Utthita Padmasana.
''உத்தித'' என்றால் உயர்த்துதல் அல்லது தூக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்படுகிறது.
உத்தித பத்மாசனம்.
இந்த ஆசனம் பழகுவது கொஞ்சம் கடினம் என்றாலும் இந்த ஆசனத்தை முறையாகப் பயிற்சி செய்வதால் உடல் தேக்கு போல் வலிமையாகும் என்பது உறுதி. பத்மாசனத்தில் நன்கு பயிற்சி பெற்றபின்பே இந்த ஆசனத்தை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தித பத்மாசனத்தால் இரு கைகள், கை விரல்கள், மணிக்கட்டு, உள்ளங்கை, தோள்பட்டை, முதுகெலும்பு , வயிறு, இடுப்பு முதலிய அனைத்து உறுப்புகளும் வலிமைபெறும்.
அதுமட்டுமல்ல ஜீரண உறுப்புகள் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் வலிமைபெறும்.
மேலும் இந்த ஆசனம் பத்மாசன நிலையில் உட்காருவதால் இடுப்பு, தொடைகள், மூட்டு, முழங்கால்கள் அனைத்தும் பலமாகும். இந்த ஆசனம் செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினம் என்றாலும் முறையாகப் பயிற்சி செய்வதால் அடையும் பலனோ ஏராளம்.
தரையில் உட்கார்ந்தபடி செய்வது பத்மாசனம் ஆகும். ஆனால் அதே பத்மாசனத்தை அந்தரத்தில் செய்தால் அதுவே ''உத்தித பத்மாசனம்'' ஆகும்.
செய்முறை.
முதலில் பத்மாசனத்தில் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். பத்மாசனம் செய்வது எப்படி என்பதை ''பத்மாசனம்'' என்ற தலைப்பின் கீழ் காண்க. பத்மாசனத்தில் நேராக அமர்ந்த பின் இரு கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் விரல்கள் முன்பக்கம் இருக்குமாறு ஊன்றவும்.
பின் பத்மாசன நிலையில் இருந்தபடியே கைகளை ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மெதுவாக மேலே தூக்கவும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்கவும்..
அதன் பின் மெதுவாக உடலை கீழே இறக்கவும். சில விநாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை 3 அல்லது 5 தடவை செய்யலாம்.
ஆரம்பத்தில் 5 விநாடி நேரம் இதே நிலையில் இருக்கப் பழகி அதன்பின் 40 விநாடி நேரம் இருக்க பயிற்சி எடுக்கவும்.
பலன்கள்.
உத்தித பத்மாசனம் செய்வதால் மணிக்கட்டு, கைகள், கைவிரல்கள், தோள்பட்டை, மூட்டு பகுதிகள், முதுகு, இடுப்பு, தொடைகள், முழங்கால்கள், வயிற்று தசைகள் பலம் அடைகின்றன. ஜீரண உறுப்புகள் வளம் பெறுவதோடு வாயு தொல்லையும் நீங்குகின்றன.
இப்பயிற்சிமூலம் ஜீரணமண்டலம் அதிகம் அழுத்தப்பட்டு இரத்த ஒட்டம் அதிகரிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். குடலிறக்கம் தடுக்கப்படும். கைகளின் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக வலுவைத்தரும். வயிற்று தசைகள் இறுக்கப்பட்டு தொந்தி மறையும்.
பத்மாசனம் பயிற்சியை பற்றி அறிய அடுத்துள்ள சுட்டியை அழுத்தி சுட்டுங்க
>>பத்மாசனம் - கமலாசனம். Padmasana - Kamalasana<<
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.