சாரைப்பாம்பு.
மனிதர்கள் வாழும் பகுதியிலேயே தனக்கென்று ஒரு வாழிடத்தை அமைத்துக்கொண்டு குடித்தனம் நடத்திவரும் ஒரு பாம்பினம்தான் இந்த "சாரைப்பாம்பு".
சாரைப்பாம்பில் அதன் தன்மை மற்றும் நிறத்தை அடிப்டையாகக் கொண்டு ஒருசில வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. விஷமற்ற இப்பாம்பை பற்றிய சுவாரஸ்யமான பல விஷயங்களை ஆராய்வோம் வாருங்கள்.
Indian Rat snake.
பெயர்க்காரணம்.
தமிழில் "சாரைப்பாம்பு" என்று அழைக்கப்படும் இது ஆங்கிலத்தில் "Oriental rat snake" என்று அழைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் "Indian rat snake" என்று காரணப்பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறது.
"Indian rat snake" என்று அழைக்கப்படுவதற்கு காரணம் யாதெனில் ஆங்கிலத்தில் "Rat" என்றால் அது "எலி"யைக் குறிக்கும் சொல். இந்தியாவிலுள்ள பாம்பு இனங்களிலேயே இந்த சாரைப்பாம்பு மட்டும்தான் எலிகளைக் கண்டால் மாரத்தான் ரேஞ்சுக்கு விடாமல் துரத்திச்சென்று உணவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அது எந்த வகையான எலியாக இருந்தாலும் "தலப்பாக்கட்டு" பிரியாணி ரேஞ்சுக்கு ஒரு பிடி பிடிப்பதால் இதற்கு "Indian rat snake" என்று பெயர்.
இது எலிகளை மட்டும்தான் சாப்பிடுகிறதா என்றால்?... இல்லை... இல்லை... எது கிடைத்தாலும் வயிற்றுக்கு வஞ்சகம் வைக்காமல் சாப்பிடும் என்றாலும் கூட எலிகளை மட்டும் பயபுள்ள மிகவும் விரும்பி சாப்பிடுவதால் "Rat snake" என்று சிறப்பு பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும்தான் எலிகளை விரும்பி சாப்பிடும் பாம்புகள் உள்ளதா? வேறு நாடுகளில் எங்குமே இல்லையா? என்றால்... அனைத்து நாடுகளிலுமே உள்ளன. அவைகளை அந்தந்த நாடுகளின் பெயர்களைக் கொண்டோ அல்லது அதன் நிறங்களைக் கொண்டோ தனித்தனியாக அடையாளப்படுத்துகின்றனர்.
"கட்டு விரியன்", "கண்ணாடி விரியன்" போன்று "Rat snake" என்றும் தனியாக ஒரு பாம்பினம் உள்ளதா என்றால்... இல்லவே இல்லை. "rat snake" என்பது ஒரு "காரணப்பெயர்" அதாவது "பட்டப்பெயர்" அவ்வளவுதான். அதாவது தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடிப்பதாலேயே நம்ம ஊரு பழக்கடை சேகரை "நாய் சேகர்" என்று அடைமொழியுடன் அழைக்கிறோம் அல்லவா... அதுபோல..
ஒரு குறிப்பிட்ட கண்டம் அல்லது துணைக்கண்டப் பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான பாம்பினங்களில் எந்த இன பாம்பு மற்ற பாம்பினங்களைவிட அதிக அளவில் எலிகளை ஒரு கட்டுகட்டுகிறதோ அது அந்த கண்டம் அல்லது துணைக்கண்டப் பகுதிகளுக்கான "Rat snake" என்று வகைப்படுத்துகிறார்கள். ஆனால் அவைகளின் ஒரிஜினல் பெயர் மற்றும் வகைகள் வெவ்வேறாக இருக்கலாம்.
