"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" வீரபத்ராசனம் - Virabhadrasana.

வீரபத்ராசனம் - Virabhadrasana.

Virabhadrasana.

யோகாசனமும், உடற்பயிற்சியும் ஒன்றா? என்றால் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமே பயிற்சியளிக்கக்கூடியது. ஆனால், யோகாசனப் பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் சேர்த்து பயிற்சி அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.


வீரபத்ராசனம்.

இதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒன்றை சொல்லலாம். அதாவது குழந்தையின் தாய் குழந்தைக்கு வெறும் உணவு மட்டும் ஊட்டுவதில்லை. உணவோடு சேர்த்து ''தாய்ப்பாசம்'' என்னும் அன்பையும் சேர்த்து ஊட்டியே வளர்க்கிறாள். அப்படி உணவையும் தாய்ப்பாசத்தையும் சேர்த்து கொடுத்து வளர்த்தால்தான் அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளரும்.

இதைப்போலவே ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில் உடலுக்கு மட்டும் பயிற்சியளித்தால் போதாது. உள்ளத்திற்கும் சேர்த்தே பயிற்சி அளித்தால்தான் அது ஒரு முழுமையான ஆரோக்கியமாக பயிற்சியாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட நம் முனிவர்களும், யோகிகளும் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருசேர பயிற்சியளிக்க உருவாக்கித் தந்த கலையே ''யோகக்கலை'' எனலாம்.

அவ்வாறு உடல், மனம் இரண்டையும் வளப்படுத்தும் ஆசனத்தில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் இப்போது பார்க்கும் ஆசனமானது ''வீரபத்ராசனம்''. இது உடலின் விறைப்புத் தன்மையை நீக்கி முதுகை நெகிழச்செய்து உடலை இளகிய தன்மையில் வைத்திருக்கும். முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதோடு கால்களையும் நன்கு வலுப்படுத்தும்.

Virabhadrasana human body act

ஆசனம் செய்முறை.

முதலில் இரு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். அதன் பின் இரு கால்களையும் பக்கவாட்டில் மூன்று அல்லது மூன்றரை அடி இடைவெளி இருக்கும் அளவிற்கு அகட்டி வைக்கவும். இரு கைகளையும் மேல் நோக்கி குவித்து கும்பிட்டவாறு வைக்கவும்.

Virabhadrasana girl

பின் வலது பாதத்தை வலது பக்கமாகத் திருப்பி உங்கள் உடலையும் வலது பக்கமாகத் திருப்பிக் கொள்ளுங்கள். மெல்ல வலது காலை படத்தில் உள்ளவாறு மடக்கி தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இடது கால் நேராக அதே நேரம் சாய்வாக இருக்க வேண்டும்.

10 அல்லது 15 வினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு உடலை நேராக்கவும். கைகளை கீழே இறக்கவும்.

அடுத்து வலது பக்கம் செய்தது போல் இடது பக்கம் செய்யவும். இவ்வாறு மாற்றி மாற்றி 4 முதல் 8 தடவை செய்யவும்.

பலன்.

பயிற்சி செய்வதற்கு மிக எளிதான இந்த ஆசனத்தை தினம்தோறும் பயிற்சி செய்து வர உடலின் விறைப்புத்தன்மையை மாற்றி நெகிழும் தன்மைக்கு கொண்டுவரும்.

மேலும் கால்கள் வலுப்பெறும், முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். கழுத்து வலி, இடுப்பு வலி நீங்கும். கொழுப்பு கரைந்து தொந்தி மறையும். உடல் இறுக்கத்தை நீக்கி இளகிய தன்மையை நல்கும். மனது வளம் பெறும்.

💢💢💢💢💢

📕இதையும் படியுங்களேன்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.