல் அழற்சி தோன்றி சிறு சிறு ரத்த கசிவும் ஏற்பட்டு வயிறு வலியாலும் துன்பப்படுகிறார்கள் என்பது மருத்துவ அறிஞர்களால் அனுபவப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே நூடுல்ஸ் மற்றும் உப்புச்சுவை கலந்து பாக்கட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஸ்னாக்ஸ் என்னும் நொறுக்கு தீனியையும் தவிர்க்க முற்படவேண்டும்.

சிறியவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினை என்றால் பெரியவர்களுக்கோ வேறுமாதிரியான பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் தொடர்ந்து அஜினோமோட்டோ கலந்த உணவை சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் எடை தாறுமாறாக அதிகரித்துவிடுகிறது.

உடல் எடையை மட்டுமின்றி சிறுகுடல்,பெருங்குடல் மற்றும் கல்லீரலையும் பாதிக்கிறது. மூட்டுவலியையும் கொண்டு வருகிறது.

உணவின்  சுவையை பன்மடங்கு அதிகரிக்கிறது என்கிற போலியான விளம்பரத்தை நம்பி இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் அஜினோமோட்டோ என்னும் கொடூர அரக்கனின் பிடியில் சிக்குண்டு நம் உடல்நலத்தையும் எந்த பழிபாவத்தையும் அறியாத நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குவது நியாயம்தானா?. சிந்திப்பீர். 

அஜினோமோட்டோ என்னும்  ''மோனோ சோடியம் குளூட்டாமேட்'' கலந்த உணவினை தவிர்ப்போம்.. உடல் நலன் காப்போம்.

💢💢💢💢


📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

8 கருத்துகள்

  1. விரிவான நல்ல தகவல்கள் நண்பரே.
    விளம்பரத்தை நம்பி பொருள் வாங்கும் மக்கள் நிறைய இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. KILLERGEE Devakottai...உண்மைதான் ... விளம்பரத்தின் கவர்ச்சி பொருள்களின் தரமற்ற தன்மையை நம் கவனத்தில் இருந்து மறைத்து விடுகின்றன.

      நீக்கு
  2. இந்தப் பதிவு நான் ஏற்கெனவே படித்துக் கருத்திட்ட நினைவு. காணோம்!

    உபயோகமான தகவல்கள். நல்ல விரிவான அலசல்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்...அமாம் நண்பரே! ஏற்கனவே பதிவிட்ட பதிவில் Google URL Search index console ல் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால் மீள்பதிவு செய்யவேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும்....மீண்டும் வந்து உங்கள் கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி !..

      நீக்கு
  3. பதில்கள்
    1. பூந்தோட்ட கவிதைக்காரன்...உங்கள் வருகைக்கும், கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி நண்பரே....

      நீக்கு
  4. பதில்கள்
    1. Suban ... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !!!...

      நீக்கு

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.