இவைகளின் ஒரிஜினல் பெயர், இனம், வகை, உடலமைப்பு என அனைத்துமே வேறுபட்டு நின்றாலும் எலிகளை எங்கு கண்டாலும் துரத்தி துரத்திக் கடிப்பதாலேயே கைப்புள்ளைகளுக்கு "Rat snake" என்ற காரணப்பெயரும் கூடவே ஒட்டிக்கொண்டது அவ்வளவுதான்.
அப்படி உலகெங்கும் அடையாளப்படுத்தப்படும் rat snake - ல் மொத்தம் 32 வகைகள் உள்ளன.
அந்த வகையில் இந்தியாவின் "rat Snake" என்னும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றுள்ளது நம்முடைய "சாரைப்பாம்பு". ஆனால் உலகின் வேறு ஒரு மூலையில் வேறு ஒரு இனத்தை சேர்ந்த பாம்பு இந்த பட்டத்தை தட்டிச்சென்றிருக்கலாம்.
வகைகள்.
எலிகளை கண்டால் துரத்தி துரத்தி கடிப்பதாலேயே "Rat snake" என்ற அடைமொழியுடன் உலாவரும் பாம்பினங்கள் மட்டுமே உலகில் 32 வகைகள் உள்ளன என பார்த்தோமல்லவா?. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழேயுள்ள படங்களில் கண்டு மகிழுங்கள்.
kunashir island japanese rat snake. |
மேலே நீங்கள் காணும் அனைத்து பாம்புகளும் சாரைப் பாம்புகள் அல்ல. "Indian rat snake" என்று குறிப்பிட்டுள்ள பாம்பு மட்டுமே "சாரைப்பாம்பு". அதை தவிர்த்து பிற பாம்புகள் அனைத்தும் வெவ்வேறு இன பாம்புகள் என்பதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் இந்த பாம்புகள் அனைத்தும் எலிகளை விரும்பி சாப்பிடும் குணம் கொண்டவையாகையால் இவைகளின் ஒர்ஜினல் பகுதி பெயர்களின் பின்னால் "rat snake" என்னும் பட்டத்தையும் சுமந்து கொண்டு நிற்கின்றது அவ்வளவே.
இது படித்து வாங்கிய பட்டம் அல்ல... எலிகளை கடித்து வாங்கிய பட்டம்.
நாம் இப்போது இந்த பதிவில் உலகில் "Rat snake" என்ற பட்டப்பெயருடன் வாழும் பல வகையான பாம்பினங்களை தவிர்த்து இந்தியாவில் எலிகளை கண்டால் விடாமல் துரத்தும் பாம்பினமான சாரைப்பாம்பைப்பற்றி மட்டுமே பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்...
"சாரைப்பாம்பு" பெயர்க்காரணம்.
எலிகளைக் கண்டால் விடாமல் துரத்தி செல்கிறது என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக "இந்தியன் எலி பாம்பு" என்று வெள்ளைக்காரர்களால் செல்லமாக அழைக்கப்படும் பாம்பானது ஏன் தமிழில் "சாரைப்பாம்பு" என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைப் பார்ப்போமா?
"சாரை" என்றால் "சாய்வாக உள்ள வரைவரையான வரி" அல்லது "சரிந்த நிலையில் காணப்படுகின்ற அலையலையான கோடு" என்று பொருள்.
அதாவது, உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்... குறுக்காக ஒரு கோடு வரைகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கிடைமட்டமாக நேர் கோடாக இல்லாமல் மிக சிறிய அளவில் சாய்வாக இருப்பதுடன் மிக சிறிய அளவு அலையலையான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் பெயர்தான் "சாரை கோடு"... சாய்ந்த கோடு அல்ல... "சாரை கோடு". அதாவது சாரைகோடு என்றால் "சாய்ந்த வரைவரையான கோடு" அல்லது "சாய்ந்த அலையலையான கோடு" என்று பொருள்.
