சுத்தி இல்லையேல் சித்தி இல்லை.
Saltl Purification.
[Part- 3].
"சுத்தி" என்பது மூலிகைப்பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தும்போது உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தீய தன்மையை நீக்குவதற்கும், மருந்தின் நோயை குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும்.
"சித்தி" என்றால் சித்தித்தல் அதாவது காரிய "வெற்றி"யை குறிக்கும். செய்யும் வேலை பழுதில்லாமல் வெற்றிகரமாக முடிவதை குறிக்கும்.
எனவே, இப்பகுதியில் மருந்து மூலப்பொருள்களை எவ்வாறு சுத்தம் செய்வது அதன்மூலம் மருந்துகளை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பதனை பார்க்க இருக்கிறோம்.
''மூலிகைகள் சுத்தி. [பாகம் -1 மற்றும் 2]'' ல் பல மூலிகைகளை சுத்தி செய்யும் முறையை பார்த்தோம்.
மூலிகைகள் சுத்தி - பாகம் 1 படிக்க அடுத்துள்ள சுட்டியை தட்டுங்க
👉"சுத்தி இல்லையேல் சித்தி இல்லை. Herbal Purification part-1"👈
இப்பதிவில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பல வகையான உப்புக்களை சுத்தி செய்யும் முறையை பார்ப்போம்.
காரம் சாரம் சுத்தி.
மருந்திற்காக பயன்படுத்த வேண்டிய கடலுப்பை மோர்விட்டு கலக்கி வெயிலில் வைத்து ஈரம் வற்றும்படி காயவைத்து எடுத்துக்கொள்ளவும். (அல்லது) ஒரு புது மண்சட்டியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பிடாலவணம்
மோரில் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் காயவைத்து கொள்க.
வெடியுப்பு.
வெடியுப்பின் அளவிற்கு 4 பங்கு சுத்தமான வடிகட்டப்பட்ட நீர் விட்டு கரைத்து அடுப்பிலேற்றி காய்க்கவும்.
கொதிக்கும்போது புளிப்பு மோரை சிறிது விட்டு கலக்கவும். அவ்வாறு கலக்கும்போது உப்பிலுள்ள அழுக்குகள் நிறைய வெளிவரும். அவ்வழுக்கை கரண்டியால் எடுத்து நீக்கவும்.
தொடர்ந்து காய்க்கும்போது ஒரு துளி எடுத்து ஓலையின் மீது விட உறையும். உடனே இறக்கி ஒருநாள் இரவு முழுவதும் ஆறவிட நீளமாக கம்பிகம்பியாக உறையும்.கம்பிகள் போன்று உறைந்துள்ள உப்புக்களை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பீங்கான் தட்டுகளில் பரப்பி வெயிலில் உலர்த்தவும்.
எடுத்த கம்பிகள் போக மீதியுள்ள வெடியுப்பு கரைசலில் மறுபடியும் 4 மடங்கு சுத்தமான நீர் விட்டு முன் போலவே காய்த்து கிடைக்கும் கம்பி போன்ற வடிவமுடைய உப்புக்களை பிரித்தெடுத்து முன் பிரித்தெடுத்து வைத்துள்ள உப்புடன் சேர்த்து வெயிலில் காய வைக்கவும்.
இவ்வாறு உப்பு கிடைக்கும் வரை காய்ச்சி காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். இதுவே வெடியுப்பு சுத்தி செய்யும் முறை.
இது ஒரு சுற்று..
சேகரித்த கம்பி போன்ற மொத்த உப்புக்களுடன் மீண்டும் முன்போலவே நீர் மற்றும் மோர் விட்டு காய்ச்சி எடுக்க அது இரண்டாவது சுற்று..
இது போலவே திரும்ப திரும்ப 7 முறை செய்ய அதன் பின் கிடைக்கும் உப்பு உயர்தரமுடையதாக அமையும்.
அட்டுப்பு.
உப்பின் எடைக்கு நான்கு பங்கு நீர்விட்டு கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன்பின் அதை சுண்டக் காய்ச்சி வெயிலில் வைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.
வளையலுப்பு.
காடி நீரில் 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்து வெயிலில் உலர்த்தவும்.
காடியில் 3 தினங்கள் ஊறப்போட்டு எடுத்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.
உழமண் உப்பு.
இந்த உப்பின் அளவிற்கு 4 பங்கு நீர் விட்டு கரைத்து ஒரு நாள் முழுவதும் அசையாமல் வைத்து, தெளிந்து நிற்கும் உப்புநீரை கவனமாக வடித்தெடுத்து அடுப்பிலிட்டு சுண்டக்காய்ச்சி வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.
சக்திசாரம்.
இந்த உப்பில் காடி தெளித்து 3 நாள் வைத்திருந்து வெயிலில் உலர்த்திக்கொள்ளவும்.
எவச்சாரம்.
இதனை வெள்ளாட்டின் சிறுநீரில் கரைத்து வடிகட்டி வெயிலில் உலர்த்துக.
இதன் அளவில் 4 மடங்கு சுத்தமான நீர் விட்டு கரைத்து 5 மணி நேரம் தெளிய வைத்து, தெளிந்த நீரை ஒரு பாத்திரத்தில் வடித்தெடுத்து வெயிலில் சுண்ட காய வைத்து உப்பாக எடுத்து கொள்க.
வெங்காரம், படிகாரம்.
இவ்விரண்டையும் பொரித்து உபயோகிக்கலாம். அல்லது நீரில் சுத்தமாக கழுவி சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
சவுக்காரம்
ஒரு பாத்திரத்தில் கோநீர் விட்டு ஏடு கட்டி புட்டவியலாக அவித்து உலர்த்திக்கொள்ளவும்.
நவச்சாரம்.
கோநீரில் கரைத்து சுண்டக் காய்ச்சி எடுத்து உலர்த்திக்கொள்க.
கல்லுப்பு.
காடி நீர் தெளித்து பிசைந்து ஈரத்தை துடைதெடுத்து அதன்பின் உபயோகிக்கவும்.
கர்ப்பூரம், பச்சைக்கற்பூரம்.
இவ்விரண்டையும் செங்கழுநீர் பூவிதழ் சாற்றில் 1 நாழிகை ஊறவைத்து உலர்த்திக்கொள்க.
இதுவரையில் "சுத்தி இல்லையேல் சித்தி இல்லை" என்னும் இப்பகுதியின் மூலம் பலவித மூலிகைகள் மற்றும் தாது உப்புக்களின் எதிர்க்குணங்களை நீக்கி மருத்துவக்குணங்களை அதிகரிக்கும்பொருட்டு கடைபிடிக்கப்படும் சில சுத்தி கிரியைகளை பார்வையிட்டோம். இதன்படி மருந்து மூலப்பொருட்களை சுத்தி செய்து பலன் பெறுக.. நன்றி!
💚💚💚💚💚💚
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.