balasana.
உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், நோயின்றி இயங்க வேண்டுமெனில் உடலுக்கு முறையான பராமரிப்பு தேவை. உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அவ்வப்போது நீக்கப்பட்டாலே முழு ஆரோக்கியம் கிடைத்து விடும்.
பாலாசனம்.
நம் உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் மற்றும் இரத்தத்தில் தேக்கமடையும் கழிவுப்பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டுமெனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம்.
அப்படியான பயிற்சிகளில் யோகாசனப்பயிற்சியே சிறந்தது எனலாம். ஏனெனில் உடலை மென்மையாக மசாஜ் செய்வதின் மூலம் உடலை துவளும் தன்மைக்கு கொண்டு வருவதால் அனைத்து உறுப்புகளுக்கும் புதிய இரத்தம் பாய்ந்து அதன் இயக்கத்தை சீராக்கி உடலை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.
இது உடலை பிற பயிற்சிகளைப் போல் இறுகச் செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் இரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
நாம் இன்று இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் ''பாலாசனம்'' என்னும் பயிற்சியை.
ஒரு சிறு குழந்தை எப்படி தன் முதல் அரவணைப்பிற்காக ''அம்மா '' என்னும் வார்த்தையை தேர்ந்தெடுக்கிறதோ அது போல தன் ஆரோக்கியத்திற்காகவும், மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதற்காகவும் இயற்கையாகவே அதன் உள்ளுணர்வின் கட்டளைக்கேற்ப அது முதலில் தேர்ந்தெடுக்கிற பயிற்சி எதுவென்றால் அது இனி நாம் பார்க்கப் போகும் பயிற்சியைத்தான்.
''பாலப் பருவம்'' என்றால் குழந்தைப் பருவத்தைக் குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்றுகொள்ள வலியுறுத்துவதால் இதற்கு ''பாலாசனம்'' என்று பெயர்.
பாலாசனம் என்றால் குழந்தை முதன்முதலாக எப்படி உட்காருமோ அப்படி உட்காரும் முறை என்று பொருள். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம்.
செய்முறை.
இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல முழங்கால்கள் மீது அமரவும். அதன்பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பதுபோல நெற்றி தரையில் படும்படி குனியவும்.
மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அமரவும். பிறகு மெதுவாக நேராக நிமிர்ந்து உட்காராவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் பயிற்சி எடுக்கவும். 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யலாம்.
பயன்.
இது மன அழுத்தத்தை நீக்குகிறது. தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. முதுகு வலியை குணப்படுத்துகிறது. உணவு செரிமானம் ஆகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலம் பெறுகிறது.
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.