இப்பாம்பின் உடலில் குறிப்பிட்ட இடைவெளியில் குறுக்காக நூல் பிடித்ததுபோல் நேரான கோடாக இல்லாமல் சிறிது அலையலையான தோற்றத்தில் கோடுகள் காணப்படுவதால்... சாரைகோடுகள் உள்ள பாம்பு என்னும் அர்த்தத்தில் இது "சாரைப்பாம்பு" என்ற பெயரை பெறுகிறது.
தமிழர்கள் இதன் உடலின் அமைப்பை கூர்ந்து கவனித்து அதற்கு மிகப் பொருத்தமான பெயரையே தேர்வு செய்து வைத்துள்ளனர் என்பதனை பார்க்கும்போது தமிழின்மீது கர்வம் கலந்த செருக்கு ஏற்படுவதை உண்மையிலேயே நம்மால் தவிர்க்க முடியவில்லை.
சாரைப்பாம்பு.
Sarai Pambu.
பெயர் :- சாரைப்பாம்பு.
ஆங்கில பெயர் :- Oriental Ratsnake, Indian Rat Snake.
தாயகம் :- தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா.
காணப்படும் நாடுகள் :- இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான், தைவான், வங்காளம், நேபாளம், மியான்மர், சீனா, கம்போடியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்.
வரிசை :- Squamata.
துணைவரிசை :- serpentes.
குடும்பம் :- Colubridae.
இனம் :- Ptyas mucosus.
பேரினம் :- Ptyas.
உடலமைப்பு.
இது சுமார் 1.5 மீட்டரிலிருந்து 2 மீட்டர் நீளம்வரை வளர்கின்றன. அதிகப்படியாக சில பாம்புகள் 3.7 மீட்டர் அளவில்கூட காணப்படுவதுண்டு.
இதன் எடை சராசரியாக 1 கிலோவிலிருந்து அதிகப்படியாக 2.5 கிலோவரை காணப்படுகின்றன.
இதன் உடல் அமைப்பை கவனித்தால் தலையின் அளவு கழுத்தைவிட கொஞ்சம் பெரியதாக இருக்கும். உடல் முழுவதும் வழுவழுப்பான செதில் அமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்பல்நிறம் கொண்ட உடலின் மேல்புறத்தில் சாரைசாரையான வெண்மைநிற கோடுகளைக் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அடிப்பகுதியான வயிற்றுப்பகுதியில் கருப்பு நிறத்திலான பட்டையான கோடுகளையும் கொண்டுள்ளன.
இப்பாம்புகள் பொதுவாக கருப்பு, சாம்பல் நிறத்திலிருந்து வெளிர் பழுப்பு நிறம்வரையில் காணப்படுகின்றன.
வாழ்க்கைமுறை.
மிக வேகமாக விரைந்து செல்லும் தன்மையுடையது. மரங்களிலும் வேகமாக ஏறும் தன்மையுடையது. மிகவும் சுறுசுறுப்பானது. இரவுபகல் என்றில்லாமல் எப்போது வேண்டுமானாலும் உணவு வேட்டைக்கு கிளம்பிவிடும்.
வாழிடம்.
''கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது போல்'' என்பார்களே அது இதற்கும் சரியாக பொருந்தும். எலிவளை, கரையான் புற்று, பறவைகளின் மரப்பொந்து இவைகளில் வாடகை கொடுக்காமலேயே குடியேறிவிடும். அந்த அளவிற்கு மகா குசும்பன்.
உணவுமுறை.
உணவு விசயத்தில் பாரபட்சமெல்லாம் பார்ப்பதில்லை. பசியென்று வந்துவிட்டால் சக பாம்புகளைக்கூட கொத்து பரோட்டா போட்டுவிடும். சிறிய ரக பாம்புகள், பறவைகள், ஓணான், தவளைகள், தேரைகள், வௌவால்கள் என்று அனைத்தையும் சாப்பிடும். ஆனாலும் இவைகளுக்கு எலிகள் என்றால் கொள்ளைப்பிரியம்.. எலிகள் கிடைத்துவிட்டால் போதும்... நம்ம ஊரு "தலப்பாக்கட்டு" பிரியாணி ரேஞ்சுக்கு ஒருபிடி பிடிக்கும்.
விஷத்தன்மை.
அதெல்லாம் இல்லீங்க. இது விஷத்தன்மை இல்லாத பாம்பு இனம். விஷப்பாம்புகளைப்போல இவைகள் "ஸ்... ஸ்ஸ்" என்கின்ற ஒலியை எழுப்புவதாலும், ஆபத்துக் காலங்களில் தன்னை தற்காத்துக்கொள்ள தலையை தூக்கி எதிர்த்து நிற்பதாலும் இது விஷப்பாம்பாக இருக்கலாம் என்ற தவறான எண்ணத்தால் மனிதர்களால் அடித்துக் கொல்லப்படுவது வேதனை.
உண்மையில் சாரைப்பாம்பு விஷத்தன்மை இல்லாத பாம்பினம். இது தப்பித்தவறி கடித்தால்கூட உயிருக்கு எந்தவித ஆபத்துகளையும் ஏற்படுத்துவதில்லை.
சாரைப்பாம்பு கடித்தால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் இதன் கடி மிகுந்த வலியையும், வீக்கத்தையும் ஏற்படுத்தும். மேலும் இது கடித்த இடத்தில் ''பாக்டீரியா தொற்று'' ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
இனப்பெருக்கம்.
இவைகள் கோடைகாலத்தின் துவக்கத்தில்தான் உறவு கொள்கின்றன. உறவுகொண்ட சிலவாரங்களில் முட்டையிடுகின்றன. இவைகள் முட்டையிடும் காலம் மார்ச் - ல் இருந்து செப்டம்பர்வரை. வழக்கமாக 10 முதல் 15 முட்டைகள் வரை இடுகின்றன.
சாரைப்பாம்பு பெண் என்றும், நல்ல பாம்பு ஆண் என்றும் இரண்டும் இணை சேரும் என்பதெல்லாம் அறியாமை. பொதுவாக தொலைவிலிருந்து பார்க்கும்போது சாரைப்பாம்பானது நல்லபாம்பு போன்ற தோற்றத்தை தருவதால் இம்மாதிரியான தவறான எண்ணம் தோன்ற வழி வகுத்துவிட்டது எனலாம்.
"சாரைப்பாம்பு" என்பது வேறு இனம், "நல்ல பாம்பு" என்பது முற்றிலும் வேறு இனம். இரண்டிலும் ஆண் பெண் தனித்தனியாக உண்டு. பொதுவாகவே கலப்பு திருமணங்கள் பாம்பு இனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் இவை இரண்டும் இணை சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.
குறிப்பு :- வேறுபட்ட உடல் அமைப்புகளுடன் பல்வேறு நாடுகளில் வாழும் "rat snake" என்னும் பட்டம் பெற்ற வெவ்வேறு இன பாம்பினங்களைப்பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். நன்றி...
12 கருத்துகள்
பயப்பட வைக்கும் படங்களுடன் (!) சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி!...
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி!...
நீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குவருக நண்பரே! தங்களின் வருகைக்கும், கருத்துக்களை பரிமாறிக்கொண்டதற்கும் நன்றி நண்பரே !!!
நீக்குNalla news nan enru komberi moorkan enathai parthen pammbu payangara speedaga selgirathu
பதிலளிநீக்குகொம்பேறி மூக்கன் மனிதர்களை கண்டால் பயந்து பயங்கர "ஸ்பீடா" ஓடும் என்பதெல்லாம் உண்மைதான் நண்பரே!!.. ஆனால் இந்த கொம்பேறி மூக்கனை பார்த்து பயந்தபடி அதற்கு எதிர் திசையில் ஓடும் சில பேர்களின் ஓட்டத்தை பார்த்தால் அது இதைவிட பயங்கர ஸ்பீடா இருக்கும் 😀😁😆...
நீக்குSuper
பதிலளிநீக்குநன்றி!
நீக்குNalla vizayankal nanti
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள் பல நண்பரே!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.